கலைஞர்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் பற்றிய விபரங்கள்

நாட்டின் தலைசிறந்த கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கலையுள்ளம் கொண்ட அன்பர்கள் ரசித்து மகிழவும் ஈஷாவின் யக்ஷா மற்றும் மஹாஷிவராத்திரி கொண்டாட்டங்கள் வாய்பாக அமைந்துள்ளன.

நம் தேசத்தின் தொன்மையான இசை, நடன கலை வடிவங்களின் தனித்தன்மை, தூய்மை, பன்முக தன்மையை பாதுகாத்து வளர்க்கும் முயற்சியாக ஆண்டுதோறும் நடக்கும் இந்த கலை திருவிழாவில், பாரத தேசத்தின் பழம்பெரும் கலைவடிவங்கள் அவற்றுக்கே உரிய தனிச்சிறப்புமிக்க துடிப்புடனும், கவித்துவத்துடனும் வழங்கப்படுகிறது.

நம் பாரம்பரிய கலை வடிவங்களில் பொதிந்துள்ள ஆழத்தையும், மென்மையையும், ரசித்து உணரும் வாய்ப்பாக அமைந்துள்ள யக்ஷா திருவிழாவில் கலந்துகொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்.

யக்ஷா 2017
பிப்ரவரி 21 – 23, 2017: மாலை 6.50 – 8.30

பாரத புராணங்களில், சூட்சும உருவங்களாய் சித்தரிக்கப்பட்ட யட்சர்கள் பெயரால் இந்நிகழ்ச்சி யக்ஷா என அழைக்கப்படுகிறது. மஹாசிவராத்திரிக்கு வரவேற்பாக நடக்கும் இந்த துடிப்பான கலை விழாவில் இந்த ஆண்டு கலந்துகொண்டு, நம் ரசனைக்கு விருந்தளிக்கும் கலைஞர்கள்

Dr. மைசூர் மஞ்சுநாத் & மைசூர் நாகராஜ்
வயலின் இசை
பிப்ரவரி 21

தம் இனிமையான வயலின் இசையால் நம் மனதை வருடும் மேஸ்ட்ரோ மஞ்சுநாத் – நாகராஜ் சகோதர இணையின் தனித்தன்மையான பாணி, கர்நாடக சங்கீதத்தில் அவர்களுக்கென சிறந்த இடத்தை பெற்று தந்துள்ளது. உலகெங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பாரத பாரம்பரிய கலைக்கு புகழ் சேர்க்கும் இந்த சகோதரர்கள், வயலின் இசையில் இன்றைய முன்னணி நட்சத்திர கலைஞர்களாக அறியப்படுகிறார்கள்.

பத்மஸ்ரீ மீனாட்சி சித்தரஞ்சன்
பரதநாட்டியம்
பிப்ரவரி 22

சிறந்த நடன கலைஞராகவும், அர்ப்பணிப்பான நடன ஆசிரியராகவும் ஒருங்கே விளங்கும் பத்மஸ்ரீ மீனாட்சி சித்தரஞ்சன் பரத கலையின் அபூர்வ தாரகையாக தனித்து மின்னுகிறார். பரத கலையில் தனித்தன்மையான பந்தலூர் பாணியின் அழகை பாதுகாத்து, மேலும் அழகூட்ட புதிய யுக்திகளை, முயற்சிகளை
தொடர்ந்து எடுத்து வருவதுடன், பழம்பெருமை வாய்ந்த பரத கலையின் சாரத்தை அதே உயிர்ப்புடன் வழங்க, பரத கலையே வாழ்க்கையாக, தன்னை அர்ப்பணித்துள்ளார்.

திருமதி. பிஜாயினி சத்பதி மற்றும் திருமதி. சுரூபா சென்

ஒடிசி நடனம்
பிப்ரவரி 23

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பிஜாயினி சத்பதி, சுரூபா சென் இருவரும் இணைந்து, தம் ஆராய்ச்சியின் மூலம் ஒடிசி நடன கலையில் பல புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளனர். இந்த பாணி, ஒடிசி நடனத்தில் நிருத்தியகரம் மாணவர்களை தனித்து காட்டுகிறது. நிருத்தியகரம் நடன பள்ளியின் முதல் மாணவியான சுரூபா சென், உடலசைவு மொழி வித்தகரும், இன்றைய ஒடிசி நடன கலையை நிர்மாணித்தவருமான அமரர் குரு கேளுசரண் மஹாபாத்ரா அவர்களை குருவாக கொண்டு தம் நடன கலை வாழ்வை துவங்கினார்.

மேற்கத்திய நடனத்திலும் ஆர்வமுள்ள சுரூபா சென், மேற்கத்திய நடனக் கலைஞர்கள், நடன ஆசிரியர்களுடன் இணைந்து உலகம் முழுதும் பல நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். இன்றைய இளம் தலைமுறை கலைஞர்களுக்கு, நிருத்தியகரம் பள்ளியில் ஒடிசி குருகுலத்தின் இயக்குநரான பிஜாயினி சத்பதி பயிற்சி அளித்து வருகிறார். தனித்தும், நிருத்தியகரம் குழுவினருடன் இணைந்தும் சர்வதேச அளவில் பல நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார்.

மஹாசிவராத்திரி

பல்லாயிரம் ஆண்டுகளாய் பாரதத்தில் உருவான வெவ்வேறு கலை வடிவங்கள், நம் பரந்து விரிந்த பண்பாட்டின் வெளிப்பாடாக இருக்கின்றன. ஒருவருக்குள் ஆழ்ந்த ஆன்மீகத் தாக்கத்தினையும் ஏற்படுத்துகின்றன. சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள், வண்ணமயமான கலாச்சார நடன நிகழ்ச்சிகளுடன் ஈஷாவின் சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் மஹாசிவராத்திரி இரவு முழுவதும் இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் தனித்தன்மை வாய்ந்த சக்தி நிலையை பயன்படுத்தி கொள்ளவும், நாம் விழித்திருக்கவும் துணைபுரிகின்றன.

கைலாஷ் கேர்

எளிமையான குடும்பத்தில் பிறந்து, இசைமீது கொண்ட தீராத நாட்டத்தால், இன்று துள்ளலான “ராக்” இசைக் கலைஞராக, பின்னணி பாடகராக, தொலைக்காட்சி பிரபலமாக பன்முக அடையாளங்கள் கொண்டவராக, தன் தனித்த குரலால் உயர்ந்து நிற்கிறார் கைலாஷ் கேர் அவர்கள். சர்வதேச அளவில் விரும்பப்படும் இவரது இசை, நம் பாரம்பரிய இசை, “பாப்.” சூஃபி என ஒரு சிறந்த கலவையாக இருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்ப இசை கருவிகளை தேர்வு செய்வதும், அதன் தாளகதியில் ரசிகர்களுக்கு விருந்தளிப்பதும் இவரது குழுவினரின் தனிச் சிறப்பாக இருக்கிறது.

ராஜஸ்தான் ரூட்ஸ் – குட்லே கான்

ராஜஸ்தானிய பாரம்பரிய பாடல்களுக்கு மேற்கத்திய இசை கருவிகளை கொண்டு புதுவடிவம் கொடுத்ததன் மூலம் கலைக்கு எல்லைகள் இல்லை என்பதை ராஜஸ்தான் ரூட்ஸ் குழுவினர் மெய்ப்பித்து வருகிறார்கள்.

புகழ்பெற்ற கிராமிய பாடல்கள், துள்ளலான தங்கள் சொந்த பாடல்கள், காலம் கடந்தும் தன சுவை மாறாத சூஃபி பாடல்கள் என பல்வேறு பாணிகளின் கலவையாக, அனைவரும் ரசிக்கும் இவர்களது புதிய முயற்சிகள் உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதத்திலும், சர்வதேச அளவிலும் பல கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் குட்லே கான். சர்வதேச அளவில் பாரம்பரிய ஹிந்துஸ்தானி, சூஃபி இசையை வளர்ப்பவர்களாக இவர் சார்ந்துள்ள ராஜஸ்தான் மங்கனியர் சமூக மக்கள் புகழ்பெற்று வருகிறார்கள்.

மேற்கத்திய பாணி இசை தாக்கத்துடன் ராஜஸ்தானிய பாடல்களை வழங்கி வரும் குட்லேகான், சிக்கலான சந்த அமைப்புகளை பாடுவதில் புகழ் பெற்றவர்.

நிருத்தருத்யா

பாரத கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு, நம் சமகால சமுதாயத்தில், நகர வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் புதிய அசைவுகளை தம் நடன அடையாளமாக, நிருத்தருத்யா நடன அறக்கட்டளை கொண்டுள்ளது. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப, தனித்துவமான பாரத நடன கலை அனுபவங்களை உருவாக்கவும், புரிதலை ஏற்படுத்தவும் முயன்று வரும் நிருத்தருத்யா நடனபள்ளி, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
நகரவாழ்வில் அன்றாட செயல்கள், தற்காப்பு கலைகள், பழக்க வழக்கங்கள் நவீன நடன கலையாக வடிவமாவதை ஊக்குவித்தும், வளர்க்கவும் முயன்று வருவதுடன், இளம் திறமையாளர்களின் நிகழ்ச்சிகளை முன்நின்றும் நடத்தி வருகிறது.

சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா

சத்குருவின் வழிகாட்டுதலுடன், தங்கள் தீராத ஆர்வத்தாலும், தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் விதமாகவும் “இசைக் கலைஞர்களாக” இணைந்திருக்கும் ஈஷாவின் சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர், வெவ்வேறு விதமான பின்னணியில் இருந்து வந்தவர்கள்.

உலகின் பல்வேறு இசை வடிவங்கள் இணைந்ததாக, எல்லைகளை, கலாச்சாரங்களை கடந்து அனைவரையும் ஈர்க்கும் ஈஷாவின் இசை, மனதிற்கு இதமளித்து, நுட்பமான அமைதியை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்து இருக்கும் எல்லையற்ற அமைதியை தொடுவதன் மூலம், அவரின் உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணையாக, அடிப்படையாக அமைகிறது.

கடந்த ஆண்டுகளில் கலந்துகொண்டு சிறப்பித்த கலைஞர்கள்

பண்டிட் ஜஸ்ராஜ்
பண்டிட் ஹரிபிரசாத் சௌராஸ்யா
உஸ்தாத் அம்ஜத் அலி கான்
சிவமணி
சுதா ரகுநாதன்
ஷங்கர் மஹாதேவன்