யோகி என்பவர் யார்?

yogi-enbavar-yar

யோகா என்பது உடல் ஆரோக்கியத்திற்கு, மனநலத்திற்கு, நம் நல்வாழ்விற்கு, நம் முக்திக்கு என பலவாறாக கேள்விப்படுகிறோம். உண்மையில் யோகா என்றால் என்ன, யோகி என்பவர் யார்? ஈஷா யோகாவிற்கும் மற்ற யோகாவிற்கும் என்ன வித்தியாசம்? எல்லாவற்றிற்குமான பதில் இங்கே…

கேள்வி
ஈஷா யோகா என்பது பதஞ்சலி முனிவரின் யோக சூத்ராவையும், கௌதம புத்தரின் சூன்யா என்ற தன்மையையும் கலந்த ஒரு அம்சமா?

சத்குரு:

கலவை என்றால் அதில் குறைந்தது இரண்டு அம்சங்களாவது இருக்க வேண்டும். அப்போது தான் அவற்றை கலக்க முடியும். கௌதமர் என்ன சொன்னாரோ, அது முழுமையானது. பதஞ்சலி என்ன சொன்னாரோ, அதுவும் முழுமையானது. பதஞ்சலி சொல்லியிருப்பதில் எதையும் புதிதாக சேர்க்கவும் முடியாது, அதிலிருந்து எதையும் குறைக்கவும் முடியாது. நிச்சயமாக யாராலும் அதைச் செய்ய முடியாது. அப்படியெனில் ஈஷா யோகாவில் நாம் செய்வது என்ன? இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு கலவையா? அப்படியில்லை.

யோகா என்பது பதஞ்சலி முனிவரோடும், கௌதம புத்தரோடும் சம்பந்தபட்டதல்ல. அது நம் உயிர்த்தன்மையோடு சம்பந்தப்பட்டது. அன்று அவர்களுக்குள் இந்த விஷயம் இயங்கிக் கொண்டிருந்தது. அதனால் அதைப் பற்றி அவர்கள் பேசினார்கள். இன்று அதே உயிர்த்தன்மை நம்முள் இயங்குகிறது. அதை உணர்ந்து நாம் பேசுவது, அவர்கள் பேசிய அதே விஷயங்களை திரும்பவும் பேசுவது போல் தோன்றுகிறது. இது ஒரு கலவை அல்ல. அவர்கள் அவர்களுக்குள் எது முழுமையோ அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். நான் எனக்குள் எது முழுமையோ அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். இதில் நிச்சயமாக முரண்பாடுகள் இருக்க முடியாது.

கேள்வி
யோகா என்றால் என்ன? யோகி என்றால் என்ன? நாம் செய்யும் பயிற்சிகள் எதற்காக?

சத்குரு:

யோகா என்பது உடற்பயிற்சி அல்ல. யோகப் பயிற்சிகள் யோகாவின் ஒரு அம்சம் மட்டும்தான். இந்தப் பயிற்சிகள் நீங்கள் யோகநிலையை எட்டுவதற்கு உங்களுக்கு உதவும் ஒரு கருவி. அவ்வளவு தான்.

யோகா என்றால் ‘சங்கமம்’. எது எதோடு சங்கமிக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். நவீன விஞ்ஞானம், முழுப்பிரபஞ்சமும் ஒரே சக்தியின் அதிர்வு என்கிறது. அப்படியெனில் இங்கு எல்லாம் ஏற்கனவே ஒன்றுபட்டுத்தான் இருக்கிறது. எதுவும் தனியாக இல்லை. மனிதனின் புரிதலில் மட்டும் தான் நீ, நான், அது, இது என பலவாறாக பிரிவினை இருக்கிறது. இப்படிப் பிரித்தறியும் நிலையில் இருந்து உங்கள் புரிதலை சற்றே உயர்த்தினால், இந்த உலகம் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பார்க்கும் நிலைக்கு வருவீர்கள். அந்நிலையில் இப்பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே என்பதை நீங்கள் உணரத் துவங்குவீர்கள். இது தான் யோகநிலை.

ஒரு யோகி என்பவர், இந்த பிரபஞ்சத்தின் ஒருமை நிலையை தன்னுள் உணர்ந்தவர். நவீன விஞ்ஞானம் ‘எல்லாம் ஒரே சக்தி’ என்று சொல்கிறது. ஒரு விஞ்ஞானி அறிவின் அளவில், தான் செய்த ஆராய்ச்சி வாயிலாக இதை புரிந்து கொண்டிருக்கிறார், ஆனால் அவருக்கு அதைப்பற்றிய அனுபவம் கிடையாது. மதம் சார்ந்த மனிதருக்கும் அதைப்பற்றிய எந்த அனுபவமும் இல்லை. அவர் அதை நம்புகிறார், அவ்வளவுதான். ஒரு யோகி என்பவர் ஆராய்ச்சி முடிவுகளையோ அல்லது நம்பிக்கைகளையோ ஏற்பதில்லை. அவர் அறிந்துகொள்ள விரும்புபவர். எல்லாவற்றையும் அவரது அனுபவத்தின் மூலமாக அறிந்துகொள்ள விரும்புபவர். அப்படி அவர் அறிந்துகொண்டு விட்டால், அவரை ‘யோகி’ என்கிறோம்.

இப்போது உங்கள் அனுபவத்தில் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஜடப்பொருட்கள் எல்லாவற்றையும் உங்களுக்குள் ஒருபாகமாக, உங்கள் கைகளில் உள்ள ஐந்து விரல்களை எப்படி உணர்கிறீர்களோ அதே போல் எல்லாவற்றையும் உங்களுக்குள் ஒரு பாகமாக நீங்கள் உணர்ந்தால், நீங்களும் யோகி. அந்நிலையில் நீங்கள் இருந்தால், உங்களுக்கு நீதிபோதனைகள் தேவைப்படாது. நீங்கள் இந்த மனிதரிடம் அன்பாக இருங்கள், அவரைத் துன்புறுத்தாதீர்கள், அவரைக் கொல்லாதீர்கள், அவரிடம் திருடாதீர்கள் என்றெல்லாம் உங்களுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இருக்காது. இது தான் யோகா. ஆக, யோகா என்பது தத்துவமோ, கருத்தோ, நம்பிக்கையோ அல்ல. இது ஒவ்வொரு மனிதரும் உணர்ந்து, தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert