நல்ல படிப்பு, கை நிறைய சம்பளம், வசதியான வீடு, குடும்பம்-குழந்தைகள் இவையெல்லாம் அமைந்துவிட்டால், அதன்பின்பு புதிய முயற்சிகளை யாரும் எடுப்பதில்லை. 'செட்டில் ஆகிவிட்டோம்' எனச் சொல்லிக்கொண்டு, தொலைக்காட்சிப் பெட்டி முன் வாழ்க்கையை கழித்துவிடும் பலருக்கு மத்தியில் பச்சைமலையின் அடிவாரத்தில், சத்தமில்லாமல் பசுமை பரப்பச் செய்த ஒரு சாதனை மனிதர் பற்றி தெரிந்துகொள்வோம்!

சேலத்தில் ஒரு ஊட்டி

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்த டாக்டர்.துரைசாமி அவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாமே கிடைத்திருந்தும், அவரது ஊரில் பிஸியான ஒரு மருத்துவராக இருந்தும், பச்சைமலை அடிவாரத்தில் சுயமாக ஒரு வேளாண் காட்டையே உருவாக்கியுள்ளார். பச்சைமலை அடிவாரத்தில் 120 ஏக்கரில் அவர் உருவாக்கியுள்ள இந்த பசுமைமிகு வேளாண் காட்டிற்கு 'லிட்டில் ஊட்டி' என்று பெயரிட்டுள்ளார். அந்த பெயருக்கு ஏற்றாற்போல் அந்தப் பகுதிக்குள் நுழைந்தாலே அப்படியொரு குளுமை! அவர் வைத்த மரங்கள் தரும் குளிர்ச்சிதான் அது!

வறட்சி என்பது மண்ணில் இருப்பதில்லை, அது மனிதனின் மனதில்தான் உள்ளது.

பச்சைமலையின் உச்சியிலிருந்து பார்த்தால் அடிவாரப் பகுதிகளில் டாக்டரின் நிலப்பகுதி மட்டும் பச்சைப் போர்வை போர்த்திக்கொண்டபடி காட்சி தருகிறது. மற்ற பகுதிகள் வறண்ட பூமியாய் பரிதாபமாகக் கிடக்கிறது. இவரது வனத்தில் விலை மதிப்புள்ள தேக்கு, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, வெண் தேக்கு, தான்றிக்காய், மஞ்சள்கடம்பை, மலைவேம்பு, பூவரசு, வாகை ஆகிய மரங்கள் நன்கு பருத்து வைரம் பாய்ந்தபடி நிற்கின்றன.

அந்த வனத்திற்குள் உலாத்தி விட்டு வரலாமெனச் சென்றபோது பழ மரங்கள், பாக்கு தோப்புகள், வாழைத் தோப்புகள் என ஆங்காங்கே பல்வேறு வகைகளில் வேளாண்மை செய்திருப்பதைக் காணமுடிந்தது. பாக்கு மரங்களுக்குள் ஊடுபயிராக தென்னைகள், தென்னைகளுக்குள் ஊடுபயிராக வாழைகள், வாழைகளுக்குள் ஊடு பயிராக மஞ்சள் என ஊடுபயிருக்குள் ஊடுபயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. இதுபோக பாக்கு மரங்களைச் சுற்றிலும் மிளகுக்கொடி படரவிடப்பட்டிருந்தன. ஒரே வரியில் சொல்வதாயின், சூரிய ஒளி அங்கே தரையில் விழவில்லை, அங்கிருந்த மரஞ்செடிகளின் மேலே மட்டுமே விழுந்துகொண்டிருந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பனையை வைப்பவனும் தின்னலாம்!

லிட்டில் ஊட்டியின் வன எல்லையைச் சுற்றிலும் பனை மரங்கள் வைக்கப்பட்டிருந்தன. 'தென்னையை வைத்தவன் தின்றுவிட்டு போவான்; பனையை வைத்தவன் பார்த்துவிட்டு போவான்' என்று ஒரு பழமொழியுண்டு. பனை மரங்கள் வளர்ந்து பலன் தருவதற்குள் நம் காலம் முடிந்துவிடுகிறது. ஆனால், டாக்டர் வைத்துள்ள இந்த பனை மரங்களெல்லாம் 'பனை ஆராய்ச்சி கழகம்' பரிந்துரைத்த, விரைவில் காய்களை விளைவிக்கும் வீரிய ரகங்கள். அடுத்த ஐந்து அல்லது ஆறு வருடங்களில் இவை பலன் தந்துவிடும். குறிப்பிட்ட இடைவெளியில் நெருக்கமாக நடப்பட்டிருக்கும் இந்த பனை மரங்கள், யானை போன்ற விலங்குகள் உள்ளே நுழையாதவாறு ஒரு அரணாகவும் இருக்கும்.
லிட்டில் ஊட்டியின் வேளாண் பகுதி அனைத்திலும் சொட்டுநீர் பாசனம் செய்யப்பட்டிருந்ததோடு, மூடாக்கும் போடப்பட்டிருந்தது.

'மூடாக்கு' என்றால்...

மரத்தைச் சுற்றி தண்ணீர் தேங்குவதற்காக போடப்பட்டிருக்கும் வட்டப் பாத்தியில் ஒரு ஜான் உயரத்திற்கு மரத்தைச் சுற்றி விழுந்து கிடக்கும் காய்ந்த இலைதளைகள் மற்றும் சருகுகளை நிரப்புவதுதான் மூடாக்கு. வீணாக மண்ணோடு மண்ணாக மட்கும் இலைச் சருகுகளை மரத்தைச் சுற்றி நீங்கள் நிரப்ப வேண்டும், அவ்வளவுதான். ஆனால், இலைகளைப் போட்டு அதன் மேல் மண் தூவுதல் கூடாது.

மூடாக்கு போடுவதின் பயன்கள்

இது மரத்திற்கு நல்ல உரமாக இருப்பதோடு மரத்தின் வேர்ப்பகுதியில் 4 டிகிரி அளவிற்கு வெப்பத்தை குறைக்கிறது. வெப்பத்தையும் காற்றையும் மரத்தின் தரைப்பகுதியில் தடுப்பதால், மரத்திற்கு பாய்ச்சப்படும் நீர் ஆவியாகாமல் காக்கிறது. இந்த மூடாக்கு, மண்புழுவிற்கு நல்ல வீடாக அமைவதால் மண்வளமும் மேம்படுகிறது.

லிட்டில் ஊட்டியை உருவாக்கியவரிடம் பேசியபோது...

"நான் எங்கள் ஊரில் பிரபலமான மருத்துவராக இருந்தாலும் கூட, மரங்களை வளர்ப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு ஆனந்தத்தை தருகிறது. அதைவிட இன்று மரங்களின் தேவை நாட்டிற்கு மிகவும் அவசியம். வானத்தின் மேலையே சுற்றிக்கொண்டிருக்கும் மேகக் கூட்டங்கள் மழையாய் பொழியாததற்கு காரணம் அதனை மண்ணிற்கு ஈர்க்கும் பசுமை காந்தங்களான மரங்கள் இல்லாததுதான். மரங்கள் உள்ள இடங்களில்தான் மழை பொழியும்.

நான் மரம் நட்டு பணத்தை மண்ணில் போட்டு வீணடிப்பதாக என் மகன் என்னை ஏளனம் செய்வான். ஆனால், அவனுக்கு தெரியாது நான் நட்டுள்ள இந்த மரங்கள் வைரம் பாய்ந்திருப்பதோடு, வைரத்தை விடவும் மதிப்பானது என்று! உண்மையில், வறட்சி என்பது மண்ணில் இருப்பதில்லை, அது மனிதனின் மனதில்தான் உள்ளது. இன்றைய சூழலுக்கு தேவையான செயலை செய்ய முயலாத மனங்கள் எப்போதும் வறண்டே இருக்கும்."

டாக்டர் துரைசாமி அவர்கள் 2001ஆம் ஆண்டிலிருந்துதான் மரங்களை நட்டு இந்த வனப்பகுதியை உருவாக்கியுள்ளார். ஆனால், இன்று அங்கு வளர்ந்து நிற்கும் மரங்களின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டும். அங்கு நடப்பட்டுள்ள சுமார் 50,000 மரங்களில் 33,000க்கும் மேற்பட்டவை ஈஷா பசுமைக் கரங்களின் நாற்றுப் பண்ணைகளிலிருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈஷா பசுமைக் கரங்கள் நீட்டும் உதவிக்கரம்!

நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு ஒரு அற்புத வாய்ப்பாக ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் வேளாண் காடுகளை உருவாக்கித் தருகின்றன. மரங்கள் நட்டு, வேளாண் காடுகள் அமைக்க விரும்புபவர்களுக்கு விலை மதிப்புள்ள தேக்கு, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது போன்ற தரமான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம், நீடித்த, நிலைத்த வருவாய் பெறுவதற்கு ஏதுவாகிறது.

ஈஷாவின் வேளாண் வல்லுனர்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை நடுவதற்கு ஆலோசனைகளையும் மரம் வளர்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் களைகளை கட்டுப்படுத்துவதற்கான நுட்பங்களையும் நேரில் வந்து அளிப்பார்கள்.

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062