ஜென்னல் பகுதி 8

ஒரு ஜென்குருவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தனது செய்கையால் பதில் தருகிறார். சாதாரணமாகப் பார்க்கும்போது புரிபடாத அவரது செய்கைக்கான அர்த்தம், சத்குருவின் பார்வையில் பொருள்படுகிறது! அர்த்தத்தைப் படித்தறியுங்கள்!

ஹூய்தி என்றொரு ஜென் குரு இருந்தார். அவர் தன் தோளில் எப்போதும் ஒரு பெரிய மூட்டையைச் சுமந்து செல்வார். அதில் என்னென்னவோ விஷயங்கள் இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் குழந்தைகளைப் பார்த்தால், அதிலிருந்து இனிப்புகளை எடுத்து வழங்குவார்.

ஒரு முறை, இன்னொரு ஜென் குரு எதிர்ப்பட்டார். ‘ஜென் என்றால் என்ன?’ ஹூய்தி, உடனே தன் மூட்டையைக் கீழே போட்டுவிட்டு, நிமிர்ந்து நின்றார். ‘‘ஜென்னின் நோக்கம் என்ன?’’ என்று அடுத்த கேள்வியை வீசினார், அந்த குரு. ஹூய்தி கீழே போட்ட மூட்டையை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு நடந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

நீங்கள் யோகாவில் சாதிக்க நினைத்தால், சட்டென்று உங்கள் பாரத்தைக் கீழே இறக்கிப் போடத் தயாராக இருக்க வேண்டும். பாரத்தைச் சுமந்துகொண்டு ஒருபோதும் மேன்மை நிலையை அடைய முடியாது. எப்போது இருப்பதைக் கீழே போடத்தயாராகி விட்டீர்களோ, அதற்கப்புறம் அது சுமையாக இருக்காது. அதனால், அதை மீண்டும் நீங்கள் சந்தோஷமாகத் தூக்கிக்கொள்ளமுடியும்.

‘நாளைக்கு நான் போய்விட்டால், என் மனைவி என்ன ஆவாள்? என் கணவர் என்ன ஆவார்?' என் குழந்தைகள் என்ன ஆகும்? இப்படி எத்தனை கேள்விகள் உங்களிடத்தில்.

உண்மையில், யாருக்கும் எதுவும் நேர்ந்துவிடாது. சில முட்டாள்கள் வீறிடுவார்கள். சில முட்டாள்கள் அழுவார்கள். அவர்களும் ஒருநாள் இறந்துபோவார்கள். சிலர் தங்கள் வாழ்நாளுக்காகச் செய்துகொள்ளும் ஏற்பாடுகளைப் பார்த்தால், அவர்கள் இந்தப் பூமியில் நிரந்தரமாகத் தங்க வந்தவர்கள் போல் தோன்றும். அது வடிகட்டின முட்டாள்தனம்.

இதனால்தான் துன்பங்களும் புகார்களுமாக வாழ்க்கை தடுமாறுகிறது. அன்பு மட்டுமல்ல... உங்கள் அழுகை, சிரிப்பு எல்லாமே அடக்கப்பட்டு குறிப்பிட்ட அளவைத் தாண்டுவது இல்லை. எல்லா செயல்களும் கணக்குகளின் அடிப்படையில் அமைகின்றன. கட்டாயத்தின் பேரில் இப்படிச் செயல்புரிகையில், செய்வது எல்லாம் சுமையாகத்தான் இருக்கும். விழிப்பு உணர்வோடு வாழ்கையில், அதே செயல்கள் சுமையற்றவையாக மாறிவிடும்.
இதைத்தான் மூட்டையைச் சுமப்பதிலும், கீழே போட்டதிலும், மீண்டும் எடுத்துச் சுமப்பதிலும் தெரிவித்தார் ஹூய்தி.

ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418