"ஆசிரமத்தில் கிடைக்கும் அமைதியை வீட்டில் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லையே, வீட்டிலும், ஆபீஸிலும் அமைதியை உருவாக்குவது எப்படி?" என்று ஒருவர் கேட்க, அதற்கு சத்குருவின் பதில்...

Question: எல்லாவற்றிலுமிருந்து விலகி வந்து, உங்கள் ஆசிரமத்தில் ஆன்மீகப் பயிற்சிகள் மேற்கொள்கையில் நிம்மதி கிடைக்கிறது. உண்மை தான். ஆனால், தினப்படி வாழ்க்கையில் நிஜமான சூழல்களைச் சந்திக்க நேர்கையில், இந்த நிம்மதிக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? வீட்டிலும், அலுவலகத்திலும் அமைதியான சூழலை உருவாக்கிக் கொள்ள சாத்தியம் ஏது?

சத்குரு:

அலுவலகமும், வீடும், ஏன் ஆசிரமமும் கூட ஒருபோதும் அமைதியாக இருக்கப் போவதில்லை. நீங்கள் தான் அமைதியாக இருக்க முடியும். எங்கிருந்தோ தப்பித்து வந்து ஓய்வெடுக்கும் இடம் அல்ல ஈஷா. இங்கே வருபவர்கள் வெளியே செய்து கொண்டிருந்ததைவிட அதிகமான வேலையைதான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், செய்வதைத் தீவிரமாகச் செய்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆசிரமத்துக்கு வந்ததால், அமைதி கிடைத்து விடாது. உண்மையில், அதன் பரபரப்பைத் தாங்க முடியாமல், விலகிப் போனவர்கள் உண்டு. இங்கே என்ன செய்கிறோமோ அதை ஒருவித அர்ப்பணிப்போடு, முழுமையான ஈடுபாட்டோடு செய்கிறோம். இங்கே கிடைத்த அனுபவங்களை, இங்கே அனுபவித்த தீவிரத்தை இங்கே வந்து போன நாட்களை வீட்டுக்குப் போன பிறகும் மறக்க இயலாது. அதை அவரவர் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது மாறுபடலாம்.

நிம்மதி என்பது வாழ்க்கையில் ஓர் அசாதாரண நிகழ்வு போலவும், நிஜமான சூழல்களில் நிம்மதி இருக்கவே இருக்காது என்பது போலவும் எண்ணியிருக்கிறீர்கள். இது உங்களை நீங்களே தோற்கடித்துக் கொள்வதாகும். அமைதியும், நிம்மதியும், ஆனந்தமும் கற்பனையான உணர்வுகள் என்று எண்ணத் தலைப்பட்டால், அப்படியே ஆகிவிடும்.

நிசப்தமான சூழலில் இருந்தால் மட்டும் அமைதி வந்து விடாது. ஒருவன் தன்னுடைய உடலையும், மனதையும், தன் உணர்ச்சிகளையும், தன் சக்தியையும் எப்படிக் கையாளத் தெரிந்திருக்கிறான் என்பதைப் பொறுத்துத் தான் அவன் அமைதியை அனுபவிக்க முடியும்.

ஆசிரமத்தில் வேலை செய்வது கடைவீதியிலும் வேலை செய்யும் விதமாகத்தான் இங்கே பயிற்சிகள் தரப்படுகின்றன. இது வெறும் பயிற்சிமுறை அல்ல. இது ஓர் அற்புத அனுபவம். இது ஒருவிதத் திறன்நுட்பம். கற்றதைப் பயன்படுத்த உண்மையான நோக்கமும், அதற்கான தீவிரமும் இருந்தால், இங்கே கற்றது மாயாஜாலத்தை விட அதிசயமாகச் செயல்படும்.

Question: ஐன்ஸ்டீன் ஞானமடைந்த மனிதராக இருந்திருப்பாரா?

சத்குரு:

மாட்டார். தான் ஞானமடைந்த மனிதர் இல்லை என்பதை அவரே உணர்ந்திருந்தார். அவருடைய வாழ்வின் இறுதிக்கட்டத்தில் ஒருவர் அவரிடம் கேட்டார், "உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தால் அணு விஞ்ஞானியாக இருப்பதைத்தானே தேர்ந்தெடுப்பீர்கள்?". அதற்கு ஐன்ஸ்டீன் சொன்னார், "அதை விட ஒரு தச்சு வேலைக்காரராக இருப்பதையே விரும்புவேன்". ஒரு விஞ்ஞானியாக இருந்தது வாழ்க்கையை வீணடித்தது போல உணர்ந்தார். ஏனெனில் ஒரு விஞ்ஞானியாக இருந்ததால் தன் வாழ்க்கை எந்த விதத்திலும் மேம்பாடு அடையவில்லை என்று உணர்ந்திருந்தார்.

Question: ஒருவர் ஆன்மீகப் பாதையைத் தேர்வு செய்வதுகூட அவருடைய பூர்வ கர்ம வினைப்பலனா?

சத்குரு:

மேலோட்டமான வாழ்க்கையிலிருந்து உயிர்த்தன்மையின் ஆழத்தை நோக்கிச் செய்யும் பயணமே, ஆன்மீகம்.

ஆன்மீகப் பாதையில் பயணம் செய்வதற்கு நீங்கள் நிர்வாணமாக, தலைகீழாக நிற்க வேண்டியதில்லை. ஒவ்வொரு மனிதப் பிறவியும் இப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆன்மீகம் என்பது மனிதருக்கு மிக அடிப்படையான அம்சம். அது எந்தக் கர்மப்பலனுடனும் தொடர்பு கொண்டதில்லை.