தமிழகத்தில் 12 மாணவர்கள் தற்கொலை, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கு பிறகு... மருத்துவக் கல்லூரியில் சீட்டு கிடைக்காததால் மாணவர் விஷம் குடித்தார்! பரிட்சைக்கு பயந்து மாணவர் சாவு! இவையெல்லாம் இன்று தினசரி தலைப்பு செய்திகளாய் விரிகின்றன. பொருளாதாரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு கல்வி புகட்டும் நாம், இந்நாட்டின் வாழ்வாதாரமான குழந்தைகளை கல்வி என்னும் போர்வையில் பலியிட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் செல்லும் திசை சரிதானா? சத்குருவின் பார்வையில்...

Question: நான் இந்த வருடம் இன்ஜினியரிங் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றிபெற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஏற்கனவே இரண்டு முறை அதில் தோல்வி அடைந்துவிட்டேன். நான் மிகவும் மனம் வெறுத்துப் போயிருக்கிறேன். அதிலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை...

சத்குரு:

விரக்தி, நம்பிக்கை இழத்தல், மன அழுத்தம் இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்ச்சியான செயல்பாடுகள். நீங்கள் விரக்தியடையும்போது நம்பிக்கை குறைவாக உணர்வீர்கள். நம்பிக்கை குறையும்போது, உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்.

உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். ஒருமுறை சாத்தான், தன் வியாபாரத்தில் இருந்து வெளிவர நினைத்தார். தன்னுடைய அத்தனை கருவிகளையும் விற்பனைக்கு வைத்தார். கோபம், காமம், பேராசை, பொறாமை, வெறுப்பு, தீவிர இச்சை போன்ற அனைத்தையும் அவர் விற்பனைக்கு வைத்தார்.

சரி, எப்படியோ தோல்வி ஏற்பட்டுவிட்டது, நிஜம்தான், அது தவிர்க்க இயலாதது என்று பார்த்துவிட்டு முன்னோக்கிப் பயணிப்பதுதானே புத்திசாலித்தனம்?

மக்கள் அவை அனைத்தையும் வாங்கிவிட்டனர். அப்படியும் அவருடைய பையில் ஏதோ கொஞ்சம் மிச்சமிருப்பதை ஒருவர் பார்த்துவிட்டார். 'சாத்தானே, பையில் இன்னும் என்ன மிச்சமிருக்கிறது?' என்று கேட்டார். அதற்கு சாத்தான், "இவையெல்லாம் என்னுடைய மிகத்திறமையான கருவிகள். ஒருவேளை நான் மீண்டும் வியாபாரத்தில் இறங்கினால், இவை எனக்குத் தேவைப்படும்.

அதனால், இவற்றை நான் விற்பனைக்கு வைக்கப் போவதில்லை. அனைத்திற்கும் மேலாக, இவை மிகவும் விலை உயர்ந்தவையாக இருக்கும். ஏனென்றால் இவைதான் ஒரு மனிதருக்குள் இருக்கும் உயிரோட்டத்தை அழிப்பதற்கான மிகச்சிறந்த கருவிகள்," என்றார். "அவை என்ன?" என்று மக்கள் கேட்க, "நம்பிக்கை இழத்தல், மன அழுத்தம்" என்றார் சாத்தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களுக்குள் உற்சாகம் இல்லாமல் போனாலோ, மன அழுத்தம் வந்துவிட்டாலோ, உயிர்தன்மைக்கு வழியே இல்லாமல் போய்விடும். "நான் ஒரு விஷயத்தினால் விரக்தியடைந்துவிட்டேன்" என்று நீங்கள் சொல்லும்போது, நம்பிக்கையின்மை மற்றும் மன அழுத்தத்திலிருந்தும் நீங்கள் வெகுதூரத்தில் இல்லை. எனவே, விரக்திதான் முதல் படி.

விரக்தியை எப்படி விரட்டியடிப்பது?

அதை நீங்கள் விலைக்கு வாங்காமல் இருந்தாலே போதும்! நீங்கள் அதை விரட்டத் தேவையில்லை. ஏனென்றால் உயிர் என்பதே உற்சாகத்தின் வெளிப்பாடுதான்.

ஏதோ காரணத்தால் நீங்கள் பரிட்சையில் தோற்று விட்டீர்கள். பரிட்சையில் தோற்றது மட்டும் போதாதா? விரக்தி, ஏமாற்றம் என்று அத்தனை துன்பங்களையும் உங்கள் வீட்டு வாசலில் வைத்துக் கொண்டு மேலும் துன்புற வேண்டுமா? பரிட்சையில் தோல்வியுற்றதே உங்களுக்கு எதிராய், வம்படியாய் நிற்கும்போது விரக்தி அடைவது முட்டாள்தனமான செயல்தானே?

சரி, எப்படியோ தோல்வி ஏற்பட்டுவிட்டது, நிஜம்தான், அது தவிர்க்க இயலாதது என்று பார்த்துவிட்டு முன்னோக்கிப் பயணிப்பதுதானே புத்திசாலித்தனம்? முக்காடு போட்டுக் கொண்டு அழுவது சிறந்ததா? அல்லது உங்களை முன்னேற்றப் பாதை நோக்கி திருப்பிக் கொள்ள தயார் செய்து கொள்வது நல்லதா? எது எப்படியோ, உட்கார்ந்து அழுவதோ, விரக்தியில் மூழ்குவதோ சூழ்நிலையை மாற்றிவிடாது.

ஒரு எறும்பு எப்படிச் செயல்படுகிறது என்று பாருங்கள்!

அதை நீங்கள் நிறுத்த முயற்சி செய்தால், எப்போதாவது அது விரக்தியடைகிறதா அல்லது நம்பிக்கை இழக்கிறதா? அது சாகும்வரை தன்னுடைய முயற்சியைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

கூறையில் வளரும் சிறுசெடியைப் பாருங்கள்! கூரையில் கொஞ்சம் மண் மட்டும்தான் அதற்குக் கிடைக்கிறது. அதை வைத்துகொண்டு கீழே தரைவரை, 25அடி வரைகூட, தன்னுடைய வேர்களை நீட்டித்துவிடுகிறது.

அந்தச் செடி எப்போதாவது விரக்தி அடைகிறதா?

உயிர்சக்திக்கு விரக்தி என்றால் என்னவென்றே தெரியாது. மனத்துக்குத்தான் விரக்தி ஏற்படும். வரையறைகளுக்கு உட்பட்ட மனம், எப்போதும் பொய்யான எதிர்பார்ப்புகளுடன் வேலை செய்கிறது. அத்தகைய எதிர்பார்ப்புகள் வெறும் உளவியல் ரீதியானவை.

அவற்றில் உயிருக்கு இணக்கமாக எதுவும் இல்லை. எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும்போது, உலகத்தின் முடிவுக்கே வந்து விட்டதைப் போன்று உங்கள் மனம் உணர்கிறது.

மாணவர்கள் தேர்வுகளில் தோல்வியடையும்போது, அவர்களில் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள், இல்லையா? தேர்ச்சி அடையாவிட்டால், அதுதான் உலகத்தின் முடிவு என்கிற எண்ணம் அவர்களுக்கு வந்துவிடுகிறது.

நீங்கள் வழிபடும் ராமர், கிருஷ்ணர், புத்தர், ஏசு போன்றவர்கள் யாருமே எந்தத் தேர்விலும் தேர்ச்சி பெற்றதில்லை. பிறகு அவர்களை ஏன் வழிபடுகிறீர்கள்? உங்கள் பரிட்சையில் நீங்கள் தேர்ச்சி பெறுவதற்கு, 'ஒரு பரிட்சையில்' கூட தேர்ச்சி பெற ஆர்வம் காட்டாத மனிதர்களின் உதவியை நாடுகிறீர்கள்!?

ஆகவே பரிட்சையில் தேர்ச்சி பெறாமல் இருக்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே இல்லை. சமூக சூழ்நிலைக்காக, தேவைகளுக்காக, நீங்கள் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற விரும்புகிறீர்கள் என்பது வேறு விஷயம். ஆனால் அதற்காக நீங்கள் விரக்தியடைவது என்பது முழுக்க முழுக்க உளவியல் சார்ந்தது. இது உயிர்த்தன்மை சார்ந்ததல்ல.

நீங்கள் விரக்தியில் இருக்கும்போது, உங்கள் மனம், "இது என்ன வாழ்க்கை? நான் சாகிறேன்" என்று சொல்லும். உங்கள் வாயை மூடிக்கொண்டு, மூக்கை இரண்டு நிமிடங்களுக்குப் பிடித்து வைத்திருந்து பாருங்கள்? உங்களுக்குள் இருக்கும் உயிர், "என்னை வாழ விடு" என்று சொல்லும்.

உங்கள் உயிருக்கு எதிராக நீங்கள் எதைச் செய்தாலும், அதுதான் அறியாமை, அது முட்டாள்தனம். ஒரு முட்டாள்தான் தன்னுடைய உயிர்த்தன்மைக்கு எதிராகச் செயல்படுவான். இப்போது நீங்கள் உங்கள் உயிர்த்தன்மைக்கு எதிராகச் செயல்படும் ஒரு மனநிலைக்கு ஆளாகிவிட்டீர்கள்.

விரக்தி, நம்பிக்கை இழப்பு, மன அழுத்தம். இவையெல்லாம் நீங்கள் உங்கள் உயிருக்கு எதிராக வேலை செய்வதைத்தான் குறிக்கின்றன. நீங்கள் முட்டாளாக இருந்தால் மட்டும்தான் விரக்தியடைவீர்கள். புத்திசாலியாக இருந்தால் விரக்தி அடையமாட்டீர்கள்.

உங்கள் புத்திசாலித்தனத்தை பூட்டிவைத்து விட்டீர்கள். அதனால்தான், அங்கே விரக்தி நுழைந்துவிட்டது. இல்லாவிட்டால் விரக்தி, மன அழுத்தம் போன்ற பேச்சுக்கே இடமில்லை.

Photo Courtesy: World Bank Photo Collection @ flickr