இன்றைய உலகில் பெருகி வரும் ஈவ் டீஸிங், பெண்கள் பாதுகாப்பின்மை ஆகியவற்றிற்கு சமூக அளவில் தீர்வை தேடினாலும், இது போன்ற சூழ்நிலையை ஒரு பெண் எப்படி கையாள்வது? அதற்கு எப்படி தன்னைத் தயார்படுத்திக் கொள்வது? என்ற ஒரு பெண்ணின் கேள்விக்கு சத்குரு அளிக்கும் பதில் இங்கே...

Question: நமஸ்காரம் சத்குரு, சாலையில் செல்லும்பொழுது ஆண்கள் சிலர் என்னிடம் போக்கிரித்தனமாக நடந்து கொண்டால் முன்பெல்லாம் எனக்கு அதிகக் கோபம் வரும். ஆனால் இப்பொழுதெல்லாம் கோபப்படுவது தேவையற்றது எனத் தோன்றுகிறது. அந்த செயலைக் கண்டு கொள்ளாமல் சென்று விடலாம் என்று நினைக்கிறேன். என் மீது இது போன்றவர்களின் கவனம் திரும்பாமல், ஒரு பெண்ணாக நான் என்னை எப்படித் தற்காத்துக் கொள்வது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

நீங்கள் சாலைகளில் செல்லும்பொழுது ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ செல்லாமல், ஒரு மனித உயிராய் செல்லக் கற்றுக் கொள்வது அவசியம். பெண்களின் பெரும்பாலான உடைகள் வக்கிர புத்தி நிறைந்த ஆண்களால்தான் வடிவமைக்கப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏதோ ஒன்றை வாங்கி, ஏனோ தானோ என்று அணிந்து கொள்ளாமல், உங்களுக்கு தேவையான விதத்தில் ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக பெண்களுக்கு, தனது வசீகரத்தால் மற்றவர்களைக் கவரும் வகையில் அலங்கரித்துக் கொள்வது பிடிக்கும். அதில் தவறில்லை. ஆனால் பெண்களின் உடைகள் வக்கிர மனம் படைத்த ஆண்களால்தான் பெரும்பாலும் வடிவமைக்கப்படுகிறது. அவர்களின் வக்கிரமான ஆசைகளை திருப்திப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே அவை இருக்கின்றன. அதற்கு நீங்கள் ஒருபோதும் இணங்கக் கூடாது.

இன்று பல சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. உங்களைத் தவறான நோக்கில் பார்த்தாலே போதும், அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் அளவிற்குக் கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால், அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல், அவர்களை தண்டிப்பதாலும் தூக்கில் போடுவதாலும் எல்லாம் மாறிவிடும் என நினைப்பது தப்புக் கணக்கு. அப்படியெல்லாம் இது சரியாகிவிடாது.

கொஞ்சம்கூட மனிதத் தன்மையே இல்லாத மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சிலர் ஒருவிதத் தூண்டுதலால் வக்கிரச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் உங்களால் தூண்டப்படாமல் இருப்பது உங்கள் கையில்தான் உள்ளது. இந்த வகையான கவனம் உங்கள் மீது திரும்ப வேண்டாம் என நினைத்தால், எதனால் உங்கள் மீது அதுபோன்ற கவனம் வருகிறது என்பதை கவனித்து, அதனை மாற்றிக் கொள்ளுங்கள். அல்லது முற்றிலுமாக அதுபோன்ற விஷயங்களை தூக்கிப் போட்டு விடுங்கள்.

ஆனால், சிலர் நிஜமாகவே மிருகத்தனமாக இருப்பார்கள். அவர்களிடம் இருந்து நீங்கள் விலகி இருப்பதுதான் நல்லது. அவர்களிடம் இருந்து ஆண்களைக் கூட நான் விலகி இருக்கச் சொல்லுவேன். அவர்கள் ஆண் பெண் வேறுபாடு பார்ப்பதில்லை. அவர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே தீங்கு விளைவிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் பெரும்பாலானோரிடம் தாங்கள் தூண்டப்படும்போது மட்டுமே தங்களது முன்னோர்களின் குணமும் (மிருக குணம்) பிரச்சனைகளும் தலை தூக்குகின்றன. அவர்களிடம் கொஞ்சம் பார்த்து நடந்து கொண்டால், அவர்களெல்லாம் சாதாரணமானவர்கள்தான்.

உங்களை நோக்கி இது போன்றவர்களின் கவனம் ஈர்க்கப்படாமல் இருக்க, நாகரீக உடைகள் மீதுள்ள மோகத்தைத் தாண்டி, உங்களை நீங்கள் கொஞ்சம் கவனித்து உருவாக்க வேண்டியுள்ளது. எது உகந்தது எனப் பார்த்து அணியக் கூடிய பக்குவம் உங்களுக்கு இருக்க வேண்டும். கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏதோ ஒன்றை வாங்கி, ஏனோ தானோ என்று அணிந்து கொள்ளாமல், உங்களுக்கு தேவையான விதத்தில் ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இது எல்லோருக்கும் பொருந்தும்.

நீங்கள் முழுக்க போர்த்திக்கொள்ளும் வகையில் உடை அணிய வேண்டாம், அதே சமயம் நீச்சல் உடையையும் அணிய வேண்டாம். உங்களுக்கு பிடித்தமான வகையில், ஆனால் எவ்வகையிலும் யாருக்கும் சலனம் ஏற்பட்டு விடாத விதத்தில் அழகாக உங்களை அலங்கரித்துக் கொள்ளலாம். உங்களின் உடை அலங்காரமும் தோற்றமும் மற்றவர்கள் பாராட்டும்படி இருக்கலாம். ஆனால் அது அவர்களை எவ்வகையிலும் சலனப்படுத்தத் தேவையில்லை..

இது, நான் உங்களுக்கு வழங்கும் யோசனை அல்ல, “நான் என்ன செய்ய வேண்டும்” என்று நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். தேர்வு செய்வதென்பது உங்கள் கையில்தான் உள்ளது. யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் இருப்பதென்பது உங்களால் இயலாது. அதை உங்களால் ஏற்க முடியாது. உங்களுக்கு அடுத்தவரின் கவனத்தை ஈர்க்க வேண்டும், ஆனால் அதை அங்கேயே நிறுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு கலை. உங்களுடைய உணர்வுப்பூர்வமான ஈடுபாட்டாலும் வசீகரத்தாலும் மற்றவரின் கவனத்தை உங்கள் மீது திருப்ப வேண்டும், ஆனால் அது எல்லையைத் தாண்டாமல், அத்துடன் நின்றுவிட வேண்டும்.

சமூகச் சூழலில் தங்களை எப்படி நடத்திக் கொள்வது, வெளிக்காட்டுவது என்பது பற்றியும், தங்களுடைய புறத் தோற்றம் குறித்தும் கவனமும் அக்கறையும் எல்லோரிடமும் இருப்பது மிகவும் அவசியமானது.