குடியரசுத் தலைவர் வருகைமுதல் ஆதியோகி திவ்யதரிசனம் வரை, பைரவி மஹா யாத்திரை முதல் சர்ப்ப சூத்திரம், ஆதியோகி ருத்ராட்ச பிரசாதம் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு நிகழ்ந்துமுடிந்த மஹாசிவராத்திரி கொண்டாட்டம், ஈஷா அன்பர்களுக்கு மறக்க முடியாத ஓர் இரவாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பாரதத்தின் கவனத்தையே தமிழகம்நோக்கி திரும்பச் செய்தது என்றால், அது மிகையில்லை!

ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டம் கும்பமேளாவிற்கு அடுத்தபடியாக பாரதத்தின் மிகப்பெரிய ஒரு திருவிழாவாக உருவெடுத்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

25 வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் இரவுமுழுக்க பாட்டு பாடுவதற்கு 70 வயதான ஒரே ஒரு பாட்டி இருந்தார் என்றும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவிளையாடல் போன்ற படங்களைப் பார்த்து மஹாசிவராத்திரியை கொண்டாடியதாகவும் தன்னார்வத் தொண்டர்கள் மத்தியில் சத்குரு சிலாகித்து பகிர்ந்துகொண்டார். தற்போது ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டம் கும்பமேளாவிற்கு அடுத்தபடியாக பாரதத்தின் மிகப்பெரிய ஒரு திருவிழாவாக உருவெடுத்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

“ப்ரோ எங்க இருக்கீங்க… நாங்க மஹாசிவராத்திரி மைதானத்துக்கு வந்துட்டோம்! சீக்கிரமா வாங்க!”
“இங்க ஒரே ட்ராஃபிக்கா இருக்கு.,. மெதுவாதான் வண்டி மூவாகுது. வந்துட்டு ஃபோன் பண்றேன்!”
“கோயமுத்தூர் சிட்டியே ஈஷா நோக்கி வந்துட்டு இருக்கு, எப்படி ட்ராஃபிக் இல்லாம இருக்கும்?!”
இது மஹாசிவராத்திரியின் மாலை வேளையில் இரு நண்பர்களுக்கு இடையே நிகழ்ந்த அலைபேசி உரையாடல்.

கோவை மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஈஷாவை நோக்கி ஈர்க்கப்பட்டனர்.

msr2019-180degreephoto

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த ஆண்டு மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் தேசத்தின் முதல் குடிமகனான மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தது, ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்தது. விழா மேடையில் குடியரசுத் தலைவர் வீற்றிருக்க சத்குரு தனது குரலில் தேசிய கீதத்தை பாட, கூடியிருந்த பலலட்சம் மக்கள் எழுந்துநின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செய்து தேசப்பற்றையும் தேசத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படுவதையும் பறைசாற்றினர். விழாவில் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்களும் மற்றும் மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களும் கலந்துகொண்டனர்.

president-collage

பைரவி மஹா யாத்திரை

முன்னதாக, மாலை சாந்தியா வேளையில் நிகழ்ந்த பஞ்சபூத ஆராதனை நிகழ்வைத் தொடர்ந்து, வருடத்தின் ஒருமுறை மட்டுமே நிகழும் பிரத்யேக நிகழ்வாக, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தி ஊர்வலம் ஆதியோகி திருமுகம்வரை பைரவி மஹா யாத்திரையாக நிகழ்ந்தேறியது.

பிரம்மாண்ட காட்சி விருந்தாய் ஆதியோகி திவ்ய தரிசனம்!

இந்த ஆண்டு மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் பங்கேற்பாளர்களுக்கு ஓர் ஆச்சர்ய காட்சி விருந்தாய், பிரம்மாண்டமும் கலைநயமும் ஒன்றுசேர லேசர் ஒளிவண்ணம் ஆதியோகி திவ்ய தரிசனத்தை வழங்கியது. ஆதியோகியின் பல்வேறு காலகட்டங்களையும் பல்வேறு வடிவங்களையும் தன்மைகளையும் வண்ணமிகு லேசர் ஒளிக்காட்சிகள் வாயிலாக வழங்கப்பட்டது. உண்மையில், இதனை வார்த்தையில் வர்ணிப்பது என்பது இயலாத காரியம். நேரடியாக ஆதியோகி திவ்ய தரிசனத்தை காணத் தவறியவர்கள் இந்த லிங்கில் சென்று பார்க்கலாம்.

ஆதியோகி திவ்ய தரிசனத்தை மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் துவங்கி வைத்தார். சத்குரு இதுபற்றி கூறும்போது, இனிவரும் நாட்களில் முக்கியமான தருணங்கள், திருவிழாக்கள் என பல்வேறு தருணங்களில் தொடர்ந்து ஆதியோகி திவ்ய தரிசனம் வழங்கப்படும் என்பதையும் அறிவித்தார்.

கலைநிகழ்சிகளால் களைகட்டிய ஈசனின் இரவு!

artist2019-msr

தக்‌ஷா சேத் நடனக் குழுவினரின் நடன நிகழ்ச்சி, ஃப்கிரா கேத்தா கான் மற்றும் குழுவினரின் ராஜஸ்தானி நாட்டுப்புற பாடல், பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் அவர்களின் இன்னிசை, மெல்லிசை வித்தகர் ஹரிஹரனின் மதுர கானங்கள், பாரம்பரிய அசர்பைஜான் இசைக்கலைஞர்களின் வழிவந்த நட்டிக் ஷ்ரினவ் குழுவினரின் தாள வாத்திய கச்சேரி, பாலிவுட் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளரும் பாடகரும் பாடலாசிரியருமான அமித் த்ரிவேதி குழுவினரின் இசைமழை, கடம் கார்த்திக் அவர்களின் கடம் இசைக்கச்சேரி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இரவு முழுக்க அரங்கேறியது. இவற்றோடு திவ்யா நாயர் அவர்களால் எழுதி, நடன அமைப்பு செய்யப்பட்ட விபு எனும் நாட்டிய நாடகத்தை சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கினர். சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரும் வழக்கம்போலவே மக்களை உற்சாகம் குறையாமல் கொண்டாடச் செய்யும் பணியை செவ்வனே செய்தனர்.

உயிர்சக்தியின் உச்சம்தொட்ட நள்ளிரவு தியானம்!

நள்ளிரவு சாந்தியா வேளையில் சத்குரு முன்னிலையில் சக்திவாய்ந்த ‘ஆம் நமஹ் ஷிவாய' மந்திர உச்சாடனம் உயிர்வெடிக்கும் ஓர் அனுபவமாகியது. ஆதியோகியின் அருள்பிரவாகம் எடுக்க, அன்பர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். முன்னதாக ஷம்போ உச்சாடனத்தின் மகிமை குறித்தும் விளக்கிய சத்குரு, ஈஷாவின் சூழல் ஷம்போ எனும் மந்திரத்துடன் எவ்வித்தில் இயைந்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.

சர்ப்ப சூத்திரத்துடன் ருத்ராட்ச வரப்பிரசாதம்

மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் கூடுதல் சிறப்பம்சமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட செம்பு மோதிரமான சர்ப்ப சூத்திரம் மற்றும் கடந்த ஓராண்டு காலமாக ஆதியோகியின் கழுத்தை அலங்கரித்த ருத்ராட்ச மணிகள் ஈஷா மஹாசிவராத்திரிக்கு நேரடியாக வருகைதந்த அனைவருக்கும் இலவசமாக ஆதியோகியின் அருட்பிரசாதமாக வழங்கப்பட்டன!

விவசாயிகளுக்கு மஹாசிவராத்திரியில் செய்த மரியாதை…

நமது பசிப்பிணியை ஆற்றி, ஊருக்கெல்லாம் உணவு வழங்க ஓயாது உழைக்கும் உழவர் பெருமக்களை சத்குரு மஹாசிவராத்திரி தருணத்தில் அழைத்து ஆசிவழங்கி மரியாதை செய்தார். மேடைக்கு வந்த விவசாயப் பிரதிநிதிகள் சத்குருவுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

ஈஷா நாட்டு மாடுகள் கண்காட்சி

மஹாசிவராத்திரியின்போது, ஈஷா நாட்டு மாடுகள் கண்காட்சி நடைபெற்றது. அதில், அழியும் நிலையில் இருக்கும் பலவகையான அரிய நாட்டு மாடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 300 வகைக்கும் மேலான நாட்டுமாடு இனங்களில் இன்று வெறும் 30 இனங்களைச் சேர்ந்த மாடுகளே உயிர் வாழ்கின்றன. இவற்றில், ஈஷா யோக மையம், 16 வகை நாட்டு மாடுகளை கடந்த 20 ஆண்டுகளாக பராமரித்து வளர்த்து வருகின்றது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரிய வகை மாட்டு இனங்களை கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

பல லட்சம் பேர் கண்டுகளித்த விழா…

இந்த மஹாசிவராத்திரி கொண்டாட்டத்திற்கு ஈஷா யோகா மையத்திற்கு நேரடியாக வருகைதந்து லட்சக்கணக்கானோர் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், நேரடியாக வர இயலாதவர்கள் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நேரடி ஒளிபரப்பின் மூலம் பல லட்சம் பேர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் இணையதளம், யூ ட்யூப் மற்றும் ஃபேஸ்புக் வழியாகவும் நேரடி இணைய ஒளிபரப்பை ஈஷா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.