பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 32

களிமண் நிலத்திலும் கச்சிதமாக இயற்கைவேளாண் முறைகளைக் கடைபிடித்து பல வகை கீரைகளில் பலே சாகுபடி செய்யும் சூலூர் விவசாயியை நேர்காணல் செய்தபோது...

ஈஷா விவசாயக்குழுவினர் கோவை சூலூர் வட்டம் அத்தப்பக்கவுண்டன் புதூரில் உள்ள இயற்கை விவசாயி திரு. தங்கவேல் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தனர். தென்னை சாகுபடியுடன் கீரைகளையும் சாகுபடி செய்து ஒரு முன்னோடி விவசாயியாகத் திகழும் அவரது அனுபவங்கள் நமது குழுவினருக்காக...

keerai-sagupadiyil-sathikkum-iyarkai-vivasayi-3-1

இயற்கை விவசாயத்தை நீங்கள் எப்போதிருந்து செய்கிறீர்கள்?

1991 முதல் இயற்கை வேளாண்மை செய்து வருகிறேன், 2008ல் பாலேக்கர் ஐயாவோட வகுப்பில் கலந்து கொண்டதிலிருந்து செலவில்லா இயற்கை விவசாயம்தான் செய்து வருகிறேன். தென்னைதான் முக்கியப் பயிர், கடந்த இரண்டு ஆண்டுகளாக கீரையும் பயிர் செய்து வருகிறோம்.

புதினா, கொத்தமல்லி, வெந்தயம், சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, பாலக்கீரை போன்ற கீரைகளுடன் சிறந்த சத்துக்களை உடைய சுக்கான்கீரை, காசினிக்கீரைகளையும், மருத்துவ குணங்களையுடைய தூதுவளை, மஞ்சள் கரிசாலை, பிரண்டை போன்றவற்றையும் பயிர் செய்து வருகிறோம்.

மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தைக் கற்றுகொடுக்கும் நோக்கில் எனது நேரத்தை செலவிடுகிறேன். கீரை சாகுபடியை பிரபாகர் பார்த்துக் கொள்கிறார், அவருக்கு கீரை சாகுபடியில் நல்ல அனுபவம் இருக்கிறது. தொடர்ந்து திரு. பிரபாகரை அழைத்து நம்முடன் பேசவைத்தார்.

“தெய்வம் வடிவா இருந்தா தேர் அம்சமா அமையும்னு என்ற ஊர்ல சொல்லுவாங்கோ! அதுமாறி நல்ல எண்ணத்தோட தங்கவேல் அண்ணா இருக்க, அவருக்கு அம்சமா பிரபாகர் அண்ணா கிடைச்சிருக்காப்டி. கீரை சாகுபடி பத்தி அவரு என்ன சொல்றாரு வாங்கணா முழுசா கேட்டுப்போட்டு வருவோம்!”

தொடர்ந்து பேசத்தொடங்கிய திரு. பிரபாகர் கீரை சாகுபடிபற்றி பகிர்ந்து கொண்டவை...

கீரை சாகுபடியில் சாதிக்கும் இயற்கை விவசாயி, keerai sagupadiyil sathikkum iyarkai vivasayi

கடந்த இரண்டு வருஷமா ஐயாவோட பண்ணையில் கீரை சாகுபடி செய்கிறேன். பூர்வீகம் தோகைமலை, தாத்தா, அப்பா எல்லாரும் விவசாயிகள்தான், எங்க அப்பா கீரையைத்தான் அதிகமாகப் பயிர் செய்வார். என் தாத்தா காலத்தில் நட்ட புதினாவில் இருந்து 18 வருஷமா மறுதாம்பு அறுவடை செய்தது இன்னும் நினைவிருக்கு.

2011 வரைக்கும் இரசாயன விவசாயம்தான், நம்மாழ்வார் அவர்களின் "என்னாடுடைய இயற்கையே போற்றி" என்ற புத்தகம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் வானகத்தில் பயிற்சிகளை எடுத்துக்கொண்டு இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டேன். சில ஆண்டுகள் சென்னைக்கு அருகில் உள்ள பாக்கம் எனும் ஊரில் கீரை விவசாயம் செய்து வந்தேன்.

கீரை சாகுபடி முறையைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

கீரைகளின் வயதைப் பொறுத்து தனித்தனியாக பிரித்து பயிர் செய்வோம். உதாரணமாக ஒரு மாத வயதுடைய கீரைகளை அருகருகே உள்ள பாத்தியில் போடுவோம், நான்கு மாதங்களுக்கு பலன் தரக்கூடிய கீரைகளை தனியாகப் போடுவோம். ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடிய கீரைகளை தனிப்பகுதியில் போடுவோம்.

கீரைகளின் வயதைப் பொறுத்து தனித்தனியாக பிரித்து பயிர் செய்வோம். உதாரணமாக ஒரு மாத வயதுடைய கீரைகளை அருகருகே உள்ள பாத்தியில் போடுவோம், நான்கு மாதங்களுக்கு பலன் தரக்கூடிய கீரைகளை தனியாகப் போடுவோம். ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடிய கீரைகளை தனிப்பகுதியில் போடுவோம். உதாரணமா, ஒரு ஏக்கர் நிலம் பயிர் செய்யப் போறோம்னா மூன்று பாகமா பிரித்து பயிர் செய்யலாம்.

கீரையோட வயதுக்கேத்த மாதிரி தனித்தனியா போடுவீங்கன்னு சொன்னீங்க, கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?

உதாரணமாக முளைக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, செங்கீரை, வெந்தயக்கீரை, லெட்டூஸ் கீரை போன்றவை ஒரு மாதத்தில் வளர்ந்து விடும். இந்தக் கீரைகளை விதைத்து 21 முதல் 25 நாட்களுக்குள் பறிக்கலாம். பறித்தபின் மீண்டும் விதைகளை விதைத்து விட வேண்டும்.

அரைக்கீரை, பாலக்கீரை, மணத்தக்காளிக்கீரை, சுக்கான்கீரை, புளிச்சக்கீரை, கொடிப்பசலைக்கீரை, சீலோன்பசலைக் கீரை, மொடக்கத்தான், கொத்துமல்லி போன்ற கீரைகளை விதைத்து ஒரு மாதத்திலிருந்து நான்கு மாதங்கள் வரை பறிக்கலாம்.

முருங்கை, அகத்தி, புதினா, கருவேப்பிலை, தூதுவளை, பொன்னாங்கண்ணி, வல்லாரை போன்ற கீரைகள் ஒரு வருடத்திற்கு மேல் பலன் கொடுக்கக்கூடிய நீண்ட காலப்பயிர்கள் ஆகும்.

இப்படி வயதுக்கேற்ப தனித்தனியாக பிரித்துப் போடுவதால், பயிர்முடிஞ்ச பிறகு அடுத்த உழவு செய்ய வசதியா இருக்கும். ஒரு மாத பயிர், நான்கு மாதப்பயிர், ஒரு வருடப்பயிர் இவைகளை அருகருகில் நடவு செய்துவிட்டால் உழமுடியாது, இடமும் வீணாகும், இடைஇடையே கொத்தி விட்டு பயிர் செய்வதற்கும் அதிக வேலையாட்கள் தேவைப்படும்.

"அடசாமி... சின்ன விசயம்னாலும் எவ்வளவு பாதிப்பு வரும்னு விவசாயத்த கவனிச்சா புரியுமுங்க. இந்தமாறி நுட்பங்களயெல்லாங் அல்லாரும் தெரிஞ்சுக்கோணுமுங்க. ஒட்டுக்க ஒரே இடத்துல அல்லா கீரையும் நட்டுப்போட்டா சரிப்பட்டு வராதுனு கரெக்ட்டா சொல்லிப் போட்டாப்டி அண்ணா!"

பாத்தி எப்படிப் போடுவீங்க?

கீரை சாகுபடியில் சாதிக்கும் இயற்கை விவசாயி, keerai sagupadiyil sathikkum iyarkai vivasayi

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பொதுவாக 100 சதுர அடி வருவதுபோல் பாத்தி அமைப்பது நல்லது. ஸ்பிரிங்ளர் போடுவதாக இருந்தால் 5x20, 3x33 போன்ற அளவுகளில் அரை அடி உயர்த்தி மேட்டுப் பாத்தி போடுவோம்.

இதுவே வாய்க்கால் பாசனம் என்றால் மூன்று அடி அகலம், 10 அடி நீளம், முக்கால் அடி உயரம் வைத்து வரிசையா பாத்தி போடனும். ஒரு பாத்திக்கும் இன்னொரு பாத்திக்கும் ஒரு மண்வெட்டி அளவு இடைவெளி விட்டாபோதும். தோராயமா மூன்று பாத்தியோட மொத்த அளவு 100 சதுர அடி இருக்கும்.

மழைக்காலங்களில் வடிகால் வசதி இருந்தால் சாதாரணமா சதுரப்பாத்தியிலும் கீரையை விதைக்கலாம். ஆனா சதுரப்பாத்தியில் போடும்போது களை வளரும், கீரையோட வளர்ச்சியும் மெதுவாகத்தான் இருக்கும்.

கீரை விவசாயம் எல்லா விவசாயிகளும் செய்ய முடியுமா?

நிச்சயம் எல்லா விவசாயிகளும் செய்ய முடியும், குடும்பம் சார்ந்த தொழிலாகச் செய்தால் வருமானம் நன்றாக இருக்கும். அறுவடை செய்வதற்கும், தேவைப்படும்போது தண்ணீர் பாய்ச்சுவதற்கும் வசதியாக இருக்கும். தொழிலாளர்களை வைத்து செய்யும்போது நுணுக்கமான விஷயங்களையெல்லாம் அவர்கள் புரிந்து கொள்வதற்கே இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது.

எல்லா மண்ணுக்கும் கீரை நல்லா வளருமா?

எனது அனுபவதில் கீரைகள் எல்லா மண்ணுக்கும் நன்றாகவே வளர்கிறது. இங்கு களி மண்தான் எனினும் கீரை நன்றாக வளர்கிறது. மண்ணை பழகி சில நுணுக்கங்களை புரிந்து கொண்டால் கீரை விவசாயம் எல்லா மண்ணிலும் நன்றாக செய்ய முடியும்.

உதாரணமா சென்னையில் செம்மண்ணில் பயிர் செய்யும்போது 100 ச.அடி நிலத்தில் 20-30 கிராம் விதை விதைத்து 35 முதல் 40 கட்டு கீரைதான் எடுக்கமுடியும். அந்த நிலத்தில் விதை நல்லா முளைச்சாலும் எல்லாச் செடிகளும் வளராது. ஆனால் இந்த களிமண் நிலத்தில் அதே 100 ச.அடி நிலத்தில் 200 முதல் 250 கிராம் விதை போட்டு 120 முதல் 130 கட்டு வரை எடுக்க முடியுது.

களிமண்ணில் தண்ணீர் வடியாமல் கீரை அழுகிவிடாதா?

களிமண்ணில் சில விஷயங்களை கவனிச்சு செஞ்சா களிமண் ஒரு பிரச்சினை அல்ல. களிமண்ணில் 25 நாள் கீரைக்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை, 3 அல்லது 4 முறை தண்ணீர் விட்டால் போதுமானது. களிமண் என்பதால் தண்ணீர் விட்டு மூன்று நான்கு நாட்கள் தண்ணீர் இருக்கும், அதுவரை தண்ணீர் விட அவசியமில்லை. இலை லேசாக வாடத் தொடங்கும்போது அடுத்த தண்ணீர் விட்டால் போதுமானது.

கீரை எல்லாத் தண்ணீரிலும் நல்லா வருமா?

கீரை எல்லா தண்ணீரிலும் வளரக்கூடியது, இருந்தாலும் உப்புத்தண்ணீர் கீரைமேல் பட்டால் கீரை வெளிரி விடும். இங்க தண்ணீர் லேசா உப்பாத்தான் இருக்கு, அதனால் வாய்க்கால் பாசனம்தான் செய்கிறோம். நல்ல தண்ணீரா இருந்தா ஸ்பிரிங்ளர்ல தண்ணீர் விடலாம். ஆனால் வாய்க்கால் பாசனத்தில் ஸ்பிரிங்ளரை விடக் கூடுதலா தண்ணீர் செலவாகும்.

"ஐயோ சாமி பாத்தீங்ளா?! களி மண்ணு உப்புத்தண்ணி... ஆனாலும் செமயா பண்றாப்டி சாகுபடி! அதானுங்க மனுசன் மனசு வச்சா பாறையிலயிருந்தும் நெய் எடுத்துப்போடலாமுங்க. ஈடுபாடுதானுங்க முக்கியம்!'

கீரை விதைகளை எப்படி விதைக்கனும்?

கீரை விதைகள் சிறியதாக இருப்பதால் அதனுடன் மணல் அல்லது உலர்ந்த மண்ணைக் கலந்து தூவிவிடவேண்டும். விதையைத்தூவிய பின் லேசாக துடைப்பத்தை வைத்து கிளறிவிட்டால் விதைகள் மண்ணில் புதைந்துவிடும். கைளால் கிளறிவிட்டால் விதைகள் ஆழத்தில் சென்று முளைக்காமல் போய்விடும்.

நிலத்தின் தன்மையைப் பொறுத்து விதையின் அளவும் மாறுபடும். எல்லா கீரை வகைகளுக்கும் விதைகளை சேகரிச்சு வச்சிருப்போம், வெளியில் இருந்து விதைகளை வாங்குவதில்லை. புதினா, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, வல்லாரை, ஆரைக்கீரை, புளியாரை போன்றவற்றிற்கு விதை தேவையில்லை, தண்டு நட்டாலே வளர்ந்துவிடும்.

மர வகைக் கீரைகளை எப்படி வளர்க்கவேண்டும்?

கீரைக்காக முருங்கையை நடும்பொழுது மரத்திற்கு மரம் 2 அடி இடைவெளி விட்டு நடவு செய்தால் போதும். அகத்தியையும் ஒன்றரை அடி அல்லது இரண்டடி இடைவெளியில் வளர்க்கலாம். இந்த மரங்களுக்கிடையே 20 அடிக்கு ஒரு ஆமணக்கு செடியும் 5 அடிக்கு ஒரு சாமந்தியையும் நட்டால் பூச்சிகள் கட்டுப்படும்.

கீரைகளைப் பொதுவாக தாக்கும் பூச்சி மற்றும் நோய் பற்றிக் கூறுங்கள்?

வெய்யில் காலங்களில் சிறுகீரையில் மாவுப்பூச்சித் தாக்குதல் இருக்கும். இதை வெள்ளை மொட்டு என்று சொல்வோம். ஆரம்பத்திலேயே கவனித்து பூச்சி தாக்கிய செடியை பிடுங்கி அழித்துவிடவேண்டும். இல்லையேல் கட்டுப்படுத்த முடியாது.

பனிக்காலங்களில் இலைப்புழுத் தாக்குதல் இருக்கும், இரசாயன விவசாயத்தில் இலைப்புழுத் தாக்குதல் அதிகமாக இருக்கும், இயற்கை விவசாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது.

மண்ணைப்பொருத்தும் சில பிரச்சினைகள் வரும். உதாரணமாக செம்மண் நிலங்களில் இலைகள் வெளிரி இருக்கும். அடியுரமாக கனஜீவாமிர்தம் போடும்போது இந்தப் பிரச்சினையை சமாளிக்கலாம்.

"எப்புடியெல்லாம் இயற்கை வழியில பூச்சிய கட்டுப்படுத்தலாம்னு ரொம்ப அழகா சொல்றாப்டி அண்ணா! ஆனா... இன்னும் நெறையபேரு இருக்காங்கோ, ஆடத்தெரியாதவன் தெருக்கோணல்னு சொல்றமாறி இயற்கை பூச்சி விரட்டி சரிப்பட்டு வராதுனு வறட்டுப் பிடிவாதமா இரசாயனம் பயன்படுத்தி மண்ணகெடுத்துப் போடுறாங்ணா!"

இயற்கை முறையில் பயிர் செய்கிறீர்கள், என்னென்ன இடுபொருட்களை பயன்படுத்துகிறீர்கள்?

அடியுரமா கனஜீவாமிர்தமும், பாசன நீரில் 15 நாளுக்கு ஒரு முறை ஜீவாமிர்தமும் கொடுக்கிறோம், தேவைப்படும்போது கனஜீவாமிர்தம் தூவியும் விடுவோம். பூச்சிகளைக் கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, புகையிலை பயன்படுத்தி பூச்சி விரட்டித் தயாரித்துக் கொள்கிறோம்.

கீரை சாகுபடியில் இரசாயன விவசாயத்திற்கும் இயற்கை விவசாயத்திற்கும் என்ன வேறுபாடு?

கரிசலாங்கண்ணி ஒரு கீரை என்றே பலருக்கும் தெரிவதில்லை, வெள்ளைக் கரிசலாங்கண்ணி வரப்போரங்களில் நன்கு வளர்ந்திருக்கும். வெள்ளைக் கரிசலாங்கண்ணியும் மஞ்சள் கரிசலாங்கண்ணியும் கண்களைக் காப்பாற்றும் கேடயங்கள் ஆகும்.

முக்கிய வேறுபாடு இயற்கை விவசாயத்தில் நஞ்சு இல்லை, இரசாயன விவசாயத்தில் நஞ்சு இருக்கு. பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக பிரபனோபாஸ் (Profenofos), சைபர்மெத்ரின் (Cypermethrin), குளோரோ பைரிபாஸ் (Chlorpyrifos) போன்ற பூச்சி மருந்துகளைத் தெளிக்கிறார்கள். இதைத்தான் மக்கள் வாங்கி உண்கிறார்கள்.

இரசாயன விவசாயம் செய்தால் இத்தனை ரகக் கீரைகளைப் போடமுடியாது. இரண்டு மூன்று ரகங்களைத்தான் போடுவார்கள். பொதுவா நான்கு மாதக் கீரைகளான பாலக்கீரை, அரைக்கீரை போன்றவற்றைத்தான் அதிகம் பயிர் செய்வார்கள். மீண்டும் மீண்டும் நடவேண்டியது இருப்பதால் ஒரு மாதக் கீரைகளை பயிர் செய்யமாட்டார்கள்.

இயற்கை விவசாயத்தில் விளைந்த கீரைகளை ஆர்கானிக் கடைகளில் ரகத்துக்கு 10 கட்டுக்குமேல் வாங்க மாட்டார்கள். அதனால் இயற்கை விவசாயிகள் பல ரகங்களை பயிர் செய்கிறோம். 17 வகையான கீரைகளைப் பயிர் செய்து வந்தோம், தற்போது மழைக்காலம் என்பதால் 8 வகை கீரைகளைத்தான் பயிர் செய்துள்ளோம்.

கீரைகளை நேரடி விற்பனை செய்கிறீர்களா?

ஆமாம், நேரடி விற்பனைதான் அதிகமாக செய்கிறோம், மக்கள் கீரைகளோடு காய்கறிகளையும் கேட்கிறார்கள், அதனால் தற்போது பாரம்பரிய ரக விதைகளைக் கொண்டு பீர்க்கன், புடலை, பாகல் போன்ற கொடிக் காய்கறிகளையும் பயிர் செய்யத் தொடங்கியுள்ளோம்.

பொதுவா கீரையை கட்டிதான் விற்பனை செய்கிறார்கள் கட்டு என்றால் என்ன அளவு?

ஆள்காட்டி விரலையும் கட்டைவிரலையும் வட்டமாக பிடித்து அதில் எவ்வளவு கீரை கொள்ளுமோ அந்த அளவைத்தான் ஒரு கட்டுக் கீரை என்று சொல்கிறோம். இருந்தாலும் தண்டோட கனத்தைப் பொறுத்து கட்டோட அளவும் மாறும். பொதுவா ஒரு கட்டு 300 முதல் 350 கிராம் வரை இருக்கும்.

ஏதாவது ஸ்பெஷல் கீரைகளை வளர்க்கிறீர்களா?

உப்புத் தண்ணீர் என்பதால் நிறைய ரகங்களைப் போட முடிவதில்லை, நல்ல தண்ணீரில் நிறைய ரகங்களைப் பயிர் செய்ய முடியும். உதாரணமாக நாம் வீட்டில் வளர்க்கிற திருநீற்றுப் பச்சிலையை Sweet basil ன்னு சொல்லுவாங்க, இது தவிர Thai basil, Italian basil என மேலும் இரண்டு ரகங்கள் இருக்கு, இவை சாலட் செய்யப் பயன்படுகிறது.

தொடர்ந்து பல்வேறு கீரைகளின் மருத்துவப் பயன்கள் பற்றியும், ரகங்கள் பற்றியும் விளக்கமாக கூறினார்.

கரிசலாங்கண்ணி ஒரு கீரை என்றே பலருக்கும் தெரிவதில்லை, வெள்ளைக் கரிசலாங்கண்ணி வரப்போரங்களில் நன்கு வளர்ந்திருக்கும். வெள்ளைக் கரிசலாங்கண்ணியும் மஞ்சள் கரிசலாங்கண்ணியும் கண்களைக் காப்பாற்றும் கேடயங்கள் ஆகும்.

கீரை சாகுபடியில் சாதிக்கும் இயற்கை விவசாயி, keerai sagupadiyil sathikkum iyarkai vivasayi

பொன்னாங்கண்ணியில் நான்கு வகை இருக்கு, இதில் சிறிய பச்சை இலைகளைக் கொண்ட நாட்டு பொன்னாங்கண்ணிதான் சிறந்தது. இந்த கீரையை உண்பதால் 96 வகையான கண்நோய்கள் குணமாகும்னு சித்த மருத்துவக் குறிப்புகளில் இருக்கு. இந்த பொன்னாங்கண்ணியை விவசாயிகள் பயிர் செய்யவேண்டும்.

இலை கொஞ்சம் பெரிசா இருக்குற பச்சை பொன்னாங்கண்ணி, சிவப்பா சிறிய இலையுள்ள சீமைப் பொன்னாங்கண்ணி, லயன் கீரைன்னு சொல்லப்படுகிற சிவப்பு பொன்னாங்கண்ணின்னு மொத்தம் நாலு வகை இருக்கு. சுக்கான் கீரை நல்ல சத்து நிறைந்த கீரை, மக்களுக்கு இந்தக் கீரையைப் பற்றி சரியாகத் தெரியவில்லை.

மணத்தக்காளிக்கீரை (சுக்குடிக்கீரை) எனப்படுகிறது. இக்கீரை வயிற்றுபுண், வாய்புண் மற்றும் குடல் புண்களை ஆற்றக்கூடியது, சில இலைகளை பச்சையாகவும் சாப்பிடலாம்.

தூதுவளை, முசுமுசுக்கை, முடக்கத்தான், முக்கரட்டை போன்றவைகளையும் அளவாகப் பயன்படுத்தலாம். மேலும் வல்லாரை, நீராரை, புளியாரை போன்ற கீரைகளையும் அவ்வப்போது பயன்படுத்தலாம்.

பரம்பர விவசாயி பாதி வைத்தியன்னு என்ற அப்பாரு அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ! பிரபாகர் அண்ணா விசயத்துல அது சரியா போச்சுங்க. கீரை தரும் ஆரோக்கிய பலன்கள அழகா சொல்லிட்டாப்டி பாருங்க.

நிறைவுரையாக திரு. தங்கவேல் அவர்கள் பகிர்ந்து கொண்டவை

பள்ளி மாணவர்கள் சனிக்கிழமை தோறும் பண்ணைக்கு வந்து இயற்கைச் சூழலில் இருப்பதோடு இயற்கை விவசாயப் பயிற்சியையும் பெறுகிறார்கள். மேலும் சுற்றுவட்டாரப் பள்ளிகளுக்குச் சென்று இயற்கை விவசாய வகுப்புகளையும் நடத்தி வருகிறேன். அடுத்த தலைமுறை குழந்தைகள் நஞ்சில்லா உணவையும், பூச்சி மருந்தில்லா காய்கறிகளையும், கீரைகளையும் உண்ண வேண்டும் என்பதே எனது விருப்பம். அந்த நோக்கத்தில் இப்பண்ணை இயற்கை விவசாயப் பயிற்சிக்களமாக செயல்படும்.

இயற்கை முறையில் வளர்ந்த கீரைகள் சுவையும் மணமும் நிறைந்தவை, மக்கள் ஒரு முறை சாப்பிட்டால் அடுத்த முறையும் சாப்பிடத் தூண்டக் கூடியவை. மக்கள் இயற்கையில் விளைந்த கீரைகளாக தேர்ந்தெடுத்து உண்பது நல்லது, இதனால் அவர்கள் நல்ல உடல் நலமும் பெறுவர். என்று அவரது ஆர்வத்தையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தி நிறைவு செய்தார்.

இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியில் பல்வேறு வகையில் செயல்பட்டுவரும் திரு. தங்கவேல் அவர்களுக்கும் கீரைகளைப் பற்றிய அருமையான தகவல்களை அளித்த திரு. பிரபாகர் அவர்களுக்கும் நன்றி கூறி விடைபெற்றோம்.

தொடர்புக்கு:

திரு. தங்கவேல்: 9362912412
திரு. பிரபாகர்: 9003836427


தொகுப்பு:

ஈஷா விவசாய இயக்கம்: 83000 93777