மனதைக் கடந்து கடவுளை அடைவது போன்ற தத்துவார்த்தமான குறிப்புகளை மதங்கள் பேசுகின்றன; ஆனால் பதஞ்சலி மகிரிஷியோ மனம் கடந்து செல்வதே யோகா என்கிறார். இந்த முரண்கள் குறித்து பேசும் சத்குரு, கர்மா பற்றியும் இதில் மனித மனம் செய்யும் சர்க்கஸ் குறித்தும் விரிவாகப் பேசுகிறார்.

Question: யோகப் பயிற்சியின் மூலம் ஒருவர் எப்படி மனதைக் கடக்க முடியும்?

சத்குரு:

யோகாவின் ஒட்டுமொத்த செயல்பாடும், மனதின் எல்லைகளைக் கடப்பதற்கென்றே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் மனதின் வாயிலாகச் செயல்படும்வரை, கடந்த காலத்தினால் மட்டுமே ஆளப்படுகிறீர்கள். ஏனெனில் மனம் என்பதே கடந்த காலப் பதிவுகளின் சேகரிப்பு மையமாகத்தான் இருக்கிறது. மனதின் வழியாக மட்டுமே நீங்கள் வாழ்க்கையை எதிர்கொண்டால், பிறகு உங்கள் எதிர்காலத்தையும், கடந்த காலத்தைப் போலவே உருவாக்குவீர்கள். இன்றைய உலகமே இதற்குப் போதுமான சாட்சியாக உள்ளது அல்லவா? விஞ்ஞானம், தொழில் நுட்பம் மற்றும் எத்தனையோ முன்னேற்றம் காரணமாக புதிய வாய்ப்புகள் நம்மை வந்து அடைந்தாலும், நாம் மட்டும் அதே வரலாற்று நிகழ்வுகளைத்தானே மீண்டும், மீண்டும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
மனதின் வழியாக மட்டுமே நீங்கள் வாழ்க்கையை எதிர்கொண்டால், பிறகு உங்கள் எதிர்காலத்தையும், கடந்த காலத்தைப் போலவே உருவாக்குவீர்கள்.

கடந்த காலப்பதிவுகள் உங்கள் மனதில் மட்டுமே இருந்து கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்க்கையையே நீங்கள் உற்றுக் கவனித்தால், ஒரே மாதிரியான விஷயங்களே நிகழ்ந்து கொண்டிருப்பதைக் காண்பீர்கள். ஏனெனில், மனம் என்னும் முப்பட்டகக் கண்ணாடியின் மூலமாக மட்டும் நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், பழைய பதிவுகளின்படிதான் நீங்கள் செயலாற்றுவீர்கள். ஒருவேளை, உங்கள் மனம் செயல்படாமல் அப்படியே நின்றுவிட்டால், உங்கள் கடந்தகாலம் இங்கே இருக்குமா? இல்லை. அப்போது கடந்தகாலம் இருப்பதில்லை, நிகழ்காலம் மட்டுமே இருக்கிறது. நிகழ்காலம்தான் உண்மையானது. ஆனால், கடந்தகாலம் நமது மனங்கள் மூலம் இருந்து கொண்டிருக்கிறது. அல்லது இதை வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால், மனம் என்பது கர்மா. நீங்கள் மனதைக் கடந்தால், மொத்தமாக ஒரே தாவலில் கர்மப்பிணைப்பைக் கடக்கிறீர்கள். ஒவ்வொன்றாக நீங்கள் அவற்றுக்குத் தீர்வு காண விரும்பினால், அதற்கு லட்சம் வருடங்கள் ஆகலாம். மேலும், அந்த செயல்முறையில், புதிய கர்மாக்களையும் நீங்கள் சேர்த்துக்கொள்வீர்கள்.

உங்களுடைய பழைய கர்ம அடுக்கு பெரிய பிரச்சனை இல்லை. புதிய அடுக்கை எப்படி உருவாக்காமலிருப்பது என்பதைத்தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் மிக முக்கியமானது. பழைய அடுக்கு தானாகவே உதிர்ந்துவிடும், அதற்காக பெரிய முயற்சிகள் எதுவும் தேவையில்லை. ஆனால், புதிய அடுக்கை எப்படி உருவாக்காமல் இருப்பது என்பதை நீங்கள் கற்றுக்கொள்வதுதான் அடிப்படையானது. அதன் பிறகு பழைய அடுக்கைக் கைவிடுவது மிகவும் எளிமையானது.

நீங்கள் மனதைக் கடந்தால், கர்மப் பிணைப்பையும் முற்றிலுமாகக் கடக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் அதற்காக எதுவும் செய்ய வேண்டியது இல்லை. ஏனெனில் நீங்கள் கர்மாக்களுடன் விளையாடுவது, இல்லாத ஒன்றுடன் விளையாடுவது போல. அது மனம் விரிக்கும் வலையாக இருக்கிறது. கடந்தகாலம் இப்போது இல்லை. ஆனால், நீங்கள், இல்லாத ஒன்றை, உண்மையில் இருப்பதாக நினைத்து, எதிர்த்து செயல்புரிகிறீர்கள். அது ஒட்டுமொத்த மாயத்தோற்றமாக இருக்கிறது. மனம் இதற்கான அடித்தளமாக இருக்கிறது. இந்த மனதை நீங்கள் கடந்தால், ஒரே தாண்டலில் எல்லாவற்றையும் கடக்கிறீர்கள்.

மனதை எப்படிக் கடப்பது மற்றும் மனதின் வரையறைகளைத் தாண்டி எப்படி வாழ்க்கையை நோக்குவது என்பது எப்போதும் ஆன்மீக அறிவியலின் ஒட்டுமொத்த முயற்சியாக இருந்திருக்கிறது. யோகத்தைப் பலரும் பல வழிகளில் வரையறுத்துள்ளனர். “பிரபஞ்சத்துடன் நீங்கள் ஒன்றாகிவிடுவதுதான் யோகா” என்றும் “நீங்கள் கடவுளை அடைவதுதான் யோகா” என்றும் “உங்களையே நீங்கள் கடந்து செல்வது யோகா” என்றும் கூறுகின்றனர். மேலும் “நீங்கள் உடலியல் விதிகளுக்கு உட்படாத தன்மையிலிருந்தால், அதுதான் யோகா” என்றும் வரையறுக்கின்றனர். இவையனைத்தும் பிரமாதமான, அற்புதமான விளக்கங்கள், இதில் தவறேதும் இல்லை. ஆனால் இந்த விளக்கங்களை உங்கள் அனுபவங்களுடன் பொருத்திப் பார்க்க முடியாது. கிருஷ்ணா கூறினார், “நீங்கள் உங்களது அகங்காரத்தை விட்டொழித்தால், அதுதான் யோகம்”. இது மிகவும் நல்லது. ஆனால் உங்கள் அகங்காரத்தை எப்படி விடுவது? எது நீங்கள், எது யோகம், எது அகங்காரம் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. பிறகு எப்படி அதை விடுவது? வேறு யாரோ கூறியது, “நீங்கள் கடவுளுடன் ஒன்றினால் யோகத்தில் இருக்கிறீர்கள்”. நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது, கடவுள் எங்கிருக்கிறார் என்பதும் தெரியாது, பிறகு எப்படி ஒன்றாவது?

உங்களுடைய பழைய கர்ம அடுக்கு பெரிய பிரச்சனை இல்லை. புதிய அடுக்கை எப்படி உருவாக்காமலிருப்பது என்பதைத்தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் மிக முக்கியமானது.

ஆனால், பதஞ்சலி ஆணி அடித்தாற்போலக் கூறினார்: “மனதின் தன்மைகளிலிருந்து விடுபடும்போதும், மனதை நீங்கள் நிறுத்தும்போதும், மனதின் ஒரு பகுதியாக நீங்கள் இருப்பதை நிறுத்தும்போதும் யோகா நிகழ்கிறது.” உலகின் அத்தனை தாக்கங்களும் அல்லது பாதிப்புகளும் மனம் என்கிற கருவியின் மூலமாகத்தான் உங்களுக்குள் செல்கிறது. முழு விழிப்புணர்வில், மனதின் தாக்கத்தைக் கடந்து உங்களால் உயர முடிந்தால், அப்போது இயல்பாகவே அனைத்துடனும் நீங்கள் ஒன்றிவிடுகிறீர்கள். நீ மற்றும் நான், காலம் மற்றும் இடம் போன்ற பிரிவினைகள், மனம் இருக்கின்ற காரணத்தினால்தான் எழுகின்றன. அது மனம் ஏற்படுத்தும் சிக்கல். நீங்கள் மனதை விட்டுவிட்டால், காலம் மற்றும் இடத்தையும் விட்டுவிடுகிறீர்கள். இது, அது என்ற பேதங்கள் இல்லை. இங்கே, அங்கே என்ற வித்தியாசங்கள் எப்போதும் இல்லை. இப்போது, அப்போது என்பது இல்லை. எல்லாமே இப்போதுதான் இங்கேதான் இருக்கிறது.

மனதின் மாறக்கூடிய தன்மைகள் மற்றும் வெளிப்பாடுகள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, வேறு ஒரு தன்மைக்கு நீங்கள் வந்துவிட்டால், பிறகு உங்கள் விருப்பத்திற்கேற்ப நீங்கள் மனம் என்ற அம்சத்துடன் விளையாடமுடியும். உங்கள் வாழ்வில், மனதின் அளப்பரிய தன்மையை அதன் முழுவீச்சில், நீங்கள் பயன்படுத்தமுடியும். ஆனால், நீங்கள் மனதின் பிடிக்குள் இருந்தால், மனதின் இயல்பை ஒருக்காலும் உணரமாட்டீர்கள்.

ஒரு எளிய உதாரணம். கடந்த இரண்டு லட்சம் வருடங்களாக மனிதன் இந்த பூமியில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு லட்சம் வருடங்களும், பூமி உருண்டையானது என்பதை மனிதன் உணரவில்லை. பூமி தட்டையானது என்றே எண்ணியிருந்தான். சில மனிதர்களுக்கு இருந்த தூரதிருஷ்டியினாலும், அவர்களது கணித அறிவினாலும் பூமி வளைவானதாக இருக்கக்கூடும் என்று நினைத்தனர். ஆனால் இந்த வாதம் முடிவற்ற ஒன்றாகவே இருந்திருக்கக்கூடும். இப்போதும் கூட உங்களது சுவாரஸ்யமற்ற பாடப் புத்தகங்களில் நீங்கள் படித்தவற்றை மறந்துவிடுங்கள். தரைப்பரப்பின் மீது மேலும், கீழும் நடந்து பாருங்கள். இந்த பூமி தட்டையானதா அல்லது உருண்டையானதா? உங்கள் அனுபவத்தில் அது தட்டையானதுதான். இந்தப் புதிருக்கு உண்மையிலேயே எப்போது தீர்வு கிடைத்தது? மனிதன் வானத்தில் பறக்கத் தொடங்கி, சந்திர மண்டலத்திற்குச் சென்று அங்கிருந்து கீழே பார்த்தபோது, பூமி உருண்டையானது என்பது முற்றிலுமாகத் தெளிவாகிவிட்டது. இனி வாதம் செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை.

நாம் பூமியின் மீதே நடந்து கொண்டிருந்தபோது, நம்மால் அதனுடைய வடிவத்தைக்கூட கிரகித்து உணர முடியவில்லை. பூமிக்கு மேலே எழும்பிப் பறந்தபோது மட்டுமே அதன் வடிவத்தைத் தெளிவாகக் காண முடிந்தது. இதேதான் உங்கள் மனம் மற்றும் உங்கள் இருப்பு ஆகிய விஷயங்களில் நடக்கிறது. அவற்றுடன் நீங்கள் தொடர்பில் இருந்தாலும் அவற்றை உங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை. எனவே நீங்கள் உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் நடுவில் சிறிதளவு இடைவெளி உருவாக்கும்போதும், உங்களுக்கும், உங்கள் உடலிற்கும் நடுவில் சிறிதளவு இடைவெளி உருவாக்கும்போதும் மட்டுமே, இந்த உடல் மற்றும் மனதின் இயல்பைப் புரிந்துகொள்கிறீர்கள். அப்போது உடல் மற்றும் மனதின் செயல்பாட்டை நீங்கள் நடத்தவில்லை, நீங்களே அந்த செயல்பாடாக மாறிவிடுகிறீர்கள்.

நீங்கள் உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் நடுவில் சிறிதளவு இடைவெளி உருவாக்கும்போதும், உங்களுக்கும், உங்கள் உடலிற்கும் நடுவில் சிறிதளவு இடைவெளி உருவாக்கும்போதும் மட்டுமே, இந்த உடல் மற்றும் மனதின் இயல்பைப் புரிந்துகொள்கிறீர்கள்.

மனதைப் பயன்படுத்தாமல் எப்படி வாழ்க்கையை அதன் போக்கில் நோக்குவது என்பதை நீங்கள் கற்றுக்கொண்டால், அதுதான் நீங்கள் விளையாடக்கூடிய உச்சபட்ச விளையாட்டு. அந்த செயல்முறையில்தான் உச்சபட்ச தெய்வீகம் உங்களுக்கு கிடைக்கிறது. திரித்துக் காட்டும் இயல்புடைய மனதின் மூலமாக, உங்களால் எதையும் புரிந்துகொள்ள முடியாது.

“புத்தர்” என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நான் “புத்தர்” என்று கூறும்போது, நீங்கள் அந்த கௌதம புத்தரை மட்டுமே நினைக்கிறீர்கள். கௌதமர் ஒருவர் மட்டும் புத்தர் அல்ல, இந்த பூமியில் ஆயிரக்கணக்கான புத்தர்கள் இருந்திருக்கின்றனர், இன்னமும் இருக்கின்றனர். புத்தராக மலர்வது என்றால் என்ன? “பு” என்றால் “புத்தி”, நுண்ணறிவு. அந்த அறிவின் எல்லைக்கும் அப்பால் உயர்ந்து இருப்பவர், ஒரு புத்தராகிறார். தனது காரண அறிவிலேயே நிலைத்திருக்கும் ஒரு மனிதன், முடிவற்ற துன்பத்தில் இருக்கிறான். வாழ்வின் நிகழ்வு எதுவாக இருந்தாலும், அவன் காரண அறிவில் இருக்கும் வரை அவனுடைய வருத்தங்கள், பயங்கள், முட்டாள்தனங்கள் மற்றும் அவனது குழப்பங்கள் எதுவுமே அவனை விட்டு விலகாது.

இதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் எவ்வளவுதான் வளமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும், மனம் எப்போதும் போராட்டத்தில்தான் இருக்கிறது. எல்லாமே மிகச் சரியாக இருப்பதாக நினைக்கிறீர்கள். ஆனால் சற்றே திரும்பிப் பார்த்தால், உங்களது வருத்தங்களும், பயங்களும், உங்களுக்குப் பின்னால் வால் போல் ஒட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடியும். நீங்கள் எங்கு சென்றாலும் அது உங்களைப் பின் தொடர்கிறது. அழகானதொரு சூரியோதயம் பார்த்து மெய்மறந்து நிற்கிறீர்கள். அடுத்த கணம் திரும்பிப் பார்த்தால், உங்கள் கவலைகளும், குழப்பங்களும் பின்தொடர்ந்து நிற்கிறது. நீங்கள் மனதிற்கும் கீழே இருந்திருந்தால், இந்தவிதமான துன்பத்தை அறியமாட்டீர்கள்.

மனதின் அந்த சித்ரவதைகளைத் தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தினால், மக்கள் சமூகத்தில் பல வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். மிதமிஞ்சி சாப்பிடுவது, மது உட்கொள்வது, உடல்சார்ந்த இன்பங்களில் அதீதமாக ஈடுபடுவது போன்றவை மனதிற்குக் கீழே செல்வதற்கான சில உபாயங்களாக இருக்கின்றன. மக்கள் அதில் மூழ்கியிருப்பதன் மூலம் மனதின் சித்ரவதையை சில கணங்களுக்கு மறக்கிறார்கள், மது குடித்துவிட்டு படுத்துவிடுகிறார்கள். சில மணி நேரங்களுக்கு உங்கள் மனம் உங்களுக்கு தொல்லை கொடுப்பதில்லை. ஏனெனில் நீங்கள் மனதிற்கும் கீழான நிலைக்குச் சென்றுவிட்டீர்கள். நீங்கள் மனதிற்கும் கீழான நிலைக்குப் போகும்போது, அது இன்பமாக இருக்கிறது, மேலும் தளர்வைத் தருகிறது. அந்த நிலையில் சட்டென்று மனதின் சித்ரவதை மறைந்துபோகிறது. ஆகவே, அந்தப் பழக்கத்திற்கு ஆழமாக அடிமைப்பட்டுவிடுகிறீர்கள். ஆனால் மனதின் சித்ரவதைகளிலிருந்து தப்பிச்செல்வது என்பது முடியாது. ஒரு இரசாயனம் அல்லது வேறு எந்த ஒரு விஷயத்தின் உதவியுடன் நீங்கள் மனதிற்குக் கீழே சென்றாலும், அதன் தாக்கம் தீர்ந்தவுடன், உங்கள் வாழ்வின் இயல்புத்தன்மை, முன்னிலும் தீவிரமாக உங்களைத் தாக்குகிறது. துன்பம் பல மடங்காகிறது.

மனதின் மாறக்கூடிய தன்மைகள் மற்றும் வெளிப்பாடுகள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, வேறு ஒரு தன்மைக்கு நீங்கள் வந்துவிட்டால், பிறகு உங்கள் விருப்பத்திற்கேற்ப நீங்கள் மனம் என்ற அம்சத்துடன் விளையாடமுடியும். உங்கள் வாழ்வில், மனதின் அளப்பரிய தன்மையை அதன் முழுவீச்சில், நீங்கள் பயன்படுத்தமுடியும்.

பரிணாம வளர்ச்சியின் இயல்பு எப்படி இருக்கிறது என்றால், மனம் என்ற அம்சத்திற்குக் கீழ் நிலையில் இருந்த இந்த உயிர், இப்போது, மனதை உள்ளடக்கி பரிணமித்துள்ளது. அந்த உயிர் விடுதலை அடைய வேண்டுமென்றால், மனதிற்கும் மேலாக உயரவேண்டும். “மனதிற்கும் மேலே” என்றால் உங்கள் மனதிற்கு வெளியே நீங்கள் இருப்பது என்பது பொருள். எப்போதாவது சில கணங்களுக்கு, உங்களது தியானத்தின்போது, இதை நீங்கள் கவனித்திருக்கலாம். நீங்கள் இங்கே அமர்ந்திருக்க, உங்கள் மனம் எங்கோ தொலைவில் நிகழ்வதுபோலத் தோன்றும். இந்த இடைவெளி வந்துவிட்டால், அதற்குப் பிறகு மனம் கூறுவது எதுவும் ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை. அது அப்படி என்ன புதிதாகக் கூறிவிட முடியும்? இலட்சக்கணக்கான வழிகளில் அது சேகரித்து வைத்திருப்பவற்றை, வெறுமனே மறு சுழற்சி செய்தவாறு உள்ளது.

உங்களுக்குள் இந்த இடைவெளி உருவாகிவிட்டால், மனதை உபயோகிக்கும் உங்களது திறன் அதிசயிக்கத்தக்க விதத்தில் மேம்படுகிறது. ஆகவே, யாராவது உங்களை “நீங்கள் மனம் என்பதே இல்லாதவர்” என்று கூறினால் அதை அவமதிப்பாக உணராதீர்கள். அதுதான் அதிகபட்ச பாராட்டு. நீங்கள் ஒரு புத்தர் என்று அவர்கள் கூறுகின்றனர். “மனமற்ற நிலை” என்பதை மக்கள் பொதுவாக பைத்தியக்காரத்தனம் என்றே புரிந்துகொள்கின்றனர். பைத்தியக்காரத்தனம் மனதிற்கு உரியது. நீங்கள் மனதின் பிடிக்குள் இருக்கும்வரை, பைத்தியக்காரத்தனத்திலிருந்து நீங்கள் தப்பமுடியாது. சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் அளவுக்கான பைத்தியக்காரத்தனத்திற்குள் நீங்கள் இருக்கலாம் அல்லது அதையும் தாண்டி இருக்கலாம். ஆனால் ஏதோ சிறிதளவு பைத்தியக்காரத்தனம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கிறது. நீங்கள் மனதை விட்டுவிலகி இருந்தால், பைத்தியமாக இருக்க முடியுமா? உங்களது மனதின் வித்தை(சர்க்கஸ்)யிலிருந்து நீங்கள் விலகி இருந்தால் மட்டுமே, நூறு சதவிகிதம் பைத்தியக்காரத்தனத்திலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.