question-creative-tamilblogகேள்வி: நமஸ்காரம் சத்குரு, நான் அறிவியல் படித்து வருகிறேன், யோகா பற்றி பேசும்போதும், என் கல்லூரியில் ஷாம்பவி யோகப்பயிற்சி செய்யும்போதும், மக்கள் என்னை தாழ்வாகப் பார்க்கின்றனர், "நீ அறிவியல் படிக்கும் மாணவி, நீயா இப்படி?" என்று கேட்கின்றனர்.

என்னுடைய கல்லூரிப் படிப்பின் முதலாமாண்டில் இதற்காக வருத்தப்பட்டேன், பிறகு அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இப்போது எனக்குள் இருக்கும் கேள்வி, நம் தேசத்தில் தோன்றிய அறிவியலை நம் இளைஞர்களே ஏன் இவ்வளவு எதிர்க்கிறார்கள்? இந்தியாவில் எல்லாவற்றையும் பற்றிய ஆழமான புரிதலின் அடிப்படையில் அறிவியல் வளர்ந்தது. எனினும் ஏன் இந்த எதிர்ப்பு? அதோடு இந்த எதிர்ப்பை, ஏற்றுக்கொள்ளும் தன்மையாக மாற்றுவது முக்கியமா? அல்லது இதை முழுமையாக அறிந்துணராமல் புறக்கணிக்காதீர்கள் என்றாவது அவர்களிடம் கூறலாமா? அப்படியானால் இன்றைய கல்விமுறையில் இந்த உள்நிலை அறிவியலை ஒரு அங்கமாக்குவது எப்படி?

சத்குரு: துரதிர்ஷ்டவசமாக, எது அறிவியல் என்ற நம் கிரகிப்பிற்கு மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடிப்படையில், முறைப்படி ஏதோவொன்றை அணுகினால் அது அறிவியலாக கருதப்படுகிறது, அதாவது அந்த முறையை பின்பற்றினால், அதை மறுவுருவாக்கம் செய்யமுடியும். அறிவியல் என்பது அடிப்படையில் இயற்பியல், ஆனால் அதிலிருந்து தோன்றியுள்ள பிற அறிவியலும் இருக்கிறது - உயிரியல், மனோதத்துவம், சமூக அறிவியல் போன்றவை உள்ளன. ஆனால் எதிலும் ஒரு முறையான அணுகுமுறை இருந்து, ஒருவருக்கு மட்டும் பொருந்தாமல் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு பொருந்தும் என்றால், அதுவே அறிவியல் அல்லது அறிவியல் அணுகுமுறை ஆகிறது.

யோகா என்றால் சங்கமம், 'சங்கமம்' என்றால் உங்கள் தனிப்பட்ட எல்லைகளை அழிக்கும் அறிவியல், அதன்மூலம் நீங்கள் தற்போது இருப்பதைவிட பெரிய உயிர்த்துளியாக மாறுவீர்கள்.

அந்த விதத்தில், யோக அறிவியலைப் போல பரவலாக பொருந்தும் அறிவியல் வேறெதுவும் இல்லை. ஆனால் இப்போது மக்கள் கேள்விப்பட்டுள்ள யோகா, அமெரிக்கா சென்று அங்கிருந்து திரும்பியுள்ள வடிவமே. யோகா என்றால் ஒருவித உடைகளை அணிந்து திரிவது என்று நினைக்கிறார்கள், இது ஏதோ பேஷன் என்று நினைக்கிறார்கள். இல்லை, யோகா என்றால் 'சங்கமம்'. சங்கமம் என்றால் என்ன? நீங்கள் சுமக்கும் உடலையே, ஒருநாள் யாரோ புதைத்துவிடுவார்கள், அல்லது எரித்துவிடுவார்கள். புகையுடனோ புகையின்றியோ, எப்படியும் பூமியின் அங்கமாகிவிடுவீர்களா?

பங்கேற்பாளர்கள்: ஆம்.

சத்குரு: இப்போதும்கூட, நீங்கள் இந்த பூமியிலிருந்து முளைத்த சிறு துண்டுதான். இந்த அறிவை நீங்கள் தொலைத்துள்ளது, உங்களுக்கு நடமாடும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளதால். நீங்களே ஒரு தனி உலகமென நினைத்துவிட்டீர்கள். மரத்தைப் போல மண்ணில் வேரூன்றி நின்றிருந்தால், நீங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம் என்பதை நிச்சயமாக புரிந்திருப்பீர்கள். பூமி உங்களுக்கு அசைவதற்கு சற்று சுதந்திரம் கொடுத்ததால், எவ்வளவு பெரிய முட்டாளாகிவிட்டீர்கள்! இது உங்கள் உடலுக்கு மட்டுமில்லை - பிரபஞ்சம் முழுவதற்கும், உங்களின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருந்தும்.

எனவே யோகா என்றால் சங்கமம், 'சங்கமம்' என்றால் உங்கள் தனிப்பட்ட எல்லைகளை அழிக்கும் அறிவியல், அதன்மூலம் நீங்கள் தற்போது இருப்பதைவிட பெரிய உயிர்த்துளியாக மாறுவீர்கள். நீங்கள் இங்கு மலச்சிக்கலான உயிராகவும் வாழலாம், அல்லது உற்சாகமான உயிராகவும் வாழலாம். மலச்சிக்கல் என்றால் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்கிறது. தற்போது பெரும்பாலான மனிதர்களுக்கு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிகழ்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உற்சாகமாக வெடியைப் போல நிகழவில்லை என்றால் அது மலச்சிக்கலான வாழ்க்கைதான்.

அவர்களிடம் அவர்களின் வாழ்க்கையின் அற்புதமான தருணங்களைக் கேட்பீர்களேயானால், "நான் தேர்வில் தேர்ச்சிபெற்றபோது அற்புதமாக உணர்ந்தேன். நான் துயரமாக இருந்தேன், ஆனால் வேலை கிடைத்தவுடன் அற்புதமாக உணர்ந்தேன், அதற்குப்பிறகு உடன் வேலைசெய்பவர்கள் அனைவரும் வேதனையையே தந்தார்கள். பிறகு திருமணம் செய்தேன், அற்புதமாக இருந்தது, பிறகு மாமியார் வந்தார், இப்போது பெருந்துயரம்!" இப்படித்தான் அவர்களின் பட்டியல் நீளும். அவர்கள் வாழ்க்கையின் அற்புதமான தருணங்கள் என்று ஐந்து தருணங்களைச் சொல்வார்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உற்சாகமாக வெடியைப் போல நிகழவில்லை என்றால் அது மலச்சிக்கலான வாழ்க்கைதான்.

நீங்கள் ஒரு உற்சாகமான வாழ்க்கை வாழ விரும்பினால், தனிப்பட்ட எல்லைகள் இல்லாமல் போகவேண்டும், ஓரளவிற்காவது. அப்போதுதான் பெரிய அளவில் உயிரை படித்துக்கொள்வீர்கள், அப்போது உங்கள் வாழ்க்கை அனுபவம் பெரிதாக இருக்கும், சாதாரணமாக உங்களைச் சுற்றி காண்பதைவிட உயர்ந்த நிலையிலான உற்சாகத்தை உணர்வீர்கள். நீங்கள் இளமையாக இருந்தபோது சோப்புத் தண்ணீரில் குமிழிகள் ஊதியுள்ளீர்களா?

பங்கேற்பாளர்கள்: நாங்கள் இப்போதும் இளமையாகத்தான் இருக்கிறோம்...

சத்குரு: ஓ! நீங்கள் குழந்தைகளாக இருந்தபோது சோப்புக் குமிழிகள் ஊதியுள்ளீர்களா?

பங்கேற்பாளர்கள்: ஆம்.

சத்குரு: உங்களுக்கு இவ்வளவு பெரிய குமிழிதான் வந்தது, இன்னொருவருக்கு மிகப்பெரிய குமிழி வந்தது என்றால், எதனால் அப்படி? உங்களுக்கும் நுரையீரல் நிறைய காற்று இருக்கிறது, உங்களிடமும் சோப்புநீர் இருக்கிறது, ஆனால் ஒருவருக்கு பெரிய குமிழியாக வருகிறது. ஏன் என்றால், நீங்கள் எல்லைகளை விரிவாக்க விரும்பினால், அந்த ஆசை முக்கியமில்லை, அந்த குறுகிய சாத்தியத்திற்குள் எவ்வளவு காற்றைப் பிடிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அப்போதுதான் அது பெரிதாகிறது.

எல்லைகளைக் கரைத்துவிட்டால், நீங்கள் யோகநிலையில் இருக்கிறீர்கள் அல்லது யோகா என்கிறோம். அப்படி ஒருவர்தன் அனுபவத்தில் கரைந்துவிட்டால், அம்மனிதரை 'யோகி' என்கிறோம்.

அதேபோல என் உடலும் உங்கள் உடலும் வெவ்வேறு. நம்மை புதைக்கும் வரையில் இவை அனைத்தும் ஒரே மண்தான் என்பதை புரிந்துகொள்ளமாட்டோம். ஆனால் இப்போது, 'இது என் உடல் - அது உங்கள் உடல், இது என் மனம் - அது உங்கள் மனம்' என்பது நூறு சதம் தெளிவாக இருக்கிறது. இது அதுவாக இருக்கமுடியாது, அது இதுவாக இருக்கமுடியாது. ஆனால் 'என்னுடைய உயிர் - உங்களுடைய உயிர்' என்று எதுவுமில்லை. உயிர் மட்டுமே உள்ளது. எவ்வளவு உயிரை உங்களுக்குள் பிடிக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கையின் அளவையும் பரப்பையும் நிர்ணயிக்கும், நீங்கள் எவ்வளவு தகவல்களை சேர்க்கிறீர்கள் என்பதல்ல.

இது நிகழவேண்டும் என்றால், உங்கள் தனிப்பட்ட தன்மையின் இறுகிய எல்லைகளை நீங்கள் தகர்க்கவேண்டும், விரிவாக்க வேண்டும். எல்லைகளைக் கரைத்துவிட்டால், நீங்கள் யோகநிலையில் இருக்கிறீர்கள் அல்லது யோகா என்கிறோம். அப்படி ஒருவர்தன் அனுபவத்தில் கரைந்துவிட்டால், அம்மனிதரை 'யோகி' என்கிறோம். ஒவ்வொரு மனிதரும் எவ்வளவுதூரம் செல்வார் என்பது பல்வேறு நிதர்சனங்களை சார்ந்திருக்கிறது, ஆனால் ஒருவர் தாமே உருவாக்கிய இந்த தனித்தன்மையின் எல்லைகளைத் தகர்த்திட, அறிவியல்பூர்வமான ஒருமுகமான முயற்சியையேனும் எடுக்கவேண்டும்.

யோகாவை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் - சுவாசிக்கலாம், நடக்கலாம், வாசிக்கலாம், தூங்கலாம், அல்லது நின்றபடியும்கூட யோகா செய்யலாம் - குறிப்பிட்ட செயல் எதுவும் இல்லை, அது ஒரு குறிப்பிட்ட பரிமாணம்.

உங்கள் எல்லைகள் அனைத்தையும் நீங்கள் தானே உருவாக்கினீர்கள்? எல்லையை நீங்களே உருவாக்கிவிட்டு அதனால் வேதனைப்படுகிறீர்கள் என்றால் - எப்படிப்பட்ட வாழ்க்கையிது? இயற்கை உங்களுக்கு எல்லைகள் வகுத்திருந்தால், அதனால் நீங்கள் வேதனைப்பட்டால் புரிந்துகொள்ளலாம். ஆனால் சுய-பாதுகாப்பைத் தேடி உங்களைச்சுற்றி நீங்களே சுவர்கள் எழுப்பி எல்லை உருவாக்குகிறீர்கள், சுய-பாதுகாப்புக்கான இச்சுவர்கள் சுய-சிறையின் சுவர்களாக மாறும். அது உங்களுக்கு வேண்டாம் என்றால், உங்களுக்கு யோகா தேவை.

யோகா என்றால் "என் உடலை நான் முறுக்கவேண்டுமா, வளைக்கவேண்டுமா, தலைகீழாக நிற்கவேண்டுமா?" இல்லை, யோகா என்றால் உடலை வளைப்பதும் முறுக்குவதும் இல்லை. யோகாவை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் - சுவாசிக்கலாம், நடக்கலாம், வாசிக்கலாம், தூங்கலாம், அல்லது நின்றபடியும்கூட யோகா செய்யலாம் - குறிப்பிட்ட செயல் எதுவும் இல்லை, அது ஒரு குறிப்பிட்ட பரிமாணம்.

என் வாழ்க்கை முழுவதுமே எனக்குள்ளும் மற்றவர் அனைவருக்குள்ளும் இருக்கும் எல்லைகளை தொடர்ந்து அழிப்பதுதான்.

மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்பது, "சத்குரு, நீங்கள் தினமும் எத்தனை மணிநேரம் யோகாசனங்கள் செய்கிறீர்கள்?" நான் அவர்களிடம், "இருபது விநாடிகள்!" என்பேன். அது உண்மைதான். நான் வெறும் இருபது விநாடிகளே ஆன்ம சாதனையில் ஈடுபடுகிறேன். காலையில் எழுந்ததும், வெறும் இருபது நொடிகளில் முடிந்துவிடும். அப்போது மீதி நாளில் நான் யோகா செய்வதில்லையா? அப்படியில்லை, நான் வாழும் யோகா! ஏனென்றால் என் வாழ்க்கை முழுவதுமே எனக்குள்ளும் மற்றவர் அனைவருக்குள்ளும் இருக்கும் எல்லைகளை தொடர்ந்து அழிப்பதுதான். இதுதான் யோகா. இப்போது நாம் இங்கு செய்வதும் யோகாதான்.

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!

YAT18_Newsletter-650x120