புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள் -பகுதி 1

பகுதி 2 3 4 5 6 7 8 9 10

2016ல் ஈஷா வித்யா 10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எளிமையாகவும் அதே சமயத்தில் உன்னத குறிக்கோளை நோக்கி உத்வேகத்துடனும் துவங்கப்பட்ட ஈஷா வித்யா பள்ளிகள், இத்தனை ஆண்டுகளில் பலவித நல்ல வாய்ப்புகளையும் வளர்ச்சிகளையும் பெற்று வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறது. இன்று உள்ள 9 ஈஷா வித்யா பள்ளிகளில் யாரொருவர் சென்று பார்த்தாலும், அங்கு புன்னகை பூத்த முகங்களுடன் ‘நமஸ்காரம்’ செய்தபடி வரவேற்கும் ஆனந்தமான குழந்தைகளின் அற்புதக் காட்சிகளைக் காணலாம். சுத்தமும் சுகாதாரமும் நிறைந்த சூழலில் உற்சாகத்துடன் அவர்கள் ஈஷா வித்யாவில் கல்வி பயில்கிறார்கள்.

ஈஷா வித்யாவை இத்தகையதொரு நிலைக்கு மெருகேற்றி கொண்டுவருவதற்காக, பின்னாலிருந்து இதனை உருவாக்கப் பலர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த தொடரில் ஒரு ஈஷா தன்னார்வத் தொண்டரின் நோக்கிலிருந்து ஈஷா வித்யா பற்றிய பல மனதைத் தொடும் பகிர்வுகளையும் சுவாரஸ்ய நிகழ்வுகளையும் பதிவிடவிருக்கிறோம். ஈஷா வித்யாவின் குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஈஷா வித்யாவால் தொடப்பட்ட எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளையும் பகிர்வுகளையும் இங்கே நீங்கள் தொடர்ந்து படித்து உணரலாம்!

“இந்த கிராமப்புற குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே இவர்களின் குடும்பத்தை பொருளாதார மற்றும் சமூக பின்னடைவிலிருந்து உயர்த்துவதற்கான ஒரே படி!” -சத்குரு

ஒரு தன்னார்வத் தொண்டரின் பகிர்வு:

ஈரோடு மாவட்டத்தில் கனகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஈஷா வித்யா பள்ளியை பார்வையிடச் செல்லும் முன்னதாகவே, ஈஷா வித்யா திட்டம் கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான கல்வியை வழங்கும் ஒரு முயற்சி என்பதை நான் அறிந்திருந்தேன். நகரவாசியான எனக்கு கிராம குழந்தைகள் என்றால் வழக்கமான இனிமையான சூழலில் ஆனந்தமாக வயல்களில் விளையாடிக்கொண்டு, புழுதித் தெருக்களில், மழைத் தண்ணீரில், மரத்தடி ஊஞ்சலில், கட்டுப்பாடுகள் ஏதுமின்றி ஆடித்திரியும் காட்சிகளே என் கற்பனையில் இருந்தன. பொருளாதார மற்றும் சமூக நிலையில் பின்தங்கிய நிலையிலுள்ள கிராமப்புற குழந்தைகளை அதிலிருந்து மீட்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது குறித்த புரிதல் ஏதும் என்னிடம் இருக்கவில்லை. ஆனாலும் கூட சிலர் ஈஷா வித்யாவின் அற்புத செயல்பாடுகள் குறித்து என்னிடம் தெரிவிக்கும்போது நான் அதைக் கேட்டு மிகவும் மகிழ்வேன்!

ஈஷா வித்யா மாணவர்கள் புரிந்துள்ள சாதனைகளில் சில கீழே...

  • 10ஆம் வகுப்பு மாநில கல்வி திட்டத்தில் முதன்முதலாக தேர்வினை எதிர்கொண்ட பள்ளியின் மாணவர்கள் சராசரியாக 89% மதிப்பெண்களோடு அனைவரும் வெற்றிபெற்றனர். மேலும்..
  • பெண்கள் கபடி அணி முதற்பரிசு வென்றுள்ளதோடு மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. மேலும்..
  • 3ஆம் வகுப்பு மாணவி சுரஸ்திகா இந்திய தேசிய திறனாளர் போட்டியில் (Indian National Talent Competition) 3ஆம் பரிசைப் பெற்றுள்ளார். மேலும்..
  • அக்னி இக்னைட் அறிவியல் போட்டியில் (Agni Ignite Science Competition) 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்பரிசு! மேலும்..
  • இத்தாலியில் நடந்த சர்வதேச வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ளும் ஈஷா வித்யா மாணவன் T.கார்த்திகேயன் தேசிய அளவிலான வில்வித்தை குழுவில் இடம்பெற்றுள்ளான். மேலும்..
  • தேசிய குழந்தைகள் அறிவியல் கூட்டமைப்பு (NCSC) நடத்திய மாவட்ட அளவிலான போட்டியில், ஈஷா வித்யா மாணவர்கள் ‘சூரிய சக்தி - சமையலுக்கான ஒரு மாற்று சக்தி’ செயல்திட்ட மாதிரியை முன்வைத்து முதற்பரிசு பெற்றனர். மேலும்..
  • 2012ல் தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் முதற்பரிசு
  • மாநில அளவிலான சதுரங்க போட்டியில் மாணவன் ரக்ஷித் 3ஆம் பரிசு வென்றுள்ளான்.
  • ஈஷா வித்யா பள்ளியிலுள்ள அனைத்து கிராமப்புற மாணவர்களுக்கும் மின்னணு தொழிற்நுட்ப வசதி கிடைக்கப்பெறுவதற்கு நன்றி!

ஈஷா வித்யாவின் முழு சாதனைப் பட்டியலும் சற்று நீளமாக சென்று கொண்டிருக்கிறது!

இந்த சாதனைப் பட்டியல் நமக்கு சொல்வது என்னவென்றால், ஈஷா வித்யா மாணவர்கள் பாடத்திட்ட அளவில் மட்டுமல்லாமல் விளையாட்டு போன்ற பிற திறமைகளிலும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் சாதித்து வருகிறார்கள் என்பதைத்தான்.

இந்த பள்ளியில் பயிலும் 60%க்கும் மேலுள்ள மாணவர்கள் கற்பனைகூட செய்துபார்க்க இயலாத மிகவும் பின்தங்கிய சமூக மற்றும் பொருளாதார பின்னணியிலிருந்து வந்துள்ளனர்.

அனைத்து பள்ளிகளும் நகரங்களிலிருந்து 15-20 கி.மீ தூர தொலைவில் கிராமப்புறத்தில் அமைந்திருந்தாலும், இந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எப்படி இத்தகைய உயர்ந்த மொழித்திறனுடனும், பாடம் மற்றும் பிற திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகொள்வதிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்கையில் ஆச்சரியமடைகிறேன். அதற்கும் மேலாக, ஈஷா வித்யாவில் பயிலும் 40% மாணவர்கள் மட்டுமே கல்விக்கட்டணம் செலுத்தி (பிற பள்ளிகளை ஒப்பிடும்போது மிக மிக சொற்ப தொகை) படிக்கிறார்கள். இதனால் ஈஷா வித்யா பள்ளியை நடத்துவதற்கு பெரும்தொகை கண்டிப்பாக தேவைப்படும் என என்னால் உணரமுடிகிறது. எப்படி இந்த தொகையை ஈடுகட்டி பள்ளியை இந்த அளவிற்கு சிறப்பாய் கொண்டுசெல்கிறார்கள்?

இந்த கேள்விகளெல்லாம் என் தலைக்குள் கொதித்துக்கொண்டிருக்க, ஈஷா வித்யா பள்ளி ஒன்றிற்கு நேரடியாக செல்ல தீர்மானித்தேன். ஒருநாள் காலை வேளையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈஷா வித்யா பள்ளிக்கு நேரடியாகச் சென்று அந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உதவியாளர்கள், பள்ளிக்கு உதவும் நன்கொடையாளர்கள் ஆகியோரைப் பற்றிய செய்திகளைத் நேரடியாகக் கேட்டும் பார்த்தும் தெரிந்துகொண்டேன். சில மணிநேரங்கள் மட்டுமே நான் அந்த பள்ளியில் இருந்தாலும் நான் அங்கு கண்டவற்றால் முழுமையாக ஆட்கொள்ளப்பட்டேன்; அன்றைய நாள் என்னால் தூங்க முடியவில்லை!

அங்கு நிகழ்ந்த நிகழ்வுகளை கீழே நான் பகிர்ந்துள்ளேன்.

இந்த பள்ளியில் பயிலும் 60%க்கும் மேலுள்ள மாணவர்கள் கற்பனைகூட செய்துபார்க்க இயலாத மிகவும் பின்தங்கிய சமூக மற்றும் பொருளாதார பின்னணியிலிருந்து வந்துள்ளனர்.

பள்ளியில் பயிலும் 900 மாணவர்களில் தற்போது 474 மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெற்று பயில்கிறார்கள். அவர்களின் சிறப்பு பயிற்சி கட்டணம் (tuition fee) கூட இல்லாமல் முழுமையான கல்வி உதவித் தொகையைப் பெற்று பயில்கிறார்கள். சீறுடை, புத்தகங்கள், பிற எழுது பொருட்கள் மற்றும் போக்குவரத்து வசதி ஆகிய அனைத்தும் பள்ளியால் வழங்கப்படுகிறது. இந்த குழந்தைகளின் குடும்பங்கள் கடும் ஏழ்மையில் வாழ்கிறார்கள்; வறுமையில் வாடும் குடும்பம், பசித்த வயிறுகள், சுற்றியிருக்கும் இளைஞர்களின் எதிர்மறை நடவடிக்கைகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் செயல்பாடுகள், இன்னும் பல கொடுமைகள்... இவர்களின் நம்பிக்கையை எப்படி பள்ளி ஆசிரியர்கள் பெறுகிறார்கள்? எப்படி இவர்களை ஆரோக்கியம் மற்றும் சிறப்பான கல்விச் சூழலை நோக்கி வழிநடத்துகிறார்கள்? மகிழ்ச்சியான கற்றலை அறிமுகம்செய்து, எப்படி அந்த கிராமக் குழந்தைகளை ஊக்கப்படுத்துகிறார்கள்? நிச்சயமாக இது ஒரு எளிய செயலல்ல!

அங்குள்ள சில மாணவர்களை நேரடியாக பார்த்து பேசிய பிறகு, ஈஷா வித்யா பள்ளி இல்லையென்றால் இவர்களின் வாழ்வு தற்போது என்ன ஆகியிருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கையில், என் இதயம் நொருங்குவதாய் இருந்தது!

இங்கே சில மாணவர்களின் உள்ளம் உருகச்செய்யும் வாழ்க்கை அனுபவங்கள்..

“நான் ஈஷா வித்யா பள்ளியில் படித்திருக்கவில்லையென்றால், இந்நேரம் 7ஆம் வகுப்புடன் முடித்துவிட்டு, கூலி வேலைக்கு சென்றிருப்பேன்.” - கார்த்திக் ராஜா, 11ஆம் வகுப்பு (ஈஷா வித்யா பள்ளியின் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் ஒருவன்)

அடுத்த வரும் பதிவுகளில் கார்த்திக் ராஜா பற்றியும் மற்றும் சிலரின் பதிவுகள் வரும்...

ஆசிரியர் குறிப்பு:

“Innovating India’s Schooling” இந்த கல்வி மாநாடு ஈஷா வித்யா, ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட தனிநபர்கள், கல்வித்துறை சார்ந்த அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சிந்தனையாளர்கள் போன்றோரை ஒன்றிணைத்து இந்த கலந்துரையாடல் நிகழவுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் உரைகள், விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் கல்வி குறித்த பொதுப்படையான பார்வைக் கோணத்தை மாற்றியமைப்பதாய் அமையும். கல்வி என்றால் அதிக வேலைசெய்யக் கூடிய திறம்படைத்த ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்குவதற்கானது மட்டுமல்ல, கல்வி என்பது முழுமையான பொறுப்புமிக்க மற்றும் மகிழ்ச்சியான ஒரு சமுதாயத்தை வடிவமைப்பதற்கானது என்ற சிந்தனையை இது உருவாக்கும். இந்த நிகழ்ச்சி கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் ஈஷா வித்யாவின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்திற்கான அடையாளமாகவும் நிகழ்கிறது. மேலும் அறிய: ishavidhyaconference.com

#10YrsOfIshaVidhya