சிறிதும் தொய்வில்லாமல் 150 பாவ-ஸ்பந்தனா!

சத்குரு அவர்களால் சச்சின் டெண்டுல்கர் என்றழைக்கப்பட்ட ராமலிங்கம் ஐயா, கடந்த 14 ஆண்டுகளாக பாவ-ஸ்பந்தனா வகுப்புகளில் தன்னார்வத் தொண்டராக பங்கேற்று வருகிறார். அவருக்கு வயது வெறும் 73.

ஈஷா யோக மையத்தில் நடக்கும் அனைத்து வகுப்புகளும் தன்னார்வத் தொண்டர்களின் பங்களிப்பில் நடைபெறுபவையே. பலவிதமான யோக வகுப்புகள் இருந்தாலும் பாவ-ஸ்பந்தனாவுக்கு தன்னார்வத் தொண்டாற்றுவது உடலளவில் சற்றே சவால் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும். அதிகாலை முதல் இரவு வரை நீடிக்கும் இந்த வகுப்புகள் ஒருவரின் ஆன்மத் தேடலுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் சத்குரு வடிவமைத்துள்ளார். இந்த வகுப்புகளுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, ஐம்பதல்ல, நூற்றைம்பது முறை தன்னார்வத் தொண்டாற்றியுள்ள ராமலிங்கம் ஐயா அவர்கள் தனது 14 ஆண்டுகால அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...

ramalingam-anna-bspvolunteerநான் ராமலிங்கம், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவன். 2004-ல் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். எனக்கு சர்க்கரை வியாதி இருந்ததால் எனது நண்பர் ஒருவர் நீங்கள் ஈஷா யோக வகுப்பு கற்றுக்கொண்டால் சர்க்கரை வியாதி கட்டுக்குள்ளிருக்கும் என்றார். நானும் அதை ஏற்று ஈஷா யோக வகுப்பில் சேர்ந்தேன். வகுப்பு பலன் தந்தது.

வகுப்பில் கலந்து கொண்ட சிலருடன் ஈஷா யோக மையத்தைப் பார்வையிட வந்தேன். எனக்கு இந்த இடம் மிகவும் பிடித்துப் போகவே உடனே பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்தேன். பாவ-ஸ்பந்தனா வகுப்பில் பங்கேற்றபோது அதில் தன்னார்வத் தொண்டாற்றியவர்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தனர். நாமும் ஒரு நாள் இதுபோல தன்னார்வத் தொண்டில் ஈடுபட வேண்டும் என்று எனக்கு தோன்றியது.

சில வாரங்கள் கடந்தன, 2005 பிப்ரவரியில் எனக்கு முதல் பாவ-ஸ்பந்தனா வகுப்பிற்கு தன்னார்வத் தொண்டாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அதிலிருந்து இன்றுவரை சில பாவ-ஸ்பந்தனா வகுப்புகளைத் தவிர மற்ற எல்லா வகுப்புகளுக்கும் தன்னார்வத் தொண்டாற்றியுள்ளேன். இதன் மூலம், ஆசிரியர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பிற தன்னார்வத் தொண்டர்கள், பங்கேற்பாளர்கள் என ஆயிரக்கணக்கான மக்களுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, எத்தனை வயதானாலும் சரி, அவர் அழைக்கும் வரை நான் வருவேன், வந்துகொண்டே இருப்பேன்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதய நோயின் கோரம்!

ஒருமுறை நான் ஹைதராபாத்தில் இருந்தபோது எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் உடனே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். எனக்கு எந்த ஒரு பயமும் தோன்றவில்லை. அப்பொழுது நான் 24 பாவ-ஸ்பந்தனா வகுப்புகளுக்குத் தன்னார்வத் தொண்டு செய்திருந்தேன்.

அறுவை சிகிச்சை நடக்கும் நேரத்திலும் எனக்கு எந்த ஒரு கஷ்டமும் தெரியவில்லை. மனம் முழுவதும் ஈஷாவிலேயே இருந்தது. சத்குரு என்னுடன் இருப்பதுபோலவே உணர்ந்தேன். அச்சமயத்தில் யோக மையத்தில் பாவ-ஸ்பந்தனா வகுப்பு நடந்து கொண்டிருந்தது, மனம் ஈஷா யோக மையத்தையே நாடியது. இவ்வளவு பெரிய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னாலும் எவ்வாறு இவர் மனம் தளராமல் இருக்கிறார் என்று மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

சத்குரு ஒரு நிகழ்ச்சியில் கூறி இருப்பார்: “இறப்பு என்பது இயற்கைதான்” என்று. அது என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. மூன்று மாதங்கள் கண்டிப்பாக ஓய்வெடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதை ஏற்று ஓய்விலிருந்தேன். மூன்று மாதங்களுக்குப் பின்னர் மருத்துவர்கள் மீண்டும் பரிசோதித்து நீங்கள் பூரண குணமடைந்து விட்டீர்கள் என்றனர். அப்பொழுதே முடிவெடுத்து விட்டேன். அடுத்த மாதம் ஈஷா யோக மையத்திற்குச் சென்று தன்னார்வத் தொண்டாற்ற வேண்டும் என்று. இங்கு வந்தபோது இங்கிருப்பவர்களின் அன்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

உள்நிலை ஆனந்தமே பாவ-ஸ்பந்தனா!

பாவ-ஸ்பந்தனாவில் பங்குபெறும் ஒவ்வொருவரின் அனுபவமும் எனக்கு பூரிப்பைத் தருகிறது. பாவ-ஸ்பந்தனாவில் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்துள்ளேன், வகுப்புக்கு வரும்போது அவர்கள் நடந்துகொள்ளும்விதம் பின் மெதுவாக அவர்களுக்குள் நடக்கும் மாற்றம், வகுப்பு முடிந்து விடைபெறும்போது அவர்களின் மெய்மறந்த இன்பம், இதைக் காணும்போது எனக்குள் பேரானந்தத்தை உணர்கிறேன். ஆயிரக்கணக்கானவர்கள் உள்நிலை மாற்றத்தை உணர்ந்து சென்றுள்ளதை நான் கண்டுள்ளேன். அதில் பலர் மீண்டும் பாவ-ஸ்பந்தனா வகுப்புகளுக்கு தன்னார்வத் தொண்டாற்ற வந்துள்ளார்கள். அது மகிழ்ச்சியைத் தருகிறது. இத்தனை பேர் இதை உணர்வதற்கு நானும் உதவியாய் இருந்தேன் என்பதை எண்ணும்போது பூரிப்பு ஏற்படுகிறது. பல தன்னார்வத் தொண்டர்கள் இதில் ஈடுபடுகிறார்கள். நான் சிறு பணியை மட்டுமே செய்கிறேன். அவர்களுடன் இருப்பதே எனக்கு ஆனந்தத்தைத் தருகிறது.

பாவ-ஸ்பந்தனாவின் கட்டுக்கோப்பு!

சத்குரு அவர்கள் மிகக் கட்டுக்கோப்பாக பாவ-ஸ்பந்தனாவை வடிவமைத்துள்ளார்கள். அதிகாலை முதலே ஆயத்தப் பணிகளைத் தொடங்க வேண்டும். எல்லோரும் நான்கு மணிக்கு எழுகிறார்கள் என்றால், நான் முன்பே எழுந்து செயல்களை செய்யத் தொடங்கி விடுவேன். வகுப்பு நடக்கும்பொழுது மட்டும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம்தான் தூங்குவேன். ஒருபோதும் களைப்பை உணர்ந்ததில்லை. அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டும்தான் மனம் சிந்தித்துக் கொண்டிருக்கும்.

சத்குரு புகழாரம்!

என்னுடைய 99-வது பாவ-ஸ்பந்தனா முடிந்ததை ஆசிரியர் ஒருவர் சத்குருவிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் என்னுடைய ஆசிர்வாதம் அவருக்கு எப்பொழுதும் உண்டு என்று கூறினார். மார்ச் 2013ல் எனது நூறாவது பாவ-ஸ்பந்தனாவை இங்கு அனைவரும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி இருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்ததில் எல்லாம் சமநிலையில் இருந்தது ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால் உடல்நிலையில் பல சிக்கல்களை நான் உணர்ந்தேன்.

மார்ச், ஏப்ரல், மே மூன்று மாதங்கள் என்னால் பாவ-ஸ்பந்தனாவில் கலந்துகொள்ள இயலவில்லை. ஜூன் மாதத்தில்தான் வர முடிந்தது. நூறாவது பாவ-ஸ்பந்தனாவில் எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி கலந்துகொண்டேன். எப்பொழுதும் வகுப்பு முடிந்ததும் நான் வீட்டிற்குச் சென்றுவிடுவது வழக்கம். ஆனால், அன்று சிறிது தாமதமானதால் தங்கிவிட்டு நாளை செல்லலாமென்று நினைத்து இருந்து விட்டேன். அன்று எதேச்சையாக சத்குருவின் தர்ஷன் இருந்தது. ஒரு ஆசிரியர் என்னிடம் வந்து ‘நீங்கள் தர்ஷனில் கலந்து கொள்ளுங்கள்’ என்றார். நானும் சென்று ஒரு மூலையில் நின்று சத்குருவின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் சற்றும் எதிர்பாராத விதமாக சத்குரு என்னை அழைத்து, ‘நம்மிடமும் ஒரு சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார்’ என்று பாராட்டினார். அது மிகுந்த மனநிறைவைத் தந்தது.

25 நாள் தொடர் பாவ-ஸ்பந்தனா!

ஆசிரமம் அல்லாது இரண்டு முறை நான் புதுதில்லி சென்று பாவ-ஸ்பந்தனா வகுப்புகளிலும் கலந்து கொண்டுள்ளேன். ஒருமுறை தில்லியில் பாவ-ஸ்பந்தனா நடந்தபோது வாலண்டியரிங் செய்ய சென்றேன். ரயிலில் இங்கிருந்து பயணம் செய்து 13 நாட்கள் பாவ-ஸ்பந்தனாவிற்கு தன்னார்வத் தொண்டாற்றிவிட்டு திரும்பி வந்த அன்றே ஆசிரமத்திலும் பாவ-ஸ்பந்தனா வகுப்பு துவங்கியது. உடனே இங்கும் வந்து கலந்துகொண்டேன். தோராயமாக 25 நாட்கள் இடைவிடாது பாவ-ஸ்பந்தனா வகுப்புகளில் பங்கெடுத்தது வியப்பைத் தருகிறது. என்னுள் இருந்து என்னை சத்குருதான் இயக்குவதாக நான் உணருகிறேன். குறிப்பாக பிப்ரவரியில் தில்லியில் மிகவும் குளிராக இருக்கும். இந்த வயதில் என்னால் எவ்வாறு அதைச் சமாளித்து இந்த பணிகளைச் செய்ய முடிந்தது என்று எனக்கு இன்றும் ஆச்சரியமாக உள்ளது.

திடீர் திருப்புமுனை!

பலர் பாவ-ஸ்பந்தனாவை உணர்ந்து சென்றதை நான் கண்டுள்ளேன். வகுப்புக்குள் வரும்போது அவர்களுக்குள் ஆயிரம் கேள்விகள் ஆயிரம் குழப்பங்கள் அதையெல்லாம் தவிர்த்து வகுப்பில் அமர்ந்து பாவ-ஸ்பந்தனாவை உணர்ந்து செல்லும்போது, அவர்களின் முகத்தில் ஒரு தெளிவு காணப்படும். அதைக் காணும்போது எனக்குள் பேரானந்தத்தை உணர்கிறேன். பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். என்னுடைய வாழ்க்கையையே மாற்றியது பாவ-ஸ்பந்தனா. நான் இன்று மிகவும் ஆனந்தமாக இருப்பதற்கு பாவ-ஸ்பந்தனா ஒரு முக்கியக் காரணம். என்னிடமிருந்த பல தீய பழக்கவழக்கங்கள் பாவ-ஸ்பந்தனா வகுப்பிற்கு பின் நீங்கியுள்ளது என்று பலர் அவர்களின் வாழ்க்கையில் பாவ-ஸ்பந்தனா எவ்வாறு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பது பற்றி கூறியுள்ளனர்.

பலமுறை நான் ஆலோசித்ததுண்டு, வயதாகிவிட்டது நிறுத்திவிடலாம் என்று. ஆனாலும் ஆசிரமத்தில் பாவ-ஸ்பந்தனா நடக்கும்போது என்னால் வீட்டில் இருக்க முடிவதில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழப்போகிறேன் என்று தெரியாது. ஆனால், நானாக இல்லை “அவர் அழைக்கிறார், நான் வருகிறேன்.” எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, எத்தனை வயதானாலும் சரி, அவர் அழைக்கும் வரை நான் வருவேன், வந்துகொண்டே இருப்பேன்!

ஆசிரியர் குறிப்பு :

நீங்களும் ஆசிரமத்தில் நிகழும் ஈஷா யோகா நிகழ்ச்சிகளில் தன்னார்வத்தொண்டு புரிய விரும்பினால், iyc.programvolunteering@ishafoundation.org என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் விவரங்களை அனுப்பலாம்.

உங்கள் ஊரிலும், அருகாமையிலும் மட்டுமல்லாது உலகெங்கும் நடைபெறும் ஈஷா யோகா வகுப்புகள் பற்றிய விபரங்களைப் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.​

sg-app-newsletter