பகுதி 1

பருத்தி, சாத்துக்குடி பண்ணைகளில் கிடைத்த 2 மற்றும் 3ஆம் நாள் அனுபவங்கள்!

ஆரஞ்சில் ஊடுபயிரான பப்பாளி…

இவர் நாட்டுரக பப்பாளி மற்றும் ஆரஞ்சு சாகுபடி செய்துவருகிறார். மாதுளையில் குறைந்த வருமானம் மட்டுமே கிடைத்ததினால் மாதுளை தோட்டமாக இருந்த பண்ணையில் மாதுளை மரங்களை நீக்கிவிட்டு தற்போது பப்பாளி சாகுபடி செய்துள்ளார். நாட்டுரக பப்பாளி மரங்கள் 12x6 அடி இடைவெளியில் திடமாக வளர்ந்திருந்ததுடன், காய்களும் நல்ல பருமனுடன் இருந்தன. பப்பாளி வரிசைகளுக்கு நடுவில் ஊடுபயிர்கள் மற்றும் மூடாக்கு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இடைவெளி 12 அடி இருப்பதினால் ஊடுபயிர்கள் சாகுபடியுடன் வாழையையும் நடவு செய்யலாம் என்று சுபாஷ் பாலேக்கர் ஐயா கிஷோருக்கு அறிவுரை வழங்கினார். அனைவரும் சுவையான பப்பாளியை ருசித்துவிட்டு ஆரஞ்சுத் தோட்டத்திற்கு நகர்ந்தோம்.

இவரது பண்ணையில் 10 வயது மரங்களைக் கொண்ட ஆரஞ்சுத் தோட்டமும் உள்ளது. 20x20 அடி இடைவெளியில் உள்ள ஆரஞ்சு மரங்களுக்கிடையே வரிசைக்கு வரிசை 7 அடி இடைவெயிளில் இரண்டு வரிசையில் பப்பாளி மரங்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது, நெருக்கமாக நடவு செய்திருப்பதால் போதிய சூரிய ஒளி கிடைக்காததால் பப்பாளி காய்ப்புக் குறைவாகவும், சிறிய காய்களுடனும் இருந்தன. எனினும் இந்த ஆண்டு நடப்பட்ட பப்பாளிக் கன்றுகள் ஒரு வரிசையில் மட்டும் நடவு செய்யப்பட்டு நல்ல சூரியவெளிச்சம் படும் வகையில் நடவு செய்யப்பட்டுள்ளது. சரியான இடைவெளி இருந்தால் ஆரஞ்சு - பப்பாளி கூட்டணி நல்ல மகசூலைத் தரும்.

இயற்கை விவசாயத்தில் அருமையான பருத்தி

திரு.பிரகாஷ் தண்டேல் அவர்களது பண்ணையில் பருத்தியும் மிளகாயும் சாகுபடி செய்யப்பட்டிருந்தன, பி.டி பருத்திதான் என்றாலும் இயற்கை முறையில் அருமையாக விளைந்திருந்தது. வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியில் பாத்தி அமைத்து, செடிக்குச் செடி ஒன்றரை அடி இடைவெளியில் பருத்தி நடவு செய்யப்பட்டுளள்து. பருத்தி ஆறு அடி உயரத்தில் நன்றாக வளர்ந்திருந்தது. இலைகளில் சில கரும்புள்ளிகளைத் தவிர எந்தவித பூச்சித்தாக்குதலோ நோய் தாக்குதலோ இல்லை என்பது ஆச்சரியமான விஷயம். பாலேக்கர் ஐயா பி.டி பருத்தியை ஊக்குவிக்கவில்லை என்றாலும் தற்போது நாட்டுரகப் பருத்தி விதை கிடைப்பது அரிதாகிவிட்டதால் விவசாயிகள் பி.டி. பருத்தியையே சாகுபடி செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான பருத்தி விவசாயிகள் பி.டி. பருத்தியை இயற்கை முறையில் சாகுபடி செய்ய இயலாது என்று கூறிவரும் நிலையில், இயற்கை விவசாய முறையில் பி.டி பருத்தியை சாகுபடி செய்யமுடியும் என்பது நிரூபணமாகியுள்ளது. பத்திலைக் கஷாயம் போன்ற பூச்சி விரட்டிகளை முறையாக தெளித் துவருவதினால் இது சாத்தியமாகியுள்ளது. வாய்க்கால் பாசனத்தில் தண்ணீர் சற்று அதிகமாகவே கொடுக்கப்படுகிறது.

ஒரு ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மூன்றரை அடி பாத்தியும் ஒன்றரை அடி பாரும் அமைத்து, பாரில் ஒரு அடி இடைவெளியில் இரண்டு வரிசையாக மிளகாய் நடப்பட்டுள்ளது. மிளகாயுடன் 7அடிக்கு ஒரு சோளமும் 10 அடிக்கு ஒரு செண்டு மல்லியும் பூச்சிகளைக் கவர நடப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் இப்பண்ணை ஒரு ஆரஞ்சு தோட்டமாக மாற்றும் வகையில் மிளகாய் நாற்றுகளுக்கிடையில் 15 அடி இடைவெளியில் ஆரஞ்சு நாற்று நடப்பட்டுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மூன்றாவது நாள்

ஆரஞ்சு தோட்டத்துடன் பருத்தி சாகுபடி

திரு.நிடின் கும்பலே, இவர் இரண்டு வருடங்களாக பாலேக்கர் ஐயாவின் வழியில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். இரண்டு ஏக்கரில் ஆரஞ்சுத் தோட்டத்துடன், இரண்டு ஏக்கரில் பருத்தியும் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. ஆரஞ்சில் ஊடுபயிர்கள் சாகுபடி இல்லை என்றாலும் முழுமையாக இயற்கை முறைக்கு மாற்றம் செய்துள்ளார். இதனால் தற்போது காய்ப்பும் அதிகரித்துள்ளது. நாங்கள் பண்ணைக்குச் செல்லும்போது ஆரஞ்சு பழங்கள் அறுவடை நடந்துகொண்டிருந்தது.

பருத்திச் செடிகள் ஆறரை அடி உயரத்திற்கு மேல் நன்றாக வளர்ந்திருந்தது. இவரும் பி.டி. பருத்தியைத்தான் சாகுபடி செய்துள்ளார். பொதுவாக பருத்தியைத் தாக்கும் காய்ப்புழு மற்றும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் இல்லாமல் செடிகள் நன்றாக இருந்தன. (கட்டுரையின் நோக்கம் பி.டி.யை ஊக்குவிப்பதல்ல).

ஆரஞ்சுகளுக்கு மாற்றாக சாத்துக்குடி சாகுபடி

திரு.பிரசாந்த் வாங்ஹடே, ஒரு அரசு அதிகாரியான இவர் வார்தா பகுதியில் பாலேக்கர் இயற்கை விவசாயத்தின் (SPNF)* ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவரது 12 ஏக்கர் பண்ணையில் புதிய முயற்சியாக ஆரஞ்சு மரங்களுக்கு பதில் சாத்துகுடி சாகுபடி செய்துள்ளார். கீரைகளுக்காக தனியான ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளார். மேலும் ஐந்தடுக்கு மாம்பழ மாதிரி முறையில் தற்போது கன்றுகளையும் நடவு செய்துள்ளார்.

சாத்துக்குடி கன்றுகள் இரண்டு வயதை அடைந்துள்ளது. இக்கன்றுகள் வரிசைக்கு வரிசை 25 இடை வெளியிலும் கன்றுக்கு கன்று 20 அடி இடைவெளியிலும் நடப்பட்டுள்ளது. இந்த 25 அடி இடைவெளியில், 15 அடி அகலத்திற்கு ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் (ridges and furrows) எடுக்கப்பட்டு, அந்த மண் 10 அடி அகலத்திற்கு மேட்டுப்பாத்தி போல் அமைக்கப்பட்டுள்ளது. மண் சரளையும் களியும் கலந்ததாக இருப்பதால் இந்த அமைப்பு தண்ணீர் வடிவதற்கு எளிதாக இருக்கிறது.

சாத்துகுடி மரங்களில் இடையில் பலன்தரும் மரங்களை நடவுசெய்துள்ளார், இரண்டு ஏக்கரில் சாத்துகுடியுடன் முருங்கையும், அடுத்த இரண்டு ஏக்கரில் சாத்துகுடியுடன் பப்பாளியும் நடவு செய்யப்பட்டுள்ளது. முருங்கை சிறந்த நைட்ரஜன் நிலைப்படுத்தும் தாவரம் என்பதால் மண்வளம் அதிகரிப்பதோடு தொடர்ச்சியான வாருமானமும் கிடைக்கும். பப்பாளி சில மாதங்களில் காய்ப்புக்கு வந்துவிடும். இதனால் சாத்துகுடியின் மூலம் வருமானம் கிடைக்கும்வரை ஊடுபயிர்களின் மூலமும் பப்பாளி மற்றும் முருங்கையின் மூலம் நிச்சய வருமானத்தைப் பெற இந்த மாதிரி (Model) வழி வகுத்துள்ளது.

இடைப்பட்ட 15 அடி பாத்தியில் கொத்தமல்லி, அரைக்கீரை போன்றவை விதைக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்தன. மேலும் அவரை, செடி அவரை, தட்டை, பச்சைப்பயறு, கொள்ளு போன்ற பயிர்களும் இருந்தன, இவை நல்ல வருமானத்தைத் தருவதோடு, சிறந்த உயிர் மூடாக்காகவும் செயல்படக் கூடியவை. சில கொடிக் காய்கறிகளையும் இடையில் பார்க்க முடிந்தது.

மேலும் இவர் ஆரஞ்சு நாற்றுக்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறார். இதற்காக நாற்றங்காய் நாற்றுக்களை ஒரு ஏக்கர் அளவில் சாகுடிபடி செய்துள்ளார். நாற்றுக்கள் ஒரு அடி உயரத்திற்குமேல் வளர்ந்திருந்தன. தரமான ஆரஞ்சு மரங்களில் இருந்து எடுக்கப்பட்ட கிளைகள் இந்த நாற்றங்காய் செடிகளில் ஒட்டுக்கட்டப்படுகிறது. பயணத்தில் கடைசியாகப் பார்த்த இப்பண்ணை சிறப்பாக இருந்தது.

பண்ணை பார்வையிடலுக்குப் பின் ஐந்து அடுக்கு மாதிரி குறித்தும், இயற்கை விவசாயத்தின் அடிப்படை விஷயங்களை குறித்தும் பாலேக்கர் ஐயா விளக்கினார். ஆந்திர வேளாண் கல்லூரி மாணவ மாணவியர் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்களைப் பெற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் பாலேக்கர் ஐயா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு விடைபெற்றோம்.

இந்தப் பயணத்தில் நாங்கள் தெரிந்து கொண்ட முக்கிய விஷயம் பழ மரங்கள் மற்றும் டிம்பர் மரங்களில் ஊடுபயிர் செய்யும்போது எந்த அளவு இடைவெளி விடவேண்டும். மரங்கள் எத்தனை ஆண்டுகளில் எவ்வளவு குடை விரிக்கும்? அப்போது ஊடுபயிர் செய்ய முடியுமா? எதிர்காலத்தில் பழத்தோட்டமாக மாற உள்ள பண்ணையில் ஆரம்ப வருடங்களில் வருமானம் தரக்கூடிய வகையில் என்னென்ன பயிர்களை சாகுபடி செய்ய முடியும் போன்ற பல கேள்விகளுக்கு சில பதில்கள் கிடைத்துள்ளன. பழப்பயிர்களுடன் ஊடுபயிர் செய்யும் நுட்பத்தை மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை எங்களுக்குத் தூண்டியது. பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் ஈஷா விவசாய இயக்கம் சார்பாக நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.

தொகுப்பு: ஈஷா வேளாண்காடுகள் திட்டம்

தொடர்புக்கு: 94425 90068

 

ஈஷா விவசாய இயக்கம் பற்றிய விவரங்களுக்கு முகநூல் மற்றும் Youtube channelலில் இணைந்திடுங்கள்!