சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 13

ஆண் பெண் உறவுமுறை குறித்த சேகர் கபூரின் கேள்விகளுக்கு சத்குரு கூறும் பதில்கள், ஹார்மோன் எனும் அஸ்திரத்தால் இயற்கை நம் இளமையை எப்படி சிறைபிடிக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.


சேகர்: சத்குரு, உறவுமுறைகளில் மிக அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துவது ஆண் - பெண் இடையேயான உறவுதான். ஆண் பெண் இடையேயான அன்பில் ஏன் அவ்வளவு மன உளைச்சல் ஏற்படுகிறது? திருமண பந்தம், மன அழுத்தங்களையும், துயரங்களையும் கடந்து இருக்கமுடியாதா?

இயற்கையிலேயே ஆண் பெண் உறவு ஒரு கட்டாய அன்புப் பிணைப்பாக இருக்கிறது. இயற்கை, ஒருவரை நோக்கி மற்றவரை உந்தித் தள்ளுகிறது. ஏனென்றால் இயற்கை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முனைகிறது.

சத்குரு: மனிதன்-நாய் அன்பு, ஆண்-பெண் அன்பு, மகன்-தாய் அன்பு, தந்தை-மகன் அன்பு, என்று எதுவுமே இல்லை. நம் உணர்ச்சிகள் பல நிலைகளில் வெளிப்படுகிறது. அது இனிமையாக வெளிப்படும்போது அதை அன்பு என்று சொல்லிக் கொள்கிறோம், அவ்வளவுதான். நீங்கள் அந்த அன்பு நிலைக்கு எப்படி சென்று அடைகிறீர்கள் என்பதுதான் முக்கியமானது.

சேகர்: ஆம்

சத்குரு: நமஸ்காரம் செய்வது குறித்து நாம் பேசினோம். நீங்கள் ஒருவரைப் பார்க்கும்போது, அவருடைய உடல், மனம், உணர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் அவரைப் பிடிக்கும்-பிடிக்காது என்பதில் நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள். எனவே ஒருவரைப் பார்க்கும்போது அவருடைய அடிப்படையான தன்மையைப் பாருங்கள். எல்லாவற்றையும் எது படைக்கிறதோ அது அவருக்குள்ளும் உள்ளது. அதனால்தான் அந்த மனிதர் படைக்கப்பட்டிருக்கிறார். எனவே ஒருவருக்கு நமஸ்காரம் செய்யும்போது, அவரைப் பார்ப்பதைவிட, அவருக்குள் இருக்கும் படைத்தவனை வணங்கி, அவருடன் ஒரு உறவை ஏற்படுத்த முயற்சி செய்கிறீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏனென்றால் ஏற்கனவே நீங்கள் உங்களுக்குள் உள்ள படைத்தவனிடம் உறவை ஏற்படுத்கிக் கொள்ளும் ஆவலில்தான் எப்போதும் இருக்கிறீர்கள். நான் யார் என்று நீங்கள் இப்போது கேட்டதுபோல் பலரும் திரும்ப திரும்பக் கேட்கிறார்கள். அதற்கான விடையை நாலா பக்கமும் தேடுகிறார்கள்.

நீங்கள் ஒருவரைப் பார்க்கும்போது "ஹாய்" என்று சொல்ல முடியும். அதற்குப் பதிலாக, அவருக்கு நீங்கள் நமஸ்காரம் செய்யும்போது, உங்கள் இருவருக்குள் உள்ள தொடர்பு வேறு நிலைக்கு உயர்ந்து விடுகிறது. உங்களுக்கு அந்த நபரின் புத்திசாலித்தனம் பிடித்திருந்தால் அதைப் பொறுத்து உங்கள் பேச்சு அமைகிறது. அந்த நபரின் உணர்வுகள் பிடித்திருந்தால் அவர்களை அணைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் ஈர்ப்பு உடல் சார்ந்ததாக இருந்தால் அது வேறு வழிகளில் வெளிப்படுகிறது.

இயற்கையிலேயே ஆண் பெண் உறவு ஒரு கட்டாய அன்புப் பிணைப்பாக இருக்கிறது. இயற்கை, ஒருவரை நோக்கி மற்றவரை உந்தித் தள்ளுகிறது. ஏனென்றால் இயற்கை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முனைகிறது. அப்படி ஒரு ஆணும் பெண்ணும் சேரவில்லை என்றால், நீங்களும் நானும் இங்கே இருந்திருக்க மாட்டோம். எனவே இது ஒரு கட்டாயத் தேவை. இந்தத் தேவை மக்களை ஒருவித ஒருமைத் தன்மையை அனுபவிக்க வைக்கிறது. இந்த ஒரு அன்பை மட்டும், இயற்கை, இரசாயனத் தூண்டுதல் அளித்து ஆதரிக்கிறது. (இருவரும் சிரிக்கிறார்கள்).

சேகர்: சரி.

சத்குரு: மற்ற உறவுகளுக்கு இயற்கையின் இரசாயன உதவி கிடைப்பதில்லை. உங்கள் உதவி மட்டுமே கிடைக்கிறது. துரதிருஷ்டவசமாக, ஆண்-பெண் உறவுகளில், இரசாயனத்தூண்டுதல் தணிந்தவுடன், தாங்கள் எதற்காக இணைந்தோம் என்று பெரும்பாலும் வியக்கிறார்கள். எனவே, இரசாயன உதவி முற்றிலும் முடியும் முன்னர், இரசாயனத்தைக் கடந்த வேறுவிதமான அன்பான உறவுகளை நீங்கள் உங்களுக்குள் கவனமாக நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் அந்த ஆண்-பெண் உறவு அருவருப்பாக மாறிவிடுகிறது.

சேகர்: அப்படியென்றால், விழிப்பான, அன்பான உறவு என்பது எது? (சத்குரு சிரிக்கிறார்) இரசாயன மாற்றம் முடிந்து விட்டபிறகு, இனி அங்கு வேறு எந்த மாற்றம் நிகழும்? அந்த உறவு தொடர்வதற்கு இனி வேறு எது காரணமாக இருக்கும்?

சத்குரு: இரசாயனம் என்பது உடல் சம்பந்தப்பட்டது. தேவைக்கேற்ப இந்த இரசாயனம் செயல்படுகிறது. அது இயற்கையின் தந்திரம். 10, 11 வயது இருக்கும்போது இந்த உலகில் எல்லாமே நன்றாக இருந்தது. 13 வயதில், திடீரென உங்களுடைய புத்திசாலித்தனம், ஹார்மோன்களால் கடத்தப்பட்டு, உங்களுக்கு இந்த உலகம் முழுவதுமே வித்தியாசமாகத் தெரிய ஆரம்பிக்கிறது. மிகச் சிலர் மட்டுமே, அதையும் தாண்டிப் பார்ப்பதற்கான விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றவர்கள் அனைவரும் ஹார்மோன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். ஓரளவு இதிலிருந்து சுதாரித்துக் கொள்வதற்குள் பொதுவாக அவர்களுக்கு வயதாகியிருக்கும். (சிரிக்கிறார்) எனவே, இதில் சரி, தவறு என்று எதுவும் கிடையாது. உங்களை அது ஒரு எல்லைக்குள் குறுக்கி வைத்துவிட்டது, அவ்வளவுதான். சரி, ஒரு எல்லைக்குள் உட்பட்டிருப்பது குற்றமா? அப்படியும் கிடையாது. ஆனால் எல்லைக்குள் உட்பட்டிருக்கும்போது மனிதன் இயற்கையாகவே துன்பப்படுகிறான். ஒரு எல்லைக்குள் சிக்கிக் கொள்வதில் மனிதனுக்கு விருப்பம் இல்லை.

உங்கள் உணர்ச்சி இனிமையான தன்மையில் வெளிப்படும்போது அதை அன்பு என்று குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் இங்கேயே அமர்ந்து கொண்டு, இங்கே இல்லாத யாரோ ஒருவர் மேல் கூட உங்களால் அன்பாக இருக்கமுடியும். எனவே நீங்கள் அன்பு நிலையில் இருப்பதற்கு வெளி உதவி எதுவும் தேவையில்லை. அன்பான நிலையில் இருக்க பெரும்பாலானோருக்கு இன்னொருவரின் உதவி தேவைப்படுகிறது.

ஒரு மனிதர் தன் இயல்பான தன்மை பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளும்போது அன்பை, பேரானந்தத்தை தானாகவே அனுபவிக்கப் புரிந்து கொள்கிறார். வேறு யார் உதவியும் தேவைப்படுவதில்லை. ஏனெனில் இது உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் உணர்ச்சி, உங்கள் இரசாயனம் சம்பந்தப்பட்டது.

நமது வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை நாம்தான் உருவாக்குகிறோம் என்ற விழிப்புணர்வு இல்லாத மக்கள், தங்களுடைய அனுபவங்களுக்கு தங்களைச் சுற்றியுள்ள மக்களும் சூழ்நிலைகளுமே காரணம் என்று நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையில்லை. மனிதர்களுடைய அனுபவங்கள் எல்லாமே 100% அவர்களாகவே உருவாக்கிக் கொள்வதுதான். இதைப் புரிந்துகொண்டால், உங்கள் உடல், மனம், உணர்ச்சி, சக்திநிலை ஆகியவற்றை எப்போதும் இனிமையாகவே வைத்துக்கொள்ள விரும்புவீர்கள்.


அடுத்த வாரம்...

நம் பாரம்பரிய திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பற்றியும், மாங்கல்யக் கயிற்றில் உள்ள விஞ்ஞானம் குறித்தும் பேசுகிறார் சத்குரு.