அரை மணி நேரம் கழித்து "நாங்களும் தேவியை எங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளப் போகிறோம் பைரவி குடி ரூபத்தில்..." என்று எங்கள் வீட்டிலிருந்து செல்லும்போது தீர்க்கத்துடன் வீடு சென்றனர்... இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர் ஐ.டி கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் திருமதி. அபிராமி. அப்படி என்ன அனுபவம் அவரையும் அவர் சார்ந்த குடும்பத்தையும் உலுக்கியது? தொடர்ந்து படியுங்கள்!

அபிராமி:

ஏதோ ஒரு நெருப்பு என்னுள் எரிந்துக் கொண்டே இருக்கிறது... எனக்குக் கிடைத்த அரிய யோக விஞ்ஞானமும் வாழ்க்கை நெறியும் நானே வைத்துக் கொண்டால் என்ன லாபம்? அப்படி இருக்கத்தான் முடியுமா? எனது அத்தனை முயற்சியும் இதனை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலே அமைந்தது...

குடும்பம், குழந்தை, வேலை, அம்மா, அப்பா, மாமனார், மாமியார், அக்காள், தங்கை இதற்கு நடுவில் ஈஷா செயல்கள்! ஒரு ஐ.டி கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு நிகர் நானே என மிகப் பெரிய இலக்குகளை வைத்து அதை அடைந்தும் உள்ளேன். தொட்டதெல்லாம் வெற்றி! செயல், செயல் என்று எப்பவும் ஓடிக் கொண்டிருப்பேன். இவளால் எப்படி இது முடிகிறது? இவளுக்கு பின்னால் யார் இருக்கிறார்? என்று வியந்தவர்கள் பலர்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பைரவி! என்னையும் எனது குடும்பத்தையும் அவளது பத்துக் கரங்களால் அணைத்துக் கொண்டாள்! ஒரு தாயாய் எங்களை அவள் காத்தாள். இவளை இன்னும் அதிகம் போற்ற, உணர, பக்தியில் மூழ்க, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தப் பரிமாணத்தைக் கொண்டு செல்ல பெரும் வாய்ப்பாய் அமைந்தது தேவி யந்திர பூஜை!

டிசம்பர் 26ம் தேதி எங்கள் வீடே திருவிழாக் கோலம் கொண்டது. பூக்கோலம், மாவிலை, தோரணம், மாலை, குத்துவிளக்கு என எங்கு பார்த்தாலும் தெய்வீகமாய் காட்சியளித்தது. இதற்கு நடுவே கம்பீரமாய், தனக்கே உரிய அழகுடன் பைரவி வீற்றிருக்க, 'பைராகினி மா' உள்ளே நுழைந்தார்.

இது என்ன பூஜை என்று தெரியாமலும், ஓ! இது சக்திவாய்ந்த தேவி பூஜை என்று தெரிந்தும் அழைப்பு விடுக்கப்பட்ட அன்பர்கள் ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தனர்.

பைராகினி மா பூஜையைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கண்களில் இருந்து தாரை தாரையாய் நீர் கொட்டிக் கொண்டே இருந்தது... 'கண் மூடி தேவியுடன் சில நிமிடங்கள் இருங்கள்' என மா சொல்ல, தேவி சக்தியை எங்கள் மேல் இரைத்து விட்டது போல் இருந்தது எங்கள் உணர்வு!

பேரானந்தத்தில் மூழ்கிப் போக, வந்தவர்களுக்கு எப்படி இருந்ததோ என்ற சிந்தனை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தது. "அவளே பார்த்துக் கொள்வாள்! இது அவள் பூஜை, அவள் விருந்தினர்கள்!" என முடிவுசெய்து மறுபடியும் தேவியுடன் லயித்துப் போனேன். காரண அறிவு "ஏன் அழுகிறாய்?" என்று எனைக் கேள்விக் கேட்க, விடையேதும் இல்லாமல் தாரை தாரையாய் கண்களில் நீரூற்று!

ஒன்றரை மணி நேரத்தில் முடிந்தது பூஜை. இல்லம் கோவிலானதை உணர்ந்தேன்! லிங்கபைரவி தாண்டவம் ஆடினதுப் போன்று இருந்தது எனது வீடு!

அழைப்பு விடுத்ததோ 35, 45 பேருக்கு... வந்ததோ 65 பேருக்கும் மேல்! கேட்டரிங்கில் சாப்பாடு 40 பேருக்கு சொல்லியிருந்தோம். "பழம் வாங்கனுமோ, அடையார் ஆனந்த பவன்ல பார்செல் சொல்லனுமோ" என்று யோசனை. ஆனால் அனைவருக்கும் உணவு சரியாய் போயிற்று! :)

இரவு 9.30, 10 மணியளவில் அனைவரையும் வழியனுப்பி வைத்தோம்! நள்ளிரவு 12 மணி வரை SMSகள் வந்த வண்ணம் இருந்தன. இவர்களின் அனுபவங்களைக் கேட்டுப் பூரித்துப் போனோம். பைரவி, "நான் சாதுர்யக்காரி, அசாதாரணமானவள்" என்று சற்று உரக்கவே சொன்னாள்!

மறுநாளே தேவி சாதனா விரதம் பூண்டேன். இப்போதெல்லாம் கண்மூடி அவளை நினைத்தால் போதும், கண்களில் நீரருவி! அது மட்டுமல்ல, பைரவி யந்திராவில் முன்பைவிட அவளது இருப்பு பலமாகவே உள்ளது!

இன்னும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஜனவரி 1ம் தேதியன்று, "அக்கா, பூஜைக்கு வர முடியல, தேவிய பார்க்க வரலாமா?" என ஒரு வேண்டுகோள்! "நிச்சயமாக!" என்று சொல்லி அவர்களை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன். வந்த தம்பதியரை பைரவி அறைக்குள் அழைத்துச் சென்றேன். என்ன ஆச்சர்யம்! எங்கிருந்து வந்தது அவர்களுக்கு கண்ணீர் உள்ளே போனவுடன்...

அரை மணி நேரம் கழித்து "நாங்களும் தேவியை எங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளப் போகிறோம் பைரவி குடி ரூபத்தில்..." என்ற தீர்க்கத்துடன் அவளது அருளில் திளைத்து வீடு சென்றனர்.

"பைரவி நீ சாமர்த்தியக்காரி, அனைவரையும் உன் வசம் செய்வதில்..." என்றது என் மனம்.

எங்கள் வாழ்க்கையை அவள் வழி நடத்த, பொன் பொருள் அவள் ஈன்றுத் தர, உள்நோக்கியபயணத்தில் சற்றே விரைவாகவே ஓடிக்கொண்டிருக்கிறோம், அவளது அருளில்...

இறையருள் இறையன்பை உணர ஒரு வாய்ப்பு ஏற்படுத்திய ஈஷாவுக்கு கோடி நன்றிகள்!