"எந்துருச்சு ஓடுங்க!" இப்படி ஒரு போலீஸ்காரர் வந்து அதட்டினால் பேசாமல் நகர்ந்துவிடுவோம். அதே தோரணையில் ஒரு செக்யூரிட்டி வேலை பார்ப்பவர் கூறினால் "ஏன் ஓடணும்??" என்று முறைப்போம். ஓடுவதும், ஓடச்செய்வதும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இங்கே இவர்கள் ஓடவிருப்பதோ கிராமப்புறக் குழந்தைகளின் கல்விக்காக...

"இந்த வாழ்க்கையே ஒரு போட்டிதான். அடுத்தவங்கள முந்த விடாம ஓடிக்கிட்டே இருக்கணும்! ஆரம்பத்துல இருந்தே நீதான் முதல் இடத்துல இருக்கணும்! ரொம்ப வேகமா ஓடணும்!" இப்படி, பாசிட்டிவ் தாட்ஸை விதைக்கிறோம் என்ற பெயரில், சதா அட்வைஸ் மழை பொழியும் சில பேரை ஆங்காங்கே பார்க்கிறோம். ஆனால் அவர்கள் நினைப்பதுபோல் வாழ்க்கை ஒருபோதும் நடக்கப் போவதில்லை. அதுபோல், அந்த அட்வைஸ்கள் இங்கே நாம் சொல்லும் இந்த ஓட்டப் பந்தயத்திற்கும் கண்டிப்பாகப் பொருந்தாது. ஆம்! நாம் இங்கே சொல்லிக் கொண்டிருப்பது "மாரத்தான் ஓட்டம்" பற்றி!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த ஓட்டப் பந்தயத்தில் வெற்றிபெற வேகமாக ஓடும் திறமையைவிட, நிலைத்து நின்று நெடுந்தூரம் ஓடும் திறன்தான் முக்கியம். அந்த திறன் பெற்றவர்களே இதில் வெற்றி பெற முடியும். வாழ்க்கையிலும் அப்படித்தான்! பல்லேறு வாழ்க்கைச் சூழலால் பின்னுக்குத் தள்ளப்பட்ட பலர், தங்கள் விடாமுயற்சியாலும் மன உறுதியினாலும் இறுதியில் தங்கள் இலக்கை வெற்றிகரமாக அடைந்திருக்கிறார்கள். வாழ்வின் சாரத்தைக் குறிப்பால் உணர்த்துவதாய் உள்ள இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் பங்குபெற நீங்க ரெடியா?! உங்களுக்காகக் காத்திருக்கிறது சென்னை மாரத்தான்.

சென்னை மாரத்தானில் ஈஷாவின் கால்கள்...

இதில் ஈஷா என்ன செய்யப்போகிறது...? ஈஷாவிலிருந்து ஓட்டப் பந்தயப் பயிற்சி கொடுக்கப் போகிறார்களா? பங்கேற்பாளர்களுக்கு யோகா கற்றுத் தரப்போகிறார்களா? என்ற கேள்விகள் வருவது நியாயம்தான். இங்கே ஈஷாவின் கால்கள் ஓடவிருக்கின்றன; முதலிடம் பிடிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு அல்ல, ஈஷா வித்யாவிற்காக! ஈஷா வித்யா என்பது, தரமான ஆங்கில மற்றும் கம்ப்யூட்டர் கல்விக்காக ஏங்கிக் காத்திருக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள கிராமப்புறக் குழந்தைகளுக்காக ஈஷா துவங்கியிருக்கும் கல்வித்திட்டம்.
சென்னை மாரத்தான் !  ஈஷாவுடன் ஓட ரெடியா!, Chennai marathon ishavudan oda rediya
வரும் டிசம்பர் 1ம் தேதி நடக்கவிருக்கும் இந்த மாரத்தானில், ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு ஓடவிருக்கிறார்கள். ஈஷா வித்யாவின் வாசகங்களைத் தாங்கிய டி-சர்ட்களுடனும் பேனர்களுடனும் ஓடும் இவர்கள், மக்கள் மத்தியில் ஈஷா வித்யா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். வார்த்தைகளால் அல்லாமல், தம் உறுதியால் ஏற்படுத்தப் போகும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் இது!

"யாருப்பா இவங்க...?! குரூப்பா இப்படி ஓடுறாங்க...! ஈஷா வித்யானா என்ன?" இப்படியான கேள்விகள் அங்கே கூடியிருக்கும் மக்களிடையே வரும்போது, அது நமது முயற்சிகளுக்கு கிடைக்கும் சிறிய வெற்றியாக இருக்கும். நம் கண்களில் உள்ள உறுதியையும் கால்களின் விடாமுயற்சியையும் பார்த்து, ஈஷா வித்யாவிற்கு யாரேனும் ஒருசிலர் கைகொடுக்க முன்வந்தால், அப்போது நாம் ஓடியதன் முழுப்பலனும் பெற்றுவிட்டதாக எண்ணலாம்.


மாரத்தான் ஓடினால் என்ன கிடைக்கும்?!

சிலருக்கு பரிசுத்தொகை நோக்கமாக இருக்கலாம்; சிலரோ தொழில்முறையாக ஓடலாம். ஆனால் ஈஷா அன்பர்களின் கண்களில், பிஞ்சுக் குழந்தைகளின் கல்வி ஏக்கம் தோய்ந்த முகங்களே நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

போட்டியில் பங்கேற்க, பதிவு செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30ம் தேதி. எனவே, உடனே பதிவு செய்திடுங்கள்! இங்கே க்ளிக் செய்வதன் மூலம் பதிவு செய்துகொள்ள முடியும். போட்டிக்கான கட்டணத் தொகை முழுவதும் போட்டி அமைப்பாளர்களுக்கே போய்ச் சேரும், ஈஷா வித்யாவிற்குச் சேராது.

உங்கள் நண்பர்களிடமும் சுற்றத்தார்களிடமும் "நான் ஈஷா வித்யாவிற்காக ஓடுகிறேன்; நீங்கள் என்னை ஊக்குவிக்க வாருங்கள்" என்று SMS மூலமாகவும் இ-மெயில் மூலமாகவும் அல்லது நேரடியாகவும் சென்று தெரியப்படுத்துவதன் மூலம்தான், ஈஷா வித்யாவிற்கான உதவிக் கரங்களை நாம் பெற முடியும். உங்கள் மனதிலும் கால்களிலும் உள்ள உறுதியைப் பார்த்து அவர்கள் வழங்கும் நன்கொடை, எங்கோ மூலையில் இருக்கும் கிராமப்புறக் குழந்தைகளின் வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டு வரும்.

சென்னை அடையார்-ஐஐடி வளாகத்தின் அழகிய சூழலில் துவங்கவிருக்கும் இந்த மாரத்தானில், பல பிரபலங்களும் கலந்துகொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பொழுதுபோக்கு அம்சங்களும் பல சுவாரஸ்யங்களும் அங்கே காத்திருக்கின்றன. இந்தத் தருணத்தில், ஈஷாவிற்கு கை கொடுங்கள்... என்று சொல்வதை விட, ஈஷா வித்யாவிற்காக உங்கள் கால்களைக் கொஞ்சம் தயார்படுத்துங்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

ஈஷா மாரத்தான் குழுவினரிடம் மேலும் தகவல் பெற: 9489045045
இ-மெயில்: chn.marathon@ishavidhya.org