Question: ஞானோதயம் அடைந்த மனிதர், உயிர் விடாமல் தன் உடலை தக்க வைத்துக் கொள்வது சிரமம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உயிரை தக்க வைத்துக் கொள்ள அவர் என்னென்ன தந்திரங்கள் செய்கிறார் என்று சொல்ல முடியுமா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு மனிதர் ஞானமடையும் வரை எல்லா பிறவிகளிலும் தன் கர்மவினையை கரைப்பதற்காக முயல்கிறார்; ஞானமடைந்த பிறகு. விழிப்புணர்வோடு கர்மவினைகளை உருவாக்குகிறார். ஏனென்றால் போதிய கர்மவினை இல்லையென்றால், அவருடைய பக்கம் சமநிலையாக இல்லையென்றால், இந்த உடலில் அவரால் இருக்கமுடியாது.

90 சதவிதம் பார்த்தால், ஞானமடைகிற நேரமும் உடலை விடுகிற நேரமும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. இந்த உடல் இயக்கம் குறித்து நிபுணத்துவம் இருக்கிற மனிதர்கள்தான் உடலிலே தொடர்ந்திருக்கிறார்கள். பிறரால் முடிவதில்லை. இதற்கென்று பல வழிகள் உண்டு. உங்கள் இயக்கத்தின் மேல் உங்களுக்கு நிபுணத்துவம் இல்லையென்றால் இன்னொரு வழி, விழிப்புணர்வோடு கர்மவினைகளை ஏற்படுத்திக்கொண்டே போவது. நான் இங்கே என்ன செய்கிறேன் என்பது குறித்து இந்த நேரத்தில் நான் பேச விரும்பவில்லை.

இராமகிருஷ்ண பரமஹம்சரை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அவர் தெளிந்த விழிப்புணர்வில் இருந்தவர். மிக அற்புதமான ஒரு உயிர். பல எல்லைகளையும் கடந்தவர். ஆனால் உணவின் மீது அவருக்கு ஒரு வெறியே இருந்தது. சீடர்களோடு பேசிக்கொண்டே இருப்பார். "கொஞ்சம் இருங்கள்"’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்று சாரதா தேவியாரைப் பார்த்து, "இன்று என்ன சமையல்?" என்று கேட்பார். சாரதாதேவிக்கு வெட்கமாக இருக்கும். இந்த மனிதர் கடவுளைப் போல் இருக்கிறார். எல்லோரும் இவரை வணங்குகிறார்கள். ஆனால் உணவின் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறாரே என்று.

புராணங்கள் எல்லாம் என்ன சொல்கின்றன? நீங்கள் ஆன்மீகவாதியாகிக் கொண்டிருந்தால் உணவிலே நாட்டம் குறையவேண்டும் என்று, இல்லையா? ஆனால் இங்கே கடவுளாகவே கருதி வழிபடக்கூடிய ஒரு மனிதர், உணவின் மீது இவ்வளவு பிரியத்துடன் இருக்கிறார். பலவிதங்களில் அவரை சாரதாதேவி கேட்பார். ஆனால் இவர் பதில் எதையும் சொல்லமாட்டார். ஒவ்வொரு நாளும் சாரதாதேவி உணவு பரிமாறுவார். இவர் ஒரு ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு சாப்பிடுவார்.

ஒருநாள் மிகவும் கோபம் வந்து சாரதாதேவி சொன்னார். "உங்களை நினைத்தாலே எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. உணவின் மீது ஏன் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்கள்? பலர் உங்களைத் தேடி வருகிறார்கள். அவர்கள் உணவைப்பற்றி நினைப்பதே இல்லை. உணவே இல்லாமல் உங்கள் முன் அமர்ந்திருக்க விரும்புகிறார்கள். நீங்கள் உணவின் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்கள், ஏன்?" என்று. அப்போது இராமகிருஷ்ணர் சொன்னார், "சாரதா, நீ என்னிடம் உணவு கொண்டு வந்து, நான் அந்த நாளில் அதில் ஈடுபாடு காட்டவில்லை என்றால், அன்று தொடங்கி 3 நாட்கள் வரையே நான் உயிரோடு இருப்பேன் என்று தெரிந்து கொள்," என்றார்.

ஏழு ஆண்டுகள் கழித்து சாரதாதேவி உணவு கொண்டுவந்து அந்த ஊஞ்சலில் வழக்கமான இடத்தில் வைத்தபோது, ராமகிருஷ்ணர் உணவில் நாட்டம் கொள்ளவில்லை. நேரம் வந்துவிட்டது என்று தெரிந்து சாரதாதேவி அழத்தொடங்கினார். ராமகிருஷ்ணர் சொன்னார், "இப்போது அழுது எந்தப் பயனும் இல்லை. நேரம் வந்துவிட்டது, அது எல்லோருக்கும் வரும்," என்றார்.

இது கர்மவினையை உருவாக்குகிற முறை. தெரிந்தே உணவில் ஒரு விருப்பத்தை வளர்த்துக்கொள்வது. விழிப்புணர்வோடு வேண்டுமென்றே எப்போதும் உணவை விரும்புவது. இந்த விருப்பம் இல்லை என்றால் அவரால் அந்த உடலில் இருந்திருக்க முடியாது. நான் இந்த உடலில் தொடர்ந்து இருக்க என்னென்ன தந்திரங்கள் செய்கிறேன் என்று எனக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்குத் தெரியும்.

நீங்கள் விழிப்புணர்வோடு இத்தகைய கர்மவினையை ஏற்படுத்தவில்லை என்றால் உடலில் இருப்பது என்பது முடியாது. கர்மவினையின் கட்டமைப்பு இல்லாமல் உங்களுக்கும் உங்கள் உடம்புக்கும் ஒன்றுக்கொன்று செய்துகொள்ள ஒன்றுமே இல்லை.