தங்களுக்குள் ஒரு நிச்சலனத்தையும், தீவிரத்தின் உச்சத்தையும் எட்ட 670 சம்யமா சாதகர்கள் விழைந்துகொண்டிருக்க, அவர்களின் தீவிரத்தை தனக்கே உரிய பாணியில் விவரிக்கிறார் சத்குரு. இந்த வார சத்குரு ஸ்பாட் - சம்யமாவின் ஊடாக... சத்குருவின் வார்த்தைகளில்...

மஹாசிவராத்திரியின் கோலாகலக் கொண்டாட்டத்தில் இருந்து, இதோ, சம்யமாவின் அசைவற்ற அமைதிக்கு நகர்ந்துவிட்டோம். உச்சபட்ச செயலிற்கும், அசைவில்லா நிச்சலனத்திற்கும் ஆதாரம் சிவன். சென்ற மாத அதிதீவிர செயல் வேகத்தில் இருந்து தற்போது சம்யமாவின் அசைவற்ற அமைதிக்கு வந்துவிட்டோம்.

உங்கள் உயிர் முழு தீவிரத்தில் துடிக்கும்போது, நீங்கள் அசைவற்று இருக்க விரும்புகிறீர்கள்! இந்த உயிர் ஓரளவிற்கேனும் அசைவற்ற நிலையை உணர வேண்டுமெனில், ஒருவர், மனதின் எண்ணங்களில் இருந்து முற்றிலுமாய் விலகியிருக்க வேண்டும். உடல் சம்பந்தப்பட்ட செயல்கள், அசைவுகளை எளிதில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திடலாம், ஆனால் மனதின் எண்ண ஓட்டங்கள் தான் மிக பரபரப்பாய் செயல்படுகிறது. உடலிற்கும் மனதிற்கும் இருக்கும் ஒரு வித்தியாசம், உடல் முழுமையாய் அசைவற்றுப் போனாலும், அது அங்கு இருக்கும். ஆனால் மனம் முழுமையாய் அசைவற்றுப் போய்விட்டால், மனம் அங்கு தொடர்ந்து நீடிக்காது. அதனால் உங்கள் மனம், நீங்கள் முழுமையாய் அசைவற்றுப் போவதை விரும்பாது, அப்படி நடப்பதற்கும் விடாது. தன்னால் முடிந்தவற்றை எல்லாம் செய்து உங்களைத் தடுப்பதற்கு அது வழி செய்யும். அதனால் நீங்கள் உங்கள் மனதில் இருந்து விலகி இருப்பது மிக அவசியம்.

இப்படி மனதை அசைவற்று இருக்கச் செய்ய நாம் வழங்கும் இந்த சாதாரண வழிமுறைகள் இன்றைய காலகட்டத்திற்குப் பொருந்துவதில்லை. ஏனெனில் இதைப் பற்றிப் பேசினாலே, இது மக்களை ஏமாற்றும் யுக்தியாக பாவிக்கப்படுகிறது. ஆன்மீக இடங்களுக்குச் சென்றால், அங்கே உங்களுக்கு வழங்கப்படும் முதல் குறிப்பு, 'சரணடையுங்கள்' என்பது தான். அப்படியென்றால், இனி நீங்கள் எந்த முடிவும் எடுக்கமாட்டீர்கள். முடிவுகளை எடுப்பதற்கு மனதின் பங்கு தேவைப்படும். எப்போது நீங்கள் முடிவுகளே எடுப்பதில்லையோ, அப்போது மனம் பெரும்பாலும் அசைவற்றுப் போய்விடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

'சரணடைவது' என்பது உங்களால் முடியாது என்றாலோ, அல்லது அது உங்களுக்குப் புரியவில்லை என்றாலோ, அடிபணிவதைப் பின்பற்றலாம். என்ன சொல்லப்படுகிறதோ, கேள்வி கேட்காமல், அதைச் செய்வது. 'உட்கார்' என்றால் உட்காருவது, 'நில்' என்றால் நிற்பது, 'பேசு' என்றால் பேசுவது, 'வாயை மூடு' என்றால் வாயை மூடுவது. ஆனால் இன்றைய உலகில் இது முற்றிலும் "தவறானது". இதுபோன்ற அடிமைப்படுத்தும் இடத்திற்குச் சென்று சேர்வது மாபெரும் தவறு. என்றாலும் இவை உங்கள் நல்வாழ்விற்காக செய்யப்படும் போது, இதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அதனால் உங்களுக்கு 'சரணடைவது' புரியவில்லை எனில், குறைந்தபட்சமாய் அடிபணியுங்கள். இந்தப் படியை எடுக்காமல், மனதை அசைவற்றுச் செய்ய நினைப்பது, கையில் பாதரசத்தை பிடிக்க முயல்வது போல. ஒரு துளி பாதரசத்தை நீங்கள் பிடிக்க முயன்றால், அது நூறாய் தெறித்து ஓடும். சரணடைதல் அல்லது அடிபணிதல் மூலம் நீங்கள் உங்கள் மனத்தில் இருந்து சற்றே விலகி இருக்கமுடியும். மனதில் இருந்து சற்று விலகி இருக்கும்போது, அசைவற்ற தன்மையை நீங்கள் இயல்பாகவே உணர்வீர்கள், ஏனெனில் இப்பிரபஞ்சமும் பெரும்பான்மையாக அசைவற்றே இருக்கிறது. பொருள்நிலையில் மட்டுமே அசைவுகள் உள்ளன, பரந்துவிரிந்த விண்வெளி அசைவற்றே இருக்கிறது, முழுமையான நிச்சலனத்தில். நிச்சலனம் தான் தீவிரத்தின் உச்சம். உங்களுக்குள் நிச்சலனத்தின் சிறு பகுதியை நீங்கள் உணர்ந்தாலும், திடீரென உங்கள் உடல், மனம், ஏன் அனைத்தும் ஒரு புதுவித தீவிரத்தில் உயிர்த்தெழும். அந்நிலையில் வாழ்க்கை, முற்றிலும் வேறு நிலையில் நிகழும்.

ஒருவர் அசைவற்று இருக்கவேண்டும் என்றால், அவர் மனதிற்கான முக்கியத்துவம் மேன்மேலும் குறைய வேண்டும். இதை சொல்வதற்குக் காரணம், இந்தப் பிரபஞ்சமே உயிர்ப்போடு செயல்படும் ஒரு மனம் என்ற புரிதல் இருப்பதால் தான். இப்படியொரு மாபெரும் மனம் செயல்பட்டுக் கொண்டிருக்க, உங்கள் மிகச்சிறிய, அற்ப மனதை ஒரு ஓரமாய் ஒதுக்கிவைப்பதே சிறந்தது. இப்பிரபஞ்சத்தின் மனதை உங்களால் உணர முடியவில்லை எனில், குறைந்தபட்சமாய் உங்களையும் மீறிய வேறொருவரின் மனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையாவது பாருங்கள். ம்ஹூம்... கூடாது! அதுவும் இன்றைய உலகில் அதெல்லாம் கூடவே கூடாது. அது அடிமைத்தனமாகக் கருதப்படும்.

இன்றைய ஆன்மீக செயல்முறைகள் எல்லாம் நொடித்துப்போய் இருக்கின்றன; எதை செய்வதற்கும் தடை இருக்கிறது, ஆனால் மக்களை மட்டும் ஞானோதய நிலைக்கு கூட்டிச் செல்லவேண்டும்! 'இது கூடாது, அது முடியாது' என்று காரின் 'டயர்'களை கழற்றிவிட்டு, காரை மட்டும் வெகுதூரம் ஓட்டிச் செல்லவேண்டும் என்கிறார்கள்!

ஆன்மீக குருமார்கள் மேன்மேலும் எளிதான வழிகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இன்று மதியம், உணவை காது வழியாக உண்ணலாம் என்று நீங்கள் முடிவு செய்தால், நாங்கள், 'உங்கள் மூக்கின் துவாரங்கள் வழியாக உண்ண முயற்சி செய்யுங்களேன்' என்கிறோம். இவ்வழியில் குறைந்தபட்சமாய் உணவு உங்கள் தொண்டைக்குழியிலாவது இறங்குமே. ஏன், நாசித் துவாரங்கள் வழியாக நீங்கள் 'சூப்' குடிக்கக்கூட முயற்சிக்கலாம். இந்த வழியில் உணவு உண்பதைவிட சூப் குடிப்பது சுலபமாக இருந்தாலும், இதுவும் உங்களுக்குக் கடினமாகவே இருக்கும். ஆனால், இதுவே வாயைத் திறந்து உணவை உட்கொண்டால், உண்பதே ஆனந்தமாக இருக்கும்.

ஆன்மீக செயல்முறைகளும் இதுபோலத்தான். இப்போது எதைக் கொடுத்தாலும், 'இது வேண்டாம், அது முடியாது, ஆனால் எனக்கு ஒரு ஆன்மீக செயல்முறையைக் கற்றுக் கொடுங்கள்' என்கிறீர்கள். அதனால் நாங்கள், உங்கள் காது, கண், மூக்கு வழியாக முயற்சி செய்கிறோம். இது மிகவும் கடினம் தான், ஆனால் என்ன செய்ய? இப்படி உணவை உங்கள் நாசிகளுக்குள் நாங்கள் திணித்துக் கொண்டே இருந்தால், ஒரு நாள் நீங்கள் உங்கள் வாயைத் திறந்திடுவீர்கள். இது யாரோ சொல்லிக் கொடுப்பதால் அல்ல, சுய அறிவால் நீங்களே செய்திடுவீர்கள். நீங்கள் வாயைத் திறக்கப்போகும் அந்த நாளிற்காக நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு குருவின் நிலை இப்படி இருக்கிறது!

சம்யமா என்பது, 'நான் உடல் அல்ல, மனம் அல்ல, இவ்வுலகும் அல்ல' என்பதை நீங்களே முழுமையாய் உணர்ந்திடும் நிலை. இம்மூன்றில் இருந்து நீங்கள் விடுபட்டால், உங்களுக்கு துன்பமும், துயரமும் கிடையாது. சம்யமாவின் நோக்கமும் இது தான். உடல், மன பிணைப்பிலிருந்து, அக்குழப்பங்களில் இருந்து உங்களை விடுவித்து, உங்களுக்குள் இருக்கும் அசைவற்ற நிலையை நீங்கள் உணரச் செய்வது தான். உலகெங்கிலும் இருந்து இந்நிலையை உணர்வதற்கு தீவிரமான 670 சாதகர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். எல்லோருமே மிக நன்றாகவே சம்யமாவில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆரம்ப நாட்களில் உடலளவில் சிலருக்கு சிரமம் ஏற்பட்டாலும், இப்போது மிக அழகாக அசைவற்ற நிலைக்கு அவர்கள் நகர்ந்திருக்கிறார்கள்.

சம்யமாவின் அசைவற்ற நிலையை நீங்கள் அறிவீர்களாக.

Love & Grace