யோகா செய்து வருவதால், பல மாற்றங்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பலர் அனுபவித்து வருவது நாம் அறிந்ததே. அவ்வழியில் மேலும் ஓர் அதிசயப் பகிர்வு இங்கே...

என்.மனோன்மணி, வண்டலூர்:

நான் என் திருமணத்துக்கு முன்னர் சுமார் 3 வருடங்களாக, தொடர்ந்து ஈஷா யோகா பயிற்சிகள் செய்து வந்தேன். கருவுற்றது தெரிந்ததும் உடனடியாக யோக மையத்தைத் தொடர்புகொண்டு பயிற்சிகளில் செய்ய வேண்டிய மாறுதல்களைத் தெரிந்துகொண்டு பின்பற்றினேன். அதிகமான பசிக்குத் தேவையான உணவைச் சத்துள்ளதாக எடுத்துக்கொண்டேன். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும், பழச்சாறுகளையும் அதிகமாக உட்கொண்டேன். தொடர்ந்து வேளை தவறாமல் தியானத்திலும் ஈடுபட்டேன். இந்தச் சின்னச் சின்ன செயல்களைக் கவனமாக 9 மாதங்களும் தொடர்ந்து செய்தது நிச்சயமாக பிரசவத்தின்போது எனக்கு பெரும் உறுதுணையாக இருந்தது. மேலும் கர்ப்பக் காலத்தில், ஒரு வாரம் என் குடும்பத்துடன் ஈஷா மையத்தில் தங்கி இருந்து, தியானலிங்கம் மற்றும் தீர்த்தக் குண்டத்தின் அளப்பரிய சக்தியை உபயோகித்துக்கொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

இந்தச் சின்னச் சின்ன செயல்களைக் கவனமாக 9 மாதங்களும் தொடர்ந்து செய்தது நிச்சயமாக பிரசவத்தின்போது எனக்கு பெரும் உறுதுணையாக இருந்தது.

இவற்றால் எனக்கு என் கர்ப்பமும் பிரசவமும், முற்றிலும் பிரச்சனையற்றதாக இருந்தது. தலைப்பிரசவம் மறுபிறப்பு என்றெல்லாம் என் சொந்தங்கள் பயந்தது தேவை இல்லாததாகத் தோன்றியது. ஒவ்வொரு நிலையிலும் மருத்துவரின் மருந்துகளையும் ஆலோசனைகளையும் அப்படியே பின்பற்றியதாலும், தொடர்ந்த யோக, தியானப் பயிற்சிகள் மூலம் உடலையும் மனதையும் நல்ல நிலையில் வைத்திருந்ததாலும், என் பிரசவம் சுகப் பிரசவம். சுகமான பிரசவமாகவும் இருந்தது. மருத்துவ மனைக்கு வந்திருந்த பிற பெண்களைப்போல் கத்திக் கதறாமல் அழுது தீர்க்காமல், பிரசவ வலியை விழிப்பு உணர்வுடன் கவனித்துப் புன்முறுவலுடன் கடந்து வந்தது மறக்க முடியாத அனுபவம். இவ்வளவு தீவிரமான மகா அனுபவத்தை எனக்குக் கொடுத்த அந்தப் புது உயிரை வணங்கவே தோன்றியது.

இப்போதும் என் குழந்தை ஓர் ஆழமான புரிதலுடனும் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடனுமே வலம் வருகிறான். எக்காரணம்கொண்டும் யார் மீதும் கோபமோ, வெறுப்போ, பயமோ, வருத்தமோ, எதையும் என் குழந்தையின் நலம் கருதி, என்னிடம் அண்டவிடாமல் உறுதியாக இருந்த அந்த 9 மாதங்களும் பெரும் பலன் ஈன்றிருக்கிறது... எனக்குள்ளும்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.