ஈஷா யோக மையம் சார்பில், "கிராமிய கலையும் தமிழகமும்" தலைப்பில் 7 நாட்கள் நடைபெற்ற குழந்தைகளுக்கான பயிற்சி முகாமில், 290 குழந்தைகள் கலந்துகொண்டனர். இதன் நிறைவு விழா கோவை ஈஷா வித்யா பள்ளியில் செவ்வாய்கிழமை (டிசம்பர் 31) நடைபெற்றது.

தேவராட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், களியல், லம்பாடி, மான்கொம்பு ஆட்டம், கரகம், பின்னலாட்டம், பெரிய குச்சியாட்டம், சிலம்பம், படுகர் நடனம் போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமியக் கலைகள் குழந்தைகளுக்குக் கற்றுத் தரப்பட்டன.

இப்பயிற்சி முகாமிற்க்காக, தூத்துக்குடியில் இருந்து 11 ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு, பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. சுழற்சி முறையில் கற்றுத் தரப்பட்ட பயிற்சியில், ஒவ்வொரு கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளும் தலா 3 கலைகளைக் கற்றனர்.

இவர்கள் அனைவரும், பொங்கல் விழாவில், தங்களது ஊர்களில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளின் போது, தான் கற்றுக்கொண்ட நடனத்தை மேடையில் அரங்கேற்ற உள்ளனர். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.