சத்குரு:

 

ஒருவர் அமர்ந்திருக்கும் விதத்தைப் பார்த்தாலே, அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் அவருக்கு என்ன விதமான சிரமங்கள் வரும் என்பதை என்னால் சொல்ல இயலும்.

 

உங்கள் வடிவ இயலை நீங்கள் சீர்செய்தாலே உங்களின் புரிதல் மேம்படும். புரிதல் மட்டுமே வாழ்வை மேம்படுத்தும். மற்றவை எல்லாம் கற்பனையே!

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் வடிவத்தின் அமைப்பே சில விஷயங்களை வரவழைக்கக் கூடும். உங்களால் ஒன்றும் செய்ய இயலாது.

நம்முடைய கலாச்சாரத்தில், எப்படி அமர்வது, எப்படி சுவாசிப்பது, உடலை எப்படி வைத்துக் கொள்வது, மனத்தை எப்படி வைத்துக் கொள்வது என்பது பற்றியெல்லாம் நுட்பமான அறிவியலை வகுத்துள்ளோம்.

உங்கள் வடிவ இயலை நீங்கள் சீர்செய்தாலே உங்களின் புரிதல் மேம்படும். புரிதல் மட்டுமே வாழ்வை மேம்படுத்தும். மற்றவை எல்லாம் கற்பனையே! இந்த உலகில் கற்பனை பெரிதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கற்பனை என்பதென்ன? உங்கள் ஞாபகங்களின் மறுசுழற்சி, அவ்வளவுதான். புரிதலின் எல்லைகள் விரிவடையும்போதுதான் உங்கள் வாழ்க்கை உண்மையிலேயே மேன்மையடைகிறது.

புரிதலை மேம்படுத்துவதன் மூலம் உங்கள் மேதைமையைத் தூண்டுவதற்கு, விஞ்ஞான ரீதியாய் நிரூபிக்கப்பட்ட வழிமுறை ஒன்று உள்ளது. மேதமை என்றால், கவிதை எழுதுவதையோ, ஓவியங்கள் வரைவதையோ நான் சொல்லவில்லை. இந்த மனித இயல்புகள் செயல்பட அனுமதிக்கும் அடிப்படையான அறிவுநிலை ஒன்று உள்ளது.

“நான்” என்னும் பிணைப்போ அடையாளமோ இல்லாமல், உங்கள் மனித இயல்பின் தொழில்நுட்பத்தை நீங்கள் கவனித்தால், இந்த உலகிலேயே அதிநவீனமான இயந்திரம் இதுதான் என்பதை உணர்வீர்கள்.

இந்த இயந்திரத்தைக் கொண்டு நீங்கள் எதனை உற்பத்தி செய்கிறீர்கள்? ஒரு வாழைப்பழம் சாப்பிடுகிறீர்கள், அது உள்ளே சென்று, ஒன்றரை மணி நேரத்திற்குள் மனிதனாகிவிடுகிறது. நீங்கள் எதனை உண்டாலும் அதனை இந்த அதிநவீன இயந்திரத்தின் அங்கமாக மாற்றுகிற நுண்ணறிவு உங்களுக்குள் இயங்குகிறது. ஆனால், இந்த நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வு இல்லாமலேயே இருக்கிறீர்கள்.

இந்தத் தன்மையை நீங்கள் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துவிட்டால், உங்கள் தர்க்க அறிவைத் தாண்டிய நுண்ணறிவு எல்லா நேரமும் இயங்குவதை உணர்வீர்கள். நீங்கள் உயிரோடு இருப்பதற்கு உங்கள் தர்க்க அறிவு காரணமல்ல.

யோகா என்னும் முறைமையின் முழு நோக்கமே உங்களுக்குள் ஒருவித தளர்வு நிலையைக் கொண்டு வருதல். அதன்மூலம், தேக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல். பரிணாம வளர்ச்சியைப் பொறுத்தவரை, மனித மனம் என்பது சமீபத்திய ஒரு நிகழ்வு. அதனைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் அது தேக்கத்தினை ஏற்படுத்தும். ஒரு குழந்தை வானொலியைப் பயன்படுத்தத் தெரியாமல் கையாண்டால் விசித்திரமான சப்தங்கள் வருவதைப் போலத்தான் அதுவும்.

நாம், பூமி என்னும் உருண்டையான கிரகத்தில் இருக்கிறோம். அதுவும் சுழன்ற வண்ணம் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சமோ எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்பது யாருக்கும் தெரியாது. இருந்தாலும் இது குறித்தெல்லாம் கவலையில்லாமல் நம் வாழ்வை நாம் நடத்திக்கொள்ள முடிகிறது என்றால், உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றியும் மிகவும் ஆழமான நுண்ணறிவு ஒன்று இயங்குகிறது என்று பொருள். அந்தப் பரிமாணத்தை உணரவே மனிதகுலம் முயற்சிக்க வேண்டும்.

இந்த பூமியில் நீங்கள் நடக்க வேண்டும் என்றாலும் கூட பிரபஞ்சத்துடன் ஒரு விதமான ஒத்திசைவு தேவைப்படுகிறது. கொஞ்சம் அதிகம் குடித்தவர்கள் நடக்கத் தடுமாறுவதைப் பார்த்திருப்பீர்கள். நடப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இவை உங்கள் தர்க்க அறிவால் நிகழ்வதல்ல. உங்களுக்குள் இருக்கும் நுண்ணறிவால் நிகழ்வது. நுண்ணறிவின் இந்தப் பரிமாணத்தை நீங்கள் தொட்டுவிட்டால், தர்க்க அறிவிலிருந்து வாழ்வின் மாயாஜாலம் நோக்கி நகர்வீர்கள்.