சத்குருவிற்கு சமைப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு என்பது பரவலாகத் தெரிந்த விஷயம். சத்குருவின் வாழ்க்கைச் சரிதத்தை, "மோர் தன் எ லைஃப்" என்ற புத்தகமாய் வெளியிட்ட அருந்ததி சுப்ரமணியம் அவர்கள், அப்புத்தகத்தில் சொல்கிறார், "வாழ்வின் மீது சத்குருவின் ஈடுபாடு வேறுபல அம்சங்களிலும் வெளிப்படுகிறது. சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர் 'சமையல்' கலையிலும் சந்தோஷமாக, அதே ஈடுபாட்டுடன் ஈடுபடுகிறார். அதுமட்டுமல்ல, இவ்வுலகிலேயே அவரின் மசாலா தோசை போன்று வேறு யாருமே செய்யமுடியாது என்றும்கூட சொல்கிறார். இதை ஆமோதிக்கும் அவரின் மகள் ராதே, 'என் தந்தை தான் உலகின் தலைசிறந்த "குக்"' என்கிறார் பெருமிதத்தோடு. 'கார்டன் ராம்சே' என்ற புகழ்பெற்ற இங்கிலாந்து செஃப், அதிலும் யாரையும் எதையும் அத்தனை சுலபமாக ஏற்காதவர், நம் ஆசிரமம் வந்திருந்தபோது சத்குருவின் சமையல் பற்றியும், ஆசிரம சாப்பாடு பற்றியும் பல நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்."

எனினும் இப்போது அதிகரித்துவரும் அவரின் செயல்பாடுகளுக்கு இடையே, முன்போல் தோசை செய்வதில் ஈடுபட நேரமிருப்பதில்லை என்கிறார் சத்குரு.

சத்குரு: ஒரு காலத்தில் என் மகளுக்காக தினமும் நானே சமையல் செய்து கொண்டிருந்தேன். அவள் வீட்டில் இருக்கும் போதெல்லாம் அவளுக்காக நானே சமையல் செய்வேன். ஆனால் இப்போதோ, செய்வதற்கு மிக அதிகமாக வேலைகள் இருப்பதால் காலைப்பொழுதுகள் என் வசத்திலேயே இருப்பதில்லை. அதனால் எப்போதாவது மாலை வேளைகளில் சமைக்கிறேன், ஆனால் அதுவும் அரிதாகிவிட்டது.