"முந்நூறு பக்கங்களை முழுமூச்சில் வாசிப்பேன்; கிரைம் நாவல் கிடைத்தால் முற்றுப் புள்ளி வரை படிப்பேன்; காதல் கதைகள் என்றாலோ கண்கள் இமைக்காது." இப்படியானப் புத்தகப் புழுக்களுக்கு பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற புனித நூல்களைப் படித்து முடிப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. சரி! அப்படி அவர்கள் படித்து விட்டால் இறையருள் கிடைத்துவிடுமா? ஆம் என்றால், படிப்பறிவற்ற ஒருவருக்கு கடவுள் மறுக்கப்படுகிறாரா? சத்குருவிடம் கேட்ட போது...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற புத்தகங்களைப் படிப்பதால் மனம் தெளிவாகுமா? புரியாவிட்டாலும், படிப்பதால் புண்ணியமா?

சத்குரு:

மனித குலம் மேன்மையுற வேண்டுமென்றால், இந்தப் புத்தகங்களையெல்லாம் யார் கையிலும் கிடைக்காமல், நூறு வருடங்களுக்காவது பூட்டிவைக்க வேண்டும்.

Question: அப்படியென்ன தவறு இந்தப் புனித நூல்களில் இருக்கிறது?

சத்குரு:

கோளாறு புத்தகங்களில் இல்லை. படித்து அர்த்தம் பண்ணிக்கொள்பவர்களிடம்தான்.
மனித வாழ்வு எவ்வளவு உன்னதமானது, மனிதனின் அரும்பெரும் திறன் என்ன என்பவற்றை இப்புத்தகங்கள் பேசுகின்றன. மனிதன் எப்படித் தெய்வமாகலாம் என்று வழிகாட்டுகின்றன. ஆனால் கிருஷ்ணனையும், கிறிஸ்துவையும், முகமது நபியையும் தங்கள் வசதிக்கேற்ப வளைத்துக் கொள்பவர்களிடம் இப்புனித நூல்கள் சிக்கிக்கொண்டதுதான் பெரும்பிரச்சினை.

எதையும் ஒழுங்காகப் புரிந்துகொள்ளாதவர்கள், கடவுள்களின் பெயரைச் சொல்லி கட்சி பிரித்திருக்கிறார்கள். இந்நூல்களில் சொல்லப்பட்டிருப்பதை அரைகுறையாகப் புரிந்துகொள்ளும் அம்மனிதர்களுக்கு மத்தியில் இவை சச்சரவுகளையும் போர்களையுமே பரிசாகக் கொண்டு வந்திருக்கின்றன.

கிருஷ்ணனையும், கிறிஸ்துவையும், நபிகளையும் துணைக்குக் கூப்பிட்டு தொந்தரவு செய்யாமல், உங்கள் வாழ்க்கையை நீங்களே வாழ்ந்து பாருங்கள். இப்புத்தகங்களில் சொல்லப்பட்டிருப்பவற்றை நேரடியாக நீங்களே உணரும் வாய்ப்பு இருக்கிறது.
சகமனிதருடன் அன்பாகப் பழகக்கூடத் தெரியாதவர்களுக்கு இப்புத்தகங்களால் எந்தப் பயனும் இல்லை. அதனால்தான் சொல்கிறேன். முதலில் புத்திசாலித்தனமாக வாழ்ந்து பாருங்கள். அப்புறம் இப்புத்தகங்களை எடுங்கள்!

Photo Courtesy: erix @ flickr