கொல்லைப்புற இரகசியம் - பகுதி 19

வடகிழக்குப் பருவமழை சாரல்கட்டிக்கொண்டு பெய்ய, கடந்த 4 நாட்களாக உமையாள் பாட்டியை பார்க்க முடியாமல் போனது! அதுதான் இன்று எப்படியும் பார்த்துவிடுவதென்று கிளம்பினேன். பாட்டியின் வீட்டிற்குச் செல்லும் வழியிலுள்ள குப்பை மேட்டிற்கருகில் உமையாள் பாட்டி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து அங்கு விறுவிறுவென எட்டுவைத்தேன்.

குப்பைமேனிச் செடியில பலவித மருத்துவ குணங்கள் இருக்கு. அதுல குறிப்பா சொல்லணும்னா அது ஒரு நல்ல மலம் இளக்கியா இருந்து, மலச்சிக்கலுக்குத் தீர்வா இருக்குது.

“என்ன பாட்டி, கும்பிட போன தெய்வம் குறுக்க வந்தது மாதிரி இங்க இருக்கீங்க?” நான் பாட்டியின் கையில் வைத்திருந்த பையை ஒத்தாசையாய் வாங்கியபடி கேட்டேன்.

“இங்க கொஞ்சம் வேல இருந்ததுப்பா, அதான் அப்படியே காலார நடந்து அப்படியே இந்தப்பக்கம் வந்தேன்.” பாட்டி பதிலளித்தபடியே குப்பை மேட்டைச் சுற்றியும் முளைத்திருந்த பச்சை செடிகளை ஏதோ ஆராய்ச்சியாளர் போல கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

குப்பைமேனி, Kuppaimeni Uses in Tamil

குப்பைமேனி, Kuppaimeni Uses in Tamil

“குப்பை மேட்டுல அப்படியென்ன பாட்டி வேல உங்களுக்கு?”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“குப்பைமேனிச் செடி தெரியுமா ஒனக்கு? அதத் தேடித்தான் இங்க வந்தேன். ஏதோ கொஞ்சம் கிடைச்சது. இன்னும் கொஞ்சம் கிடைச்சா நல்லாருக்கும். அதான் துளாவிக்கிட்டு இருக்கேன்.”

உமையாள் பாட்டி குப்பை மேட்டிற்கு வருகிறாள் என்றால் அதில் விஷயமில்லாமல் இருக்காது என்று நான் நினைத்தது சரியாகவே இருந்தது.

இவ்வளவு சொல்லிய பிறகு அந்த குப்பைமேனிச் செடியைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் வராமல் இருக்குமா என்ன...?! தொடர்ந்து உமையாள் பாட்டியிடம் கேட்டவாறே அவருடன் வீட்டிற்கு நடந்தேன்.

குப்பைமேனி பயன்கள் (Kuppaimeni Uses in Tamil)

குப்பைமேனி, Kuppaimeni Uses in Tamil

குப்பைமேனி இலை பயன்கள்:

மலச்சிக்கலுக்குத் தீர்வு:

“குப்பைபோல் (நோய்களால்) ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துறதால குப்பைமேனினு நாம சொல்றோம். பொதுவா குப்பைமேனிச் செடியில பலவித மருத்துவ குணங்கள் இருக்கு. அதுல குறிப்பா சொல்லணும்னா அது ஒரு நல்ல மலம் இளக்கியா இருந்து, மலச்சிக்கலுக்குத் தீர்வா இருக்குது. குப்பைமேனி இலைச்சாறு பலவகை ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தா இருக்குது. குப்பைமேனி இலையை அரைச்சு மலவாய் வழியாய் (சிறிய நெல்லிக்காய் அளவு) உட்செலுத்த நாட்பட்ட மலக்கட்டு நீங்கும். இலையை சாறெடுத்து சிறிது உப்பு சேர்த்து குடிச்சா மலம் நன்கு கழியும்.”

வலி குறைய:

“இலைச்சாறை தலைவலிக்கு பூசினா, வலி குறையும். இலைச்சாறை நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி வலியுள்ள இடங்களில் தடவலாம்.”

படுக்கைப் புண்கள் குணமாக:

“இலைச்சாறை படுக்கை புண்களுக்கு (Bed sores) பூசி வந்தா அவை குணமாகும். இலைய விளக்கெண்ணெயில வதக்கி இளஞ்சூட்டோட படுக்கை புண்ணுக மேல வச்சு கட்டிவந்தாலும் கூட புண் ஆறிடும்.”

இப்படி குப்பைமேனி இலைகளினால் விளையும் மருத்துவ பலன்கள் பற்றி விவரித்தவாறே வந்த பாட்டியிடம் நானும் ஆவலுடன் தொடர்ந்து கேட்க, குப்பைமேனி வேரின் மகத்துவத்தையும் எடுத்துரைத்தாள் பாட்டி!

குப்பைமேனி வேர் பயன்கள்:

குடற்பூச்சிகள்:

“குப்பைமேனி வேர்ல கஷாயம் செஞ்சு (30 - 100 மிலி) குடிச்சா குடற்பூச்சிகள் சாகும்.”

மலச்சிக்கலுக்குத் தீர்வு:

“வேரைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் தண்ணியில கலந்து, அத கால்பாகமாக (குடிநீர்) வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிச்சா மலச்சிக்கல் தீரும்.”

பாட்டி குப்பைமேனி இலை மற்றும் வேர்களின் மூலம் கிடைக்கும் மருத்துவ குணங்களை சொல்லி முடிப்பதற்கும் பாட்டியின் வீடு வருவதற்கும் சரியாக இருந்தது. பாட்டி சொல்லியதைக் கேட்ட பின் குப்பையில் வேர் விடும் இந்த குப்பைமேனியை, குப்பையில் கிடைக்கும் கோமேதகமாக எண்ணத் தோன்றியது எனக்கு.

“குப்பையில இருந்து கரண்ட் எடுக்குற திட்டம் எந்த அளவுக்கு சாத்தியம்னு தெரியல, ஆனா குப்பைமேனிச் செடியில இருந்து ஆரோக்கியம் எடுக்குறது கண்டிப்பா சாத்தியம்னு புரிஞ்சுகிட்டேன் பாட்டி!” பாட்டியிடம் சொல்லிவிட்டு விடைபெற்ற என்னை சாப்பிட்டுவிட்டு செல்லும்படி கூறி, இட்லியுடன் குப்பைமேனி இலைச் சட்னியை பரிமாறினாள் பாட்டி.

குறிப்பு:

  • வயிறு சுத்தமாக, கோழை அகல, வயிற்றுப்புழுக்களைக் கொல்ல: குப்பைமேனி இலையின் சாற்றினை சிறியவர்கள் (12 வயதிற்கு கீழ்) 1 - 4 தேக்கரண்டி மற்றும் பெரியவர்கள் 15 - 30 மில்லி உட்கொள்ள வயிறு சுத்தமாகும், கோழையை அகற்றும், வயிற்றுப்புழுக்களை கொல்லும்.
  • கோழைக்கட்டு: இலைச்சாறை சிறிது வேப்பெண்ணெய் கலந்து, இறகில் தோய்த்து தொண்டையில் (அ) உள்நாக்கில் தடவ, சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு - வாந்தி மூலம் வெளிப்படும்.

கவனிக்க: எப்பொழுதும் எந்த மூலிகைகளையும் உட்பிரயோகமாகப் பயன்படுத்தும் முன்னர் மருத்துவரிடம் ஆலோசித்து பின் எடுக்கவும்.