சத்குரு:

இன்றைய காலகட்டத்தில், நமது கல்விமுறை மற்றும் காரணஅறிவை நாம் வளர்த்தெடுத்திருக்கும் விதம் காரணமாக, இந்த சமூக அமைப்புக்குள் நாம் பொருந்த எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவிலான காரணஅறிவு தேவைப்படுகிறது. எல்லா பௌதிக விஞ்ஞானங்களும், காரண அறிவு, சந்தேகங்கள், கேள்வி கேட்டல் மற்றும் பரிசோதித்தல் போன்றவைகளிலிருந்தே வளர்ச்சி அடைந்துள்ளன. அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து வந்த ஒரு மனம் பக்தியோடு இருக்க முயற்சி செய்வது என்பது, ஏமாற்றத்திற்குத்தான் இட்டுச் செல்லும்.

ஒரு பக்தர் எனப்படுபவர், தனது பக்தியின் இலக்குடன் கரைந்துவிடுவது எப்படி என்று மட்டுமே பார்க்கிறார். அவருக்கென்று தனிப்பட்ட முறையில் எந்த நோக்கமும் கிடையாது. பக்தியின் இலக்கு எந்தவிதமாக வழி நடத்தினாலும், அவர் அந்த வழியில் செல்கிறார். ஒரு பக்தர், தனது நல்வாழ்வு என்ற வகையில் ஒருபோதும் சிந்திப்பதில்லை.

தங்களை பக்தி செலுத்துபவர்களாக நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களும், தங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் சிந்திக்கின்ற, கேள்வி கேட்கின்ற ஒரு மனம், உண்மையில் ஒரு பக்தராக ஆகவே முடியாது. பக்தி செலுத்துவதற்கான அம்சம் அங்கு அறவே இல்லை என்பது கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு நபர் ஒரு உண்மையான பக்தராக ஆக முடியாது. ஏனெனில், ஒரு பக்தர் எனப்படுபவர், தனது பக்தியின் இலக்குடன் கரைந்துவிடுவது எப்படி என்று மட்டுமே பார்க்கிறார். அவருக்கென்று தனிப்பட்ட முறையில் எந்த நோக்கமும் கிடையாது. பக்தியின் இலக்கு எந்தவிதமாக வழி நடத்தினாலும், அவர் அந்த வழியில் செல்கிறார். ஒரு பக்தர், தனது நல்வாழ்வு என்ற வகையில் ஒருபோதும் சிந்திப்பதில்லை. ஒரு அறிவு ஜீவியால் அப்படி இருக்க முடியாது. ஆகவே காரண அறிவைத் தரைவிரிப்பின் கீழே போட்டு மறைத்துவிட்டு, மேற்கொண்டு நடந்துவிட முயற்சிப்பது நிகழப்போவதில்லை. ஏனெனில், அது வேறு எங்காவது வெடித்துக் கிளம்பி, உங்களைத் தொந்தரவு செய்யும்.

பழக்கப்படுத்தப்பட்ட பக்தி என்பது ஏமாற்றம்தான். நீங்கள் ஏதோ ஒன்றினால் ஆட்கொள்ளப்படும் பொழுது, இயற்கையாக அதை நோக்கி பக்திவயப்படுவீர்கள். சாதாரணமாக, பழக்கத்தினால் உண்டாகும் பக்தி, உங்களை எங்கும் கொண்டு செல்லாது. பக்தியைப் பழகுவதற்கு நீங்கள் முயற்சித்தால், அது உங்களை பலவிதமான மனப்பிரமைகளுக்குள் நகர்த்திச் செல்லும். பிறகு எல்லாவிதமான விஷயங்களையும் நீங்கள் நம்பத் தொடங்குவீர்கள். நீங்கள் ஏதோ ஒன்றினால் அல்லது யாரோ ஒருவரால் ஆட்கொள்ளப்பட்டால், இயற்கையாகவே நீங்கள் பக்தராகிவிடுகிறீர்கள். ஒரு பக்தர் என்றால், அவருக்கென்று தனித்தன்மை அதிகம் இருக்காது. ஒரு பக்தர் என்றால், அவரது பௌதிக உடல் கூட, தனது பக்தியின் இலக்கை ஒத்து மாறுதலடையும். உங்களுடைய ஒவ்வொரு அம்சமும், உங்களது பக்திக்குரியவரைப் போலவே மாறுகிறது.

இதற்கான ஒரு அற்புதமான உதாரணமாக, தமிழ்நாட்டிலிருக்கும் இந்த வியப்புக்குரிய மனிதரைக் கூறலாம். மாயம்மா என்றொரு பெண் துறவி இருந்தார். மாயம்மா என்றால் “மாயையான தாய்” என்பது பொருள். நான் ஒரு துறவி என்று அவரைக் கூறுவதால், யாரோ அவருக்குத் துறவி என்று சான்றளித்ததாக எண்ண வேண்டாம். இவர்கள் ரிஷிகள், இவர்கள் யாராலும் முத்திரையிடப் படாதவர்கள். அவர்களது வாழ்க்கையே ஒரு முத்திரைதான். இந்தப் பெண்மணி எங்கிருந்து வந்தவர் என்பது யாருக்கும் தெரியாது. அவர் மிகவும் சின்னஞ்சிறு உருவத்தில், ஐந்து அடிக்கும் குறைவான உயரத்தில் இருந்தார். அவரது முகத்தின் அமைப்பைப் பார்த்தால், அவர் நேபாளத்திலிருந்து வந்தவர் என்று நான் எண்ணுகிறேன். ஆனால் நிச்சயம் அவர் தென்னிந்தியர் அல்ல. ஏனெனில் அவருக்கு மொழி கூடத் தெரியவில்லை என்பதுடன், மொழியைக் கற்றுக் கொள்வதையும் முயற்சிக்கவில்லை. கன்னியாகுமரி வீதிகளின் வழியே அவர் நடந்திருந்தார். யாராவது சாப்பிடுவதற்கு அவருக்கு ஏதாவது கொடுத்தார்கள் என்றால், அந்தப் பெண்மணி சாப்பிட்டார். இல்லையென்றால் அவர் நடந்தவாறு இருந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
மாயம்மாவின் பக்தரான இந்த மனிதர் ஒரு தென்னிந்தியர். அவர் மாயம்மாவிடம் மிகுந்த பக்தியோடு இருந்தார். என் முன்னே அவர் வந்தபொழுது, அவரது முகம் அச்சு அசலாக மாயம்மா போலவே இருந்ததைக் கண்டேன். இவர் மேன்மையான நிலையிலிருக்கும் ஒரு பக்தர்.

அந்தப் பெண் துறவி, ஒரு இளம் பெண்ணாக வந்தபோது, மக்கள் யார் இது? என்று வியந்ததுடன் அவரை சித்தப் பிரமை பிடித்தவராக எண்ணிக் கொண்டனர். அவர் வீதிகளில் ஆடிக்கொண்டும், பாடிக் கொண்டும், அழுது கொண்டும் இருப்பார். அதன்பிறகு எப்படியோ நாய்களுக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டதால், எப்போதும் அவைகள் அவரைச் சூழ்ந்திருந்தன. எப்போதும் எட்டு அல்லது பத்து நாய்கள், அவர் செல்லுமிடமெல்லாம், அந்தப் பெண்மணியைத் தொடர்ந்தே செல்வது வழக்கம். அந்தப் பெண்ணின் துறவுக் குணங்களுக்காக அவைகள் சூழ்ந்திருக்கவில்லை. அவர் எப்போதும் நாய்களுக்கு உணவளித்ததால் அவைகள் சூழ்ந்திருந்தன. இந்த நாய்களின் கூட்டம் அவரைத் தொடர்ந்தே செல்லும், பிறகு அவர் உணவுப் பண்டங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சிற்றுண்டி சாலைக்குச் செல்வார். அங்கேயே நின்றுகொண்டு, ஒருவரும் பார்க்காத பொழுது, காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பண்டங்களை பறித்து வீதியில் வீசிவிடுவார். எல்லா நாய்களும் சாப்பிட்டுவிடும். ஆகவே அந்தப் பெண் இயற்கையாகவே நாய்களுக்கு நட்பாகிவிட்டார்.

பல தருணங்களில் உணவு விடுதியின் சொந்தக்காரர்களால் அவர் அடித்து விரட்டியடிக்கப்பட்டார். அவர் அருகில் வந்தாலே, அந்த உணவுவிடுதி உரிமையாளர்கள் ஒரு கம்பை எடுத்து வசைபாடி அங்கிருந்து விரட்டுவார்கள். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில், அந்தப் பெண் தண்ணீரின் மீது அமர்ந்து கொண்டு, மிதந்து வருவதைப் பார்த்தனர். அவர் நீரின் மீது சம்மணமிட்டு அமர்ந்தவாறே, சமுத்திரத்தின் எல்லா இடங்களிலும் மிதந்து கொண்டிருப்பார். கரைக்குத் திரும்பி வரவேண்டுமென்றால், அவர் நீந்தி வருவார். இல்லையென்றால், நீரின் மீது மிதந்து கொண்டே கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் செல்வார்.

இதைக் கண்ட மக்கள், அவரைத் திட்டுவதையும், அடிப்பதையும் நிறுத்திவிட்டனர். ஏனென்றால், தரையில் நடப்பவர்களைக் காட்டிலும் அவர் மேலானவராக இருந்தார். சிலர் அவரை வழிபடத் தொடங்கினர். மற்றும் சிலர் அவரைச் சூழ்ந்து அமர்ந்தனர். ஆனால் அவர் ஒருபோதும் பேசவில்லை, ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவர் வீதியில் நடக்கும்போது, சிலர் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் அமர்ந்தால் அவரைச் சுற்றி அவர்கள் அமர்ந்தனர். நாய்களும் அமர்ந்தன, மக்களும் அமர்ந்தனர். ஆனால் அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை அல்லது எந்த போதனையும் தரவில்லை.

நான் என்னும் தன்மையை அழித்துக்கொண்டு, உங்களது பக்திக்குரிய ஏதோ ஒன்றுக்குள் நீங்கள் முழுமையாக கிரகிக்கப்பட்டால், அந்த ஏதோ ஒன்றும் போதிய சக்தி வாய்ந்ததாக இருந்தால், அது உங்களுக்குள் தன் பதிவை ஆழப் பதித்துவிடும்.

அதன்பிறகு, அவருக்கு வயது அதிகமாகிய நிலையில், ஒரு பிரபலமான இசையமைப்பாளர், அந்தத் துறவிக்கு ஒரு சிறிய வீடு கட்டித்தர விரும்பினார். அந்த இடத்திலிருந்து அவரை இடம் பெயரச் செய்து, கடலிலிருந்து தொலைவில் இருந்த சேலம் நகரத்தில் குடியமர்த்தினார். அந்தப் பெண், கடலை மிகவும் நேசித்தார். அவர்கள் அவருக்கு கடலுக்கு அருகில் இருப்பிடம் கட்டிக் கொடுத்திருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால், அவர்கள் சேலத்தில் கட்டினார்கள். அவரைச் சுற்றிலும் சில மக்கள் கூடியிருந்து, பக்தியோடு இருந்தனர். அவர் சேலத்திலேயே தனது உடலை நீத்தார்.

இந்த இடத்திற்கு வெகு அருகில் மலைவாசஸ்தலம் ஒன்று உள்ளது. இந்தத் துறவியைப் பற்றி யாரோ என்னிடம் கூறியபொழுது நான் அந்த மலை வாசஸ்தலத்தில் தங்கியிருந்தேன். “மாயம்மாவின் இடம் இங்குதான் உள்ளது” என்று கூறிய அவர்கள், அவரது புகைப்படத்தை என்னிடம் காண்பித்தனர். புகைப்படத்தை நான் பார்த்த கணமே, “நான் அங்கு போக விரும்புகிறேன்” என்று மலையிலிருந்து கீழே வண்டியோட்டி வந்தேன். அது ஒரு பௌர்ணமி நாள். அங்கு ஒரு சிறிய சமாதி இருந்தது. அந்தத் துறவிக்காகக் கட்டப்பட்டிருந்தது. அந்த இடம் தீவிரமான அதிர்வுகளில் இருந்தது. அது ஒரு அற்புதமான இடம்.

அங்கிருந்தவர்கள், “இன்றைக்கு பௌர்ணமி நாள், தங்கியிருந்து பிரசாதம் பெற்றுச் செல்லுங்கள்” என்றனர். அவர்கள் அனைவருக்கும் இரவு உணவு பரிமாறிக் கொண்டிருந்தனர். இங்கு சிறப்பான விஷயமாக இருந்தது என்னவென்றால், மாயம்மாவிடம் பக்தி கொண்டிருந்த ஒரு சின்னஞ்சிறு மனிதர் அங்கு இருந்தார். மாயம்மா, தன் வாழ்நாள் முழுவதும் வெட்ட வெளியில் வாழ்ந்தார். ஆகவே அவரது முகமே, பருவ மாறுதல்களால் உருமாறி ஒருவிதமாக இருந்தது. அவர் ஒரு நேபாளி போல இருந்ததால், முக அமைப்பு மங்கோலியர்கள் போல் இருந்தது. மாயம்மாவின் பக்தரான இந்த மனிதர் ஒரு தென்னிந்தியர். அவர் மாயம்மாவிடம் மிகுந்த பக்தியோடு இருந்தார். என் முன்னே அவர் வந்தபொழுது, அவரது முகம் அச்சு அசலாக மாயம்மா போலவே இருந்ததைக் கண்டேன். இவர் மேன்மையான நிலையிலிருக்கும் ஒரு பக்தர். அவரைப் பார்ப்பதற்கே அவ்வளவு வியப்பாக இருந்தது.

பக்தி என்பது அந்த மாதிரியான ஒரு விஷயம். நான் என்னும் தன்மையை அழித்துக்கொண்டு, உங்களது பக்திக்குரிய ஏதோ ஒன்றுக்குள் நீங்கள் முழுமையாக கிரகிக்கப்பட்டால், அந்த ஏதோ ஒன்றும் போதிய சக்தி வாய்ந்ததாக இருந்தால், அது உங்களுக்குள் தன் பதிவை ஆழப் பதித்துவிடும். பக்தியின் நோக்கமே அதுதான். பக்தியாக இருப்பதைப் போல நீங்கள் நடிப்பதில்லை. நீங்கள் பக்தியாகவே மாறமுடியும். இது, யாரோ ஒருவரிடம் அல்லது ஏதோ ஒன்றுடன் பக்தியாக இருப்பதைப் பற்றி அல்ல; பக்தி என்பது புரிதலின் உயர்ந்தபட்ச நிலையாகவே இருக்கிறது. நீங்கள் தேடிக்கொண்டிருப்பது எதுவோ, அதனுடன் நீங்கள் அமிழ்ந்துவிட முடியும். ஏனெனில் நீங்கள் உங்களை முழுமையாக திறந்த நிலையில் வைத்திருக்கிறீர்கள்.