பள்ளிக்கூடம் என்றால் மனப்பாடம் செய்யும் முணுமுணுப்பு சத்தமும், கேள்வி கேட்காமல் பாடத்தை கவனிக்கச் சொல்லும் அதட்டல்களுமாகவே நம் நாட்டில் பெரும்பாலான இடங்களில் காணப்படுகின்றன. சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த சத்குரு அவர்கள் அங்கிருந்த ஜெஃபர்சன் பள்ளியை பார்வையிட்டார். சத்குருவின் வருகை குறித்து அப்பள்ளி இதழில் வெளியிட்டுள்ள இந்தக் கட்டுரை மூலம் அங்கிருக்கும் வித்தியாசமான சூழலை நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்!

எங்கள் ஜெஃபர்சன் (Jefferson) பள்ளியின் ஆய்வுக் கூடங்களை பார்வையிட்டு அதிலுள்ள அறிவியல், தொழிற்நுட்பம், எந்திரவியல் மற்றும் கணித செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் நோக்கில், சத்குரு அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்திருந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அனைவரும் அறிந்த பேச்சாளரும் மனிதநேய ஆர்வலரும் சிறந்த மேதையுமான சத்குரு அவர்கள் உலகறிந்த ஒரு உன்னத யோகியும் ஒப்பற்ற ஞானியுமாவார். சத்குரு அவர்கள் நிறுவியுள்ள ஈஷா அறக்கட்டளையானது, லாபநோக்கற்ற ஒரு தொண்டு நிறுவனமாக, முற்றிலும் தன்னார்வத் தொண்டர்களின் ஆதரவில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. யோக நிகழ்ச்சிகளையும் சமூக நலத்திட்டங்களையும் வழங்கிவரும் ஈஷா அறக்கட்டளை உலகம் முழுக்க 150 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஜெஃபர்சனைப் போலவே இந்தியாவிலும் அறியியல் மற்றும் தொழிற்நுட்ப ஆய்வகங்களுடன் கூடிய பள்ளிக்கூடங்களை உருவாக்கும் தனது ஆர்வத்தை சத்குரு வெளிப்படுத்தியிருந்தார். சத்குருவின் இந்த விருப்பத்தை அறிந்த சீனியர் ஜீவன் கரம்செட்டி அவர்களும் அவருடைய தந்தையாரும் சத்குருவின் இந்த வருகைக்கு துணைநின்று அதனை சிறப்பாக அமைத்து தந்தனர்.

"பொதுவாக இதுபோன்ற ஒரு கட்டமைப்பும் இந்த அளவிற்கான வசதிகளும் மிக்கதொரு பள்ளியைத் துவங்குவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. சத்குரு அவர்களால் இதுபோன்றதொரு பள்ளியை உருவாக்குவதில் அவருக்கே உரித்தான உள்ளார்ந்த பார்வை நிச்சயம் துணை நிற்கும். அவருடைய முயற்சியில் ஏற்கனவே சில பள்ளிகளை உருவாக்கியுள்ளார் எனினும் TJ வுக்கு இணையாக ஒரு பள்ளியை உருவாக்குவதே அவரது நோக்கமாக உள்ளது" என்று கரம்செட்டி அவர்கள் கூறினார்.

தொழிற்நுட்ப ஆய்வுக்கூடங்களை சத்குரு அவர்கள் பார்வையிட வந்தபோது எங்கள் ஒவ்வொரு ஆய்வுக் கூடங்களிலும் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி செயல்திட்டங்கள் குறித்து சீனியர்களால் விளக்கப்பட்டன. இதற்காகவே திரு.கரம்செட்டி அவர்கள் ஒவ்வொரு ஆய்வுக் கூடத்திற்கு ஒரு சீனியரை ஏற்பாடு செய்திருந்தார். சத்குருவுடன் நிகழ்ந்த ருசிகரமான கலந்துரையாடலின்போது மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை முன்வைத்தனர்.

"சத்குரு அவர்களுடன் எனது முன்னணி ஆராய்ச்சி திட்டத்தைப் பற்றி பேசியதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அவர் மிக ஆர்வமாக தனது கேள்விகளைக் கேட்டதையும் கவனமாகக் கற்றுக்கொண்டதையும் பார்த்ததிலிருந்து அவருக்கு இருக்கும் ஈடுபாட்டினை என்னால் காணமுடிந்தது" என்று சீனியர் அருண் கண்ணன் தெரிவித்தார்.

மேலும், முக்கியத்துவம் வாய்ந்த மாணவ அரங்கத்தில் சத்குரு அவர்கள் ஸ்வேதா பிரபாகரன் மற்றும் ஜூனியர் வில்ர்யூ அவர்களின் வாயிலாக ஜெஃபர்சன் பற்றிய கூடுதல் தகவல்களை அறியப் பெற்றார். பள்ளி முதல்வர் திரு.எவன் க்லேசர் மற்றும் பல்வேறு ஆய்வுக்கூட இயக்குனர்களுடன் சத்குரு உரையாடியதோடு, இத்தகு உயரிய ஆய்வுக் கூடங்களை நிறுவுவதிலும் இயக்குவதிலும் உள்ள நடைமுறை பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.

திரு.க்லேசர் அவர்கள் கூறியபோது, எங்கள் ஆய்வுக்கூடத்தை பற்றி அறிந்துகொள்வதற்காக இங்கே பார்வையிட வருகை தந்துள்ள இத்தகையதொரு உன்னத மனிதரை எங்கள் விருந்தினராக வரவேற்றதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இதன்மூலம் இங்கே உள்ளது போன்ற அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப ஆய்வகங்கள் உருவாகும்போது, அது இந்தியாவில் பல புதிய சிந்தனைகளையும் பரந்த ஆராய்ச்சி மனப்பான்மையையும் கொண்டுவரும் என்பதை நாங்கள் திடமாக நம்புகிறோம்" என்று கூறினார். பள்ளியின் ஒவ்வொரு ஆய்வுக் கூடத்தையும் காண்பித்து விரிவாக எடுத்துரைத்ததோடு, இத்தகையதொரு அற்புத வருகையை சிறப்புற அமைக்க காரணமாக இருந்த தங்கள் பள்ளி மாணவர்களுக்கு அவர் தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.