ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் செயல்பாடுகளை அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ள, பாரம்பரியம் மிக்க ‘இந்தியா டுடே’ குழுமத்தின் மதிப்புமிக்க விருது குறித்து இங்கே சில வரிகள்!

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்திற்கு இந்தியா டுடே குழுமத்தின் மதிப்புமிக்க விருதான ‘சஃபைகிரி விருது’ (Safaigiri Awards) கடந்த அக்டோபர் 2ஆம் தேதியன்று வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சேவைக்காக பணியாற்றும் தனிமனிதர்கள் மற்றும் அமைப்புகளுக்கு, அவர்களது சேவையைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் குறைந்துவரும் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு பெருமளவிலான மக்களிடத்தில் மரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதோடு, மரக்கன்றுகளை நடுவதற்கு ஊக்கமளித்து வரும் பசுமைக் கரங்கள் திட்டத்தின் சேவைகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

புதுடில்லியில் நிகழ்ந்த விழாவில், மாண்புமிகு மத்திய ஊரக வளர்ச்சித் துறை, குடியிருப்புகள் ஊரக வறுமை ஒழிப்பு, தகவல்தொடர்பு & ஒளிபரப்புத் துறை அமைச்சரான திரு.வெங்கையா நாயுடு அவர்கள், நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் மற்றும் இந்தியா டுடே குழுமத்தின் சேர்மேன் திரு.அருண் பூரி ஆகியோர் இந்த விருதினை ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்திற்கு வழங்கினர்.

பசுமைக் கரங்கள் திட்டத்தின் நோக்கங்கள் குறித்து சத்குரு விளக்கிப் பேசியபோது,

“ஒரு மரம் நடுவதென்பது ஏதோ ஒன்றைப் பற்றியதோ அல்லது ஒருசிலரைப் பற்றியதோ அன்று என்பதை அழுத்தமாக மக்களிடத்தில் உணரவைப்பதே ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் மிக முக்கிய அம்சமாகும். மரம் நடுவதென்பது நம் பூமியைப் பற்றியது. அது உங்களைப் பற்றியது. ஏனென்றால், மரங்கள் நமது மிக நெருங்கிய உறவுகளாகும். அவை எதனை வெளிமூச்சாக விடுகிறதோ அதைத்தான் நாம் உள்மூச்சாக சுவாசிக்கிறோம். நமது வெளிமூச்சை அவை உள்மூச்சாக சுவாசிக்கின்றன. அவைகள் இல்லாமல் நாம் சுவாசிக்க இயலாது. மனிதர்கள் யாராக இருந்தாலும் இரண்டு நிமிடங்கள் கண்களை மூடி உள்நோக்கிப் பார்த்தால் அவர்களால் இதனை உணர்ந்துகொள்ள முடியும். ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பை மீட்டெடுக்கும் இந்த முயற்சியில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணையட்டும்!”

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் பற்றி...

வேகமாக குறைந்து வரும் தமிழகத்தின் பசுமைப் பரப்பை மீட்டெடுக்கும் நோக்கில் சத்குரு அவர்களால் 2004ஆம் ஆண்டில் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் துவங்கப்பட்டது. தற்போதுவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 20 லட்சம் தன்னார்வத் தொண்டர்களால் சுமார் 2.8 கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 2006ல் இத்திட்டத்தின் மூலம், பல்லாயிரம் தன்னார்வத் தொண்டர்களுடன் தமிழ்நாட்டின் 27 இடங்களில் ஒரே நாளில் 8,52,587 மரக்கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2008ல் இந்திய அரசின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் விருதான, "இந்திரா காந்தி பரியவரன் புரஸ்கார்" (Indira Gandhi Pariyavaran Puraskar) விருது, அன்றைய இந்திய குடியரசு தலைவர் டாக்டர். A.P.J.அப்துல்கலாம் அவர்களால் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்துக்கு வழங்கப்பட்டது.