யோகா செய்கிறேன்… கடவுளை இன்னும் காண முடியவில்லையே!?

yoga-seigiren-kadavulai-innum-kana-mudiyavillaiye

கடவுளைக் காண்பதற்காக பல செயல்கள் செய்தும், அது ஈடேறவில்லை, யோகா செய்தாலாவது கடவுளைக் காண முடியும் என்ற ரீதியில் யோகாவை செய்வோருக்கு சத்குருவின் பதில்…

கேள்வி
சத்குரு கடந்த பத்து வருடங்களாக யோகா செய்து வருகிறேன், இன்னும் நான் கடவுளை காணவில்லை. அவரைச் சுவைக்க இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும்?

சத்குரு:

ரவீந்திரநாத் தாகூர் சிறந்த கவிஞர். இயற்கையைப் பற்றி, அழகைப் பற்றி, தெய்வீகத்தைப் பற்றி மிக அற்புதமான கவிதைகள் எழுதியவர். ஒருநாள் அவருடைய உறவினர்களில் மூத்தவர் ஒருவர் தாகூரிடம், “மொழியின் மீதுள்ள ஆளுமையால் வார்த்தைகள் உனக்கு வந்து விழுகின்றன. ஆனால், நீ எழுதும் அதே உணர்வுகளை உண்மையிலேயே நீ அனுபவித்திருக்கிறாயா?” எனக் கேட்டார். தாகூர் பதில் சொல்ல இயலாமல் தலைகுனிந்தார்.

“வாழ்க்கையை நீ இன்னும் தீவிரமாக வாழப் பழக வேண்டும்” என்று அந்த உறவினர் சொல்லிவிட்டுப் போனார்.

மழைபெய்து ஓய்ந்திருந்த ஒரு மாலை நேரம். சூரிய அஸ்தமனத்தை ரசிக்க, தாகூர் கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்தார். தெருவோரங்களில் ஆங்காங்கே தண்ணீர் அழுக்குக் குட்டைகளாக தேங்கிக் கிடந்தது. அதில் கால் வைத்துவிடக்கூடாது என்பதற்காக குனிந்து பார்த்தபடி நடந்து போய்க் கொண்டிருந்தார் தாகூர்.

திடீரென ஒரு பிரம்மிப்பு அவரைச் சூழ்ந்தது. கடற்கரையில் போய் அவர் கவனித்து ரசிக்க நினைத்த சூரிய அஸ்தமனம் அங்கே ஒரு அழுக்குக் குட்டையில் நிகழ்ந்து கொண்டிருந்தது. தாகூரின் கண்கள் உணர்ச்சிப் பெருக்கால் ததும்பி வழிந்தன. அந்தக் கணமே பிரபஞ்சத்தின் மேன்மையான அர்த்தத்தை உணர்ந்துவிட்ட பரவசம் அவர் முகத்தில் பிரதிபலித்தது. தன் உறவினரின் வீட்டுக்கு ஓடினார். தாகூரைப் பார்த்ததுமே அந்த உறவினருக்குப் புரிந்துவிட்டது. “உண்மையை நீ தரிசித்துவிட்டாய். அதை உன் முகத்தில் காண முடிகிறது” என்றார் அவர்.

இப்படி ஒவ்வொரு சின்ன விஷயத்துக்குள்ளும் தெய்வீகம் புதைந்துள்ளது. வாழ்க்கையை முழுமையான தீவிரத்தோடு வாழாததால், நீங்கள்தான் அதைக் காணத் தவறுகிறீர்கள்.

கேள்வி
ஒரு யோகியின் ஒவ்வொரு மறுபிறப்பிலும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின்னரே, உங்களுக்கு ஏற்பட்டதுபோல ஞானோதயம் ஏற்படுமா?

சத்குரு:

அப்படியில்லை. இது சில அம்சங்களை சார்ந்திருக்கிறது. ஒரு பிறப்பில் 11 வயதிலும் அடுத்த பிறப்பில் 26 வயதிலும் ஞானோதயம் ஏற்படுவது எதனால்? அந்த மனிதருக்குள் ஞானோதயம் பெறத் தேவையான முதிர்ச்சி இருந்தாலும், தேவையான மனமுதிர்ச்சி இதுவரை கிட்டாததால் ஞானோதயம் தாமதப்பட்டிருக்கலாம். இன்று உங்கள் 30, 40 வயதுகளில் இருக்கும் உங்களில் பெரும்பாலானோர், உங்களது 15 வயதில் யோக வகுப்பு செய்திருந்தால் ஒருவேளை வகுப்பில் சொன்னவற்றை தவறவிட்டிருப்பீர்கள். உங்களில் பலர் நிச்சயமாக தவறவிட்டிருப்பீர்கள். அதனால், தாமதமாக வகுப்பு செய்தோமே என வருத்தப்பட வேண்டாம். உங்கள் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நீங்கள் இதனைச் செய்ததால், உங்களால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால், இயற்கைக்கு சில விஷயங்களை எப்படி, எப்போது செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. இயற்கையை நீங்கள் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், அதன் முடிவு எப்போதும் சரியாகவே இருந்திருக்கிறது. அது தவறாக இருந்ததேயில்லை. அது தவறாக இருக்கவும் வாய்ப்பில்லை. தெய்வீகம் தனக்கென ஒரு வழி அமைத்து செயல்படுகிறது. அதன்மீது உங்களால் கேள்வி எழுப்ப முடியாது. அந்தப் பிரம்மாண்டத்தை கேள்வி கேட்கும் அளவிற்கு நமக்கு ஞானமில்லை. எது நிகழ்கிறதோ அது மிகச் சரியாகவே நிகழ்கிறது, அதில் தவறு நிகழ வாய்ப்பே இல்லை.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert