யோகா - ஒரு உடற்பயிற்சி, மிகவும் கடினமானது, சிலருக்கு மட்டுமே உகந்தது - இப்படி யோகாவைப் பற்றி பல தவறான புரிதல்கள் இருந்து வருகின்றன. ஆனால் யோகாவைப் பற்றிய சத்குருவின் இந்த விளக்கம் இந்த புரிதல்களை உடைத்தெறிந்து புதிய தெளிவை தரும் விதமாக உள்ளது. அறியுங்கள்... தெளியுங்கள்...

சத்குரு:

யோகா பற்றி ஒரு யோகி சொல்வது

யோகாவைப் பின்பற்றுபவர்களாலும், பின்பற்ற விரும்புவோராலும் இது ஒரு உடற்பயிற்சி முறையாகக் கருதப்படுகிறது. ஆனால் இப்பழமையான பயிற்சி, உடல்நலம் தருவதைத் தாண்டிச் செல்கிறது - சத்குரு

யோகா பற்றி நீங்கள் அறியாத மூன்று விஷயங்கள்

யோகா என்றால் சங்கமம்

யோகா என்பது ஒரு பயிற்சியில்லை - யோகா என்ற வார்த்தைக்கு சங்கமம் என்று பொருள். யோகா என்றால் தலைகீழாக நிற்பதோ, உடலை முறுக்குவதோ, மூச்சைப் பிடித்துக்கொள்வதோ அல்ல. யோகா என்றால் உயிரின் சங்கமத்தை உணர்வது. உங்களில் ஒரு பாகமாக அனைத்தையும் உணரும்போது நீங்கள் யோகநிலையில் இருப்பீர்கள்.

ஆசனா என்பது யோகாவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே

இன்றைய யோகாவின் அடித்தளமாக இருக்கும் யோக சூத்திரங்களில் ஒன்றே ஒன்றுதான் ஆசனாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி இதைப் பற்றி கூறியதெல்லாம், "சுகம் ஸ்திரம் ஆசனம்" என்பது மட்டுமே, அதாவது சௌகரியமாகவும் ஸ்திரமாகவும் இருப்பதே உங்கள் ஆசனா. இது தயார்செய்துகொள்வதற்கான அடிப்படையான படி, ஆனால் இதுவே முழுமையான யோகாவாக பரப்பப்பட்டிருக்கிறது.

யோகாவின் நான்கு அடிப்படையான பாதைகள்

ஒரு மனிதனுக்குள் அனுபவப்பூர்வமாக நிஜமாய் இருப்பவை இந்நான்கு மட்டுமே - அவர் உடல், மனம், உணர்ச்சி, இவற்றை நடத்தும் சக்தி. இந்நான்கு பரிமாணங்களுக்கும் நான்கு விதமான யோகா உள்ளது. உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் உச்சபட்ச தன்மையை எட்ட முயன்றால் ஞான யோகா என்கிறோம். உங்கள் உணர்வுகளை பயன்படுத்தினால் பக்தி யோகா என்கிறோம். உடலையோ செயலையோ பயன்படுத்தினால் கர்ம யோகா என்கிறோம். உங்கள் உள்ளிருக்கும் சக்திகளை மெருகேற்றி உங்கள் உச்சபட்ச தன்மையை அடைந்தால் க்ரியா யோகா என்கிறோம். உங்கள்மீது நீங்கள் நான்கு விதங்களில் மட்டுமே வேலை செய்ய முடியும்.

உங்கள் தட்டில் என்ன இருக்கிறது என்பது முக்கியம்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உணவைத் தேர்வு செய்வது உங்கள் கைகளில் இருக்கும்போது, உயிருள்ள சைவ உணவை சாப்பிடுவதே சிறந்தது. "உயிருள்ள" என்றால் சமைக்காத நிலையில் இருப்பது, ஏனென்றால் உயிருக்கு ஊட்டமளிக்கத் தேவையானவை அனைத்தும் ஓர் உயிருள்ள செல்லில் இருக்கிறது. உயிரை உங்களுக்குள் எடுத்துக்கொள்வதே நோக்கம். நாம் உணவை சமைக்கும்போது அதிலிருக்கும் உயிரை அழிக்கிறோம். ஒரு பகுதி அழிக்கப்பட்டிருக்கும் உணவை சாப்பிட்டால் அது உடலுக்கு அந்த அளவு உயிர்சக்தியைத் தராது. ஆனால் உயிருள்ள உணவை சாப்பிடும்போது, அது வேறு விதமான உயிரோட்டத்தை உங்களுக்குள் கொண்டு வருகிறது.

இயற்கையான நிலையில் இருக்கும் முளைக்கட்டிய பயிறுகள், பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை சாப்பிடும்போது உடலில் இருக்கும் ஆரோக்கிய உணர்வு, நீங்கள் இதுவரை உணர்ந்திருக்கும் எதையும்விட மிக வித்தியாசமாய் இருக்கும். உங்கள் உணவில் 30 முதல் 40 சதவிகிதம் உயிருள்ள உணவைக் கொண்டுவந்தால், அது உங்களுக்குள் இருக்கும் உயிருக்கு நல்ல ஊட்டம் தரும்.

வழிகாட்டுதல் தேடும்போது..

ஒரு குரு என்பவர் உயிருள்ள நிலப்படம் போன்றவர். வழியறியாத நிலத்தில் நடக்கும்போது, ஒரு நிலப்படத்துடன் பயணிப்பதே புத்திசாலித்தனம் என்று நினைக்கிறேன். நீங்கள் சாகசங்களை விரும்புபவர் என்றால் நீங்களாகவே பயணம்செய்ய விரும்புவீர்கள், அதில் தவறேதும் இல்லை. ஆனால் அப்படிச் செய்தால் உங்களுக்கு அருகிலுள்ள இடத்திற்கு வர உலகையே சுற்றியபிறகு மீண்டும் வந்துசேர்வீர்கள், அதுதான் அபாயம்.

யோகா பற்றிய கட்டுக்கதைகள்

யோகா என்பது உடற்பயிற்சி முறை அல்ல

ஹடயோகா என்பது உடற்பயிற்சி அல்ல. ஆசனா என்றால் ஒரு உடல்நிலை. மனித உடலமைப்பை ஆழமாக, முழுவதுமாக ஆராய்ந்தபின், யோகமுறையில் 84 ஆசனங்களை யோகாசனங்களாக அடையாளம் கண்டோம். இவற்றின் மூலமாக, உடலையும் மனதையும் உச்சபட்ச நலனுக்கு ஓர் அற்புத சாத்தியமாக மாற்றியமைக்க முடியும். சரியான சூழ்நிலையில் ஹடயோகா கற்றுக்கொடுக்கப்பட்டால், தெய்வீகத்தை உள்வாங்கிக்கொள்ள ஓர் அற்புதமான கருவியாக உங்கள் உடலை மாற்றியமைத்திட முடியும்.

யோகாவும் இசையும் சேர்ந்து இயங்கக்கூடியவை

இசை நம்மைச் சுற்றி ரம்மியமான சூழ்நிலையை உருவாக்குகிறது, ஆனால் யோகா என்றால் உள்முகமாகத் திரும்புவது. பின்னணியில் இசை இசைக்கும்போது, உங்கள் கவனத்தை வெளிமுகமாகத் திருப்பும் சூழ்நிலையை உருவாக்குகிறீர்கள், அதனால் யோகாவின் நோக்கத்தை தோற்கடிக்கிறீர்கள். உங்களுக்கு நீங்களே தொந்தரவை உருவாக்குகிறீர்கள்.

வேறு ஏதோ நேரத்தில் நீங்கள் இசையை ரசித்திடலாம். யோகா செய்யும் நேரம் உள்முகமாகத் திரும்புவதற்கான நேரம். எல்லாம் இங்கேயே இருக்கிறது.

யோகா மதம் சார்ந்தது

யோகா என்பது ஒரு நம்பிக்கை முறையில்லை, ஒரு புதிய மதமோ, தத்துவமோ, போதனையோ இல்லை, இது ஒரு தொழில்நுட்பம். இதை தொழிற்நுட்பம் என்று அழைக்கக் காரணம், இதை நீங்கள் நம்பவேண்டிய அவசியமில்லை, இதை பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் போதும். உங்கள் மதம் எதுவானாலும் சரி, உங்கள் நிறம் எதுவானாலும் சரி, உங்கள் இனம் எதுவானாலும் சரி, நீங்கள் எங்கிருந்து வந்தாலும் சரி, யோகாவை பயன்படுத்தக் கற்றுக்கொண்டால், அது உங்களுக்கு வேலை செய்யும்.

படிப்படியாகச் செல்வோம்

நாளின் எந்த நேரம் என்பது முக்கியம்

சூரியோதயம், நண்பகல், மற்றும் மாலை வேளைகள், யோகப் பயிற்சி செய்வதற்கு உகந்ததாகவும், கூடுதல் பலன் தருவதாகவும் இருக்கின்றன. ஆனால் இந்நேரங்களில் செய்வது சாத்தியமில்லை என்றால் எந்நேரமும் பொன்நேரமே.

கனக்கச்சிதமாகச் செய்வது இரண்டாம்பட்சம்

யோகா என்பது ஒரு குறிப்பிட்ட பயிற்சியில்லை. யோகா என்பது ஒருவர் தனக்குள் இருக்கக்கூடிய நிலை, ஒருவர் யோகாவாக மாறவேண்டும். வாழ்க்கையின் எந்தவொரு அம்சத்தையும், சிக்கிப்போகவும் பயன்படுத்தமுடியும், விடுதலைக்கும் பயன்படுத்தமுடியும். அவற்றை நீங்கள் சிக்கிப்போக பயன்படுத்தினால் கர்மா என்கிறோம். உங்களை விடுதலை செய்திட பயன்படுத்தினால் யோகா என்கிறோம். காலையும் மாலையும் யோகா, மீதி நேரம் சிக்கிப்போவது என்றால் இது யோகா இல்லை, இது வெறும் யோகப்பயிற்சி.

யோகமுறைப்படி வாழ்ந்திட உங்களுக்குள் உறுதியெடுப்பது

உங்கள் ஆன்மீக செயல்முறையை மதிப்பீடு செய்திட அவசரப்படாதீர்கள். அது உங்களுக்குள் ஆழ்ந்திட அனுமதியுங்கள். துவக்கத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு அதில் அசையா உறுதியுடன் இருப்பது சிறந்தது, உறுதியுடனும் கவனத்துடனும் யோகப் பயிற்சிகளை ஆறு மாதங்களுக்கு செய்திடுங்கள். உங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவேண்டிய அவசியமில்லை, யோகப் பயிற்சிகளை தொடர்ந்து செய்திடுங்கள். அதற்குப்பின் எவ்வளவு அமைதியாக, ஆனந்தமாக, நிதானமாக இருக்கிறீர்கள் என்று அவ்வப்போது உங்களை நீங்களே மதிப்பீடு செய்துபாருங்கள், மகத்துவம் புரியும்.

ஆசிரியர் குறிப்பு:

சத்குரு வழங்கும் ஈஷா யோகா வகுப்புகளில் சக்திவாய்ந்த ஷாம்பவி கிரியா கற்றுத் தரப்படுகிறது. ஷாம்பவி கிரியா மிக மிக எளிமையானது. ஆனால், இது ஒருவருக்கு கொடுக்கும் பலன்களும் அதைச் செய்வதன் மூலம் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும் மகத்தானவை. ஆனந்தமானவை.

ஈஷா யோக மையத்தின் சூழல், தங்குமிட வசதி, சக்தியூட்டும் பயிற்சிகள் என ஆனந்தமாய் 2 நாட்கள். உள்நிலையில் பரிபூரண மாற்றத்தை உருவாக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுக்க தயாரா?
சத்குருவுடன் ஈஷா யோகா கற்றுக்கொள்ள வாருங்கள்!

டிசம்பர் 17-18, 2016
ஈஷா யோக மையம், கோவை.


மேலும் இந்த வகுப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் உங்கள் ஊரிலும் நடைபெறுகிறது.

மேலும் விபரங்கள் அறிய மற்றும் நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு:
தொலைபேசி: 83000 83111
இ-மெயில்: iycprograms@ishafoundation.org