அரசியலில் இருந்து மதத்தை துண்டிப்பது எப்படி? இது தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் எழும் கேள்வி. உண்மையில், அரசியலிலிருந்து மதத்தை துண்டிக்கத்தான் வேண்டுமா? சத்குருவின் பதில் - மாறுபட்ட கோணத்தில்...

சத்குரு:

இந்தக் கேள்வியை மக்கள் என்னிடம் கேட்டபடி இருக்கிறார்கள். ஆனால், பல மதங்கள் இப்போது வழிநடத்தப்படுவதைப் பார்க்கும்போது, மதத்தை உண்மையில் அரசியலில் இருந்து பிரிக்க முடியாது என்றே தெரிகிறது. இப்போதைய பிரச்சனை இந்த இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிப்பதல்ல. அதற்குப் பதிலாக மக்களிடம் அதிக விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம் இந்தப் பிரிவினைச் சக்திகள் அதிக ஆதிக்கம் பெறாமல் பார்த்துக்கொள்வதுதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
மக்கள் மனதில் முறையான விழிப்புணர்வைக் கொண்டு வந்தால் மட்டுமே இந்தப் பிரச்சனை தீரும்.

மக்கள் மனதில் முறையான விழிப்புணர்வைக் கொண்டு வந்தால் மட்டுமே இந்தப் பிரச்சனை தீரும். இந்தச் சமூகத்தில் உள்ள தெளிந்த அறிவுள்ளவர்கள் இந்தப் பிரச்சனையைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளாவிடில், இறுதியில் இந்த நாடு வன்முறையாளர்களின் கைகளில் போய் சேர்ந்துவிடும். இது உடனே முடியக்கூடிய வேலை அல்ல. ஒவ்வொரு சந்ததியினரும் இதற்காக தொடர்ந்து பணிபுரிய வேண்டும்.

கிழக்கத்திய நாடுகளில், ஆன்மீகமோ மதங்களோ ஒருங்கிணைக்கப் பட்டவையாக இருந்தது கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஆன்மீகம் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டார்களே தவிர, அதை ஓர் அமைப்புமுறையாக உருவாக்கவில்லை. ஒரு விவசாயி தன் கலப்பையை வணங்கினார். ஒரு மீனவர் தன் படகை வணங்கினார். மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு எதை முக்கியமென பார்த்தார்களோ அதை வணங்கினார்கள். குறிப்பாக, கிழக்கத்திய நாடுகளில் மதம் என்பது தனி மனிதரைப் பற்றியது, கடவுளைப் பற்றியது அல்ல. மதம் என்பது உங்கள் விடுதலைக்காக உருவாக்கப்பட்டது. கடவுள் என்பது அதற்கான கருவிகளில் ஒன்று மட்டுமே.

வணங்கும் தன்மையை ஒருவருக்குள் கொண்டு வருவதுதான் இந்தக் கலாச்சாரத்தின் நோக்கமாக இருந்தது. எதை வழிபடுகிறீர்கள் என்பது முக்கியமாக இருக்கவில்லை. ஒன்றை நீங்கள் விரும்புகிறீர்களா அல்லது வெறுக்கிறீர்களா என்பது முக்கியம் இல்லை. எதைப் பார்த்து வணங்குகிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. வணங்குதல் என்பதை உங்கள் வாழ்க்கையின் ஒரு தன்மையாக எடுத்து வந்துவிட்டால், பிறகு நீங்கள் உங்கள் உயிர்த்தன்மைக்கு மிக நெருக்கமாக வந்துவிடுகிறீர்கள். உங்களுக்குள் பெரிய அளவில் வாழ்க்கையின் பரிமாணம் நடக்கத் துவங்கும்.

முற்காலங்களில், மக்களுக்கு மதம் என்பது மிக முக்கியமானதாக இருந்தாலும், மதம் அரசியலில் தலையிடவில்லை. அரசர் எந்த மதத்தை பின்பற்றுபவராய் இருந்தாலும், குடிமக்களுக்கு தங்கள் மதத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது. மதம் பிரச்சனையாகவே இருந்ததில்லை, ஏனெனில், மக்கள் மதத்தை ஓருங்கிணைக்கப்பட்ட அமைப்புமுறையாக பார்க்கவில்லை. ஆனால், வெளியிலிருந்து அதிகார நோக்கத்துடன் இங்கு வந்த மதங்களைப் பார்த்து, இந்தக் கலாச்சாரத்திலும் மதத்தை ஒருங்கிணைக்க துவங்கினார்கள்.

ஒரு விவசாயி தன் கலப்பையை வணங்கினார். ஒரு மீனவர் தன் படகை வணங்கினார். மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு எதை முக்கியமென பார்த்தார்களோ அதை வணங்கினார்கள். குறிப்பாக, கிழக்கத்திய நாடுகளில் மதம் என்பது தனி மனிதரைப் பற்றியது, கடவுளைப் பற்றியது அல்ல.

நாடு என்பது ஒரு சிந்தனை மட்டுமே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதை நாம் வாழ்க்கையில் அனுபவ உண்மையாக மாற்ற விரும்பினால், ஒவ்வொருவரின் மனதிலும், தான் இந்த நாட்டின் குடிமகன் என்னும் உணர்வை ஆழப் பதிப்பதற்குத் தேவையான பணிகளை அனைத்து மட்டங்களிலும் செய்ய வேண்டும். தான் முதலில் நாட்டின் குடிமகன், பின்னரே மதம் போன்றவை என்று ஒவ்வொருவரும் உணரவேண்டும். அப்போதுதான் எந்த ஒரு சவாலான நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய திறமையான நிலையில் நாம் இருப்போம். மக்கள் அப்படி இல்லாதபட்சத்தில், ஒவ்வொரு முறை நம் நாட்டின் இறையாண்மைக்கே அச்சுறுத்தல் ஏற்படும். எந்தப் பக்கம் சாய்வது என்று மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்.

எப்போதெல்லாம் நாட்டின் அடிப்படைத் தன்மையையும், சமூகரீதியான மக்கள் தொகையையும் - மதரீதியான மக்கள் தொகையாகவோ அல்லது வேறுவிதமாகவோ இருக்கலாம் - அதை மாற்றுவதற்கான முயற்சிகள் நடக்கிறதோ, அப்போதெல்லாம் மிகவும் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டாலே ஒழிய, பெரிய அளவிலான கலகங்கள் நாட்டில் நிகழ்வது தவிர்க்க முடியாது.

அதிக அளவிலான மக்களுடைய அடிப்படைப் பிரச்சனைகளையும் அபிலாஷைகளையும் உண்மையான உணர்வுடன் தீர்க்க முயல்வது அவசியம். இல்லையென்றால், மதக் குழுக்கள் தங்கள் குறைகளைத் தீர்த்துக்கொள்ள அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் ஒரே தீர்வு என்று முடிவெடுத்து, தீவிர அரசியலில் இறங்கக்கூடிய நாள் வெகு தொலைவில் இருக்காது. இதனால் நாட்டின் நிலையான அரசியல் அல்லாது, தனிப்பட்டவர்களின் ஆன்மீக வாய்ப்புகளும்கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாக நேரிடலாம்.

அரசாங்கமும், பெரிய அளவில் சமுதாயமும், குறிப்பாக மதம் மற்றும் ஆன்மீக அமைப்புகளும் இந்தப் பிரச்சனையை உணர்வுப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும், தொலைநோக்குடனும் அணுக வேண்டும். இந்தச் சூழ்நிலையை ஒரு சமநிலையின்றி நாம் அணுகினால், நம் நாடு மதரீதியில் பிளவுபடுவது துரதிர்ஷ்டவசமான உண்மையாகி விடும்.

எனவே, மதங்களின் சகிப்புத்தன்மையற்ற நிலையால் ஏற்படும் வன்முறைகளிலிருந்து, நமது அழகான, துடிப்புமிக்க, அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் இந்தக் கலாசாரத்தை மீட்பதற்குத் தேவையான அறிவையும் விவேகத்தையும் நாம் செயல்படுத்த வேண்டும்!