கைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம்


சத்குரு: கைலாசம் பற்றின என் அனுபவங்களையும், புரிதலையும் தெளிவாக கூறுவதென்பது என்னால் முடியாத விஷயம். அதற்காக நான் என் உயிரை விடக்கூட தயார் – அவ்வளவு உயர்ந்தது. இவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். முதல் ஜைன தீர்தங்கரான ரிஷப்தேவ் என்பவர் கைலாசத்துக்கு வந்த பொழுது அவர் ஒரு குறிக்கோளுடன் வந்தார். அதைப்பற்றி முன்னமே நிறைய கேள்விப்பட்டிருந்ததால், அங்கே போய் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு ஏதோ ஒன்று செய்ய விரும்பினார். அவர் திறந்த நிலையில், எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற்றிருந்தார். கைலாசத்தால் தீண்டப்பட்ட பிறகு, அந்த ஞானக்குவியலை திரட்டிக்கொண்டு, வேறு எங்கோ ஏதோ ஒன்று செய்வதை விட, அந்த மலைகளிலேயே கரைந்து போக வேண்டுமென்று முடிவெடுத்தார். அதில் ஒரு பாகமாகவே மாறினார். எவர் ஒருவர் அதை ஆழமாக ருசித்திருக்கிராறோ, அவரால் அந்த ஈர்ப்பை தவிர்க்க முடியாது. நீங்கள் அதனால் தீண்டப்பட்டால், அதன் பிறகு அது இது என்று எதோ அற்ப விஷயங்களில் ஈடுபட்ட விஷயங்களுக்கெல்லாம் ஒரு அர்த்தமே இல்லாமல் போய்விடும். இது சாகாவரம் அல்ல. இறப்பற்ற ஒரு நிலையை உங்களுக்கு வழங்கினால், ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும். இந்த பிரம்மாண்டமான இயற்கையில் கரைந்து போவது சாத்தியம் என்றால், அது தவிர்க்க முடியாத ஒரு ஈர்ப்பு.

கைலாச பர்வதம் ஒரு மிகப் பெரிய ஆன்மீக நூலகம். புத்த மதத்தினர் கைலாசத்தை உயிர் நிலையின் அச்சாணியாக கருதுகின்றனர். ஆசிய கண்டத்தின் தென் கோடியிலிருந்தும், இந்திய துணைக்கண்டத்திலிருந்தும், மத்திய ஆசிய பகுதி, மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வரை கைலாச பர்வதத்தை ஒரு புனிதமான இடமாகவே கருதினார்கள். கடந்த சில நூற்றாண்டுகளாக அந்த விழிப்புணர்வு குறைந்து அந்தக் கலாசாரத்தை நிலை நாட்டாமல், குறைந்து விட்டது. ஆனால் இன்றும் சிறு சிறு குழுக்களில் உள்ள மக்களுக்கு இது தெரியும்.

சிவாவிலிருந்து தொடங்கி, நிறைய மகாத்மாக்கள் தங்கள் செயல்களை சேமித்து வைத்து பாதுகாக்க கைலாசத்தை தேர்ந்தெடுத்தார்கள். ரிஷப் தேவ், ‘பொன்’ மதத்தை சேர்ந்த சில மகான்கள், புத்த மதத்தைச் சேர்ந்த இரு மிகப் பெரிய குருமார்கள், அகஸ்தியமுனி, நாயன்மார்கள் – எல்லோருமே கைலாச பர்வதத்தை தேர்ந்தெடுத்தார்கள்.

ஹிந்து வாழ்க்கை முறையில் கைலாசம்தான் சிவனின் இருப்பிடம் என்று சொல்வார்கள். யோக முறையில் சிவனை நாம் கடவுளாக பார்ப்பதில்லை. அவரை நாம் முதல் யோகியாக பார்த்தோம் – ஆதியோகி என அழைத்தோம். அவரே முதல் குரு அல்லது ஆதிகுருவாக இருந்தார். முதல் முறையாக தனது ஏழு சீடர்களுடன் யோக விஞ்ஞானத்தை பகிர்ந்து கொண்டார். பிற்பாடு அவ்வேழு சீடர்களும் சப்த-ரிஷிகள் என அழைக்கப்பட்டனர். சிவனே உலகின் மிகப்பெரிய ஞானி ஆவார். சிவனின் இருப்பிடம் என்று சொல்லும் பொழுது, அங்கே கற்களைத் தோண்டியோ, மேலே மேகங்களுக்குள் எங்கேயோ தேடினால் அவர் கிடைக்க மாட்டார். அவருக்கு தெரிந்த எல்லாமே அங்கே சக்தி ரூபத்தில் சேர்த்து வைத்திருக்கிறார். அந்த சிகரத்தை அவர் தம் உயிரோட்டமுள்ள, சக்தி வாய்ந்த ஞானத்தை சேமிக்க, ஒரு பரணாக தேர்ந்தெடுத்தார். சிவாவிலிருந்து தொடங்கி, நிறைய மகாத்மாக்கள் தங்கள் சக்தி மிக்க செயல்களை சேமித்து வைத்து பாதுகாக்க கைலாசத்தை தேர்ந்தெடுத்தார்கள். ரிஷப் தேவ், ‘பொன்’ மதத்தை சேர்ந்த சில மகான்கள், புத்த மதத்தை சேர்ந்த இரு மிகப் பெரிய குருமார்கள், அகஸ்தியமுனி, நாயன்மார்கள் – எல்லோருமே கைலாச பர்வதத்தை தேர்ந்தெடுத்தார்கள். பிரபஞ்சத்தில் உள்ள பல ஞானியர் தம் ஞானத்தின் இரண்டு சதவிகிதமாவது தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு பரிமாறினால் அது பெரிய மகிழ்ச்சியான விஷயம். பலருக்கு அது கூட செய்ய இயலவில்லை. ஆதலால் அவர்கள் தம் ஞானத்தை அதிக மனித நடமாட்டமில்லாத – அதே சமயம் அதை பெற விரும்பும் ஆர்வலர்களுக்கு அணுகக்கூடிய இடங்களில் சேமித்து வைத்தனர். கைலாசம் அந்த மாதிரியான ஒரு இடம்தான். போகவே முடியாத இடமும் அல்ல, ஆனால் பெருவாரியான மக்கள் போகத் தயங்கும் ஒரு இடம். இது மாதிரி இந்தியாவில் பல இடங்கள் உள்ளன.

இந்த மாதிரி பல இடங்களில் ஞானிகள் தங்கள் ஞானத்தை சேமித்து வைத்திருக்கிறார்கள் – இதில் கைலசம்தான் மிக முக்கியமான ஒரு இடம்.

மக்களுக்கு புரிதலை ஊக்குவித்து, ஆயத்தமாக்கி, தாமே உண்மையை உணர வைப்பது அடிக்கடி நடப்பதில்லை. இது வருந்தத்தக்க விஷயம். சுற்றி உள்ள மக்களுடன் ஏதோ ஒரு செயல் செய்ய வேண்டுமென்றால் கூட பலதரப்பட்ட தடங்கல்களால் ஒரு வரம்புக்குட்பட்டு விடும். சமுதாயத்தின் கட்டுப்பாடு, தனி மனித உடல்-மன சம்பந்தப்பட்ட கட்டுப்பாடுகளும் கர்மவினைகள் – என்று நிறைய தடைகள். உங்களுக்கு தெரிந்த எல்லா விஷயங்களையும் பெற்றுக்கொள்ள ஒன்றிரண்டு பேரை மட்டும் தயார் செய்வது என்பது துர்லாபம். மிகச் சில குருமார்களே அப்படிப்பட்ட பாக்கியத்தை பெற்றவர்கள். மற்றவர்கள் சமுதாய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, மக்களுடன் செயல் புரிய வேண்டும். ஆதலால் அவர்களுக்கு தெரிந்த விஷயங்களிலிருந்து ஒரு சிறு சதவிகிதம் கூட பரிமாற அல்லது பகிர்ந்து கொள்ள இயலாது. இதற்கு பாறாங்கற்களே இன்னும் கூடுதல் ஏற்புத்தன்மையுடன் இருக்குமென நினைத்தார்கள். இந்த மாதிரி பல இடங்களில் ஞானிகள் தங்கள் ஞானத்தை சேமித்து வைத்திருக்கிறார்கள் – இதில் கைலசம்தான் மிக முக்கியமான ஒரு இடம். அளவிலும், பல விதமான ஞானங்களும் கணக்கிட முடியாத அளவிற்கு சேர்த்து வைத்துள்ள இடம் கைலாசம் மட்டுமே!

புனித யாத்திரை போவது என்றாலே அடிப்படையில் ‘நான்’ என்ற உணர்வை குறைப்பதற்காகத்தான். மலையேறுவது என்பது என்னால் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை நோக்கியே இருக்கும், ஆனால் யாத்திரை என்பது அந்த எண்ணத்தை குறைப்பது. ஏறுவதிலும், நடப்பதிலும், இயற்கையின் கடினமான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதால் ‘நான்’ என்ற எண்ணம் கரைந்து போகும். ஆகையால் அந்தக் காலத்தில் அவர்கள் யாத்திரைக்குச் சென்ற இடங்களெல்லாமே, தன்னைத்தானே உடல் - மன ரீதியாக வருத்திக் கொண்டு தன்னை குறைத்துக் கொள்வதற்காகவே அமைந்த இடங்களுக்கே சென்றனர். இதனூடே அவர்கள் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணியவை யாவும் தகர்ந்து போகும். இன்று எல்லாமே சுலபமாக ஆக்கப்பட்டு விட்டன. நாம் ப்ளேனில் பறந்து சென்று, கார்களில் பயணம் செய்கிறோம் – நடை என்பது மிகவும் குறைந்து விட்டது.

யாத்திரையின் அடிப்படையான நோக்கமே அந்தக் காலத்தில் இருந்ததை விட இப்பொழுது இருக்கும் நவீன - மனிதனுக்குத்தான் பொருந்தும், இந்த யாத்திரைதான் – இலக்கைப் பொறுத்தவரையிலும் - மிக உயர்ந்த ஒன்றாக இருக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் இருந்த மனிதனுக்கு தற்பொழுது இருக்கும் மனிதன் உடலளவில் மிகவும் பலவீனமானவன். இதைப் பரிணாம வளர்ச்சி என்று சொல்ல முடியாது. இது ஒரு சமுதாய வளர்ச்சியின் கோளாறு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட சுக போகங்களையும், வசதிகளையும் எப்படி உபயோகிப்பதென்று தெரிந்து கொள்ள தவறி விட்டோம். நம்மால் சுயமாக கண்டு பிடிக்கப்பட்ட இந்த சுக போகங்களையும், வசதிகளையும் நம் நல் - வாழ்க்கையை நோக்கி பயன்படுத்த தவறி விட்டோம். நாம் அவைகளை நம்மையே இன்னும் பலவீனமாக்கவும், நம் ஆரோக்கியத்தை குறைத்துக்கொள்ளவும், நம் சுற்றுச்சூழலை கேடு விளைவிக்கவும் பயன்படுத்திக் கொண்டோம். இந்த கிரகம் நமக்கு என்னென்ன கொடுக்கிறதோ அதையே இப்பொழுது உபயோகப்படுத்த முடியாமல் நமது வசதிகளும், பொருள்களும் செய்து விட்டன. ஆகையால் யாத்திரையின் அடிப்படையான நோக்கமே அந்த காலத்தில் இருந்ததை விட இப்பொழுது இருக்கும் நவீன - மனிதனுக்குத்தான் பொருந்தும், இந்த யாத்திரைதான் – இலக்கைப் பொறுத்தவரையிலும் - மிக உயர்ந்த ஒன்றாக இருக்கும்.