மக்களை வழிநடத்தும் தலைவர்கள் பொதுவாக, முன்னால் நின்றுகொண்டு பின்னால் மக்களை வரும்படி சொல்வதுதான் வழக்கம். ஆனால், சத்குருவோ தான் மக்களின் பின்னால் இருப்பதாக சொல்கிறார்! மக்கள் கூட்டத்தை வழிநடத்த சத்குரு கையாளும் அந்த வழிமுறை இங்கே!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: புதிய சிந்தனைகள் சமூகத்தில் உடனடியாக மறுக்கப்படுகின்றனவே... உங்களைப் பின்பற்ற மக்களை எப்படி சம்மதிக்க வைத்தீர்கள்?

சத்குரு:

உங்களுடன் மக்களை எப்படி அழைத்துச் செல்வது என்பது பற்றிய தெளிவு இல்லாதவரை, எந்தச் சமூகமும் எந்த தினத்திலும் மாற்றத்துக்குத் தயாராக இருக்காது. பல வரைமுறைகளையும், வரையறைகளையும் கொண்ட சமூகச்சூழல் அதற்கு அனுமதி தராது. அதன் வரையறைகளைத் தாண்டிச் செல்ல முனைந்தால், எதிர்த்துதான் நிற்கும். தாண்ட முனைபவரைச் சிலுவையில்தான் அறையும். மற்றவரை உங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டுமானால், அதற்கு உங்கள் திட்டமிடல் போதாது. அனுபவம் மட்டும் போதாது.

மற்றவரை உங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டுமானால், அதற்கு உங்கள் திட்டமிடல் போதாது. அனுபவம் மட்டும் போதாது.

ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை உங்களுடன் அழைத்துச் செல்ல விரும்பினால், அவர்களுக்கு முன்னால் போய்நின்று கொண்டு எல்லோரும் என்னைத் தொடர்ந்து வாருங்கள் என்று சொல்வதில் அர்த்தமில்லை. உங்களுடைய வேகத்துக்கு அவர்கள் ஈடுகொடுக்க முடியாமல் போகும்போது, அவர்கள் வெகுவாகப் பின்தங்கி விடுவார்கள்.

அதற்குப்பதிலாக, அவர்கள் எங்கே இருக்கிறார்களோ, அந்தமட்டத்துக்குப் பணிந்து, குனிந்து நீங்கள் சென்று, அவர்களை வழிநடத்தத் தயாராயிருக்க வேண்டும். அதாவது, அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு, அவர்களை அன்புடன் செலுத்துவது சிறப்பாக வேலை செய்யும். இந்த விதத்தில், அவர்கள் சதா உங்கள் பார்வையில் இருப்பார்கள். எந்த நிலையிலும் பின்தங்கி விடாமல், உங்களுக்கு முன்னால் செல்வார்கள். வழிதவறாமல் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

தலைமை ஏற்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. முன்னால் போய் நின்றுகொண்டு அவர்களை இங்கே வா, இங்கே வா என்று அழைப்பது. அல்லது அவர்களுடைய வரையறைகளை, குறைபாடுகளை, பிரச்சினைகளை, அச்சங்களைப் புரிந்துகொண்டு, மெல்ல அவர்களை முன் செலுத்துவது. மந்தையை செலுத்துவதாக நீங்கள் நினைத்தாலும், பின்னால் நின்று கொண்டு, அவர்களை முன்னால் செலுத்துவதையே நான் விரும்புகிறேன்.