Question: சிறு வயதிலிருந்தே உணவின் மீது எனக்குப் பிரியம் அதிகம். அதனால், இளமையிலேயே என் உடல் மிகவும் பருத்துவிட்டது. குண்டாயிருக்கும் காரணத்தால், பெண்கள் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதற்காகப் பட்டினி கிடந்து இளைப்பதற்கும் எனக்கு மனமில்லை. ஒரு மனிதனின் தோற்றத்தை வைத்து ஏன் எடை போடுகிறார்கள்? அவனுடைய குணத்தைப் பார்த்தல்லவா விரும்ப வேண்டும்?

சத்குரு:

தோற்றம்தான் முக்கியம்?

ஒருவருக்குத் தோற்றம் முக்கியமல்ல என்று நான் சொல்வேன் என்று எதிர்பார்த்தால், ஏமாறுவீர்கள். உங்கள் தோற்றம்கூட உங்கள் தரத்தையும், குணத்தையும் பிரதிபலிக்கும் முக்கிய அம்சம்தான்!

உங்களை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை என்பது பொய். அவ்வளவு பெரிய உருவத்தை யாரால் பார்வையிலிருந்து தவறவிட முடியும்? பார்க்கிறார்களே தவிர, யாரும் வசீகரிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

உங்களைப் பற்றியே அக்கறை இல்லாத நீங்கள் மற்றவரைப் பற்றி அக்கறை கொள்வீர்கள் என்று எப்படி நம்ப முடியும்?

உங்களோடு நடப்பவர்கள் சிறிய கதவுகள் வழியாகவும் போக விரும்பலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மனிதக் கண்கள் மனதுக்கு இதமானதை, இனிமையானதைத்தான் தேடும். மனித வடிவத்தில் இல்லாமல் உலக உருண்டையைப் போல மாறிக் கொண்டிருந்தால், யாரால் உங்களை சந்தோஷமாகப் பார்க்க முடியும்?
உங்கள் உடல் அளவுக்கு மீறிப் போனதை உரிய காலத்தில் நீங்களே கவனித்திருக்க வேண்டாமா? மற்றவர் அதைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்று ஏன் காத்திருக்கிறீர்கள்?

உடலில் ஏதோ ஒரு குறை இருந்து பருமனாகியிருந்தால், அதற்கு வேறு தீர்வுகளை யோசிக்கலாம். ஆனால், நீங்களோ உணவின் மீது இருக்கும் காதலால் குண்டாகி இருக்கிறீர்கள். அளவுக்கு அதிகமாக உணவை வழங்கியதால், உங்கள் உடல் ஒரு மோசமான சேமிப்புக் கிடங்காக மாறிவிட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எப்போது சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது, சாப்பிடுவதை எப்போது நிறுத்துவது என்று கூட எந்தக் கவனமும் இல்லாமல் வாழ்பவரால், வேறு எதைச் சாதித்துக் காட்ட முடியும்?

தோற்றத்துக்கு எதற்கு முக்கியத்துவம், குணத்துக்கல்லவா கொடுக்கப்பட வேண்டும் என்கிறீர்கள். நீங்கள் உங்கள் உடலை வைத்துக் கொண்டு இருக்கும் லட்சணமே உங்கள் குணத்தைப் பற்றி கூறிவிடுகிறதே?

உங்களைப் பற்றியே அக்கறை இல்லாத நீங்கள் மற்றவரைப் பற்றி அக்கறை கொள்வீர்கள் என்று எப்படி நம்ப முடியும்?

அளவுக்கு அதிகமாக உண்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் உடலுக்குச் செல்லம் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல! உண்மையில் அதை மிகக் கொடுமையாக வருத்தி தண்டனைதான் வழங்குகிறீர்கள். உங்கள் எடையைச் சுமக்க முடியாமல், உங்கள் உடலே கதறிக் கொண்டு இருக்கும். உட்கார்வதற்கும், எழுந்திருப்பதற்கும் உங்கள் எலும்புகள் எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை. பருமனாக இருப்பது ஆரோக்கியமல்ல. அது ஒரு வித நோய்.

மல்யுத்தம் - வெற்றி பெற்ற இளவரசர்!

ஓர் அரசருக்கு ஏழு வாரிசுகள். அரசர் இறந்ததும், நயவஞ்சக தளபதி, இளவரசர்களைச் சிறையில் அடைத்தான். ஒரு வருடம் கழித்து மல்யுத்தம் நடக்கும் என்றும், அதில் தளபதியுடன் மோதி வெற்றி பெறுபவனே சிம்மாசனத்தில் அமரத் தகுதியானவன் என்றும் ஒரு நிபந்தனை விதித்தான்.

பருமனாக இருப்பது ஆரோக்கியமல்ல. அது ஒரு வித நோய்.

"ஏழு பேருக்கும் சேர்த்து ஒரு ஆளுக்குப் போதுமான அளவு மட்டும் உணவைக் கொடுங்கள். எதிர்க்கும் சக்தி இல்லாமல் ஒரு வருடத்துக்குள் அவர்கள் இறந்து ஒழியட்டும்!" என்று உத்தரவிட்டான்.

ஒரு வருடம் கழித்து, மல்யுத்தப் போட்டிக்கான நாள் வந்தது. இளவரசர்களில் மூத்தவன் தளபதியோடு முழுச் சக்தியோடு மோதி, வெற்றியும் பெற்றான்.

'குறைந்த உணவை உட்கொண்டே அவன் சக்தி பெற்றது எப்படி?' என்று தோற்றுப்போன தளபதி ஆச்சரியமாகக் கேட்டான்.

"உன்னிடமிருந்து ராஜ்ஜியத்தை மீட்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் என் ஆறு சகோதரர்களும், தங்களுக்குக் கிடைத்த உணவையும் எனக்கே கொடுத்துப் பராமரித்தார்கள்" என்றான், வெற்றி பெற்றவன் நெகிழ்ச்சியுடன்.

மற்றவர் உணவையும் சேர்த்து அவன் சாப்பிட்டதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. உயிர் வாழ்வதற்காக அவன் சாப்பிட்டான். நீங்கள் சாப்பிடுவதற்காக உயிர் வாழ்கிறீர்கள்.

சரி என்ன செய்யலாம்?

உங்களை இன்னொருவர் பார்ப்பதற்காகவும், விரும்புவதற்காகவும், இணையாக ஏற்றுக் கொள்வதற்காகவும் நான் இதைச் சொல்லவில்லை. உங்களுக்கு ஒரு நிம்மதியான, சுகமான வாழ்க்கை வேண்டுமென்றால், அதற்கு ஒத்துழைத்து உங்கள் உடல் சுகம்தர வேண்டும். மனம் சுகம் தர வேண்டும்.

உண்மையிலேயே உங்களைப் பற்றிய அக்கறை இருந்தால், தினமும் பத்து மைல்கள் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நிறையத் தண்ணீர் குடியுங்கள். யோகா வகுப்புக்குச் செல்லுங்கள். சொல்லித் தரும் பயிற்சிகளை உண்மையாகச் செய்து பாருங்கள்.

உங்கள் உடல் மட்டுமல்ல. உங்கள் மனம், உங்கள் வாழ்க்கை ஒவ்வொன்றும் என்ன வடிவம் கொள்ளப்போகிறது என்பதற்கு நீங்கள்தான் முழுப் பொறுப்பு.

இதயத்தில் நல்லவர்கள் என்று சொல்லிக் கொண்டால்கூட, என்ன செய்கிறோம் என்ற கவனம் இல்லாமல் செயல்படுபவர்கள், பொறுப்பானவர்களாக இருப்பது இல்லை.