இன்று அரசியல்வாதிகள் என்றாலே கேலிக்குரிய நபராகவும், ஊழல்வாதிகளாகவும் பார்க்கப்படும் அவலநிலை உள்ளது! உண்மையில் அரசியல்வாதிகளின் குணம் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துரைக்கும் சத்குரு, அரசியல்வாதிகள் ஞானோதயம் அடைந்தவர்களாக இருப்பதன் அவசியத்தைக் கூறுகிறார்! ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதும் இதில் புரிகிறது!

Question: கல்வியை முடித்ததும் அரசியலில் ஈடுபட விரும்புகிறேன். ஒரு அரசியல்வாதியின் குணங்கள் என்னவாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள், சத்குரு?

சத்குரு:

அரசியல்வாதியின் குணங்கள் என்ன? பெரும்பாலான இடங்களில் யாராவது சுயநலமாக ஏதாவது செய்தால், "அவன் அரசியல் செய்கிறான்." என்பார்கள். ஆனால், அரசியல் என்றால் அதுவல்ல. அரசியல் என்றால் கொள்கைகள் உருவாக்குவது. நாம் கொள்கைகள் கொண்டு வருவதன் நோக்கமே, சிக்கலாய் இருக்கும் நமது பரிமாற்றங்களை சுமூகமானதாக மாற்றத்தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
நீங்கள் செய்வது அனைத்தும், நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு எண்ணமும், உங்கள் ஒவ்வொரு உணர்வும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், கோடான கோடி மக்களின் மீது தாக்கம் ஏற்படுத்தப்போகிறது எனும்போது, உங்களுக்குள் நீங்கள் மிகச்சிறந்த நிலையில் இருப்பது அதி முக்கியம், அல்லவா?

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்திருக்கிறது. தற்போதைய வரி செலுத்தும் முறை சிக்கலாகவும், சீரில்லாததாகவும் இருக்கிறது. பெரிய தொழில் நிறுவனங்களும், கொள்கை வகுப்பாளர்களும் கூடத் தற்சமயம் செயல்பாட்டில் இருக்கும் முறையை முழுவதுமாக புரிந்துகொள்வதில்லை.

அனுபவம் மிக்க பெருநிறுவன வக்கீல் ஒருவருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். சேவை வரி பற்றி பேசத் துவங்கினோம். ஒருகட்டத்தில், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. "உண்மையிலேயே இதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? தயவு செய்து எனக்கு அதைமட்டும் தெளிவுபடுத்துங்கள்," என்று கேட்டேன். "இல்லை சத்குரு," என்றார்.

"பிறகு எதற்காக இப்படி?" எனக் கேட்டேன். அதற்கு அவர், "உங்கள் கருத்துக்காக எவ்வளவு ஆணித்தரமாக வாதாடுகிறீர்கள் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது," என்றார். இத்தனை ஆண்டு காலமாக, நம் சட்டம் என்னவென்று எவருக்கும் முழுமையாகத் தெரியாததால், கிட்டத்தட்ட எல்லோருமே சட்டத்தை மீறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நமது கொள்கையும் அப்படித்தான்.

ஜி.எஸ்.டி என்றால், ஒற்றை வரிவிதிப்பு முறை. இவ்வளவு சிக்கல்கள் கொண்ட பரிமாற்றங்களை ஒரே சட்டத்தின்கீழ் கொண்டுவந்து, தீர ஆராய்ந்து, சிந்தித்து உருவாக்க வேண்டும். அதன்மூலம், நீங்களும், நானும் மூளையை அதிகம் பிசகிக்கொள்ளாமல் பரிவர்த்தனைகள் செய்யலாம். இது மாபெரும் கொள்கைமாற்றம்; அனைவருக்கும் வேலை செய்யக்கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்க நிறையவே சிந்தித்து இது உருவாக்கப்படுகிறது.

இதைத்தானே ஒரு அரசியல்வாதி செய்யவேண்டும். தேசம் சுமூகமாக இயங்குவதற்குக் கொள்கைகள் உருவாக்கவேண்டும். சர்வதேச சூழ்நிலைகள் சுமூகமாக இயங்குவதற்கு உலக அளவில் கொள்கைகள் உருவாக்கவேண்டும். இதைச் செய்யும் ஒருவர் கேலிக்குரியவர் அல்ல. ஆனால், இன்று நமக்கு, "அரசியல்வாதி என்றாலே கேலிக்குரியவர்," என்றொரு மனப்பான்மை வந்துவிட்டது. அப்படியில்லை, இது மிக முக்கியமான ஒரு பணி. நாம் இயங்கும் தேசத்தில் உள்ள கோடான கோடி மக்களின் வாழ்வை நிர்ணயம் செய்யும் ஒரு வேலையிது.

கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்!

இப்படி அபாரமான சிறப்புரிமையும், பொறுப்பும் உங்கள் கைகளில் வழங்கப்படும்போது... நீங்கள் செய்வது அனைத்தும், நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு எண்ணமும், உங்கள் ஒவ்வொரு உணர்வும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், கோடான கோடி மக்களின் மீது தாக்கம் ஏற்படுத்தப்போகிறது எனும்போது, உங்களுக்குள் நீங்கள் மிகச்சிறந்த நிலையில் இருப்பது அதி முக்கியம், அல்லவா?

தேசம் சுமூகமாக இயங்குவதற்குக் கொள்கைகள் உருவாக்கவேண்டும். சர்வதேச சூழ்நிலைகள் சுமூகமாக இயங்குவதற்கு உலக அளவில் கொள்கைகள் உருவாக்கவேண்டும். இதைச் செய்யும் ஒருவர் கேலிக்குரியவர் அல்ல.

உதாரணத்திற்கு, நீங்கள் தோட்ட வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்; உங்கள் கைகள் சுத்தமாக இருக்கிறதா இல்லையா என்று அதிகம் கவலைப்படத் தேவையில்லை. கைகள் அழுக்காக இருந்தாலும் அதனால் செடிகளுக்கு நன்மைதான். ஆனால், பழங்கள் வெட்டி விற்பனை செய்பவராய் இருந்தால், உங்கள் கைகளைத்தான் முதலில் நான் பார்ப்பேன். பழம் வாங்கும் சில பேரை உங்கள் சுத்தம் பாதிக்கும்.

அறுவை சிகிச்சை செய்பவருக்கு, கைகள் மிகச் சுத்தமாக இருக்கவேண்டும். ஓர் உயிரை நீங்கள் எவ்வளவு ஆழமாகத் தொடுகிறீர்களோ, அந்த அளவு உங்கள் கைகள் சுத்தமாகிட வேண்டும். ஒரு அரசியல்வாதிக்கு, நம் அனைவரின் வாழ்க்கையும் எந்தத்திசையில் செல்லவேண்டும் என்பதை முடிவுசெய்யும் சிறப்புரிமையும், பொறுப்பும் வழங்கப்படுகிறது. அப்படிப்பட்ட பொறுப்பு உங்கள் கைகளில் வழங்கப்படும்போது, ஒரு மனிதர் தனக்குள் மிக உயர்ந்த நிலையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஜனகர் - தன்னை உணர்ந்த அரசர்!

மன்னர் ஜனகரைப்பற்றிய ஒரு கதை உண்டு. மிக அழகான கதை அது.

தன்னை உணரவேண்டும் என்ற தணியாத ஏக்கம் ஜனகரை வாட்டியது. அமைச்சரவைக்குப் பல அறிஞர்களை வரவழைத்தார். எதுவும் நடக்கவில்லை. அஷ்டவக்ரர் வந்தார். அவருடைய வழிகாட்டுதலின்படி ஜனகர் ஞானோதயம் அடைந்தார்.

ஜனகர் ஞானோதயம் அடைந்தபோது, அஷ்டவக்ரரிடம், "நான் விரும்பியதை அடைந்துவிட்டேன், இப்போது என்னிடம் இருக்கும் இந்த ராஜ்ஜியம் வேண்டாம், இந்த அரண்மனை வேண்டாம், குடும்பம் வேண்டாம், அரசராக இருப்பதன் சுமைகள் எதுவும் எனக்கு வேண்டாம். நான் உங்களுடன் வசிக்கிறேன்," என்றார்.

அதற்கு அஷ்டவக்ரர், "கூடாது. நீ அரண்மனைக்கும், ராஜ்ஜியத்திற்கும் திரும்பிப்போக வேண்டும்," என்றார். "நான் விரும்புவதெல்லாம் உங்கள் காலடியில் இருப்பதை மட்டும்தான்," என்றார் ஜனகர். "இது உன் விருப்பத்தைப் பற்றியதல்ல. மக்களுக்கு ஞானோதயமடைந்த அரசர் தேவை. நீ திரும்பிச் செல்," என்றார் அஷ்டவக்ரர். ஜனகரும் தனது ராஜ்ஜியத்திற்குத் திரும்பினார்.

நமக்கும் ஞானோதயமடைந்த அரசியல் தலைவர்கள் தேவை. குறைந்தபட்சம், அனைவரையும் அரவணைக்கும் விதத்தில் இருக்கவேண்டும். இது மிக முக்கியம். அரசியல்வாதியாய் ஆக விரும்பினால், என்னுடன் ஒரு வருடமேனும் இருந்து ஓரளவிற்காவது ஞானோதயமடைய வேண்டும். ஏனென்றால், அரசியல் என்பது அபாரமான பொறுப்பு.