ஈஷா யோகா மையத்தில் நிகழும் தெய்வீக இசை மற்றும் நாட்டியத் திருவிழாவான யக்‌ஷா  கொண்டாட்டத்தில், முதல்நாள் இரவான இன்று, திருமதி.கலாபினி கோம்கலி அவர்களின் இந்துஸ்தானி வாய்ப்பாட்டு நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. 

மாலை 6.30 மணியளவில் சூரிய குண்டம் முன்பாக  துவங்கிய இந்நிகழ்ச்சியை சத்குருவுடன் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். 

இன்றைய நிகழ்ச்சியில், திருமதி.கலாபினி அவர்கள் சங்கரா ராகத்தில் தனது தந்தையால் உருவாக்கப்பட்ட இரண்டு பஜன்களுடன் துவங்கி, தொடர்ந்து பல்வேறு ராகங்களில் தனக்கே உரிய இசைத்திறத்தால் இந்துஸ்தானி இசை மழையைப் பொழிந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த இசை நிகழ்ச்சியின் வீடியோ பதிவு:

 

கலாபினி கோம்கலி பற்றி...

திருமதி.கலாபினி  அவர்கள்  மிகப் பரவலாக பிரசித்தி பெற்ற சமகால சங்கீத வித்வானாக விளங்குபவர். இவர், இசைமேதை பண்டிட் குமார் கந்தர்வா அவர்களின் மகளும், சிஷ்யையும் ஆவார். இவரது தாய் புகழ் வாய்ந்த விதூஷி வசுந்தரா கோம்காலியிடம் பயிற்சி பெற்றவர். இவர் க்வாலியர் கரானா பாணியில் தமது சங்கீத ஞானத்தை வளப்படுத்திக்கொண்டராக இருந்தாலும், தனக்கெனத் தனி முத்திரை பதித்துள்ளார்.  பல்வேறு ராகங்கள் மற்றும் கீர்த்தனைகளின் களஞ்சியமாகிய இவர், இன்றைய இராஜஸ்தான் மால்வா பகுதியின்  நாட்டுப்புற மண்வாசனையின் சாரமாக விளங்கும் பாரம்பரியப் பாடல்களை, அள்ளி வழங்குவதில் நிபுணர்.  துறவு நிலைக் கவிகள் பலரும் இயற்றிய, சகுண்-நிர்குண் பஜன்களின் மொழிபெயர்ப்புப் பாடல்களைப் பாடுவதில் பிரசித்தி பெற்றவர். இவர் குமார் கந்தர்வா சங்கீத் அகாடெமியின் அறங்காப்பாளராக இருக்கிறார்.

நாளைய நிகழ்ச்சி…

இரண்டாம் நாள் விழாவான நாளை ரஞ்சனி மற்றும் காயத்திரி சகோதரிகளின் கர்நாடக குரலிசை நிகழ்ச்சி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

யக்‌ஷாவைப் பற்றி:

'யக்‌ஷா', இந்தியாவின் புராண இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தேவலோக கலைஞர்களை குறிக்கும் விதத்தில் பெயரிடப்பட்டிருக்கிறது. காண்பவரின் உள்ளம் கவரும் வண்ணமயமான இசை மற்றும் நடனத் திருவிழா, இந்த யக்‌ஷா. புனிதமான தியானலிங்க வளாகத்தில், பசுமையான வெள்ளியங்கிரி மலைச்சாரலில், ஈஷா அறக்கட்டளை இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. 

இவ்வருடம் மார்ச் 1 முதல் 3 வரை நடைபெறும் யக்‌ஷா திருவிழாவில், தொடர்ந்து 3 நாட்களின் மாலைப் பொழுதுகளிலும் இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. ஆர்வமிக்க பார்வையாளர்களை ஆயிரக்கணக்கில் ஈர்க்கும் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்பது மற்றுமொரு சிறப்பு அம்சம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து நிலைப் பெற்றிருக்கும் இந்தியக் கலை வடிவங்களை, நம் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தாய் படைக்கிறது யக்‌ஷா. இவை நம் கலாச்சாரத்தின் மாறுபட்ட கலை வகைகளை பிரதிபலிப்பதுடன், ஆன்மீகத் தூண்டுதலுக்கு ஆழமான அடித்தளமாகவும் அமைகிறது.