SOUL சூப்

மனதில் ஏற்படும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் எப்படி உடலில் ஒரு இரசாயனமாற்றம் ஏற்படுகிறது, அது எப்படி நோயாக பிரதிபலிக்கிறது என்பதைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நமக்கு விளக்குகிறார் சத்குரு...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: நமஸ்காரம் சத்குரு, பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் மனம்தான் என்று ஒரு சத்சங்கத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியிருக்கும் பட்சத்தில், இதன் பின்னணியில் இருக்கும் உணர்ச்சி மற்றும் எண்ண முறைகள் எவ்வாறு இருக்கும்?

சத்குரு:

உங்களது வலது கை தற்போது வேடிக்கையாக நடந்துகொள்ள ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்வோம் - அது உங்களை அடிக்கிறது, கண்ணில் குத்துகிறது, சுற்றிலும் குதித்துத் திரிந்துகொண்டு இருக்கிறது. இப்படி நடந்தால், இதை ஒரு நோய் என்று நீங்கள் சொல்வீர்களா? கண்டிப்பாக நோய் என்றுதான் சொல்வீர்கள். இதே போலத்தான் உங்கள் மனமும் செயல்படுகிறது. அது எழுந்து சுற்றிலும் குதித்துத் திரிகிறது, உங்களை காயப்படுத்துகிறது, குத்துகிறது, அழ வைக்கிறது, துன்புறுத்துகிறது. பெரும்பாலான மனிதர்களுக்கு இந்த நோய் உள்ளது - இவர்களை வைத்து ஒரு நோயாளிகள் படையையே உருவாக்கமுடியும்.

மனதிலிருக்கும் இந்த நோயானது, பலவிதமாக உடலிலும் பிரதிபலிக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மனதில் நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு அதிர்வும் உங்கள் முழு கட்டமைப்பிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவை எல்லாவற்றையும் அளவிடவும் செய்திருக்கிறார்கள். ஒரு புலியைப் பற்றி நினைக்கும்போது, நீங்கள் ஒருவிதமான இரசாயனத்தை உருவாக்குகிறீர்கள். இதே ஒரு மலரைப் பற்றி எண்ணும்போது வேறுவிதமான இரசாயனத்தை உருவாக்குகிறீர்கள். நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு எண்ணத்திற்கும், உங்களின் இரசாயன அமைப்பு மாறுகிறது. நீங்கள் ஒரு இரசாயன 'சூப்'பாக இருக்கிறீர்கள், அதை எப்படி கிளறுகிறீர்களோ அப்படித்தான் நீங்கள் உருவாகிறீர்கள். ஆனால் உங்கள் மனம் உங்களுக்கு எதிராக திரும்பிவிட்டால், எந்த மாதிரியான சூப்'பை நீங்கள் தயாரிக்கிறீர்கள் என்று தெரியுமா? ஒரு கேவலமான சூப்'பைத்தான். கேவலமானது மட்டுமல்ல, அது விஷமும்கூட. இந்த விஷ சூப்'பில் நீங்கள் ஊறியிருந்தால், நல்வாழ்வு உங்களுக்கு நிகழாது. இன்றைய உலகில், நாம் என்ன உணவு உட்கொள்வது, எதைக் குடிப்பது, எதை சுவாசிப்பது என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை - இவை அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் விஷமாகியுள்ளது. ஆனால் நீங்களே இதற்கு உதவும்விதமாக இருந்தால், எவ்வளவு கடினமாக முயற்சிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து முழுவதும் விஷமாகிவிடுவீர்கள்.

பண்டைய சமுதாயமானது, எப்போதும் நோயை தீமையாகவே பார்த்தது. ஒரு மனிதன் எவ்வித நோய்நிலையிலும் இருக்கக்கூடாது என்பதைப் பற்றி அவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தனர். ஆனால் இன்று நவீன சமுதாயமோ, நோய்களை சாதாரணமாகக் கருதத் துவங்கிவிட்டது. ஏனென்றால் உங்களை நம்பி ஒரு தொழிலே இருக்கிறது. உலகத்தின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாக மருந்துகள் விற்பனை இருப்பதற்குக் காரணம், நீங்கள் உங்களுக்குள் மிக மோசமான சூப்'பாக இருக்கிறீர்கள். நீங்கள் விரும்பினால், உங்களை ஒரு அற்புதமான சூப்'பாக மாற்றமுடியும். அதன் இரசாயனம் அற்புதமாக, ஆனந்தம் என்பது இயற்கையான நிகழ்வாக இருக்கும். நீங்கள் இப்படி இருந்தால், பூமியில் 70% நோய்கள் காணாமல் போய்விடும். மீதமுள்ள 30 சதவிகிதத்தில், வெளிசூழ்நிலைகளின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அது நம் கைகளில் இல்லை. உங்கள் அருகில் அமரப்போவது பறவையா, பன்றியா அல்லது பசுவா என்று உங்களுக்குத் தெரியாது. அதாவது, உங்களுக்கு வரப்போவது பறவைக்காய்ச்சலா, பன்றிக்காய்ச்சலா அல்லது விசர்மாட்டு நோயா என்பது உங்களுக்கே தெரியாது. ஓரளவிற்கு இவை வராமல் நீங்கள் பார்த்துக்கொள்ள முடியுமே தவிர, இவற்றை உங்களால் முழுவதுமாக தவிர்க்க இயலாது. ஆனால் நீங்கள் 100% விருப்பத்தோடு இருந்தால், உங்களுக்கு நீங்களே செய்துகொள்வதை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள முடியும்.

உங்களுக்குள் ஒரு மோசமான இரசாயனத்தை நீங்கள் தொடர்ந்து உருவாக்கினால், நீங்கள் நல்வாழ்வை நாடுகிறீர்கள் என்பதை உங்களுக்குள் இருக்கும் உயிர் எப்படி உணர்ந்துகொள்ளும்? "இவருக்கு நோய்கள்தாம் பிடித்திருக்கிறது" என்று உங்கள் உயிர் எண்ணி, அதையே உங்களுக்கும் கொடுக்கிறது. சிலர் அவர்களுடைய உடல்வாகு காரணமாக, அதிகம் அடிவாங்கும் அளவு திடகார்த்தமாக இருக்கிறார்கள். மற்றவர்களோ, அவர்கள் சமைக்கும் படுமோசமான சூப்'பை முதல் முறை ருசித்தவுடன் சரிந்துவிடுகிறார்கள்.

யாராவது, "எனக்கு உடல்நிலை சரியில்லை" என்று சொன்னால், "கவலைப்படாதீர்கள், எல்லாம் சரியாகிவிடும்" என்றெல்லாம் இனிமையாக அவர்களிடம் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நான் அப்படியில்லை. நான் ஆறுதல் இல்லை, நான் ஒரு தீர்வு. உள்ளிருந்து உங்களை நீங்கள் விஷமாக்கிக் கொண்டிருந்தால், எப்படி நன்றாக வாழமுடியும்? வாழ்க்கை அப்படி நடப்பதில்லை. நீங்கள் சரியான செயல்கள் செய்தாலொழிய, சரியான விஷயங்கள் உங்களுக்கு நிகழாது.

படைப்பின் மிக புனிதமான அம்சமே உங்கள் உடலெனும் இரசாயன சூப்'பில் வீற்றிருக்கிறது. சூப்'பில் காய்கறிகள் மிதந்தால், காய்கறி சூப் என்று சொல்கிறோம். அதேபோல், உங்களை நீங்கள் ஒரு அற்புதமான உயிர் சூப்'பாக மாற்றிடுங்கள்!

Love & Grace