காமம் அசிங்கம் அல்ல!

இன்று இணையதளத்தில் அதிகமாகத் தேடப்படுபவை 'காமம்' சம்பந்தப் பட்டவைகளாகவே உள்ளது. எல்லா உயிரினங்களும் இனப்பெருக்கம் செய்யத்தான் செய்கிறது. ஆனால் மனிதனுக்கு மட்டும் ஏன் இதில் இத்தனை குழப்பங்களும் கேள்விகளும்?! இங்கே காமம் சத்குருவின் பார்வையில்...
காமம், Kaamam, செக்ஸ், Sex
 

கேள்வி: சாமி கும்பிடுவதற்காகப் போகும் கோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன? பருவ வயதில் இருக்கும் மகளுடன் கோயிலுக்குப் போகும் என் போன்ற தாய்மார்களுக்கு எவ்வளவு பெரிய தர்மசங்கடம்?

சத்குரு:

கடவுள் என்பது உங்களைப் பொறுத்தவரை என்ன? தெய்வீகமாக எதைக் கருதுகிறீர்கள்? ஒரு படைப்பின் மூலாதாரம்தான் கடவுள் என்று கருதுவீர்களேயானால், அதுதானே அங்கு சித்தரிக்கப்பட்டு இருக்கிறது?

செக்ஸ் என்பதை அசிங்கம் என்றோ, குற்றம் என்றோ நம் கலாச்சாரம் பார்க்கவில்லை. சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்யாமல், வாழ்க்கையின் பரிமாணத்தை அது நேருக்கு நேராகச் சந்தித்தது.

பொதுவாக, இந்த மாதிரி சிற்பங்கள் கோயிலின் வெளிப் பரிகாரத்தில்தான் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களாவது வெளிப் பிரகாரத்தோடு நின்று போகின்றன. பருவ வயதில் இருக்கும் ஓர் ஆணுக்கும், பெண்ணுக்குமான பார்வைப் பரிமாற்றங்கள் சந்நிதியிலும் தொடர்வதைக் கவனித்து இருக்கிறீர்களா?

செக்ஸ் என்பதை அசிங்கம் என்றோ, குற்றம் என்றோ நம் கலாச்சாரம் பார்க்கவில்லை. சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்யாமல், வாழ்க்கையின் பரிமாணத்தை அது நேருக்கு நேராகச் சந்தித்தது.

"அம்மா, நான் எப்படிப் பிறந்தேன்?" என்று கேட்டாள், எட்டு வயது மகள்.

சிறுமியிடம் இதைப்பற்றியெல்லாம் எப்படிப் பேசுவது என்று அம்மாவுக்கு சங்கடம். அதனால் அவள் சொன்னாள்... "அதோ, அந்தக் குருவிதான் உன்னைக் கொண்டுவந்து என் மடியில் போட்டது கண்ணு?"

"நீ எப்படி அம்மா பிறந்தாய்?"

"என்னையும் இந்தக் குருவியின் அம்மாதான் கொண்டு வந்து போட்டது!"

"அப்படியானால், பாட்டியையும் இந்தக் குருவியின் பாட்டிதான் கொண்டு வந்து போட்டதா?

"ஆமாடா செல்லம்!"

"அப்படியானால், நம் குடும்பத்தில் யாருக்குமே ஒழுங்கான பிறப்பில்லையா அம்மா?" என்று திகைத்துப் போய்க் கேட்டாள் சிறுமி.

இதுதான் உண்மை நிலை. குழந்தைகளுக்கே பாதி விஷயம் தெரியும்போது, உங்கள் மகளுக்குத் தெரியாதா, என்ன?

சிற்பங்களைப் பெயர்த்து எடுப்பதாலோ, மூடி மறைப்பதாலோ, உங்கள் மகளின் மனம் அது பற்றிச் சிந்திக்காது என்று நினைத்துவிடாதீர்கள்.

கோயில் என்பது வாழ்க்கையின் மேன்மையை உணர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. உங்களுக்குள் அமிழ்ந்துள்ள உச்சபட்ச சக்தியை தட்டி எழுப்புவதற்கான ஒரு கருவி.

இந்த உடல்ரீதியான இன்பங்களைக் கடந்து போனால்தான், வாழ்க்கையின் மேலான கட்டங்களுக்குப் போக முடியும். இந்த உண்மையை உறுதியாக எடுத்துச் சொல்வதுபோல்தான் மூலவரின் சந்நிதி உள்ளே அமைந்துள்ளது.

அந்தச் சிற்பங்களைக் கேவலம் என்று ஏன் பார்க்கிறீர்கள்? அது நிகழ்ந்ததால்தானே நீங்கள் உருவானீர்கள்? உங்கள் மகள் உருவானாள்? அது தவறென்று நினைத்தால், நீங்கள் படைக்கப்பட்டதே தவறென்று ஆகிவிடும்.

கேள்வி: நான்கு சுவர்களுக்குள் வைத்திருக்க வேண்டிய விஷயமல்லவா இது? இதை இப்படி அம்பலத்துக்குக் கொண்டுவர வேண்டுமா?

சத்குரு:

யாரும் உங்களை இதைத் தெருவுக்குக் கொண்டுவரச் சொல்லவில்லை. நீங்கள் பருவ வயதில் இருந்தபோது, உங்களுக்கு இது பெரிய உறுத்தலாக இருந்திருக்காது. இன்றைக்கு உங்கள் மகள் பார்த்துவிடக்கூடாது என்பதுதான் உங்கள் பதற்றத்துக்கான காரணம்.

உயிரினம் பெருகிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக இயற்கை அவற்றுக்கு ஆண், பெண் எனத் தனித்தனி வடிவங்கள் கொடுத்தது. ஒன்றின் மீது மற்றதற்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. உடல்ரீதியான வேறுபாடுகள் தவிர, இருவரும் ஒரே அளவு மதிப்பு கொண்டவர்கள்தாம்.

இதை இன்றைய இளைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பெரும் வளர்ச்சி கண்டுள்ள நிறுவனங்களில் ஆண், பெண் என்ற பேதங்கள் களையப்பட்டு விட்டதை இன்றைக்குப் பரவலாகக் காண முடிகிறது.

மிக நுண்ணிய உயிரினம் ஆனாலும் சரி, மனிதர் ஆனாலும் சரி... இயற்கை அதன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதைக் கடந்து போக வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டியது நாம்தான்.

கோயிலுக்கு வருகையில் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும் எண்ணங்கள் எல்லாவற்றையும் வெளிப் பிரகாரத்தோடு விட்டுவிட்டு, முழுமையான ஈடுபாட்டுடன் உள்ளே வரச்சொல்லும் கலாச்சாரம் இது. அங்கே நீங்கள் தேவையற்ற பதற்றத்தைக் காட்டினால், அதுதான் உங்கள் மகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.

எது ஒழுக்கம், எது ஒழுக்கமின்மை என்று நீங்கள் எழுதிய விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது கோயில் என்ற அமைப்பு. அதை உங்கள் மேம்பாட்டுக்கு எப்படிப் பூரணமாகப் பயன்படுத்திக் கொள்வது என்று மட்டும் பாருங்கள்.

அமுதம் தேடி வந்துவிட்டு, அமுதக் கலசத்தின் மீது அமர்ந்துள்ள ஈக்களின் மீது ஏன் உங்கள் கவனம் போகிறது?

கேள்வி: சத்குரு, நான் அமெரிக்காவைச் சேர்ந்தவன், அங்கு உடல் தேவைகள் குறித்த அணுகுமுறைகள் வேறுவிதமாக கையாளப்படுகிறது. மேற்கத்திய அணுகுமுறையின் அடிப்படையில், உடலுறவு குறித்தும் உடல் ரீதியாக ஏற்படும் உறவுகள் குறித்தும் தெளிவு பெற விரும்புகிறேன். நாங்கள் அதை காதல் என்று அழைத்தாலும், உண்மையில் அங்கு என்ன நிகழ்கிறது?

சத்குரு:

ஓ! இதில் மேற்கத்திய அணுகுமுறை, கிழக்கத்திய அணுகுமுறை வேறா!! உறவு வயப்பட்டால் அங்கு என்ன நிகழுமோ அதுதான் நிகழும். உடலுறவு, முழுக்க முழுக்க உடல் சார்ந்த விஷயம். நீங்கள் உங்கள் உடலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அவ்வளவுக்கு உடலுறவு முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணத்திற்கு ஒருவர் கல்வியில் மிகவும் அதீத ஆர்வம் உள்ளவராக இருந்தால், அவர் உடலுறவில் நாட்டம் கொள்ளமாட்டார்.

வனவிலங்கு குறித்து ஆராய்ச்சி செய்யும் ஒருவர், ஆப்பிரிக்காவின் அடர்ந்த வனத்தில் ஐந்து ஆண்டுகள்வரை வசிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு உடலுறவு குறித்த எண்ணம் கூட எழுவதில்லை. அவருடைய கவனம் முழுதும் ஆராய்ச்சியில் இருப்பதால், உடல் குறித்த கவனம் அவருக்கு சிறிதும் ஏற்படுவதில்லை. அவர் ஆன்மீக நிலையில் எல்லாம் இல்லை. இருந்தும் அவருக்கு அவர் உடல் குறித்த கவனம் இல்லை என்பதால் அவர் வாழ்க்கை மிகவும் வித்தியாசமான கோணத்தில் நிகழ்கிறது. இதற்கு நேர்மாறாக யாரோ ஒருவர் காலை முதல் இரவு வரை உடல் குறித்த கவனத்திலேயே இருந்தால், அப்போது உடலுறவு குறித்த உணர்வுகள் அவரிடம் மேலோங்கி இருக்கும்.

திருமணம் ஒருவிதமான சமநிலையைத் தருகிறது. இதில் ஒருவர் தன் உடல் தேவையை அடக்கிவைக்கத் தேவையில்லை; அதே சமயம் உடல்தேவையே கதி என்றும் இருக்கவும் தேவையில்லை.

குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், உடலுறவு இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பது போல் ஒரு சமூக சூழல் நிலவுகிறது. அது உண்மை அல்ல. ஆனால் சமூகம் அத்தகைய எண்ணத்தை விதைப்பதால் அது மக்கள் வாழ்வில் அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு 18 வயதாக இருக்கும்போது உடல் சார்ந்த உறவுதான் எல்லாம் என்று தோன்றியது. அப்போது அது சரி என்று தோன்றியது. ஆனால் 35, 40 வயது ஆகும்போது, சுற்றி இருப்பவர்கள் உடலுறவு பற்றி என்னதான் புகழ்ந்தாலும், உங்களுக்கு அதில் ஆர்வம் சற்று குறைந்துதான் போகிறது. நீங்கள் உங்கள் நேரத்தையும் சக்தியையும் அந்த ஒரு விஷயத்திற்காக அதிகம் செலவளிக்க விழைவதில்லை.

இவ்விஷயத்தில் உளவியல் நிபுணர்களும் மனோதத்துவ நிபுணர்களும் சொல்வது மிகவும் விசித்திரமானது. எப்போதெல்லாம் வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் உடலுறவு கொள்ளலாம் என்று வலியுறுத்துகிறார்கள். சமூகமும் இதை ஆதரிக்கிறது. ஆனால் இது கிழக்குநாடுகளின் கலாச்சாரத்திற்கு முற்றிலும் முரண்பாடானது. கிழக்குக் கலாச்சாரத்தில் எப்போதுமே சக்தியை செலவிடக்கூடாது; சேமித்து வைக்கவேண்டும் என்றார்கள். உங்கள் சக்தியை உடலுறவின் மூலம் வெளியிட்டுவிட்டால் அது வெறும் உடல்ரீதியான செயல்பாடுதான். அது சில கணங்கள் மட்டுமே கிடைக்கும் சந்தோஷம். ஆனால் அதே சக்தியை உடலின் உயர்நிலைகளில் வெளிப்படுத்தினால், அது நிலைத்திருக்கும் ஆனந்தமாக, அதிக சக்திவாய்ந்த அனுபவமாக இருக்கும்.

ஒரு பாத்திரத்தின் மேல்விளிம்பு வரை நீர் நிரம்பி வழியவிட வேண்டும் என்றால், அது ஒழுகாத பாத்திரமாக இருக்கவேண்டும். ஒழுகும் பாத்திரத்தில் நீர் நிரப்ப முடியாது, இல்லையா? ஆனால் என்ன செய்வது? உங்கள் உடலில் ஹார்மோன்கள் தங்கள் வேலையைச் செய்கின்றன. எனவே உடல் தேவைகளை புறக்கணிக்க முடியாமல் போகிறது. ஒருவேளை நீங்கள் அந்த தேவைகளை புறக்கணித்து அடக்கி வைத்தால், அதன் விளைவுகள் எதிர்மறையாக மாறிவிடுகின்றன.

இதனால்தான் சமூகத்தில் திருமணம் என்ற முறையைக் கொண்டுவந்தார்கள். திருமணம் ஒருவிதமான சமநிலையைத் தருகிறது. இதில் ஒருவர் தன் உடல் தேவையை அடக்கிவைக்கத் தேவையில்லை; அதே சமயம் உடல்தேவையே கதி என்றும் இருக்கவும் தேவையில்லை. திருமணமான புதிதில், உடலுறவில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கலாம். ஆனால் காலம் செல்லச்செல்ல சமநிலை தோன்றிவிடும். மேலும் இது இருவருக்கும் இடையே மட்டும் பகிர்ந்து கொள்ளும் விஷயம் என்று மனதில் உறுதியாகவும் பதிந்துவிடும். எனவே மீண்டும் மீண்டும் தேடுவது தேர்ந்தெடுப்பது போன்ற பிரச்சனைகள் இல்லை. ஆனால் திருமண அமைப்பிலும் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஒருசிலருக்கு திருமண வாழ்க்கை திருப்திகரமாக அமைந்துவிடுகிறது. வேறுசிலருக்கு அது கசப்பான அனுபவமாக மாறிவிடுகிறது. ஆனால் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று வேறு சொல்லிவிட்டதால், நபர்களை மாற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டது. எனவே அதில் நிறைவு கொண்டவர்கள் திருமணம் நல்லது என்றும் பிரச்சனை கொண்டவர்கள் திருமணம் தேவையில்லை என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

சரி திருமணம் என்ற அமைப்பு தேவையில்லை என்று உடைத்துவிட்டால்? யாருக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்து கொள்ளுங்கள் என்று சுதந்திரமாக விட்டுவிட்டால்? துன்பத்தில்தான் போய் முட்டிக் கொண்டு நிற்கும்.

ஒரு பெண் அவன் வாழ்வில் ஸ்திரத்தையும், 'நான் உனக்குச் சொந்தமானவள்' என்ற உடைமையையும் கொடுப்பாளேயானால், அவன் அவளுடன் தன் வாழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புவான்.

ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணுடன்தான் வாழவேண்டும் என்ற உடல்நிலையிலான கட்டுப்பாடுகள் இல்லை. அவன் உடல் அப்படிப்பட்ட தன்மையில் இருக்கிறது. ஆனால் ஒரு பெண்ணுடன் வாழ்வது அவனுக்கு ஒருவிதமான ஸ்திரத்தை உருவாக்குகிறது. அவனுடைய இயல்பில் அந்த ஸ்திரம் இல்லை. இந்த அடிப்படையில்தான் திருமணம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒரு பெண் அவன் வாழ்வில் ஸ்திரத்தையும், 'நான் உனக்குச் சொந்தமானவள்' என்ற உடைமையையும் கொடுப்பாளே ஆனால், அவன் அவளுடன் தன் வாழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புவான். இல்லாவிட்டல் அவன் எதிலும் சிக்காமல் இருக்கவே விரும்புகிறான். எப்போது பெண் அந்த ஸ்திரத்தை வழங்க முன்வரவில்லையோ, அப்போது அவன் அவளுடன் தொடர்ந்து வாழ உறுதிகொள்வதில்லை. அவன் எல்லாவற்றிற்கும் கணக்கு போடுகிறான். நான் எவ்வளவு முதலீடு செய்கிறேன்? அதற்கு எவ்வளவு கிடைக்கிறது என்றெல்லாம் கணக்குப் பார்க்கிறான். இதில் காதல் எங்கே இருக்கிறது?

மனிதர்களுக்கு உடல் தேவைகள் உள்ளன. அதற்காக பல நாடகங்களையும் நிகழ்த்த வேண்டியிருக்கிறது. மூன்று முறை காதல் வயப்பட்ட பின் அது காதல் இல்லை என்று ஒருவருக்குப் புரிந்துவிடும். யாரோ ஒருவருடன் காதல் வயப்பட்டிருப்பதாக தொடர்ந்து நடிக்கவேண்டும். அது மிகவும் அலுப்பான விஷயம். முதல் முறை காதல் வந்தபோது அதை நம்பினீர்கள். இரண்டாவது முறையும் நம்பினீர்கள். ஆனால் மூன்றாவது முறை வந்தபோது, இது அதிகநாள் நிலைக்காதென்று உங்களுக்கே தெரியும். உங்களுக்கு போதிய அனுபவமும் இருக்கிறது. மனதில் கணக்குகளும் வந்துவிட்டன. நான் எந்த அளவுக்கு என்னைத் தருவது? எந்த அளவுக்கு வெளிப்படையாக இருப்பது? இது போல் பல கணக்குகள் போட்டுக் கொண்டிருந்தால், இதில் காதல் எங்கிருக்கிறது சொல்லுங்கள்? இப்போது அது வெறுமனே உடல்தேவைக்கான உறவாக அமைந்துவிடுகிறது.

'எனக்கு உடலுறவு தான் முக்கியம்' என்று சொல்வது மிகவும் அநாகரிகமாக ஒலிக்கிறது. எனவே நீங்கள் அதற்கு காதல் என்னும் சாயம் பூசுகிறீர்கள். இது ஒரு நாடகம் போல் நடக்கிறது. இதை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். எது நடந்தாலும், அதை அப்படியே பாருங்கள். பின்னர் எனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுங்கள். இதில் தப்பு என்றும், சரி என்றும் எதுவுமில்லை. இது அழகானது என்று சொல்லமாட்டேன், அசிங்கம் என்றும் சொல்லமாட்டேன். நான் எந்த நிலையில் வாழவேண்டும் என்று நாம்தானே தேர்ந்தெடுக்க வேண்டும்? இது தனியொருவரின் தேர்வு. இந்த விஷயத்தில், 'நீங்கள் எல்லோரும் இப்படித்தான் இருக்கவேண்டும்' என்ற பொதுவான ஒரு தீர்வை பரிந்துரைக்க முடியாது. பொதுவான பரிந்துரைகள் வேலையும் செய்யாது.

கேள்வி: மிகப் பெரிய உருவம் கொண்ட யானை முதல் நம் கால்களுக்குள் புகுந்து செல்லும் சுண்டெலி வரை என அனைத்து உயிர்களும், குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டும்தான் இணை சேர்கின்றன. ஆனால் மனிதன் ஆறறிவு கொண்டவன் இல்லையா?! அவனே முடிவு செய்து கொள்ளட்டும் என விட்டுவிட்டது இயற்கை. ஆனால் மனிதனின் மூளை முழுவதையும் காமம் ஆக்கிரமித்துக் கொள்கிறது. ஏன் இந்த நிலை?

சத்குரு:

நீங்கள் குழந்தையாக இருந்தபோது, நீங்கள் ஆணா? பெண்ணா? என்பது ஒரு விஷயமாக இருக்கவில்லை. ஆனால் ஹார்மோன்கள் உங்களுக்குள் செயல்பட துவங்கிய வயதிலிருந்து, உங்களால் உலகைக் கடந்த ஒன்றை நினைக்க முடியவில்லை. உங்களின் அறிவு மொத்தமாக உங்களுடைய ஹார்மோன்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. 

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, ஹார்மோன்களின் செயல்பாடு தணிந்த பின்பு, மறுபடியும் காமம் ஒரு விஷயமாகவே இருக்காது என்பதை உணர்கிறீர்கள். அந்த சமயத்தில், கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள்தான் இவற்றையெல்லாம் செய்தீர்களா என்பதை உங்களால் நம்பவே முடியாது.

உடலானது ஒன்றே ஒன்றைத்தான் அறியும். ஒன்று உயிர் வாழ்வது, இரண்டாவது இனப்பெருக்கம் செய்வது. மற்றவை எதையும் அது பெரிதாக பொருட்படுத்தாது. வேறு எதையும் உடலால் அறிந்துகொள்ள முடியாது. உங்கள் உடலின் போக்கில் சென்றால், சிறிய சந்தோஷங்கள் வேண்டுமானால் உங்களுக்குக் கிடைக்கும், பெரிதாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.

உடலில் எந்தத் தவறும் இல்லை, அது ஒரு எல்லைக்குட்பட்டது. எல்லைக்கு உட்பட்டிருப்பது தவறல்ல, ஆனால் அதுவே உச்சநிலை அல்ல. இப்பொழுது எல்லா நேரங்களிலும் எதிர் பாலினரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இவ்வுலகில் உள்ள எல்லா பெண்களும் உங்கள் பின்னால் வருவார்கள் என்ற மிகப்பெரிய வரம் ஒன்றை நாளை நான் உங்களுக்குத் தருகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் நீங்கள் நிறைவற்ற வாழ்க்கை வாழ்வதைக் காண்பீர்கள்.

கொஞ்சம் இனிமை, ஒரு சிறிய சந்தோஷம், கொஞ்சம் வலி இவற்றை வேண்டுமானால் அது உருவாக்கும். இதிலெல்லாம் எந்தத் தவறும் இல்லை. நான் அவற்றை அசிங்கம் என்றும் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் உடலின் எல்லைக்குட்பட்டே வாழ்வீர்கள்.

இதில் எந்தத் தவறும் இல்லை. நான் அசிங்கம் என்றும் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் உடலின் எல்லைக்குட்பட்டே வாழ்வீர்கள்.
நீங்கள் மலை ஏறுவதாக நினைத்துக் கொள்கிறீர்கள், மலையிலிருந்து கீழிறங்குவதாக நினைத்துக் கொள்கிறீர்கள். உடலுக்கு நீங்கள் நினைப்பது பற்றி எதுவும் தெரியாது. ஒவ்வொரு ஷணமும் அது நேராக கல்லறையை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது, வேறு எங்கும் இல்லை.

மாபெரும் கால்பந்தாட்டக்காரர் 'ஜார்ஜ் பெஸ்ட்'டை உங்களுக்குத் தெரியுமா? சமீபத்தில் மரணமடைந்த அவரைப் பற்றிய ஒரு செய்தித் துணுக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்...

புகழ்பெற்ற கால்பந்தாட்டக்காரராக அவர், வாழ்க்கையை அதிகமாகவே அனுபவித்தவர். அந்தச் செய்திப்படம், அவர் ஏதாவது ஒரு சினிமா நடிகையையோ, விளம்பர அழகியையோ அல்லது வேறு ஒரு புகழ்பெற்ற அழகியையோ எப்போதும் அணைத்தவாறு இருப்பதாக சித்தரித்தது. சில நேரங்களில் மூவரையும் தாங்கியிருந்தன அவரது கரங்கள்.

ஆனால் 35 வயதினை அவர் கடப்பதற்குள் மிகவும் நொறுக்கிப்போன பரிதாபகரமான மனிதராகிவிட்டார். அவரது 56 அல்லது 57வது வயதில் மிகவும் மனமுடைந்து சலிப்புற்று துயரத்துடன் இறந்துபோனார்.

மரணம் என்பது பிரச்சனையல்ல, ஆனால் நீங்கள் எந்தவிதமாக வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அவர் ஒரு மோசமான வாழ்க்கையினை வாழ்ந்தார். உடலின் போக்கில் வாழ்ந்த காரணத்தினால், எல்லாப் பிரச்சனைகளும் அவரை வந்தடைந்தது.

உங்கள் வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் அதை நீட்டிக்க முயற்சித்தால், நீங்கள் துன்பத்திற்கு உள்ளாவீர்கள். ஏனென்றால் உடல் என்பது, உங்கள் வாழ்வில் ஓரளவிற்கு மட்டுமே தன் பங்கினை ஆற்றவேண்டும் என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.

தங்களைக் குறைவற்றவர்களாகவும், தனக்கு எப்போதுமே எதுவும் நடக்காது என்றும் நினைப்பவர்களுக்கு சிறிது காலத்திற்குப் பின் என்ன நடக்கவிருக்கிறது என்பதை நீங்களே காண்பீர்கள். உங்களை வளைக்கவும், உடைக்கவும், அரைக்கவும், பிணைக்கவும் வாழ்க்கை தனக்கென கோடிக்கணக்கான வழிகளை வைத்துள்ளது.

உடலானது ஒன்றே ஒன்றைத்தான் அறியும். ஒன்று உயிர் வாழ்வது, இரண்டாவது இனப்பெருக்கம் செய்வது.
உங்கள் ஹார்மோன்களில் தவறொன்றுமில்லை. ஆனால் அது உங்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்குகிறது. நிர்பந்திக்கும் வாழ்க்கை என்பது ஒரு அடிமையின் வாழ்க்கை. நீங்கள் ஒரு அடிமையாக இருப்பதை விரும்புகிறீர்களா?

குழந்தையாக இருந்தபோது அடிமைத்தனம் இல்லாமல் இருந்ததால், புன்னகைத்துக் கொண்டு இருந்தீர்கள். பிறகு, எல்லாமே நன்றாக நடந்தாலும், ஏனென்றே தெரியாமல், மெதுவாக விதவிதமான நிர்பந்தங்கள் உங்களை ஆட்கொண்ட பிறகு, உங்கள் முகம் தொங்கிப்போய் வாடிவிட்டது.

வாழ்வில் எல்லா வளங்களும் இருந்தாலும் தொங்கிய முகத்துடன்தான் இருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருப்பதற்காக நீங்கள் ஏதேதோ செயல்களைச் செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள்.

'உடல்சார்ந்த விஷயங்களே எல்லாம்' என்ற ஒரு கலாச்சாரம், குறிப்பாக மேலைநாடுகளில் உருவாகிவிட்டது. இதன் காரணமாக, அங்கே சொல்லமுடியாத அளவுக்கு துன்பம் நிலவுகின்றது. நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு எல்லா வசதிகளும் அவர்கள் பெற்றிருந்தாலும், மனதை சமநிலையில் வைத்திருக்க மருத்துவரை நாடுகிற நிலைதான் உள்ளது.

புத்திசுவாதீனத்தில் வெளி வருவதற்காக, தினமும் ஒரு மாத்திரையை உட்கொள்ள வேண்டிய நிலை மகிழ்ச்சியை தரக்கூடியதல்ல. நிச்சயமாக, உடைந்து போகக்கூடிய விளிம்பில்தான் தினமும் நீங்கள் இருக்கிறீர்கள், ஏனென்றால் வாழ்க்கையின் ஒரு சிறிய அம்சத்தை, நீங்கள் வாழ்க்கையின் முழுமை என்றாக்கிவிட்டதால், வாழ்க்கை தன்போக்கில் அதற்கான பலனை வசூலித்துக்கொள்கிறது, அவ்வளவுதான்.

ஒவ்வொன்றும், அதற்குரிய அளவில் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் பங்குபெற வேண்டும், அதுவே வாழ்வின் முழுமை என்பதாக உருவாக்க முயன்றால், அது வேலை செய்யாது.