ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் தங்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில், ஈஷா யோகா மையத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் அனைவருக்கும் உப-யோகா கற்றுத்தருகின்ற  நிகழ்ச்சி குறித்த சில சுவாரஸ்ய பதிவுகள் உங்களுக்காக!

‘விடுமுறை’ என்றால் யாருக்குத்தான் சந்தோஷம் இருக்காது?! அதிலும் கோடை விடுமுறை வரும்போது மாணவர்களுக்கு இறக்கை கூட முளைத்து விடும்! ஆனால், எத்தனை மாணவர்கள் விடுமுறையை உபயோகமாக பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால் அது வெகு சொற்பமாகவே நிகழ்ந்திருக்கும். அந்த வகையில் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் இந்த கோடை விடுமுறையை தங்களுக்கும் பொது மக்களுக்கும் உபயோகமான விதத்தில் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை நிச்சயமாகச் சொல்லலாம்!

ஆம், கடந்த ஏப்ரல் 25 முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கும் 9 ஈஷா வித்யா பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சுமார் 96 பேர், ஈஷா யோகா மையத்திற்கு வருகை தரும்  பார்வையாளர்கள் மற்றும்  பொதுமக்கள் அனைவருக்கும் உப-யோகா பயிற்சியினை கற்றுத் தருகின்றனர்.

உபயோகா என்பது மிக எளிமையான 10 பயிற்சிகள் கொண்ட ஒருங்கிணைந்த பயிற்சி. இதைச் செய்வதன் மூலம் உங்கள் மூட்டுக்கள், தசைகள், சக்திநிலை ஆகியவை இயக்கப்படுகிறது.

உபயோகா என்பது மிக எளிமையான 10 பயிற்சிகள் கொண்ட ஒருங்கிணைந்த பயிற்சி. இதைச் செய்வதன் மூலம் உங்கள் மூட்டுக்கள், தசைகள், சக்திநிலை ஆகியவை இயக்கப்படுகிறது.
விளையாட்டுப் பிள்ளைகள் எப்படி இத்தகைய நுட்பமான பொறுப்பான செயலில் ஈடுபடுகிறார்கள் என்பது பலருக்கும் ஆச்சரியமாகத் தோன்றலாம்! அவர்கள் தங்கள் விளையாட்டு தினத்தை விட்டுவிட்டு சீரியஸ் முகத்துடன் இச்செயலை செய்வதில்லை! இந்த அற்புத செயலை தங்கள் வழக்கமான குறும்புத்தனத்துடனேயே முன்னெடுக்கின்றனர். தங்களுக்குள் நட்பாக கூடிப்பேசி மகிழ்ந்து, நகைச்சுவை துணுக்குகளை சொல்லி களித்து இருந்தாலும், தாங்கள் மேற்கொண்டுள்ள செயலில் பொறுப்புடனும் ஈடுபாட்டுடனும் இருப்பதைப் பார்க்கமுடிகிறது!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காலை 6 மணிக்கு குரு பூஜையுடன் தங்கள் நாளைத் துவங்கும் மாணவர்கள், தங்கள் காலை யோகப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு, அதன்பின் கோயில்களில் சில மணித்துளிகள் தியானித்துவிட்டு, பின்பு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சில குழுக்களாக பிரிந்து யோகா வகுப்பை வழங்குகின்றனர். ஒரு குழுவினர் பார்வையாளர்களை வரவேற்று, அவர்களுக்கு உபயோகா பற்றிய விளக்கங்களைக் கூறி, இலவச யோகா வகுப்பிற்கு விருப்பமுள்ளவர்களை பதிவுசெய்கின்றனர். இன்னொரு குழுவினர் உபயோகா வகுப்பினை தங்கு தடையில்லாமல் மிக நேர்த்தியாக சத்குருவின் வீடியோ பதிவுகளின் துணைகொண்டு மக்களுக்கு வழங்குகின்றனர்.

அரை மணிநேர இடைவெளியில் தொடர்ந்து அடுத்தடுத்த வகுப்புகள் மாலை 4 மணி வரை நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இப்போது ஈஷாவில் தென்மேற்குப் பருவமழை சிறப்பாகப் பெய்து கொண்டிருக்கிறது; சில நேரங்களில் வெயிலின் தாக்கமும் அதிகம் இருக்கிறது! ஆனால், வெயிலோ மழையோ மாணவர்கள் சளைக்காமல் வருகை தரும் பொது மக்களை கனிவுடன் அணுகி, உபயோகா வகுப்புகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

மாணவர்கள் இந்த நேரங்கள் தவிர்த்து, மற்ற நேரங்களில் ஆசிரம சூழலை அனுபவித்து மகிழ்கின்றனர். ஆதியோகி திருமுகம் வரை நடந்துசென்று, அங்கு தியானிப்பது, மாட்டு மனையில் உள்ள நாட்டு ரக மாடுகளைப் பார்த்து, பழகி மகிழ்வது, 'கல்யாணி' நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்வது, சூரிய குண்டம் செல்வது என மாணவர்கள் தினசரி பரபரப்பான கால அட்டவணையை பெற்று மகிழ்ந்திருக்கின்றனர்.

இந்த ஒருமாத காலம் வழங்கும் அனுபவத்தின் மூலம் மாணவர்கள் பலவிதங்களில் மேம்பாடு அடைகின்றனர். கூச்ச சுபாவமுள்ள மாணவர்கள் பலர், பொதுமக்களுடன் சகஜமாக பழகும் வாய்ப்பை பெறுவதால் தங்கள் தயக்கத்தை விட்டொழிக்க முடிகிறது. மேலும், பலவித மனிதர்களை இவர்கள் தினமும் சந்திப்பதால் மக்களின் மன நிலையை அறிவதோடு, பிறரை எப்படி அணுகுவது என்பது போன்ற பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.

இதற்காக பெரும் சிரத்தை எடுத்து எந்த பயிற்சியையும் அவர்கள் பெறவில்லை! ஒரு எளிமையான குறிப்புகளைப் பின்பற்றி அதனை முன்கூட்டியே சில ஒத்திகைகள் பார்த்து, இவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, இந்த உபயோகா வகுப்புகளை மக்களின் நல்வாழ்விற்காக வழங்குவதில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் தன்னார்வத்துடன் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

பள்ளியில் பாடம் நடத்தும்போது வாயைக் கூட திறக்காத கூச்ச சுபாவம் உள்ள சில மாணவிகள் இங்கே பொதுமக்களுடன் தயக்கமின்றி பேசி விளக்கமளிக்கும் காட்சியை ஆச்சரியத்துடன் அவர்களின் பள்ளி ஆசிரியர்கள் நம்முடன் பகிர்கின்றனர். அதேபோல் பள்ளி மாணவர்களுக்கும் நம்முடன் பகிர்வதற்கு அனுபவங்கள் நிறைய காத்திருக்கின்றன… வாருங்கள் கேட்போம்!

எங்களைவிட மூத்தவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது புது அனுபவமா இருக்கு. வித்தியாசமா இருக்கு. இந்த வாய்ப்பு கொடுத்த ஈஷாவிற்கு ரொம்ப நன்றி. எல்லா மக்களுக்கும் ஒரு துளி ஆன்மீகமாவது போய் சேரவேண்டும் என்பது சத்குருவுடைய விருப்பம். அதற்காக நாங்களும் வேலை செய்கிறோம். - சாதனா, கோயம்புத்தூர்  ஈஷா  வித்யா

இங்கே நிறைய விதமான மக்கள் வர்றாங்க. நாம பள்ளியில படிச்சிட்டு இருக்கும்போதே இவ்வளவு பேருக்கு யோகா மூலமா உதவி பண்றோம்னு நினைச்சு எனக்கு சந்தோஷமா இருக்குது. இங்க நம்ம சுத்தி இருக்குற சூழ்நிலைகள் எனக்கு அமைதியை தருது. இதுமாதிரியே அடுத்த வருஷமும் நான் இங்க வரணும்ன்னு  ரொம்ப ஆசப்படுறேன். நாங்க ஒரு தைரியமான சமுதாயமா உருவாவதற்கும், தயக்கம் இல்லாம மக்கள்கிட்ட பேசுறதுக்கும், இந்த வாய்ப்பு கிடைச்சதா நான் நினைக்குறேன். - ஸ்ரீமதி, ஈஷா வித்யா மாணவி

ஜுன் 21 உலக யோகா தினத்தைமுன்னிட்டு நாங்க உப-யோகா பயிற்சிய இலவசமா சொல்லித் தர்றோம். இதனால எல்லாருக்கும் ஒரு துளி யோகா போய் சேரும். இது நான் சொல்லல, சத்குரு சொல்லியிருக்காரு. 5 நிமிட யோகாவா இருக்கறதுனால யார் வேண்ணாலும் எளிமையா பண்ணலாம். இதனால அவங்களோட லைஃப் ஸ்டைலுக்கு எந்த பாதிப்பும் வராது. உப-யோகா பண்ண பண்ண அவங்களோட உடல் தளர்வாகும், மனம் புத்துணர்வாகும். தினமும்  5 நிமிடம் ஒதுக்கி செய்தால் உப-யோகா நமக்கு சரியான வழிகாட்டும். - யஷ்வந்த், ஈஷா வித்யா மாணவன்

பலவிதமான மக்களை நாங்க சந்திக்கும்போது  அவங்களுக்கு நாங்களும் நெறைய கத்து தர்றோம்.அதேமாதிரி அவங்கக்கிட்ட இருந்து நாங்களும் நிறைய கத்துக்குறோம். உப-யோகா பயிற்சி செய்றது மூலமா நமக்கு நாட்பட்ட நோய் எதாவது இருந்தா நீங்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு, அதுமட்டுமில்லாம மனஅழுத்தமும் குறையுது. குறைவான நேரத்துலயே இந்தப் பயிற்சிய கத்துக்க முடியும். - கனிஷ்கா, ஈஷா வித்யா மாணவி

மாணவர்கள் உப-யோகா கத்துக்கறதுனாலயும், அவங்க மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுக்கறதுனாலயும் மாணவர்கள்கிட்ட பெரிய மாற்றம் ஏற்படுறத பார்க்க முடியுது! ஈஷாவுல தன்னார்வத் தொண்டு செஞ்சிட்டு பள்ளிக்கு வந்தபிறகு அந்த குழந்தைகளோட நடவடிக்கைகள், பேசும்விதம் எல்லாமே முழுமையா மாறிடுது!

குழந்தைகள் ஒரு தயக்கம் இல்லாம, தெளிவா  மக்கள் கேக்குற கேள்விக்கு பதில் சொல்றத பார்க்கமுடியுது. அதுமட்டுமில்லாம இங்க மற்ற பள்ளி மாணவர்கள்கூட பழகி நட்பாகுறதுக்கும் வாய்ப்பு கிடைக்குது. நன்றி, நமஸ்காரம்.  - ஈஷா வித்யா பள்ளி ஆசிரியர் மனோஜ்

நான் ஈஷா யோக மையத்தை பார்ப்பதற்காக வந்தேன். இங்கே வந்த இடத்தில் எனக்கு இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. எனக்கு உப-யோகா பயிற்சியை மாணவர்கள் கற்றுக்கொடுத்தார்கள். இந்த குழந்தைகள் மிகவும் பாக்கியசாலிகள்.சிறிய வயது முதலே இதையெல்லாம் கற்றுக்கொண்டு, மற்றவர்களுக்கும் அதை உபயோகமாக கற்றுக்கொடுக்கிறார்கள். -பங்கேற்பாளர்