வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணத்தை வைத்துள்ள பலருக்கும் எது உண்மையான வெற்றி என்பது புரிவதேயில்லை! விதி, கடவுள் அருள், முயற்சி, அதிர்ஷ்டம் இவற்றுள், வாழ்க்கையில் வெற்றிபெற எது அவசியம் என்பதை எடுத்துக்கூறும் சத்குரு, உண்மையான வெற்றி எது என்பதையும் உணர்த்துகிறார்!

Question: வாழ்வில் வெற்றி பெற எது நிச்சயம் தேவை - விதியா, கடவுள் அருளா, முயற்சியா, அதிர்ஷ்டமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

விதியா, கடவுள் அருளா, முயற்சியா, அதிர்ஷ்டமா... எல்லாமே தேவைப்படலாம், ஆனால் எந்த சதவிகிதத்தில் என்பதைத் தான் பார்க்க வேண்டும். விதி என்றாலே, அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதது. அதிர்ஷ்டம் என்றாலும்... அதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. கடவுள் அருளும் உங்கள் கையில் இல்லை. அதனால் உங்கள் கையில் உள்ளது உங்கள் முயற்சி மட்டும்தான். உங்கள் நூறு சதவிகிதத்தையும் முயற்சியில் போடுங்கள். என்ன நடக்கிறதோ, நடக்கட்டும். உங்கள் சக்தி மற்றும் உங்கள் திறன் இவற்றின் நூறு சதவிகிதத்தையும் முயற்சியில் போடுங்கள். ஒரு சதவிகிதத்தைக் கூட விதி, அதிர்ஷ்டம் இவற்றில் போடாதீர்கள். ஏனெனில் விதி, அதிர்ஷ்டம் என்பதெல்லாம் உங்கள் வேலை இல்லை. விதி, அதிர்ஷ்டம் போன்ற ஏதேனும் இருந்தால், அவை எப்படியும் நடக்கும். உங்கள் வேலையெல்லாம் முயற்சியில் ஈடுபடுவது மட்டுமே. அந்த முயற்சியும் திட்டவட்டமான, தெளிவான, முழுமையான முயற்சியாக இருக்கவேண்டும். தெளிவில்லாத முயற்சி முட்டாள்தனமானது. கஷ்டப்பட்டு வேலை செய்தால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது. சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான செயலை செய்ய வேண்டும். இவை எல்லாமே முக்கியம்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இவைதான் - தொடர்ந்து உங்கள் உள்வாங்கும் திறனையும் புத்திசாலித்தனத்தையும் வளர்ப்பதற்கான வழிகளைப் பார்ப்பது.

இப்படியெல்லாம் செய்வதற்கு உங்களுக்கு உள்வாங்கும் திறனும் ஆழமான புத்திசாலித்தனமும் தேவை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இவைதான் - தொடர்ந்து உங்கள் உள்வாங்கும் திறனையும் புத்திசாலித்தனத்தையும் வளர்ப்பதற்கான வழிகளைப் பார்ப்பது. மற்றவை எப்படியும் நிகழ்ந்துவிடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இது ஒன்றை மட்டும் மனித இனம் செய்வதில்லை.

உதாரணமாக, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மாணவர்களிடம் டாக்டராக வேண்டும் என்பதே இலட்சியமாக இருந்தது. நீங்களும் அவ்வகையில் டாக்டராகி விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இன்று எல்லோரும் யோகா வகுப்புகளுக்கு வர ஆரம்பித்து, யாருக்குமே ஒரு டாக்டரை பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை வந்தால், உங்கள் சம்பாத்தியம் நின்று போகும். அதன்பின், ஒரு டாக்டராக ஆவது என்பது மாணவர்களுக்கு ஒரு பெரிய கனவாக இருக்காது. வெகு சிலருக்கு மட்டுமே, மனித உடலை புரிந்து கொண்டு ஒரு நல்ல டாக்டராக சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டு, மற்றவர்களுக்கு இது ஒரு நல்ல லாபகரமான தொழில். அவ்வளவே. அடுத்தவரின் நோய் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக, நல்ல தொழில் சூழ்நிலையாக அமைவது என்னை வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது. ஏனெனில், அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள்.

வெற்றி பெறுவதற்கான குறிப்புகளை அலசி ஆராய்ந்து வரிசைப்படுத்தாதீர்கள். உங்கள் முழுத் திறனை நீங்கள் வெளிப்படுத்தினாலே போதும், உங்களுக்கு உண்மையான வெற்றி கிடைக்கும். ஒரு டாக்டராகவோ, அரசியல்வாதியாகவோ, ஒரு யோகியாகவோ ஆவது முக்கியமல்ல. உங்கள் முழு திறனுக்கேற்ப நீங்கள் செயல்படுவது தான் முக்கியம். அது நடக்க வேண்டுமெனில், உங்களுக்கு, உள்வாங்கும் திறனும் ஆழமான புத்திசாலித்தனமும் அவசியம். ‘என் புத்திசாலித்தனத்தை எப்படி வளர்த்துக் கொள்வது?’ அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். முக்கியமானது என்னவென்றால் உங்கள் உள்வாங்கும் திறனை மேம்படுத்திக் கொள்வது. வாழ்வை உள்ளது உள்ளபடி பார்க்கத் துவங்கினால், உங்கள் வாழ்க்கையை சரியாக நிகழ்த்திக் கொள்ளத் தேவையான புத்திசாலித்தனம் உங்களிடம் இருக்கும். வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பார்க்கத் தவறினால், உங்கள் புத்திசாலித்தனமே உங்களுக்கு எதிராக வேலை செய்யும். இவ்வுலகில் அதிக துன்பத்தில் வாடும் பலர் பெரும் புத்திசாலிகள் தான். இது ஏனெனில், அவர்கள் புத்திசாலித்தனம் நல்ல நிலைமையில் இயங்கினாலும், வாழ்வைப் பற்றிய புரிதல், உள்ளுணர்வால் வாழ்வை அறியும் திறன் அவர்களிடம் இல்லாதது தான்.

இன்று மனிதர்கள் பரந்த மனதைக் கொள்வதற்கு முற்படுகிறார்கள். இது சமுதாயத்தில் அவர்களுக்கு வெற்றியைக் கொண்டு வந்தாலும், அவர்களுக்கு உண்மையான வளர்ச்சி இருக்காது. நீங்கள் வாழ்க்கையில் உண்மையாகவே வெற்றி பெற வேண்டுமானால், வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பார்க்கவேண்டும். வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பார்க்க முடிந்தால், உங்களுக்கு வாழ்க்கையே ஒரு விளையாட்டு போல நிகழும். வாழ்க்கையை ஆனந்தமாக விளையாடலாம், நன்றாக விளையாடலாம். நீங்கள் வாழ்க்கையை நன்றாக விளையாடினால், நீங்கள் வாழ்வில் வெற்றி பெற்றதாகக் கருதப்படுவீர்கள்.

வெற்றியைப் பற்றிய உங்கள் கருத்து இன்று என்னவாக இருக்கிறதென்றால், மற்றவர் எல்லாம் உங்களுக்கு கீழே இருக்க வேண்டும். நீங்கள் எல்லோருக்கும் மேலே இருக்கவேண்டும் என்பது தான். இது வெற்றி அல்ல. இது நோய்.

வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பது உங்கள் குறிக்கோளாக இருக்கக் கூடாது. வாழ்வை அந்த அடிப்படையில் அமைத்துக் கொள்வது முட்டாள்தனம். அப்போது நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தேவையின்றி துன்பத்தை வரவழைத்துக் கொள்வீர்கள். இது ஏனெனில், வெற்றியைப் பற்றிய உங்கள் கருத்து இன்று என்னவாக இருக்கிறதென்றால், மற்றவர் எல்லாம் உங்களுக்கு கீழே இருக்க வேண்டும். நீங்கள் எல்லோருக்கும் மேலே இருக்கவேண்டும் என்பது தான். இது வெற்றி அல்ல. இது நோய். “நான் வெற்றி பெற வேண்டும்” என்று எப்போதுமே எண்ணாதீர்கள். முழுமையாய் மலர்ந்த ஒரு மனிதனாய் உங்களை வளர்த்துக் கொள்ள வழி செய்யுங்கள். அது நடந்துவிட்டால், அதன் தாக்கம் உங்கள் வாழ்வில் நிச்சயம் வெளிப்படும். இது நடந்தால், பார்ப்பவர்கள் உங்களை வெற்றிகரமான மனிதர் என்று சொல்வார்கள். உங்கள் வாழ்க்கை வெற்றிகரமானது என்பதை மக்கள் சொல்ல வேண்டுமேயன்றி, ‘நான் வெற்றி பெற வேண்டும்’, ‘நான் வெற்றி பெற வேண்டும்’ என்று நீங்கள் கருத்துக் கொண்டிருக்கக் கூடாது. இது வாழ்வை அணுகுவதற்கு மிகத் தவறான வழி.

ஒருமுறை இங்கு மனிதனாய் வந்துவிட்டால், மனிதனாக இருப்பதன் சாத்தியங்களை, உங்களுக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பரிமாணங்களை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். அப்போது தான் வாழ்வில் நீங்கள் வெற்றி பெற்றதாக நான் ஒப்புக்கொள்வேன். அந்த சாத்தியங்களை ஆராய்ந்து அறிந்திட திறனும், திடமும் வேண்டுமெனில், ‘எனக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ’ என்ற பயம் உங்களுக்கு இருக்கக்கூடாது. ‘வாழ்வின் சூழ்நிலை எப்படி இருந்தாலும், வாழ்வை நான் உணரும் விதம் மாறாது’ என்ற நிலையில் நீங்கள் இருக்க வேண்டும்.

ஒருமுறை இங்கு மனிதனாய் வந்துவிட்டால், மனிதனாக இருப்பதன் சாத்தியங்களை, உங்களுக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பரிமாணங்களை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். அப்போது தான் வாழ்வில் நீங்கள் வெற்றி பெற்றதாக நான் ஒப்புக்கொள்வேன்.

இப்போது ஈஷா அறக்கட்டளை மூலமாக இருபதிற்கும் மேற்பட்ட சமூகநலத் திட்டங்கள் செயல்முறையில் உள்ளன. அவற்றில் சில, தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரும் திட்டங்களாக நடைமுறையில் உள்ளன. ஆனால் நான் அச்செயல்களின் வெற்றி பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. அவை நன்றாக நடந்தால், அது மக்களுக்கு நல்லதாக அமையும். ஒருவேளை எல்லாமே தோல்வியடைந்தாலும், அது என்னை எவ்விதத்திலும் பாதிக்காது. ஆனால் அந்த திட்டங்களின் வெற்றிக்காக நான் என்னால் முடிந்ததை செய்வேன், அதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் அவை எப்படி நிகழ்ந்தாலும், அதில் எனக்கு லாபமோ நஷ்டமோ ஏதும் கிடையாது. எனினும் நான் மேற்கொள்ளும் இம்முயற்சிகளின் வெற்றி, என் கையில் மட்டும் இல்லை. அது ஆயிரக்கணக்கான மக்களை சார்ந்திருக்கிறது, பல்வேறு சமுதாய சூழ்நிலைகளை சார்ந்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும், இந்த செயல்திட்டங்கள் வெற்றி பெற்றாலும் இல்லாவிட்டாலும், இத்திட்டங்கள் பற்றிய மக்களின் எண்ணம், அதற்கு அவர்கள் தரும் வரவேற்பு - உயர்வாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் - இது எதுவுமே என் வாழ்க்கை அனுபவத்தை நிர்ணயிக்காது.

உங்களுக்கு மனநிறைவு வேண்டுமெனில், ஒரு செயல் செய்வதன் ஆனந்தத்தை நீங்கள் உணர வேண்டுமெனில், அந்த செயலுக்கு நீங்கள் உங்களை 100 சதவிகிதம் கொடுக்கவேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும், நீங்கள் நூறு சதவிகிதம் முழுமையாக இருந்தால், உங்கள் செயலே உங்களுக்கு ஒருவித உற்சாகத்தைத் தருவதை நீங்கள் கவனிக்க முடியும். நான் ஒவ்வொரு நாளும் - வருடத்தின் முன்னூற்று அறுபத்தி ஐந்து நாட்களும் - பதினெட்டில் இருந்து இருபது மணிநேரம் உழைக்கிறேன். வேறொருவருக்கு இது அடிமைத்தனமாகத் தோன்றலாம். ஆனால் எனக்கு இது அப்படியல்ல. ஏனெனில் எவ்வளவுதான் செயலில் ஈடுபட்டாலும், அது எனக்கு கொண்டாட்டமாக, குதூகலமாகவே உள்ளது. என்னைச் சுற்றியிருக்கும் பலருக்கும் அதுபோல்தான் இருக்கிறது. இது தான் ‘வெற்றி’. உண்மையில் இதுதான் வாழ்க்கை என்று சொல்வேன். வாழ்க்கையை, முழுமையாக வாழ்ந்தால், அது தான் வெற்றி. வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக, தவணை முறையில் வாழ்ந்தால், அது வெற்றிக்கான அடையாளம் அல்ல. இங்கு இப்பூமிக்கு வந்துவிட்டால், வாழ்வை அதன் ஆழத்தில், அதன் எல்லாப் பரிமாணத்திலும் ஆய்ந்து, வாழ்ந்து, உணர வேண்டும்.