ஜென்னல் பகுதி 1

தியான் என்பது பாரதத்தில் இருந்து சீனாவுக்குப் போனது. அங்கே அது திரிந்து ‘ச்சான்’ என்று அழைக்கப்பட்டது. அங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் போனபோது, ஜப்பானில் ஜென் என்று மருவிவிட்டது. ஆக, ஜென் என்பது அடிப்படையில் தியான், தியான மடங்கள் ஜென் மடங்களாயின. ஜென் பாதை என்பது தியானப் பாதை.

பொதுவாக, ஜென் கதைகள் நுட்பமான அர்த்தத்தை உள்ளடக்கியவை. மேலோட்டமாகப் படித்தால், அதன் உண்மையான உள் அர்த்தத்தைத் தவறவிட்டுவிடுவீர்கள். அடுத்து வரும் வாரங்களில் சில ஜென் கதைகளை சத்குருவின் விளக்கத்துடன் ஊன்றிப் பார்ப்போம்.

சாக்கிய முனி கேட்டார், ‘’ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு?’’ முதல் சீடன் சொன்னான், ‘’70 வருடங்கள்.’’ இரண்டாவது சீடன் சொன்னான், ‘’60 வருடங்கள்.’’ அடுத்தவன் சொன்னான், ‘’இல்லை, ‘’50 வருடங்கள்தான்.’’

‘’நீங்கள் சொன்ன பதில்கள் எல்லாமே தவறு’’ என்றார் சாக்கிய முனி. ‘’வாழ்க்கை என்பது ஒரு சுவாச அளவுதான்.’’

சத்குருவின் விளக்கம்:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

(தமிழில் சுபா)

சுவாசம் உள்ளே வருகிறது. வெளியே போகிறது. மீண்டும் உள்ளே வருகிறது. வெளியே போகிறது. வெளியே போன சுவாசம் உள்ளே வராமல் நின்றுவிட்டால், முடிந்தது கதை. உயிர் என்பது அந்த அளவு நிலையற்றது.

நமது நினைவுகளில் நேற்று இருக்கும். அதற்கு முந்தின தினங்கள் இருக்கும். ஏன் சில வருடங்களேகூட இருக்கும். அதேபோல் நமது கற்பனையில் நாளை இருக்கும். ஆனால், இவை எல்லாமே கற்பனையான உணர்வுகள்.

மனதளவில் நீங்கள் எத்தனை தொலைவுக்கு வேண்டுமானாலும் பயணம் போகலாம். சொர்க்கம் வரை கூடப் போகலாம். ஆனால், அடுத்த கணம் நிஜத்தைச் சந்திக்கையில் இங்கே வந்து விழுந்துவிடுவீர்கள்.

நினைவுகள் என்பது இறந்த காலத்தை உயிரோடு வைத்துக்கொள்ள முயற்சி செய்வது. எதிர்காலம் பற்றிய கற்பனை என்பது பிறக்காத ஒன்றுக்கு உயிரூட்ட நினைப்பது. இறந்ததுக்கோ, பிறக்காததுக்கோ எப்படி உண்மையில் உயிரூட்ட முடியும்? இப்படி மனதின் செயலாக உருவாக்கிக்கொள்வது எதுவும் உயிரின் செயல் அல்ல!

உண்மையில் நமது அனுபவத்தில் இருப்பது எது? இப்போதைய சுவாசம் உள்ளே போய் வெளியே வருகிறதே அந்த நேர அளவுக்குத்தான் எதுவும் அனுபவத்தில் உணரக் கூடியதாக இருக்கிறது. அதாவது உயிர்த்தன்மையுடன் கூடிய அனுபவம் என்பது ஒரு சுவாச அளவே. உயிரின் அனுபவம்தான் உண்மையான வாழ்க்கை!

10 வருடங்களுக்கு முன்னால் நடந்தது இப்போதும் வலிக்கிறது. 10 நாட்களுக்கு அப்புறம் நடக்கப்போவது இப்போதே அச்சுறுத்துகிறது. இப்படி உயிரோட்டம் இல்லாதவற்றுக்கு உயிர் கொடுக்கும் முயற்சி நடக்கிறது. அந்த முயற்சியில், இப்போது உயிரோட்டத்துடன் இருக்க வேண்டியது உயிரற்றுப் போய்விடுகிறது. உலகத்தில் இல்லாத ஒன்று உங்களுக்குப் பாதிப்பைக் கொடுக்கிறது என்றால், அதற்கு என்ன அர்த்தம்? மனநல மருத்துவரிடம் நீங்கள் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

ஈஷா பள்ளியில் எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் என்னிடம் கேட்டான், "சத்குரு, வாழ்க்கை என்பது கனவா? நிஜமா?’’ நான் சொன்னேன்: ‘’இந்த வாழ்க்கை ஒரு கனவுதான். ஆனால், இந்தக் கனவு நிஜம்!’’

ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.

விவரங்களுக்கு: 0422 2515415, 2515418