Question: உடற்பயிற்சிகள் மீது என் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. பயிற்சி நிலையில் என் உடல் சார்பு குறைந்ததால் இவ்வாறு இருக்கக்கூடுமா?

சத்குரு:

உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற தீராத வேட்கை தேவையில்லை. ஒரு உடலுக்கு பயிற்சி தேவைப்படுகிறது. அத்தகைய பயிற்சிகளைப் பல வகைகளில் உங்களால் உடலுக்குத் தரமுடியும். பயிற்சி செய்யும் எண்ணமே எப்போதும் உங்களை ஆட்டிப் படைக்கிறது என்றால், அதுவும் ஒரு குறிப்பிட்ட வயதில் என்றால், முதுமையைப் பார்த்து நீங்கள் அஞ்சுகிறீர்கள் என்று அர்த்தம். இளமையில் உடலோடு இருக்கிற அடையாளம் மிக முக்கியமாக உங்களுக்குப் படுகிறது. இது இயற்கை. ஏனென்றால் இளமைப்பருவத்தில்தான் உடல், சிறந்த நிலையில் இருக்கிறது. வயதாக ஆக அது தளர்வடைகிறது. உடலோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத ஒரு மனிதன்தான் மிக அழகாகவும், பெருமிதமாகவும் உள்நிலையில் வளர முடியும். வாழ்வின் எந்த வயதைப் போலவும், முதுமையும் ஒரு அழகான பருவமாக இருக்கக்கூடும். சொல்லப்போனால் வாழ்வின் அனுபவங்கள் துணையிருப்பதால் இளமைப்பருவத்தை விட, முதுமைதான் அழகானது.

உடலை நன்றாக வைத்துக்கொள்ள நீங்கள் என்ன செய்தாலும் ஆனந்தமாகச் செய்யுங்கள். உடற்பயிற்சி பற்றி ஒரு தீவிர வேட்கை வரவேண்டிய அவசியமில்லை.

இளமை அழகானதுதான். ஆனால் மிகவும் குழம்பியிருக்கிறீர்கள். பெரும்பாலான நேரம் என்ன செய்கிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியவில்லை. எனவே, முதுமை இன்னும் அழகாயிருக்கலாம். ஏனெனில் அனுபவம் உங்களுக்குத் துணையாக இருக்கிறது. அதன்படி வாழ்க்கையிடமிருந்து போதிய அறிவு பெற்றிருக்கிறீர்கள் என்று பொருள். ஆனால் வாழ்க்கை உங்களை பாதித்திருக்குமேயானால், முதுமை ஒரு பெரிய துன்பமாகத்தான் இருக்கும். உணவு உண்பதற்கோ, உணவு உண்ணாமல் இருப்பதற்கோ, உணவு உங்களுக்கு ஒரு பெரிய பாதிப்பாயிருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டு வகையிலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். சிலருக்கு சாப்பிடுவதே ஒரு பாதிப்பாகயிருக்கும். சிலர் சாப்பிடாமல் இருப்பது என்கிற பாதிப்பை தனக்குள் ஏற்படுத்தியிருப்பார்கள். இந்தப் பயிற்சிகளிலும் எவ்வித பாதிப்பும் தேவையில்லை.

பயிற்சி உங்களுக்கு ஒரு பாதிப்பாக இருக்குமேயானால் உடலில் சில நோய்களை உற்பத்தி செய்து கொண்டிருப்பீர்கள். அதற்கு வாய்ப்புகள் அதிகம். அவசியம் வரும் என்றில்லை. ஆனால் அதற்கான வாய்ப்புகள் உண்டு. பயிற்சிகளை ஒரு பாதிப்பாக மேற்கொள்ளாதீர்கள். உடலை நன்கு வைத்துக் கொள்வது என்பது நல்லது, தேவையும்கூட. எனவே உடலை நன்றாக வைத்துக்கொள்ள நீங்கள் என்ன செய்தாலும் ஆனந்தமாகச் செய்யுங்கள். உடற்பயிற்சி பற்றி ஒரு தீவிர வேட்கை வரவேண்டிய அவசியமில்லை. இந்த உடற்பயிற்சி காரணமாய் உங்களுக்கு கடுமையான, வலிமையான தசைகள் இருக்கலாம். உள்ளே புற்றுநோயும் இருக்கலாம். இது உருவாக வாய்ப்பு அதிகம். எனவே, எவ்விதமான வேட்கையும் நல்லதில்லை. எல்லைகளை உடைக்கவேண்டும் என்ற வேட்கைதான் தேவை (சிரிப்பு).

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.