நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நாம் மரணம் அடைந்தபின் சொர்க்கத்திற்கு போவாமா அல்லது நரகம் செல்வோமா என்ற கேள்வி இருப்பது சகஜம்தான், இதற்கு சத்குரு என்ன சொல்கிறார்? மேலும், "ஒருவர் எப்படி குரு ஆகிறார்? ஓய்வுபெற்ற பின் கணவருக்கு உடல்நிலை சரியில்லையே?!" போன்ற கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார் சத்குரு...

Question: மரணத்துக்குப் பின் சொர்க்கம் போவேனா, நரகம் போவேனா?

சத்குரு:

"இப்போது கிடைத்த வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழத் தெரியாமல் வருத்திக் கொள்பவர்கள்தான், எப்போதோ கிடைக்கப்போகும் சொர்க்கத்துக்காகக் கவலைப்படுவார்கள்.

எல்லாம் முடிந்த பிறகு எங்கே போகிறீர்கள் என்பதா முக்கியம்? அங்கே உள்ள விதிகளைப் பற்றி உங்களுக்கென்ன தெரியும்? ஒருவேளை அங்கே நரகமாயிருந்தால், இங்கே கிடைத்த சொர்க்கத்தையும் அல்லவா வாழாமல் கோட்டைவிட்டிருப்பீர்கள்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இங்கே கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் அன்போடும், பிரியத்தோடும் செலவு செய்யுங்கள். ஒவ்வொரு மூச்சையும் ஒவ்வொரு செயலையும் முழுமையான ஈடுபாட்டுடன் அனுபவித்து வாழுங்கள்.

அதை விட்டுவிட்டு இங்கே வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு, தெரியாத சொர்க்கத்துக்காகத் திட்டமிடுவதைப் போன்ற முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை!"

Question: வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் என் கணவருக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறதே, ஏன்?

சத்குரு:

"குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு தவறான அணுகுமுறை துவங்கிவிடுகிறது. ஒரு குழந்தை ஆனந்தமாக விளையாடினால் அதைக் கவனிப்பதற்கு ஆளில்லை. காய்ச்சல் வந்தால், அந்தக் குழந்தையைக் குடும்பமே சூழ்ந்து கொள்கிறது.

குழந்தைகள் அடிக்கடி நோயுறுவதற்குக் காரணம் சுற்றியுள்ளவர்கள்தான்.

அவர்களுக்குத் தேவையான மருத்துவத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஆரோக்கியமான உணவை வழங்குங்கள். அந்தப் பொறுப்பைக் கைவிடச் சொல்லவில்லை. மற்றபடி, அவர்களைக் கட்டுப்படுத்தாமல் விளையாட விடுங்கள். தேவையற்ற கவனிப்பை அவர்கள்மீது சொரிந்து பழக்கிவிட்டீர்களானால், கவனிப்புக்காக ஏங்கும்போதெல்லாம் அவர்களை அறியாமலேயே நோய்வாய்ப்பட ஆரம்பித்துவிடுவார்கள்.

வயதான பின்னும் இந்தப் போக்கு மாறுவதில்லை. ஓய்வு பெற்றதும் மற்றவர் கவனம் குறைந்து விட்டதாக அச்சம் வருவதால், காய்ச்சலும் வருகிறது.

உலகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தயவுசெய்து நோய்களைக் கொண்டாடாதீர்கள்!"

Question: எப்படி ஒருவர் ஒரு குரு ஆகிறார்? மதம் சார்ந்த மனிதரிடமிருந்து ஒரு குரு என்பவர் எப்படி வேறுபடுகிறார்?

சத்குரு:

ஒரு ஆன்மீக குருவாக ஆக வேண்டுமென்பதை யாரும் தேர்ந்தெடுப்பதில்லை. ஒருவரது உள்தன்மை பொங்கி வழியும்போது அதன் மணம் மக்களை அவரிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. அப்படித்தான் அவரது பணி தொடங்குகிறது, தொடர்கிறது. அவர் எந்த ஒரு கலாச்சாரத்திலிருந்தும் வந்தவரல்ல. அவர் எப்படி இருக்க வேண்டுமென்றோ, எப்படி ஆகவேண்டுமென்றோ பயிற்றுவிக்கப்பட்டவரல்ல. அவரது உள்தன்மையில் இருந்து பொங்கி வழியும் நறுமணம் மக்களை அவரிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. இது மதம் சார்ந்த மனிதரிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு நிலை. மக்கள் அவரை நோக்கி வருவதற்கு பெரும்காலமெல்லாம் எடுத்துக் கொள்வதில்லை. அவரைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் அவரது உள்தன்மையை பகிர்ந்து கொள்ள அவர் விரும்புகிறார் அவ்வளவுதான். மதம் சார்ந்த மனிதரிடமிருந்து இது முற்றிலும் மாறுபட்ட நிலை.