சமீபத்தில், கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற இன்னர் இஞ்சினியரிங் வகுப்பில் பங்கேற்ற பிரபல திரைப்பட நடிகை, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் திருமதி.சுஹாசினி மணிரத்னம், தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

திருமதி.சுஹாசினி மணிரத்னம்:

நான் சத்குருவை முன்பே சென்னையில் நான்கைந்து முறை சந்தித்திருக்கிறேன். அவரது பேச்சும், அறிவுக்கூர்மையும், புத்திசாலித்தனமும்... அத்தோடு அவரிடம் எப்போதும் ததும்பும் புத்துணர்ச்சியும், சந்தோஷமும் என்னை வெகுவாய் கவர்ந்திருக்கிறது. இந்த வகுப்பில் பங்கேற்குமாறு ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பலமுறை என்னை அழைத்தபோதும், ஏனோ நான் பங்கேற்கவில்லை. ஆனால், இப்போது என் நண்பர்கள் 39 பேர் இந்த ‘இன்னர் இஞ்சினியரிங்’ வகுப்பில் கலந்துகொள்ள முடிவெடுத்தபோது, நானும் அவர்களோடு வந்துவிட்டேன்.

வாழ்வில் எத்தனை எத்தனை அழகான, சிறப்பான, அற்புதமான அம்சங்கள் இருக்கிறது என்பதை நமக்கு நினைவுறுத்த இவரைப் போன்ற ஒருவர்தான் தேவைப்படுகிறார்!

இந்த வகுப்பிற்கு நாங்கள் வந்தபோது, சத்குரு இங்கில்லாமல் போனது என் நண்பர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருந்தது. ஆனால், எனக்கு அப்படி இல்லை! அவர் பேச்சை நான் கேட்டிருக்கிறேன்... அவரது சக்தியையும் உணர்ந்திருக்கிறேன். அவர் வடிவமைத்து, அவரின் குறிப்புகளோடு நடக்கும் எதுவும் அற்புதமாக இருக்கும் என்பதை நான் முழுமையாக நம்பினேன். இந்த வகுப்பும் அவ்வாறே இருந்தது!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இங்கு எனக்குக் கிடைத்த அனுபவம் இதுவரை நான் உணர்ந்திடாத ஒன்று. ஆங்கிலத்தில், ‘வேற்றுலக அனுபவம்' என்பார்கள்... அதாவது, இந்த உலகத்து அனுபவங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒன்று என்று பொருள். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், அந்தச் சொல்லிற்கான அர்த்தத்தை நான் இங்குதான் உணர்ந்தேன். இந்த வகுப்பின் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் இருக்கும் நுணுக்கம், இங்கிருக்கும் மக்கள், இங்கிருக்கும் ஒவ்வொன்றிலும் மிளிரும் அழகுநயம், இந்த இயற்கையான சூழல் எல்லாமே பிரமிக்க வைக்கின்றன. இது கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. எதைப்பற்றி நாம் சிந்தித்தாலும், அதை வட்டம் என்றோ, சதுரம் என்றோ வகை சேர்த்துவிடுவோம்... ஆனால் இதை ‘இதுதான் வடிவம்’ என்று நிர்ணயிக்க முடியாதவாறு இருக்கிறது. இதுவரை நான் அறிந்திராத ஒரு பரிமாணம் இது.

எங்களைப் போன்ற கலைஞர்களும், படைப்பாளிகளும் ஆரம்ப கட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்றே வேலை செய்வோம். ‘நாங்கள் வித்தியாசமானவர்கள்... மற்றவர்களைப் போல் அல்ல’ என்று எங்கள் தனித்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு, மக்கள் இதுவரை கண்டிராத, அனுபவத்திராத ஒரு புதுமையான விஷயத்தைப் படைத்திட முயல்வோம். அப்படிச் செய்து அதில் வெற்றியும் கண்டுவிட்டாலோ, ஒருவித வெறுமை எங்களை ஆட்கொண்டுவிடும். உள்ளுக்குள் ஒரு வெற்றிடம் உருவாகும். இதை எப்படி நிரப்புவது என்ற தேடுதலில் பல திரையுலகப் படைப்பாளிகளும், எழுத்தாளர்களும் மதத்தையோ, ஆன்மீகத்தையோ நாடிச் செல்வதை நானே பார்த்திருக்கிறேன்.

ஆனால், என்னுடைய நிலை வேறு. எங்கள் குடும்பத்தில் பலரும் ‘கடவுள்’ நம்பிக்கையற்றவர்கள். என் அப்பா (நடிகர் சாருஹாசன்), சித்தப்பாவில் (நடிகர் கமல்ஹாசன்) துவங்கி, என் கணவர் (மணிரத்னம்) வரை எல்லோரும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். இவ்வளவு ஏன்... என் மகனும்கூட சமீபகாலம் வரை கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகத்தான் இருந்தான். இவர்களுடன் வசித்த எனக்கு, என்னுள் இருந்த வெற்றிடத்தை நிரப்ப மதம் ஒரு பதிலாய் இருக்கவில்லை. காரண அறிவைச் சார்ந்தே இருந்த என் வாழ்வில், ஒரு வடிகாலாய்... மனதை லேசாக்கும் புது வசந்தமாய் இந்த வகுப்பு நிகழ்ந்திருக்கிறது. ‘எப்போதும் காரண அறிவைச் சார்ந்தே சிந்திக்காதே’ என்று வகுப்பில் மீண்டும் மீண்டும் சத்குரு சொன்னாலும், இந்த வகுப்பு, முழுக்க முழுக்க காரண அறிவோடு ஒத்துப் போவதாகவே இருக்கிறது. இந்த வகுப்பில் கற்றவற்றைத் துணையாய்க் கொண்டு எங்கள் வேலையில் ஈடுபடுவது, இன்னும் நல்ல பலன்களைத் தரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

சத்குரு...

ஒரு ‘போட்டோகிராபர்’ ஆக எனக்கு சத்குருவிடம் பிடித்தது, ‘அவர் மிகவும் போட்டோஜெனிக்‘! எந்தக் கோணத்தில் இருந்து எடுத்தாலும் அவரது போட்டோக்கள் அருமையாக இருக்கின்றன. அதோடு அவரது ‘பாடி லேங்குவேஜ்’, அவர் பேசும் விதம் என எல்லாமே அழகு. படங்களில் ‘இப்படி இருந்தால்... இப்படி செய்தால்’ என்று ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தித்து, ‘டைரக்டோரியல் டச்’ கொடுக்க நினைப்போம்... ஆனால் சத்குருவிடம் குறை என்று சொல்ல எனக்கு எதுவுமே இல்லை. அவரிடம் எல்லாமே சரியாக இருப்பதாகவே எனக்குத் தோன்றும்.

ஒரு மனிதராக அவரைப் பார்த்தாலோ... அவர் உயிரோட்டத்தின் ஒட்டுமொத்த உருவம். இந்தளவிற்கு ஒரு ‘பாஸிடிவ்’வான கண்ணோட்டத்தோடு யாரும் வாழ்வை அணுகி நான் இதுவரை பார்த்ததில்லை. தினமும் செய்தித்தாள்களில் வெளிவரும் செய்திகளைப் பார்த்து, “இப்படிப்பட்ட ஒரு உலகத்தில் போய் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே” என்று நொந்துகொள்ளத் தோன்றும். “30 வருடங்களுக்கு முன்பு இந்த உலகம் எவ்வளவு நன்றாக இருந்தது... இப்போது எதுவுமே சரியில்லை... என் பிள்ளைகள் எப்படி வாழ்வோர்களோ, என் பேரக்குழந்தைகள் எப்படிப்பட்ட உலகத்தில் வாழப்போகிறார்களோ” என்பது போன்ற புலம்பல்களை எங்கு சென்றாலும் கேட்கமுடியும்.

ஆனால் இவரைப் பார்க்கும்போது, ‘எதுவுமே மாறவில்லை... வாழ்க்கை அழகாகத்தான் இருக்கிறது’ என்று தோன்றுகிறது. வாழ்வில் எத்தனை எத்தனை அழகான, சிறப்பான, அற்புதமான அம்சங்கள் இருக்கிறது என்பதை நமக்கு நினைவுறுத்த இவரைப் போன்ற ஒருவர்தான் தேவைப்படுகிறார்! பாஸிடிவ்வான எண்ணங்கள், சந்தோஷம், ஆனந்தம் என எல்லாவற்றின் முழு உருவமாய் இவர் இருக்கிறார். அது மட்டுமல்ல... இதையெல்லாம் தாண்டி அவரின் புத்திசாலித்தனத்தனத்தையும், அறிவுக்கூர்மையயும் என்னவென்று சொல்வது!

ஈஷா யோகா வகுப்பு...

நான் 2001-ல் ஏற்கெனவே வேறொரு குருவிடம் யோகா கற்றிருக்கிறேன். அந்த அனுபவமும் அற்புதமாக இருந்தது. ஆனால் என் கேள்விகள் எல்லாவற்றிற்கும் அங்கு பதில் கிடைக்கவில்லை. இப்போது... இன்னும் 15 ஆண்டுகள் கழித்து இந்த வகுப்பைச் செய்யும்போது என்னுள் ஆழமான ஒரு தெளிவு பிறந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இந்த வகுப்பு ஒரு முழுமையான அமைப்பு. மிக எளிமையாக, அருமையாக அனைவரையும் சென்றடையக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சித்தாந்தங்கள் இல்லாமல், நம்பமுடியாத வர்ணஜாலங்கள் இல்லாமல், மக்களின் வாழ்வை ஒட்டிய, மனிதத் தன்மை நிறைந்த வார்ப்பாக இந்த வகுப்பு இருக்கிறது. மிக எளிமையான விஷயங்கள்தான்... ஆனால் அதை உணர்வதே வேற்றுலக அனுபவம்போல் ஒரு பரவசத்தில் நம்மை ஆழ்த்துகிறது. இந்த 4 நாட்கள் உடலளவில் நான் சற்று அசதியாக உணர்ந்தேன்... அது எனக்கு வயதாகிக் கொண்டிருப்பதால்கூட இருக்கலாம்... ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த வகுப்பில் எந்த மாற்றமும் தேவையில்லை.

இந்த வகுப்பிற்குப் பின், என் எதிர்காலத்தைப் பெரும் சாத்தியமாகப் பார்க்கிறேன். ஏதோ முப்பது வருடங்கள் இளமையானதைப் போலவும், எனக்கு இன்னும் நூறு வருடங்கள் வாழ்க்கை இருப்பது போலவும் வாழ்வை எதிர்நோக்கத் தோன்றுகிறது. இது நடைமுறைக்கு ஒவ்வாத, சாத்தியமற்ற ஒன்றுதான். ஆனால் என் வாழ்க்கை முழுவதும் நடைமுறைக்கு ஒத்துவரும் விதமாகவே சிந்தித்து, செயல்பட்டு, வாழ்வின் சிறுசிறு விஷயங்களைத் தவறவிட்டிருக்கிறேன். இப்போது நடைமுறை சார்ந்து சிந்திக்கும் கட்டாயத்தைக் கைவிடும்போது, இது வாழ்வில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி, என்னைக் குதூகலமாக செயல்படச் செய்கிறது.

இங்கிருந்து நான் எடுத்துச் செல்லும் விஷயம் என்றால்... நேரம், அன்பு, ஆனந்தம், விருப்பத்தோடு செயலில் இறங்குவது... இன்னும் சொல்லப்போனால், வாழ்வில் இருக்கக்கூடிய எண்ணற்ற சாத்தியங்கள்!

சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள், நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மனிதர்கள் என, என் நட்பு வட்டாரத்தில் இருக்கும் பலருக்கும் இந்த வகுப்பை நான் நிச்சயம் பரிந்துரை செய்வேன்.