"நிழலின் அருமை வெயிலில் தெரியும்" என்று சொல்வதுண்டு. தமிழகத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ள கோடை காலம், இந்த வாக்கியத்தை அனுபவப்பூர்வமாய் உணர்த்துவதற்குக் காத்திருக்கிறது. இந்தக் கட்டுரை வெயிலின் கொடுமையிலிருந்து நம்மைக் காக்கக் கூடிய மரங்களின் அவசியத்தை உணர்த்துகிறது.

மனிதனுக்கும் மரங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனிதனின் வெளிமூச்சுதான் தாவரங்களின் உள்மூச்சு. தாவரங்களின் வெளிமூச்சு, மனிதனின் உள்மூச்சு. மனிதனுக்கும் தாவரத்துக்கும் உள்ள பந்தமான இந்த இயற்கைச் சுழற்சிதான் பல்வேறு நிலைகளில் மனிதர்களுக்குக் கனிகளாக, விலங்குகளுக்கு உணவாக, பல்வகை உயிரிகளின் ஆதாரமாக விளங்குகிறது. அதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் வாட்டி வதைக்கும் கோடையிலிருந்து மக்களை காக்கும் ஒரே கருவியாக கருதப்படுவது மரங்களே!

கோடைகாலத்தில் பரவக் கூடியவைரஸ் நோய்களான சின்னம்மை போன்றவற்றிற்கு வேம்பே சரியான மருந்து.

ஆனால் இன்னும் கொஞ்ச காலம் கழித்து மரநிழலை மறந்துவிட வேண்டியதுதான். வசதி இருப்பவர்கள் ஏசி ரூமில் தஞ்சம் அடைய, வசதி இல்லாதவர்கள் மரநிழலை எண்ணி ஏங்குவதைத் தவிர வேறுவழியில்லை. மரங்கள் அந்த அளவிற்கு மனிதர்களால் அழிக்கப்பட்டு வருவதோடு பாலைவனமாகும் சூழலை நோக்கி இன்று தமிழகம் சென்று கொண்டிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆனால் இப்போது நாம் மனது வைத்து செய்ய வேண்டியதைச் செய்தால்கூட, இந்நிலைமாறி நம் வருங்கால சந்ததிகள் மரங்களின் குளு குளு நிழலை அனுபவித்து மகிழ வாய்ப்புள்ளது. சரி...என்ன வழி அது, என்று கேட்கிறீர்களா?! புதிதாய் ஒன்றுமில்லை, கிராமங்களிலும் ரோட்டோரங்களிலும் நாம் சாதரணமாகக் காணும் வேம்பு, நாட்டு வாகை, பூவரசு ஆகிய மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, அதனை நம் வீட்டு முற்றங்களிலும் சாலையோரங்களிலும் நட்டு வளர்ப்பதே அந்த வழியாகும்.

எண்ணற்ற மரவகைகள் இருக்க, இந்த மூன்று மரங்களை மட்டும் குறிப்பிட்டு சொல்வது ஏனென்றால், இதுபோன்ற மரங்கள் கோடை வெப்பத்தை தாங்கி, குறைந்த அளவு நீரை எடுத்துக்கொண்டு வளர்வதோடு, நல்ல நிழல் தந்து சுற்றுப்புறத்தைக் குளுமையாக்குகின்றன. இவைகள் நல்ல டிம்பர் வேல்யூ உள்ள மரங்களாகவும் உள்ளன.

வேப்பமரத்தின் அருமையினை புதிதாய் யாரும் சொல்லித் தெரியத் தேவையிருக்காது. மரத்தின் இலை, காய், விதை, மரப்பட்டை என அனைத்தும் மருத்துவ குணமும் விலைமதிப்பும் வாய்ந்தது. கோடைகாலத்தில் பரவக் கூடியவைரஸ் நோய்களான சின்னம்மை போன்றவற்றிற்கு வேம்பே சரியான மருந்து. இதன் மரக் கட்டையின் மதிப்பும் நல்ல வருவாயைப் பெற்றுத்தரும்.

காகம், மைனா போன்ற பறவைகளின் எச்சத்தில் ஆங்காங்கே விழுந்து முளைத்துக் கிடக்கும் இவ்வகை மரக்கன்றுகளை சேகரித்து, நமது வீடுகளின் முற்றத்திலும் விவசாய நிலங்களின் ஓரங்களிலும் நடலாம். இதற்கெல்லாம் நேரமில்லாதவர்கள் 'ஈஷா பசுமைக் கரங்கள்' உருவாக்கியுள்ள நாற்றுப் பண்ணைகளிலிருந்து மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஈஷா பசுமைக் கரங்கள்

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா அறக்கட்டளையானது, ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் பல மகத்தான செயல்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஈஷா பசுமைக் கரங்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை மிகக் குறைந்தவிலையில் (1 மரக்கன்று - ரூ.5.00) வழங்கி வருகிறது. ஈஷாவின் வேளாண் வல்லுனர்கள், மரக்கன்றுகள் நடுவதற்கு ஆலோசனைகளையும் மரம் வளர்ப்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் கூறி வழிகாட்டுகின்றனர்.

தமிழகமெங்கும் 50கி.மீ. சுற்றளவிற்கு ஒன்றென, மொத்தம் 85 நாற்றுப் பண்ணைகளை 'ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்' அமைத்துள்ளது. உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், ஈஷா பசுமைக் கரங்களின் பிற செயல்பாடுகள் குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொ. பே: 94425 90062