ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு யோகா நிகழ்ச்சிகளோடு, இயற்கை விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே! கடந்த ஏப்ரல் 27 முதல் 29 வரை நிகழ்ந்த இரண்டரை நாட்கள் நிகழ்ச்சி சற்று பிரத்யேகமானது! ஆம்… இந்நிகழ்ச்சியை Entrepreneurs' Organization (EO) என்ற அமைப்பு கேட்டுக்கொண்டதற்கிணங்க ஈஷா வடிவமைத்து வழங்கியது!

Entrepreneurs' Organization (EO) என்பது வியாபாரம், தொழிற்துறையில் இயங்கும் தொழில்தொழில்முனைவோரின்  வாழ்வினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுவரும் ஒரு அமைப்பாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த அமைப்பு கோவையில், இளம் தொழில்முனைவோருக்கான ஒரு பயிற்சிப் பட்டறையினை ஏற்பாடு செய்திருந்தது. பெற்றோர்கள் இந்த EO நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அதேவேளையில், அவர்களின் குழந்தைகள் கோடை விடுமுறையை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணி, ஈஷாவை தொடர்புகொண்டது அந்த அமைப்பு! EO கேட்டுக்கொண்டதன்படி ஈஷா குழந்தைகளுக்கான சிறப்பு இயற்கை முகாமினை நிகழ்த்தியது.

இதற்காக பிரத்யேகமாக, குழந்தைகளுக்கான ஈஷா யோகா கோடைகால வகுப்பின் அதே கட்டமைப்புடனேயே ஒரு புதிய நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது! இந்நிகழ்ச்சியில் டெல்லி, பஞ்சாப், உத்திர பிரதேசம், புனே, கொல்கத்தா, ஜெய்ப்பூர், குஜராத், ஹைதராபாத், பெங்களூரூ, சென்னை மற்றும் கோயமுத்தூர் ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து 95 குழந்தைகள் கலந்துகொண்டனர். ஏழு முதல் பதினேழு வயதிற்குட்பட்ட சிறுவர்-சிறுமியர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், 7 முதல் 12 வயது மற்றும் 13 முதல் 17 வயது என இரு பிரிவுகளாக குழந்தைகள் பிரிக்கப்பட்டனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

7 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு சூரிய நமஸ்காரம், விருக்ஷாசனா மற்றும் நாடிசுத்தி ஆகிய யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப்பட்டன. 13 முதல் 17 வரையுள்ள குழந்தைகளுக்கு சூரியசக்தி கற்றுத்தரப்பட்டது! யோகப் பயிற்சிகள் தவிர்த்து, குழந்தைகள் இயற்கையை அறியும் விதமாகவும், இயற்கையோடு இருக்கும்விதமாகவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தங்கள் வாழ்வில் தண்ணீர் எத்தகைய முக்கியத்துவம் கொண்டுள்ளது என்பதையும், பல்வேறு இயற்கை சார்ந்த மூலங்கள் பற்றியும் குழந்தைகள் அறிந்துகொள்ளும் விதமாக நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. தண்ணீர் உபயோகத்தில் பல்வேறு உபயோகமான வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம், தண்ணீர் சிக்கனம் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது. ஒரு போதனையாக அல்லாமல், அனுபவப் பூர்வமாக குழந்தைகள் இந்நிகழ்ச்சியில் இயற்கையின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டனர்.

சில குழந்தைகளின் பகிர்வுகள் உங்களுக்காக...

“எனக்கு இந்த இயற்கை முகாமில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். இங்குள்ள தன்னார்வத் தொண்டர்கள் எங்கள் மேல் மிகவும் அக்கறைகொண்டு எங்களுக்கு தேவையானதை செய்ததோடு, நண்பர்களைப் போல் எங்களுடன் பழகினர். இங்கே நான் மிகவும் விரும்பிய ஒரு விஷயம் இயற்கை காட்சிகள்தான்! மேலும், நான் இங்கு கற்றுகொண்ட யோகா பற்றி சொல்லியே ஆகவேண்டும். இங்கு எங்களுக்கு பல்வேறு ஆசனங்கள் கற்றுத்தரப்பட்டன. நாங்கள் ஒவ்வொருமுறையும் பயிற்சிகள் பிழைகள் செய்யும்போது ஆசிரியர்கள் நகைச்சுவை கலந்த அணுகுமுறையுடன் சுட்டிக்காட்டி எங்களைத் திருத்தினர். நாங்கள் இந்த முகாமில் பல்வேறு இயற்கை சார்ந்த அழகிய இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டோம்; பிரபலமான ஒரு சிவன் கோயில், மலைகள், நீரோடைகள், அருவிகள் என நாங்கள் கண்டுகளித்து இயற்கையை இரசித்தோம்! அங்கு பல்வகை தாவர இனங்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் என நிறைய விஷயங்களை பார்த்து அறிந்துகொண்டோம். இருப்பினும், நாங்கள் ஆறுகளைப் பார்க்கவில்லை! சத்குரு ஆறுகள் வற்றிவருவதைப் பற்றியும் அதனை மீட்பது குறித்தும் பேசியுள்ளார். நாம் நதிகளை மீட்பதற்கு துணநிற்க வேண்டும். எங்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்கியதற்கு ஈஷாவிற்கும், எங்களை அக்கறையுடன் வழிநடத்திய தன்னார்வத் தொண்டர்களுக்கும் நன்றிகள்!” - திபம்ஷா, ஹைதராபாத்

“இந்த இயற்கை முகாம் எங்களுக்கு மிகவும் சுவாரஸ்ய அனுபவமாக இருந்தது; நாங்கள் இயற்கையுடன் ஒன்றியிருப்பதற்கான வாய்ப்பாக அமைந்தது. குறிப்பாக யோகா வகுப்புகள் எங்களை தளர்வடையச் செய்து, புத்துணர்ச்சி தந்தது. இங்குள்ளவர்கள் எங்களிடம் மிகவும் கனிவாக நடந்துகொண்டதால் நான் என் வீட்டில் இருப்பதைப் போலவே உணந்தேன். காடுகளும் மலையேற்றமும் அங்கு கண்ட விலங்குகள், பறவைகள் என அனைத்துமே அற்புதமாக இருந்தது! இந்த முகாமில் திரையிடப்பட்ட காணொளிகள் திரைப்படங்களை நான் மிகவும் விரும்பினேன். ஈஷாவிலுள்ள நாட்டு மாடுகள் மற்றும் கன்றுக் குட்டிகளை கண்டு மகிழ்ந்தோம். அவைகளுக்கு எங்கள் கைகளால் வைகோல்கள் கொடுத்தது பெருமகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது! டெல்லியில் நாங்கள் இவற்றையெல்லாம் அனுபவிக்கமுடியாது. எனவே என்னைப்பொறுத்தவரையில் இந்த முகாம் ஒரு அற்புதமான அனுபவமாகும்.”–நிர்வாணா, டெல்லி

“இங்கு எங்களுக்கு யோகா மட்டுமல்லாமல், பல்வேறு வகையான விஷயங்கள் வழங்கப்பட்டன. சில வகுப்புகள், இயற்கை பற்றியும், சில வகுப்புகள் வேடிக்கை விளையாட்டுகளாகவும், சில வகுப்புகள் சுவாரஸ்யமான காணொளி திரையிடலாகவும் இருந்தது. இங்கு வழங்கப்பட்ட யோகாசனங்கள் மற்ற இடங்களில் கற்றுத்தரப்படுவதைப் போல அல்லாமல், மிகவும் மென்மையாக மெதுவாக கற்றுத்தரப்பட்டது. சூர்ய நமஸ்காரம், நாடிசுத்தி, விருக்ஷாசனம் போன்ற பல்வேறு விதமான பயிற்சிகளை நாங்கள் இங்கே கற்றுக்கொண்டோம்!”–ஆஷ்னா சென்னை

“நாங்கள் முதன்முதலில் யோகா கற்றுக்கொள்ளும்போது சற்று வலிநிறைந்ததாக இருந்தது. ஆனால், அடுத்தடுத்து பயிற்சி செய்யச் செய்ய உடலில் வளைவுத்தன்மை வருவதைப் பார்க்கமுடிந்தது. நீர்வீழ்ச்சிக்கு சென்ற பஸ் பயணம், காடுகளில் நடைபயணம் என பல்வேறு நிகழ்ச்சிகள் எங்களை மிகவும் மகிழ்வித்தது. நாங்கள் காடுகளில் கண்ட பல்வகை பறவைகள், பூச்சிகள் அற்புதமாக இருந்தது. நீரோடைகளில் வந்த தூய்மையான நீரை நாங்கள் ஒருவர்மீது ஒருவர் கைகளால் அடித்து தெளித்து மகிழ்ந்தோம். காடுகளில் நாங்கள் சுத்தமான காற்றை சுவாசித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இங்கு நாங்கள் பல்வேறு வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டோம். இந்த முகாமில் நான் அறிந்துகொண்ட விஷயங்கள் மூலம், இயற்கையின் முக்கியத்துவத்தையும் மரங்களுக்கும் நமக்குமுள்ள தொடர்பையும் உணர்ந்துகொண்டேன்!” - பார்த் குப்தா, கோவை