சத்குரு:

ஓர் அற்புதமான கதை உண்டு. கதை அல்ல, இது தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம். இவருடைய பெயர் நமக்குத் தெரியாது. அந்த அளவிற்கு முக்கியமானவராக அப்போது அவரை மக்கள் கருதவில்லை. ஒருவரும் அவர் பெயரை ஏட்டில் பதிக்கவில்லை. அவர் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர். தீண்டத்தகாதவர்கள் சாதியில் பிறந்தவர். ஒரு விவசாயக்கூலி. இத்தகையவருக்கு பெயர் இருக்கக்கூடாது அல்லவா? கீழ்சாதியில் பிறந்தவருக்கு பெயர் எதற்கு?

ஒருவருக்கு பெரிய அடையாளத்தைத் தருவது அவருடைய பெயர். சமூகத்தில் யாரையாவது அடிமைப்படுத்த வேண்டும் என்றால் முதலில் அவருடைய பெயரை எடுத்துவிடுவார்கள். மும்பையை பம்பாய் என்று மாற்றினார்கள், பெங்களூரூவை பேங்களூர் என்று மாற்றினார்கள், திருவனந்தபுரத்தை ட்ருவேண்டிரம் என்றார்கள். முதலில் உங்கள் பெயரை பறித்து விடுவார்கள். ஏனெனில், பெயர் ஒருவருக்கு சக்திவாய்ந்த அடையாளம்.

இவர் ஒரு தீண்டத்தகாதவர், அதனால், அவருக்குப் பெயர் வைக்கமாட்டார்கள். "யேய்" அதுதான் அவர் பெயர். சிறுவயதிலிருந்தே சிவனின் நினைவு இவரை ஆட்கொண்டிருந்தது.
ஒரு விவசாயக் கூலி, இதுபோல் தனக்கென சொந்த எண்ணங்களும், ஆசைகளும் வைத்துக்கொள்ள கூடாதுதானே! ஆனால், குழந்தைப் பருவத்திலிருந்தே அவருள் எரியும் நெருப்பாய் சிவன் இருந்தான். அவருடைய ஊரிலிருந்து மிக அருகாமையில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்று உள்ளது. சிவன் அவரை எப்போதும் அங்கு அழைத்துக் கொண்டிருப்பதாகவே அவருக்குத் தோன்றியது. ஆனால் அவரது வாழ்க்கை அவருடையதில்லை. அவரால் அப்படி உடனே எங்கும் செல்ல முடியாது. அவர் எஜமானரிடம், “இன்று மட்டும், கோவிலுக்குச் சென்று, உடனே திரும்பி வருகிறேன்,” என்று பலமுறை கேட்டும் பயனில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“இன்று களையெடுக்க வேண்டும், நாளை மறுநாள் உரம் வைக்க வேண்டும், பின் உழவேண்டும், ஒருநாளைக் கூட வீணாக்க முடியாது. உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீயே ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவன். உனக்காக ஒருநாளை வீணாக்க வேண்டுமா? முடியாது” என்று கூறிவிடுவார்.

கோவிலுக்குப் போக வேண்டும் என்ற ஏக்கம் அவருக்குள் தீவிரமாகத் தொடங்கியது. இது அவருக்குள்ளே ஒரு புதுவிதமான சக்தி அதிர்வை அவர் உடல் முழுவதிலும் ஏற்படுத்தியது. இந்த முறை எஜமானரிடம் சென்றபோது, ஒருவித கண்ணியத்துடன் அவர் தோன்றினார். அவ்வித கண்ணியம் ஒரு கூலியிடம் பொதுவாக இருப்பதில்லை, இருக்கவும் கூடாது.
“முட்டாளே, இப்போது என்ன வேண்டும் உனக்கு? அந்த கோவிலுக்குப் போக வேண்டுமா? முடியவே முடியாது,” என்றார். “அனைத்து வேலைகளையும் இன்றே முடித்துவிட்டு, நாளை ஒருநாள் மட்டும் போய் வருகிறேன்,” என்றார். அவர் இருக்கும் புதிய நிலையைக் கண்ட எஜமானர், ஒரு கணம் மனமிறங்கி தன்னை மறந்து, “சரி, போய்விட்டு, சாயங்காலத்திற்கு முன் திரும்பி வா,” என்றார்.

பின், தான் சொன்னதை உணர்ந்து, “நீ நாளைக்குப் போகவேண்டும் என்றால், நாளை விடிவதற்கு முன், இந்த நாற்பது ஏக்கர் நிலத்தையும் உழுது முடித்துவிட்டு போகலாம்,” என்று கூறினார். ஏற்கனவே மாலைநேரம் ஆகிவிட்டது. நாற்பது ஏக்கரை உழுது முடிப்பதென்பது முடியாத காரியம். அதனால், அதற்கான முயற்சியில்கூட அவர் இறங்கவில்லை. என்ன ஆனாலும், நாளைக்கு அவர் கோவிலுக்குப் போவார் என்று அவர் உணர்ந்திருந்தார். உறங்கச் சென்றார்.

காலை, அவர் தூங்கி எழுவதற்குள் அந்த கிராமமே பரபரப்பாக இருந்தது. அந்த முழு நாற்பது ஏக்கர் நிலமும் உழுதாகிவிட்டது. அவர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார், அவரால் நம்பவே முடியவில்லை. அவருடைய எஜமானர் ஆச்சரியத்தில் வாயை பிளந்து நின்று கொண்டிருந்தார்.

எஜமானரின் மனைவி, குழந்தைகள் எல்லாம் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள். நடந்ததை அவரால் நம்பமுடியவில்லை. அவர் எப்போதும் மனதில் இப்படி நினைத்ததுண்டு: சிவன் நினைத்தால், இயற்கை விதிகளைக்கூட நகர்த்தவும், வளைக்கவும் முடியும், என்று. இன்று அதைக் கண்கூடாகப் பார்த்தார்.

மனிதனின் கொடூரமான விதிகளைத்தான் வளைக்க முடியாது. ஆனால், இங்கு மனிதனின், கடவுளின், இயற்கையின் சட்டங்கள் எல்லாம் வளைக்கப்பட்டுள்ளது. திடீரென மக்கள் அங்குத் திரண்டனர். அவர் கைகளில் வெள்ளிக்காசுகளை வைத்தனர். ஒருவர் அவருக்கு உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தார். இன்னொருவர் அவரிடம் ஒரு குச்சியைக்கொடுத்து வழியனுப்பினார். “அவர் சாதாரணமானவர் அல்ல, சிவனே அவருக்காக இங்கு வந்து நிலத்தை உழுதுள்ளார்,” என்றனர்.

தன் மனம் நிறைந்து மிக்க மகிழ்ச்சியுடன் அவர் கோவிலுக்குச் சென்றார். ஆனால், தான் தீண்டத்தகாதவர் என்பதையும் அவர் மறந்துவிடவில்லை. தான் கோவிலுக்குள் செல்ல முடியாது என்பதையும் அவர் மறக்கவில்லை. அவர் கோவிலுக்கு வெளியிலேயே நின்று கொண்டிருந்தார்.

சிவன் அவனுடைய பக்தர்களுக்காக எதையும் வளைப்பான் என்பது அறிந்த ஒன்றே. ஆனால், சிவனைவிட பெரியவர்களான கோவில் பூசாரிகள் அப்படி செய்யமாட்டர்கள் அல்லவா? அவரை கோவிலுக்குள் விடமாட்டார்கள் என்று இவருக்கும் தெரியும். ஆனால், ஒரே ஒருமுறை சிவனை தரிசித்துவிட வேண்டும் என்று அவர் நின்று கொண்டிருந்தார். இப்போதுகூட, இந்த கோவிலில், நந்தி ஒருபக்கம் நகர்ந்திருப்பதை, நம்மால் காணமுடியும். பின்னர், அவர் நந்தனார் என்று அழைக்கப்பட்டார். இன்று வரை யாருக்கும் அவருடைய இயற்பெயர் தெரியாது. ஒரு உழவனாகவே அறியப்பட்டார். (63 நாயன்மார்களில் ஒருவர் அவர்)

அவர் தனது வாழ்வில், இந்த ஒன்றே ஒன்றை மட்டுமே மனதில் வைத்திருந்தார்; அதை எந்த நிலையிலும் அவர் விட்டுக்கொடுக்கவும் இல்லை; விட்டுக்கொடுக்க தயாராகவும் இருக்கவில்லை.