தன்னார்வத் தொண்டர் என்றால், எந்த ஒரு பிரதிபலனும் பாராமல் சூழ்நிலைக்குத் தேவையான செயலில் ஈடுபடுபவர். "இப்படி இருப்பதால் என்ன பயன்?" என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதை தெளிவுபடுத்த தன்னார்வத் தொண்டைப் பற்றி ஒரு கட்டுரை...

சமீபத்தில் நடந்து முடிந்த 3 நாட்கள் சூன்ய தியான வகுப்பில் பல பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். வழக்கமாக ஆசிரமத்தில் நடக்கும் வகுப்புகளுக்கு தன்னார்வத் தொண்டர்கள் மிகக் குறைவாகவே வந்தாலும், வகுப்பின் ஊடே அவர்கள் செய்யும் செயல்களால் அந்த வகுப்பு மிகவும் சுலபமாக, முயற்சியில்லாமல் நடப்பது என்னவோ உண்மைதான். இதில் அவர்களின் அனுபவமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் ஒரே வகுப்புக்கு, ஒரே ஊரிலிருந்து 20 தன்னார்வத் தொண்டர்கள் முன்வந்து தாங்களே அந்த வகுப்பின் செயல்பாடுகளை முன்னின்று நடத்தியது இதுவே முதல்முறை. இதன் மூலம் தங்கள் உள் வளர்ச்சியையும் மேம்படுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்? என்ன விதமான அனுபவத்தை எட்டினார்கள்? அந்த 20 பேரில் ஒருவரின் வார்த்தைகளில் ஒரு நெகிழ்வான பகிர்தல் இங்கே.

இனி திருமதி. ஜோதி அவர்களின் வார்த்தைகளில் கேளுங்கள்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"போராட்டம் நிறைந்த வாழ்க்கையில் மூச்சு முட்ட நான் ஓடி கொண்டே இருந்தேன்! கல்வி, திருமணம், பிள்ளைகளின் படிப்பு, எதிர்கால திட்டங்கள் எனப் பலவித தேடல்களில் நான் பிறழ்ந்துபோய் எதையோ தேடிக் கொண்டிருந்தேன். தினந்தோறும் ஈஷா யோகப் பயிற்சிகளை செய்கிறேன், ஆனாலும் பொருளியல் உலகில் மூழ்கி இருந்த எனக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது.

ஈஷா யோக மையதில் நடக்கும் சூன்ய தியானப் பயிற்சிக்கு மதுரை அன்பர்கள் ஒரு குழுவாகச் சென்று தன்னார்வத் தொண்டு செய்யத் திட்டமிட்டோம். 20 பேர் கொண்ட அந்தக் குழுவில் எனக்கும் ஒர் இடம் கிடைத்தது.

தன்னார்வத் தொண்டு என்பதை வார்த்தைகளாலோ விளக்கங்களாலோ புரிந்து கொள்ள இயலாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆசிரமத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் நான் தன்னார்வத் தொண்டு செய்வது இதுவே முதல்முறை. காலில் உள்ள காயத்தோடும் வலியோடும் முழுமையாக என்னால் செய்ய முடியுமா என்ற திகைப்புடன் சென்ற எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. செயல்களை எடுத்துச் செய்ய ஆரம்பித்தவுடன் வலி இருந்த இடம் தெரியவில்லை. சுறுசுறுப்பாக ஓடி ஆடி வேலை செய்யத் தொடங்கி விட்டேன். சோர்வு, களைப்பு, வலி ஏதுமின்றி இது சாத்தியமாகி இருக்கிறதென்றால் சத்குருவின் அருள் வலிமை என்றுதான் கூறுவேன்.

ஒரு கணம் கூட பிரிவென்பதே இல்லை. அனைத்திலும் சத்குருவைக் காண்கின்றேன். என்னால் இயன்ற சிறு சிறு செயல்களை முழு ஈடுபாட்டுடன் செய்து விட்டுச் செல்கிறேன். ஆனால் அதன் மூலம் விலைமதிக்க முடியாத ஒன்றை என்னுடன் எடுத்துச்செல்கிறேன்.” என்கிறார் ஜோதி.

"இந்நிகழ்சியில் என்னுடன் பங்குகொண்ட தன்னார்வத் தொண்டர்கள் சிலரின் பகிர்வுகள் இதோ உங்களுக்காக..."

"இந்த அனுபவம் என்னை ஆழமாக தொட்டிருக்கிறது. எனக்குள் இருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை."
- இந்திரா

"இந்தச் சூழலோடு உணர்வில் ஒன்றிக் கலந்ததால் இந்த நான்கு நாட்கள் எப்படி சென்றது என்றே எனக்குத் தெரியவில்லை. முழு அர்ப்பணிப்போடு என்னை மறந்த நிலையில் இருந்தேன்."

- வெங்கடராமன்

மேலும் தன் அனுபவத்தைப் பற்றி ஜோதி விவரிக்கையில், "ஊர் திரும்பும் முன் சத்குருவின் திருமுன் நின்றேன், மறுபடியும் இங்கு வர வேண்டும் அந்த அனுபவத்தை நான் பெற வேண்டும் அதற்கு உங்கள் வரம் வேண்டும் எனறு இறைஞ்சினேன்.

தியானலிங்கத்திற்கு போய் அவரைப் பார்த்து கைகூப்பினேன். அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. மனம் எல்லாம் கரைந்து ஒரு காலியான பாத்திரம் போல வெறுமை அடைந்தது, அந்தப் பாத்திரத்தை முழுவதுமாய் குருவருள் நிறைத்ததால் அது என் விழிகளில் கண்ணீராய் வழிந்தோடியது.

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!"

அன்புடன்
ஜோதி, தன்னார்வத் தொண்டர், மதுரை