கேள்வி: நமஸ்காரம் சத்குரு. நான் மயக்கமருந்தியல் நிபுணராகப் பணிபுரிந்து வருகிறேன். மயக்கமருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருநூறு வருடங்கள் கடந்தபிறகும், நாங்கள் உண்மையிலேயே எப்படி நோயாளிகளை மயக்கத்தில் ஆழ்த்துகிறோம் என்பதை இன்னமும் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதற்குப் பல விளக்கங்கள் தருகிறார்கள். எரிச்சல்தரும் பிரச்சனையாக இருப்பது என்னவென்றால், மயக்கமருந்து தரப்பட்டதற்குப் பிறகும்கூட, அறுவை சிகிச்சை நடைபெறும் நேரம் முழுவதும் சுயநினைவை இழக்காமல் முழு விழிப்புணர்வுடன் இருக்கக்கூடிய ஒரு சில நோயாளிகள் இருக்கிறார்கள், அதற்குக் காரணம் எங்களுக்குத் தெரியவில்லை. விழிப்புணர்வின் ஏழு நிலைகள் குறித்தும் அதற்கு மேலும் இருப்பது குறித்தும் நீங்கள் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். மருந்துகளினால் எந்த அளவுக்கு உணர்விழக்கச் செய்யமுடியும்? யோகப்பயிற்சி செய்பவர்கள் அறுவை சிகிச்சையின்போது விழிப்புணர்வுடன் இருப்பார்களா?

சத்குரு:

நீங்கள் எவ்விதமான மயக்கமருந்தைப் பயன்படுத்தினாலும், விழிப்புணர்வை நீங்கள் துளியும் நீக்குவதில்லை. ஒருவரது வலியையும், நினைவாற்றல் அல்லது நினைவுகூரும் திறனையும்தான் நீங்கள் நீக்குகிறீர்கள். ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முழு மயக்க நிலையில் எதிர்கொண்டவர், உணர்வு திரும்பியதும் எதையும் நினைவுபடுத்த முடிவதில்லை. ஆனால், இருபத்தைந்து வருடங்களுக்குப்பிறகு திடீரென்று அவரது அறுவை சிகிச்சையின்போது நிகழ்ந்த ஒவ்வொன்றும் அவரின் நினைவுக்கு வரமுடியும். இது நிச்சயம் நிகழக்கூடியதே. இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் இப்படி நிகழ்வது சாத்தியமானதே, ஏனென்றால் நினைவுபடுத்தும் செயல்முறையை மட்டும்தான் நீங்கள் தடைசெய்கிறீர்கள். நீங்கள் எவ்வளவுதான் மயக்கமருந்து கொடுத்தாலும், விழிப்புணர்வை உங்களால் நீக்கமுடியாது.

ஒரு நாள் சங்கரன்பிள்ளை பல் மருத்துவரிடம் சென்று, "ஒரு பல்லைப் பிடுங்க வேண்டும். அதற்கான கட்டணம் எவ்வளவு?" என்று கேட்டார். பல் மருத்துவர், "கட்டணம் 500 டாலர்", என்றார். சங்கரன்பிள்ளை, "இல்லை, இது மிகவும் அதிகம்", என்றார். பல் மருத்துவர், "கட்டணத்தில் மாற்றமில்லை", என்று கூறினார்.

பிறகு சங்கரன்பிள்ளை கேட்டார், "சிகிச்சைக் கட்டணத்தில் ஐம்பது சதவிகிதம் மயக்கமருந்திற்கானது என்று கேள்விப்பட்டேன். ஒருவேளை, நீங்கள் மயக்கமருந்தே பயன்படுத்தாவிட்டால், கட்டணம் எவ்வளவாக இருக்கும்?". "அப்போது வலி பொறுக்கமுடியாததாக இருக்கும், ஆனால் கட்டணம்  250 டாலர்களாகக் குறைந்துவிடும்." என்று பதில் கூறினார் மருத்துவர்.

சங்கரன் பிள்ளை, "ஒருவேளை 'நீங்கள்' என் பல்லை பிடுங்காமல், உங்களிடம் பயிற்சி பெறும் புதிய பல் டாக்டர்களில் ஒருவரை செய்யச்சொன்னால், எவ்வளவு கட்டணம் ஆகும்?" என்று கேட்டார். அதற்கு பல் மருத்துவர், "அப்படியானால், நான் செய்வது போன்ற தரமும் நிபுணத்துவமும் இருக்காது, ஆனால் கட்டணம் வெறும் நூறு டாலர்கள் ஆகிவிடும்."

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சங்கரன் பிள்ளை கேட்டார், "உங்களிடம் பல் டாக்டராகுவதற்குப் படித்துவரும் மாணவர் ஒருவர் சிகிச்சை செய்ய, அதை இன்னும் பத்து மாணவர்கள் பார்க்கும்விதமாக காட்சிப்படுத்தினால், அப்போது எவ்வளவு கட்டணம்?". அதற்கு அந்த மருத்துவர்,

"அப்படியானால் அது மிகவும் வலியானதாக இருக்கும், அதோடு உங்களது வாய்க்குள் பத்துபேர் எட்டிப்பார்ப்பது தர்மசங்கடமாகவும் இருக்கும். ஆனால், அப்படிச் செய்தால், நான் உங்களுக்கு 200 டாலர் பணம் தரவேண்டியிருக்கும்." என்றார். உடனே சங்கரன்பிள்ளை, "இப்போதுதான் நீங்கள் சரியாகச் சொல்கிறீர்கள். நாளை என்னுடைய மாமியாருக்கு முன்பதிவு செய்துகொள்ளுங்கள்", என்றார்.

வலியையும்,  நினைவாற்றலையும் தகர்க்கும் மயக்கநிலை பயனுள்ள விஷயம்தான், ஆனால் விழிப்புணர்வை அது துளியும் தடுப்பதில்லை. உங்களின் அந்த அம்சத்தை அது தொடுவதில்லை. அளவுக்கதிகமான மயக்க நிலையின் காரணமாக யாராவது இறந்துபோனாலும் கூட - இப்படி அடிக்கடி நிகழ்வது கிடையாது என்று நம்புகிறேன் - அப்போதும் அவரது உணர்வு நிலை தொடப்படுவது கிடையாது. மீண்டுவர முடியாத அளவுக்கு நீங்கள் உடலைத்தான் அதிகப்படியாக மரத்துப்போகச் செய்கிறீர்கள். ஆனால், நீங்கள் ஒருபோதும் அவரது உணர்வுநிலையின் தளத்தைத் தொடுவதில்லை, அதை உங்களால் தொடவும் முடியாது. அதனால்தான் ஆன்மீக செயல்முறையானது அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது, ஏனென்றால் வேறு எதனாலும் தொடமுடியாத ஒரு பரிமாணத்தை நீங்கள் தொடுகிறீர்கள். அதனால்தான் ஒருவருடைய வாழ்வில் குரு என்பவர் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். ஏனென்றால் வேறு எவராலுமே தொடமுடியாத அந்தப் பரிமாணத்தை அவர் தொடுகிறார்.

கேள்வி: மயக்கமருந்து என்பது நினைவுகூரும் செயல்முறையை மட்டும்தான் தொடுகிறது என்று நீங்கள் கூறினீர்கள், ஆனால் யோகப்பயிற்சி செய்பவர்களுக்கு, அது நினைவுகூரும் செயல்முறையைக் கூட பாதிக்காதா?

சத்குரு:

யோகப்பயிற்சியாளர்களிடம் உள்ள பிரச்சனையே, மற்றவர்களைக்காட்டிலும் அவர்களால் மிகமிக அதிகமாக நினைவுகூர முடிகிறது என்பதுதான். என் வாழ்க்கையில், நான் பச்சிளம் குழந்தையாக, சுமார் இரண்டு, அல்லது மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது என்னைச் சுற்றி நிகழ்ந்த விஷயங்கள் எனக்கு நினைவிருக்கின்றன. பெரும்பாலான மக்களால், அவர்களது நான்காவது வயதிற்கு முன்னால் நிகழ்ந்தவற்றை நினைவுகூர முடியாது. இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இது அதையும் கடந்தது - பல பிறவிக்காலங்களின் விஷயங்களை நினைவுகூர முடிகிறது.

யோகத்தின் நோக்கம் உங்களை உணர்ச்சியற்றுப்போகச் செய்வதல்ல. உயிரோட்டம் என்று நீங்கள் அறிந்துவைத்திருப்பது என்னவோ, அதைக்காட்டிலும் மிகமிக அதிக உயிரோட்டத்துடன் நீங்கள் இருக்குமளவு உங்களைத் தீப்பற்ற வைப்பதுதான் யோகத்தின் நோக்கம். உணர்வற்றுப்போவது, அல்லது உண்மையிலிருந்து ஒளிந்துகொள்வது, ஒருபோதும் யோகத்தின் நோக்கமல்ல. யோகம் உண்மையை எதிர்கொள்வதற்கானது, இப்போது நீங்கள் உண்மை என்று நம்பும் தொந்தரவான வாட்டிவதைக்கூடிய சிறிய விஷயங்களனைத்தும் மறைந்துபோகச் செய்யும் அளவு பிரம்மாண்டமானதொரு பேருண்மையை அறியச் செய்வதற்கானது. இந்த விஷயங்கள் அனைத்தும் மறைந்துவிடும் என்றால் அவை இல்லாமல் போய்விடும் என்றல்ல, அவற்றின் முக்கியத்துவத்தை இழந்துவிடுவதால் அவை மறைகின்றன.

யோகத்தில், வலியை மரத்துப்போகச் செய்வதென்பது இல்லை. யோகத்தின் பாதையானது எத்தகையதென்றால், உங்களுக்கு ஒரு சிறு பிரச்சனை இருந்தால், ஒரு மிகப்பெரும் பிரச்சனையை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எங்களது விருப்பம். அந்தப் பெரிய பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டால், உங்களுடைய மற்ற சிறிய பிரச்சனைகளெல்லாம் முக்கியத்துவமிழந்து ஒன்றுமில்லாமல் போகின்றன. அதோடு, உங்களுக்குள் எப்போதும் சீறிக்கொண்டிருப்பது ஒரே ஒரு பிரச்சனைதான். அந்த சீற்றத்தின் சக்தியும் தீவிரமும் எத்தகையது என்றால், உங்களால் அதற்குத் தீர்வு கண்டறியாமல் இருக்கமுடியாது. அந்த சீற்றத்தின் தீர்வு, உங்களது கரைதலில்தான் இருக்கிறது.

ஆகவே மயக்கமருந்து எனப்படுவது யோகத்திற்கு நேர்மாறானது, ஏனெனில் அது இருப்பதை மரத்துப்போகச் செய்ய முயற்சிக்கிறது. யோகத்தில், நாம் எதையும் மரத்துப்போகச் செய்ய முயற்சிப்பதில்லை. உங்கள் பிரச்சனையின் வீச்சை, வரையறையற்ற ஒரு வெளிக்குள் விசாலமடையச் செய்ய முயற்சிக்கிறோம். அதனால் உங்கள் பிரச்சனை ஒரு வரையறைக்குள் இல்லாமல், வரையறையற்ற ஒரு பிரச்சனையாக மாறும். இதை நீங்கள் புரிந்துகொண்டால், திடீரென்று வேறு எந்தப் பிரச்சனையும் இல்லாததை நீங்கள் காண்கிறீர்கள், ஏனென்றால் மற்ற அனைத்தும் முற்றிலும் முக்கியத்துவமிழக்கின்றன. பிரச்சனைகள் இல்லாமல் போகாது - ஆனால் அவை முக்கியத்துவமிழக்கின்றன, ஏனென்றால் உங்களது பார்வை அதைவிடப் பெரியதொரு காட்சிக்கு விரிந்துள்ளது.

கேள்வி: தாங்கள் பேசியபோது குறிப்பிட்ட விழிப்புணர்வின் ஏழு நிலைகள் யாவை?

சத்குரு:

விழிப்புணர்வின் ஏழு நிலைகள் அல்லது பரிமாணங்கள் என்று எதுவுமில்லை. விழிப்புணர்வுநிலை ஒன்றே ஒன்றுதான். ஒரு தனிப்பட்ட நபரின் பரிணாம வளர்ச்சி, அல்லது கிரகித்துக்கொள்ளும் தன்மையில், ஏழு படிநிலைகளிலான வளர்ச்சி இருக்கக்கூடும். ஏழு படிநிலைகளில் வளர்ச்சி இருக்கும் காரணத்தால், அந்தத் தனிநபர் அதை ஏழு பகுதிகளாகப் புரிந்துகொள்வார். அல்லது, சுலபமாகப் புரிந்துகொள்வதற்காக நாம் அதை ஏழாகப் பிரித்துக் கொள்ளலாம்.

இதை ஒரு உதாரணத்தை வைத்துப் புரிந்துகொள்ளலாம், வெள்ளியங்கிரி மலையை, ஏழு மலைகள் கொண்டதாக நாம் கூறுகிறோம். உண்மையில் அங்கே ஏழு மலைகள் இல்லை, ஒரேவொரு பெரிய மலை மட்டும்தான் உள்ளது. நாம் ஏறத் தொடங்கும்போது, ஒரு செங்குத்தான ஏற்றத்தைத் தொடர்ந்து ஒரு சிறிய இறக்கம், இப்படி ஏற்றமும் இறக்கமும் ஏழுமுறை வருகின்றன. ஆகவே மலையேறும்போது, நம் அனுபவத்தில், நம் மனதின் புரிதலில், ஏழு மலைகள் இருப்பதாக எண்ணுகிறோம். ஏனென்றால் நாம் செல்லும் அந்தக் குறிப்பிட்ட பாதை, ஏழு ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளது. அதே மலையை மறுபக்கத்திலிருந்து ஏறினால், அது ஒரேஒரு பெரிய மலைதான், ஏழு மலைகள் இல்லை.

விழிப்புணர்வுநிலை ஒன்று மட்டுமே. இருப்பினும், மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட பாதையில் நடக்க நேர்ந்தால், அப்போது மட்டும் ஏழு படிகள் இருப்பதாக நீங்கள் நினைத்துக்கொள்ள நேரிடும். ஆனால் நீங்கள் உங்களை என்னிடம் முழுமையாகக் கொடுத்தால், நான் உங்களுக்கு ஒரேஒரு படி இருக்கும்படி உறுதிசெய்வேன் - ஏழு படிகள் இருக்காது. மலையின் எந்தப் பக்கத்திலிருந்து நீங்கள் அதை அணுகுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது இது. அதற்கேற்ப ஒருவரது அனுபவம் மாறுபடுகிறது.