சத்குரு யயாதி தனது மகனின் இளமையை கேட்டு வாங்கியதைப் போலவே, சாந்தனுவும் தன் மகனின் வாழ்வில் விளையாடுகிறார். சத்யவதி - சாந்தனுவுக்கு இரண்டு பிள்ளைகள் பிறக்கிறார்கள். முதல் பிள்ளை சித்ராங்கதன், இரண்டாவது பிள்ளை விசித்திரவீரியன். கோபக்கார இளைஞனாக வளரும் சித்ராங்கதன் ஒரு நாள் காட்டுக்குள் செல்கிறான். அங்கே ஒரு கந்தர்வனை சந்திக்கிறான். வேறெங்கிருந்தோ அபாரமான திறமைகளுடன் வந்த கந்தர்வனின் பெயரும் சித்ராங்கதன் தான். கந்தர்வன் இந்த இளைஞனை பார்த்து, நீ யார் என்று கேட்க, "நான் சித்ராங்கதன்" என்று பெருமையுடன் சொல்கிறான் இளவரசன். கேட்டதும் சிரிக்கும் கந்தர்வன், "சித்ராங்கதன் என்று சொல்லிக்கொள்ள என்ன தைரியம் உனக்கு? என் பெயர்தான் சித்ராங்கதன். இந்த பெயரை வைத்துக் கொள்ள உனக்கு தகுதியில்லை. மரியாதையாக உன் பெயரை மாற்றிக்கொள்" என்றான். "என்ன துணிச்சல் உனக்கு.. என் தந்தை வைத்த பெயர் இது. எனவே நான்தான் சித்ராங்கதன். என்னுடன் போருக்கு வா.. நீண்ட நாள் உயிரோடு இருக்கும் சிரமத்தில் இருந்து உன்னை விடுவிக்கிறேன்" என்ற அறைகூவலுடன் கொதித்தெழுந்து போரில் இறங்கி, இமைப்பொழுதில் இறந்து விழுந்தான் இளவரசன்.

விசித்திர மனிதன்

இப்போது குரு வம்சத்தின் வாரிசாக விசித்திரவீரியன் மட்டுமே இருக்கிறான். "விசித்திர" -வினோதமான "வீரியன்" -ஆண்தன்மை. வினோதமான ஆண்தன்மை -இதற்கு சரியான பொருள் நமக்கு தெரியவில்லை என்றாலும், தனக்கென மனைவி அமைய விருப்பமோ அல்லது திறனோ இல்லாமல் இருந்தான் விசித்திரவீரியன். மனைவி, குழந்தை அமையப்பெறுவதை வைத்து இன்றைய சூழ்நிலையில் யாரையும் நாம் எடைப்போடக்கூடாது. ஆனால் அப்போது இது மிகமுக்கியமானதாக இருந்தது. தனக்கு மகன்கள் வாரிசாக அமையவேண்டும் என்பதே ஒரு அரசனின் அக்கறையாக இருந்தது. இல்லாமல் போனால் அரியணைக்கு வாரிசு இல்லாத நிலை ஏற்பட்டுவிடுமே. தினமும் போர்களில் ஈடுபடும் சூழ்நிலையில், நீங்கள் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் மரணம் எப்போது வேண்டுமானாலும் ‌நிகழும் என்பது தெரியாதுதானே. ஒருவேளை இறக்கும் நிலை ஏற்பட்டால் உங்களுக்கு மகன்கள் வாரிசாக இருக்கிறார்களா என்பது முக்கியமான ஒன்றாக இருந்தது. எனவேதான் எப்போதும் திருமணமும், தன் மனைவியின் மூலமாக ஆண்பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமாக இருந்தது. ஒருவேளை உங்களுக்கு ஆண் வாரிசு இல்லாமல் போனால், மொத்த சாம்ராஜ்யமும் வேறு யாருக்கோ சென்றுவிடும்.

விசித்திரவீரியன் தனக்கு மனைவி அமைய விருப்பமின்றி இருந்தான். பீஷ்மரும் திருமண பந்தத்தில் ஈடுபட விருப்பமின்றி இருந்தார். சித்ராங்கதனும் இறந்த பிறகு, குரு வம்சமே ஸ்தம்பித்து நின்றது.

விசித்திரவீரியன் தனக்கு மனைவி அமைய விருப்பமின்றி இருந்தான். பீஷ்மரும் திருமண பந்தத்தில் ஈடுபட விருப்பமின்றி இருந்தார். சித்ராங்கதனும் இறந்த பிறகு, குரு வம்சமே ஸ்தம்பித்து நின்றது. இந்த சூழ்நிலையில் காசியின் மன்னர் தனது மூன்று மகள்களின் சுயம்வரத்தை அறிவித்தார்.. - ஆனால் குரு வம்சத்தினருக்கு அழைப்பு அனுப்பவில்லை. அந்த பகுதியிலேயே செல்வாக்குடன் இருந்த பெரும் சாம்ராஜ்யமான குரு வம்சத்தினருக்கு மட்டும் காசியின் மன்னர் அழைப்பு அனுப்பாமல் தவிர்க்க காரணம், விசித்திரவீரியனின் ஆண்மை பற்றி உலா வந்த பல வதந்திகள்தான். அவரது மகள்கள் விசித்திரவீரியனை மணமுடிப்பதை அவர் விரும்பவில்லை. தன் நலனைவிட - யார் நலனை விடவும், குரு சாம்ராஜ்யத்தின் நலனை மட்டுமே உயிர்மூச்சாக வைத்திருக்கும் பீஷ்மரால் இந்த அவமரியாதையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தானே சுயம்வரத்தில் கலந்துகொள்ள முடிவுசெய்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அம்பையை கடத்தும் பீஷ்மர்

சுயம்வரம் என்றால் ஒரு இளம்பெண் தன் வாழ்க்கையை தானே முடிவு செய்துகொள்ள அனுமதிப்பது. இளவரசிக்கு திருமண பருவம் வந்ததும், ஒரு போட்டியை நடத்துவார்கள். சத்ரிய குலத்தை சேர்ந்த யார் வேண்டுமானாலும், தனக்கு தகுதி இருக்கிறது என்று நினைத்தால் இந்த போட்டியில் பங்கேற்கலாம். அவர்களிலிருந்து தனக்கு பிடித்த மணமகனை மணப்பெண் தேர்ந்தெடுப்பாள். முழுக்க முழுக்க இது மணப்பெண்ணின் விருப்பமாகவே இருக்கும். இதில் வேறுயாரும் தலையிட முடியாது.

காசி மன்னனின் மூன்று மகள்களான அம்பா, அம்பிகா, அம்பாலிகா மூவருக்கும் ஒரே சமயத்தில் சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஷால்வ தேசத்தின் அரசனான சால்வனின் மீது ஏற்கனவே காதல் வயப்பட்டிருந்த அம்பா, அவனையே கணவனாக தேர்வு செய்ய இருந்தாள். தன் தேர்வை வெளிப்படுத்த மணமகளின் கையில் ஒரு மாலை வழங்கப்படும். சுற்றி இருக்கும் அனைவரிலும் இருந்து தனக்கு பிடித்த மணமகனை தேர்வு செய்ததும், மணமகள் மாலையிட்டு அவனை தன் கணவனாக்கி கொள்கிறாள். அம்பா நேராக சால்வனிடம் சென்று மாலையை கழுத்தில் அணிவித்தாள்.

சரியாக அதே நேரத்தில் பீஷ்மர் உள்ளே நுழைகிறார். அவரை பார்த்ததும் அங்கே அமர்ந்திருந்த மற்ற வீரர்களுக்கு கிலி ஏற்படுகிறது. அவரது வீரத்தின் முன் தங்களால் தாக்குபிடிக்க முடியாது என்பதை உணர்ந்தவர்கள், அவரது சத்தியத்தை பற்றியும் தெரிந்து இருந்ததால், "இந்த வயதில் இவருக்கு இங்கே என்ன வேலை? இப்போது இவர் திருமண செய்ய போகிறாரா ? போட்டியில் கலந்துகொண்டு இளவரசியின் மனம் கவர தகுதியான வீரன் குரு வம்சத்தில் வேறு யாருமே இல்லையோ ? அதனால்தான் இவரை அனுப்பி வைத்திருக்கிறார்களோ ?" என்று அவரை கேலிசெய்து வம்பிழுக்க துவங்கினார்கள். தனது தேசமும், வம்சமும் ஒரே நேரத்தில் தரக்குறைவாக பேசப்படுவதை கண்டு கடும் கோபமடைந்தார் பீஷ்மர். எனவே அங்கிருந்த மணப்பெண்கள் மூவரையும் கடத்தினார். அங்கிருந்த மற்ற வீரர்கள் அவரை தடுக்க முயற்சித்து சண்டையிட்டாலும், பீஷ்மர் தனிஒருவராக அனைவரையும் தோற்கடித்தார். தனக்கு மாலையிட்ட அம்பாவும் கடத்திச்செல்லப் படுவதை பார்த்த சால்வா நேரடியாக பீஷ்மருடன் மோதுகிறான். சால்வாவை தோற்கடித்து, அவமானப்படுத்தி மூன்று மணப்பெண்களையும் தன்னுடன் கடத்திச் செல்கிறார் பீஷ்மர்.

இதுவரை நாம் பார்த்த முந்தைய தலைமுறைகளில் இருந்து முதல்முறையாக இந்த இடம் வேறுபடுகிறது. இதுவரை ஒரு பெண் நிபந்தனை விதிப்பதையே நாம் பார்த்திருக்கிறோம். இப்போது ஒரு பெண் அபகரித்து எடுத்துச் செல்லப்படுகிறாள். அம்பாவின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தது. குரு வம்சத்தின் தலைநகரான ஹஸ்தினாபுரம் செல்லும் வழியில் அம்பா பீஷ்மரை பார்த்து, "நீ என்ன செய்கிறோம் என்று தெரிந்துதான் செய்கிறாயா? நான் அந்த மனிதர் மீது காதலில் இருந்தேன். அவருக்கு மாலையும் அணிவித்துவிட்டேன்.இப்போது அவர் எனக்கு கணவனாகிவிட்டார். என்னை எப்படி நீ கொண்டு செல்ல முடியும்?" என்று கேட்டாள்.

பதிலுக்கு, "இப்போது நீ என் கட்டுப்பாட்டில் இருக்கிறாய். என் கட்டுப்பாட்டில் இருப்பது குரு வம்சத்திற்கு உரியது" என்றார் பீஷ்மர். "அப்படியானால் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?" என்றாள் அம்பா. "இல்லை. விசித்திரவீரியன் உன்னை திருமணம் செய்து கொள்வார்" என்றார் பீஷ்மர். ஆனால் விசித்திரவீரியன், மூவரில், அம்பிகா, அம்பாலிகா இருவரை மட்டும் திருமணம் செய்து கொண்டான். அம்பாவை திருமணம் செய்ய மறுத்து, "இவள் ஏற்கனவே வேறு ஒருவனுக்கு மாலை சூடிவிட்டாள். இவள் இதயம் வேறு ஒருவனிடம் இருக்கிறது. நான் இவளை திருமணம் செய்து கொள்ள முடியாது" என்றான்.

அம்பாவின் நிலைமை

Mahabharat Episode 8: Amba’s Plight

குழப்பத்தின் உச்சியில் செய்வதறியாது திகைத்து நின்றாள் அம்பா. பீஷ்மர் அம்பாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, "உன்னை மீண்டும் சால்வனிடமே அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்கிறேன்" என்றார். இதனால் மகிழ்ந்த அம்பாவும் சால்வனிடம் திரும்பி சென்றாள்.. - அங்கௌ அம்பாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அம்பாவை ஏற்றுக்கொள்ள மறுத்தான் சால்வன். "நான் யார் தயவிலும் வாழவேண்டிய அவசியம் இல்லை. நான் போரில் தோற்றுவிட்டேன். என்னை தோற்கடித்த கிழவன் போடும் பிச்சையில் நான் வாழ வேண்டியதில்லை. நான் உன்னை ஏற்க மாட்டேன். திரும்பி சென்றுவிடு" என்றான் சால்வன்.

5000 வருடங்களுக்கு முன், இளவரசியாக வாழ்ந்து மணமேடை வரை வந்து நின்றவள் அனைவராலும் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில் ‌என்ன செய்வாள்? தந்தையிடமும் திரும்பிச் செல்ல முடியாது, கணவனும் இல்லை. நேசித்தவனும் ஏற்க மறுக்கிறான்.

இரண்டு இடங்களிலும் அம்பா நிராகரிக்கப்படுகிறாள். ஹஸ்தினாபுரம் திரும்பும் அம்பா, "நீ என் வாழ்க்கையையே சீரழித்து விட்டாய். நான் விரும்பிய ஒருவனிடம் இருந்து என்னை வலுக்கட்டாயமாக பிரித்து இங்கே கொண்டு வந்தாய். ஆனால் இப்போது நான் விரும்பியவனும் என்னை ஏற்க மறுக்கிறான், உன்னால்தான் நான் இந்நிலைக்கு வந்தேன்.. நீ தான் என்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும்" என்று பீஷ்மரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கிறாள். ஆனால் பீஷ்மர் "என் தேசத்தின் நலனுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன். யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன்." என்று கூறினார்.

நிர்க்கதியாக அம்பா அங்கிருந்து வெளியேறுகிறாள். இதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும். 5000 வருடங்களுக்கு முன், இளவரசியாக வாழ்ந்து மணமேடை வரை வந்து நின்றவள் அனைவராலும் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில் ‌என்ன செய்வாள்? தந்தையிடமும் திரும்பிச் செல்ல முடியாது, கணவனும் இல்லை. நேசித்தவனும் ஏற்க மறுக்கிறான். எங்கே செல்கிறோம் என்றே தெரியாமல் உயிரற்ற உருவமாக கால் போனபோக்கில் அம்பா நடந்தாள்.

தொடரும்...

ஆசிரியர் குறிப்பு : சத்குருவின் பார்வையிலிருந்து மஹாபாரதக் கதை... ஒரு நெடுந்தொடர்! அழகியலும் கலைநயமும், பண்பாடும் கலாச்சாரமும், வாழ்வியலும் அரசியலும், தந்திரமும் தெய்வீகமும் ஒன்றாக இணைந்த ஒரு மாகாவியமான மகாபாரத கதையை ஞானியின் பார்வையிலிருந்து படித்து மகிழுங்கள்!